படக்கவிதைப் போட்டி 70 – இன் முடிவுகள்

காயத்ரி பூபதி

இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் கோகுல்நாத். இதனை போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள்.

13563176_1038235166230682_1340979644_n

இந்த வார  படக் கவிதைப் போட்டிக்கான  ஒளிபடத்தில் கிராம தேவதையும், அதை வணங்கும் பெண்மணியும் இடம் பெற்றுள்ளனர். இவ் வொளிப்படத்திற்கு கவிஞர்கள் வரைந்த கவிதைகளைப் பார்ப்போம். இனி,

கிராம தேவதைகள் கிராமத்தின் குறியீடாகும். கிராமம் என்ற உடனே நம் நினைவுக்கு வருபவை  சிறு தெய்வ வழிபாடும், மக்கள் கூட்டமாக கூட்டமாக சேர்ந்து கொண்டாடும் திருவிழாக்களும் தான். இன்றும் கூட பலர் நகரங்களில் வாழ்ந்தாலும் தன் சொந்த கிராமங்களுக்குச் செல்வதற்கு கூட இது போன்ற திருவிழாக்களே காரணமாக  இருக்கின்றன.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கூடி மகிழ்ந்து கொண்டாடும்  திருவிழாவை கண்முன் கொண்டு வந்து காட்டுகின்றது ராதா விசுவநாதனின் கவிதை. இவ் வுலகம் அனைத்தையும் காசுக்கு  விலை பேசும். அதற்கு கோயில்களும் கூட விதிவிலக்கல்ல என்று கோயில்களின் இன்றைய நிலை குறித்து வருந்தியுள்ளார்  கவிஞர்.

எல்லைச்சாமி, காவல் தெய்வம் என்று தெய்வங்கள் பல இருந்தாலும், நாட்டில் கொலையும், கொள்ளையும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் நடந்த வண்ணம் உள்ளனவே. காவல் தெய்வமே கடமை மறந்து நீயும் லஞ்சம் வாங்கி விட்டாயோ? என்று நாட்டின் உண்மை நிலை குறித்த கருத்தினை எடுத்துக் கூறியுள்ளார் சரஸ்வதி இராசேந்திரன்.

உழவுத் தொழில் நிலை குன்ற கிராமத்தை விடுத்து நகரத்தை நாடும் மக்களின் நிலையையும், உலகம் செழிப்பதற்கு கிராமம் செழிப்படைய வேண்டும் என்பதையும் மக்கள் உணர வேண்டும் என்று சுட்டிக் காட்டியுள்ளார் செண்பக ஜெகதீசன். சிதைந்து வரும் கிராமமும், சிறு தெய்வ வழிபாடும் மீட்டெடுக்கும் சூழலில் உள்ளதை அறிவுறுத்தியுள்ள கவிஞருக்கு பாராட்டுகள்.

குலசாமி எல்லைச் சாமி

காக்க வேணும் மண்ணுயிர

சொல்லவேணும் உண்மைகள

புறம்போக்கு இடமெங்கும்

நீ

சுயம்புவாய் தோன்றினாயா – சிலர்

சுயநலத்தால் தோன்றினாயா

உண்மை சொல்ல வேணும் – இந்த

உழைப்பாளி ஜனங்களுக்கு,

வானம் பார்த்த பூமியாக

பாவிமக நிக்கிறேன்

பட்டா போட்ட வீடு

வெறும் கனவா

உன்னைக் கேட்கிறேன்

புறம்போக்கு நிலத்த

பட்டா போட நினைச்சு

படுபாவிக் கூட்டம்

கோயில் கட்டி வைக்குது,

ரோட்டோர இடத்தை

அபகரிச்சு நிக்குது…………..

மூடநம்பிக்கை சாயம் பூசி

முதலாளி வா்க்கத்தின் நிலஅபகரிப்பு

ஒய்யாரமாய் இருக்குது

சாயம் வெளுக்க வேணும்

சாமியே! துணை இருக்க வேணும் ……

கிராமத்தின் குறியீடாக விளங்கும் சிறு தெய்வ வழிபாடு மக்களின் மூட நம்பிக்கைகள் அரங்கேறுவதற்கும் இடம் தருகின்றது. புறம்போக்கு நிலத்தை அபகரிக்கவும், ரோட்டோர இடத்தை அபகரிக்கவும் நினைப்போர் மக்களின் தெய்வ வழிபாட்டையும், மூட நம்பிக்கையையும் தனக்கு சாதகமாக பயன் படுத்தும் சமூக அவலத்தை எடுத்துக் காட்டியுள்ள முனைவர் மா பத்ம ப்ரியாவின் கவிதையை இந்த வார சிறந்த கவிதையாக தேர்ந்தெடுக்கிறேன். கவிஞருக்கு பாராட்டுகள்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க