கிரேசி மோகன்

crazy

இதோ இப்ப கட்டியிருக்கிற வாட்ச் இத்தனை ஆண்டு கால என் வாழ்க்கைக்கு மூணாவது வாட்ச்… ஒரு தடவை அமெரிக்காவில் கை வீசிப் பேசினபோது கழன்று புல் தரையில் விழுந்திருச்சு. யாராவது மீட்டு கொண்டு வந்தால்தான் ஆச்சுன்னு மனநிலை ஆகிப்போச்சு. அப்புறம் கொண்டு வந்து கொடுத்தாங்க. ஒரு டவல் வச்சிருக்கேன். குளித்து அதில் துவட்டிட்டுப் போனால்தான் நாடகம் ஹிட் ஆகும்னு எனக்கு ஒரு சென்டிமென்ட். அந்த டவலை உங்ககிட்டே காட்டினால் என்மேல் மரியாதை இருக்காது. அவ்வளவு பழசு. ஆனால் அதுதான் எனக்கு ேவணும். ஒரு தடவை நாடகம் போட்டுட்டு மறந்து விட்டுட்டு வந்ததை, ஒருத்தர் 400 மைல் தாண்டி வந்து கொடுத்தார். நான் அப்படித்தான்!

மீட்க விரும்பும் இழப்பு

எங்க தாத்தா வெங்கடகிருஷ்ணா. 90 வயதிற்கு மேலேதான் இறந்தார். நான் புரண்டு புரண்டு அழுதேன். ‘‘ஏண்டா… உனக்கே தாத்தா வயசாகிட்டது, இப்படி அழுகிறியே’’ன்னு நண்பர்கள் கிண்டல் பண்ணாங்க. ஏன்னா, அவர் எனக்கு நண்பர் மாதிரி. நான் டிராயிங் பண்ணா ‘அப்படியே ரவிவர்மா மாதிரி இருக்குடா’ன்னு ஏத்தி விடுவார். அவர் சொன்னதை நம்பி ஒரு தடவை ஒரு அம்பாள் படம் வரைஞ்சு காண்பிச்சேன். ‘நம்ம வீட்டு வேலைக்காரி மாதிரி இருக்கு’ன்னு சொல்லிட்டார். சரின்னு வேலைக்காரி படத்தையே வரைஞ்சேன். அவர் ‘அம்பாள் மாதிரி இருக்கு’ன்னு சொல்லிட்டார்.

‘அம்பாளே வேலைக்காரிதான்டா. அவதானே ஈரேழு லோகத்தையும் பரிபாலிக்கிறா’ன்னு சொல்லி சமாளிப்பார். அவரின் கேலியும், கிண்டலும், நைச்சியமான பேச்சும் என்னை எல்லாத்தையும் நகைச்சுவையாக நினைக்க வச்சது. ‘மோகன்’னு பேர் வைச்சது தாத்தா. ‘கிரேஸி’ன்னு பேர் வைச்சது விகடன் தாத்தா. என்னோட அப்பா, அம்மா, பெரியப்பா, பெரியம்மா, அவங்க பிள்ளைகள், என் பசங்க, தம்பியோட குடும்பம், அத்தை, சித்தின்னு எல்லாரும் பெரும் குடும்பமாக இருந்தோம். அந்த அழகே அழகு. இப்ப எல்லாம் புருஷன்-பொண்டாட்டி சேர்ந்து இருக்கிறதையே ‘ஜாயின்ட் ஃபேமிலி’ன்னு சொல்லிக்கிறாங்க. தாத்தாவை மறந்தா என்னை மறந்ததா பொருள்.

