ஆறுமுகன் அருட்பா (பகுதி 1)
க. பாலசுப்பிரமணியன்
விநாயகர் வாழ்த்து
முதலாய் வந்து முடக்கங்கள் நீக்கி
முன்னும் பின்னும் முடிவினில் நிற்பாய்;
முருகனின் முதல்வா, மூலப் பொருளே
முன்னுரை நீயே மூஷிக வாகனா !
ஆறுமுகன் அருட்பா
1.
நீள்முடித் தலையில் நிறைவளர் நிலவும்
நீலக் கழுத்தினில் நெகிழ்ந்திடும் அரவும்
நீறுடை நெற்றியில் நெருப்புடைக் கண்ணும்
நினைத்ததும் நிறைந்த நலமே!
2.
நலத்தைக் காத்திட நாடிய அமரரும்
நான்முகன் நாரணன் நற்றவ முனிவர்
நாதங்கள் ஒன்றிட நமச்சிவாய மென்றிட
நாபியில் நெருப்பாய் எழுந்தவனே !
3.
எழுந்திட்ட தீப்பொறி ஏந்திய பூமியில்
எழிலாய் வந்த அறுவகை தத்துவம்
ஏற்றது இசைவாய் சரவணப் பொய்கை
ஏங்கிய உலகம் மகிழ்ந்ததுவே !
4.
இதயங்கள் குளிர்ந்தே இறையவர் வாழ்த்திட
இனிதாய் வந்த இமையவன் மகனே !
இன்னல்கள் போக்கிட வானவர் தேடிய
இம்மையின் நல் விருந்தே!
5
விருந்தென் மனதிற்கு மருந்தென் வினைக்கு
கரும்பென இனிக்கும் கந்தன் பெயருனக்கு !
அரும்பென இருந்தும் பெருந்துயர் தீர்த்து
இரும்பெனும் மனத்தையும் இளக்கிடுவாய் !
6
இளகிய மனதுடன் இனிதே வந்தாய்
இருண்ட இதயத்தின் வறுமைநீக்கிட
இம்மை மறுமை இடைதனைக் காத்திட
இசைவாய் மலர்ந்த இறையே !
7
இறையோ? இன்பக் கனவோ ? நனவோ ?
இருளைக் கிழித்து ஒளிரும் கதிரோ ?
இணையில்லா ஈசனின் மூலப் பொருளோ?
இன்னல்கள் நீக்கிடும் அருளோ?
8.
அருளே! அழகே ! அறிவின் வடிவே !
அந்தமும் ஆதியும் உந்தனில் அடங்கிட
அங்கத்தில் அன்பை அமுதாய் வடித்த
அவ்வையின் அழகுடைத் தமிழே !
9
தமிழைத் தந்தாய் அமுதாய் பருகிட
அமுதும் கசந்தது அன்னைத் தமிழில்
அறுசுவை சேர்ந்த ஒருசுவைத் தமிழில்
அழகெனும் முருகே அழகே !
10.
அழகிய முகத்தில் அமைதியைக் கண்டேன்
அருளுடை விழியில் அன்பைக் கண்டேன்
அன்னையின் சக்தியை கைகளில் கண்டேன்
அகிலம்காணா கருணையின் வடிவே!