மிகச் சிறந்த நண்பன்

சு.ரவி எனக்கு ‘அ’ எழுத கத்துக் கொடுத்துட்டு இப்ப புனேவில் இருக்கான். ராமகிருஷ்ணா மடத்தில் யோகாவில் உட்கார்ந்து குண்டலினியை மேல ஏத்திடணும் என்கிற என் முயற்சிக்கு அவன்தான் உதவியாக இருந்தான். ஒரு நாள் நெற்றி சூடாகி ‘‘குண்டலினி வந்திடுச்சு’’ன்னு கத்தினபோது ‘‘அது சுவாமிஜி கொண்டு வந்த சூட நெருப்பு’’ன்னு சொன்னது ரவிதான். பாக்கியம் ராமசாமி… அதுதான் ஜ.ரா.சுந்தரேசன். இப்பவும் இரண்டு வாரத்திற்கு ஒரு தடவை அவர் வீட்டுக்குப் போயிடுவேன். எனக்கு கல்கி, தேவன்னா உயிர். எழுதுறதுக்கு முன்னாடி அவங்களை வாசிச்ச பிறகுதான் எழுதுவேன். அவங்க எல்லாருமே நகைச்சுவையில் மூழ்கி முத்தெடுத்தவர்கள்.

ஆசைப்பட்டு நடக்காத விஷயம்

ரஜினிக்கு எழுதணும்னு நினைச்சது ‘அருணாசலத்’தில் நடந்தது. ‘ஆண்டவன் சொல்றான், அருணாசலம் முடிக்கிறான்’னு நான் எழுதின டயலாக்கை ‘சூப்பர்… சூப்பர்…’னு அவர் பாணியில் சொன்னார். எனக்கு இன்னிக்கு வரைக்கும் ஆசை என்னன்னா, ரமணர் ஆகணும். அப்படித்தான் சின்ன வயசிலே நினைச்சிக்கிட்டு இருந்தேன். ரமணர் 14 வயதிலேயே போய் மலையில் உட்கார்ந்துக்கிட்டார். அவரோட ஆசிரியர், ரமணர் மலைக்குப் போனப்பறம் அவரைப் பார்க்கப் போனார்.

கும்பிட்டுட்டு, ‘‘உங்ககிட்டே சில கேள்விகள் கேட்கணும்’’னு சொன்னார். அதற்கு பகவான் ரமணர், ‘‘உங்க கேள்விக்கு பயந்துதானே அங்கிருந்து புறப்பட்டு வந்தேன்’’னு சொன்னார். அவர்கிட்டே என்ன காமெடி பாருங்கோ! நான் ஆசைப்பட்டது ரமணர் ஆகணும் என்பதுதான். நடக்காட்டியும், ஆசைப்பட்டது ஆசைப்பட்டதுதானே!

மறக்க முடியாத மனிதர்கள்

crazy1
கே. பாலசந்தர். ரஜினி, கமல் மாதிரி பெரிய அமெரிக்காக்களை கண்டுபிடிச்ச கொலம்பஸ்தான் என்னையும் கண்டுபிடிச்சார். ‘பொய்க்கால் குதிரை’ என் நாடகமே. அப்புறம், கமல். தொடர்ச்சியா 25 படங்களுக்கு மேலே கொடுத்து என்னை எழுத வச்சு அழகு பார்த்தது அந்த மகாத்மா. ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘பஞ்சதந்திரம்’, ‘தெனாலி’, ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.’… சொல்லச் சொல்ல நீண்டுக்கிட்டே போகுமே! எனக்கு உலகத்திலேயே ரொம்ப பிடிச்ச டயலாக்கை கமல்தான் சொன்னார். ஒரு நாள் திடீரென்று ‘வேலையை விட்டுடுங்க’ன்னு சொன்னார். விட்டுட்டேன்.

என்னோட விசிட்டிங் கார்டு கமல். அவர் உலகநாயகன். நான் உலகம் சுற்றும் நாயகன். உலகத்தில் ஒரு இடம் விடாமல் பார்த்திருக்கேன். போன பல இடம் மேப்ல கூட இல்லை. எங்கே ட்ராவல் பண்ணாலும் என் பின்னாடி கமல்னு ஒரு ஒளிவட்டம் இருந்தது. என்னையும், கமலையும் நகைச்சுவைங்கிற தொப்புள் கொடி இணைச்சது. அவரால் இளையராஜா கூட கை குலுக்கினேன். ஏ.ஆர்.ரஹ்மானை நேரில் பார்த்தேன். உலக நாயகனாக இருந்திட்டு காமெடி பண்றது கஷ்டம். அவரால் ‘தேவர் மக’னாகவும் இருக்க முடிஞ்சது. ‘அவ்வை சண்முகி’ மாதிரியும் மாற முடிஞ்சது. அவர் அறியாமல் நான் ஒரு விஷயம் பண்ண மாட்டேன். ஒரு கதை அவர்கிட்டே உருவானா, அடுத்த போன் எனக்குத்தான். என் மனைவிக்கு நான் கடிதம் எழுதினால் கூட அவருக்கு வாசிச்சு காண்பிச்ச பிறகுதான் அவளுக்கு போஸ்ட் பண்ணுவேன்.

கற்ற பாடம்

யாரையும் புண்படுத்தாம காமெடி பண்ணினா, அதுதான் பெரிய விஷயம். மக்களுக்கு அத்தனை கவலைகள். அந்தக் கவலையில் வளர்ந்தவங்கதான் காமெடியன்கள். காமெடி டீஸன்ட்டா இருக்கணும். எல்லா உணர்ச்சிகளுக்கும் மேம்பட்டது காமெடி. சிரிக்கிறதும், சிரிக்க வைக்கிறதும் கடினம். அதை சுத்தமா தெரிஞ்சவங்க எதையும் செய்யலாம். வாழ்க்கையில் எதையும் எதிர்பார்க்காமல் இருந்தால் சந்தோஷமா இருக்கலாம். இப்ப பாருங்க, நான் எழுதி 40 வருஷம் கழிச்சு கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’ நாடகத்தை எஸ்.வி.சேகர் மறுஅரங்கேற்றம் செய்யப் போறார். கொடுப்பினை இல்லையா! நான் இதை எதிர்பார்த்தேனா… வந்ததே பிரதர்!

பயணம்

அமெரிக்கா. பத்துத் தடவைக்கு மேலே போயும் அலுக்கலை. இப்ப கூட மறுபடியும் ‘கூகுள் கடோத்கஜன்’னு நாடகம் போடப் போறோம். நான் வேலையை விட்டுட்டு சினிமாவுக்கு வந்ததை நாடகம், சினிமா மேலே இருந்த வெறின்னு தப்பா எல்லாரும் நினைச்சுக்கிட்டு இருக்காங்க. சுந்தரம் கிளேட்டனில் நைட்ஷிப்ட் முடிஞ்சு திரும்பி வரும்போது, ஜெமினி வரைக்கும் 10 நாய்கள் என்னைப் பிடிச்சிக்கும். அப்படியே ஸ்டெல்லா மேரிஸ் வரைக்கும் கொண்டு வந்து, அங்கே இருக்கிற நாய்களிடம் கை மாத்தி விட்டுடும்.

அப்புறம் அங்கேயிருந்து மறுபடியும்… ஸ்கூட்டரில் ஹேண்டில்பாருக்கு ரொம்ப பக்கத்தில்தான் கால் இருக்கும். அப்புறம் என் நண்பன் ஒருத்தன் ஒரு நாள் வந்து அதுகளை கதிகலங்க வைத்தான். அதுங்க யார்கிட்டே சொல்லி, எங்கே செய்தியெல்லாம் போனதோ தெரியலை. அமெரிக்கா போனா, ஏர்போர்ட்டில் ஸ்னிஃபர் டாக் என்னை விடாமல் பிடிச்சுக்கும். பகை மாதிரி மூச்சு விட்டு மூச்சு விட்டு மோந்து பார்க்கும். நான் குத்தாலத்தில் குளிக்கலை. ஆனா நயாகரா பார்த்திட்டேன்.

எனக்கு அமெரிக்காவில் எல்லாமே ஆச்சரியம். 2000 பேர் வரிசையில் நின்னாலும் 5 அடி இடைவெளி இருக்கும். லாரியில் ‘என்னைத் தொடாதே’னு எழுதி இருக்கிற மாதிரி மோதவே மாட்டாங்க. அவங்க மேலே எச்சில் துப்பிட்டு ‘‘சாரி’’ சொன்னாக்கூட ‘‘தட்ஸ் ஓகே’’னு போயிடுவாங்க. நேருக்கு நேர் கண்ணால பார்த்திட்டா, தெரியாமல் இருந்தாலும் ‘ஹாய்’ சொல்கிற அழகை சொல்லி மாளாது!

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=10986&id1=9&issue=20160902

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “’குங்குமம்’ இதழில் கிரேசி மோகனின் – மனசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *