தமிழ்த்தேனீ

images (13)

வழக்கம் போல் வினாயகர் சதுர்த்தி விழா கொண்டாட கடைத்தெருவுக்குப் போய் வினாயகர் வாங்கி வரவேண்டும்.. நடந்து போய் வாங்கிக் கொண்டு அதி ஜாக்கிரதையாக நடந்து வரவேண்டும். கடைத்தெருவுக்கு போய் வினாயகர் வாங்கி வரவேண்டுமென்றால் ஒரு மணைப்பலகை வேண்டும் அதிலே களிமண்ணால் செய்த வினயாகரை வாங்கி வைத்துக் கொண்டு அந்த வினாயகர் கீழே விழுந்துவிடாதபடி பத்திரமாக எடுத்துக் கொண்டு வரவேண்டும். அப்போது சாலையில் வரும் பாதசாரிகள், வாகனங்கள் எதன் மேலும் படாதவாறு கொண்டு வரவேண்டும்.

கிட்டத்தட்ட கோயிலிலே பெருமாள் தாயார் ஏளப்பண்ணுபவர்கள் எவ்வளவு ஜாக்கிரதையாக பெருமாளுக்கும் தாயாருக்கும் எந்த ஒரு அதிர்ச்சியும் இல்லாமல் அவர்களுடைய ஆடை அணிகலன்கள் ஆபரணங்கள் மாலை போன்றவை கீழே விழாமலும் அசங்காமலும் அழகாக ஏளப்பணுகிறார்களோ அப்படி மிக பக்தியோடு பிள்ளையாரை ஒரு மணைப் பலகையில் வைத்துக்கொண்டு ஏளப்பண்ணிக் கொன்டு வரவேண்டும்.

கடைத் தெருவுக்குப் போய் முதலில் வினாயகரை வாங்கக் கூடாது, முதலில் அவருக்கு மஞ்சள் குங்குமம் அவருக்கு அணிவிக்கும் எருக்கம் பூ மாலை, தென்னை ஓலையில் செய்த தோரணங்கள் . குடை, அவர் கண்ணில் பொருத்த குந்துமணி, , அதன் பிறகு அவருக்கு நிவேதனம் செய்ய விளாம்பழம், வாழைப்பழம், கொய்யாப்பழம், போன்ற பழவகைகள், அரிசிபொறி கடலை வாழை இலை போன்ற எல்லாவற்றையும் வாங்கிவிட்டு எல்லாவற்றையும் பத்திரமாக வைத்துக் கொன்டு அதன் பின்னர் வினாயகரை வாங்கி மணைப்பலகையில் வைத்து கூடவே கொஞ்சம் களிமண் வாங்கி வினாயகரை மணைப் பலகையோடு நான்கு புறமும் வைத்து வினாயகர் நர்த்தன வினாயகராய் ஆடாதாவாறு பொருத்திக் கொண்டுதான் பத்திரமாக வீட்டுக்கு கூட்டிவரவேண்டும் வினாயகரை.

எல்லாம் வினாயகன் அருளால் வெற்றிகரமாக ஆயிற்று. வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்து அதி ஜாக்கிரதையாக வாங்கிய பொருட்களை மனைவியிடம் கொடுத்துவிட்டு மிக கவனத்தோடு கிழக்கு பக்கம் பார்த்து மணைப்பலகையோடு வினாயகரை ஏளப்பண்ணி ஆயிற்று

அதற்குள்ளாக குளித்துவிட்டு பூஜைக்கு வேண்டிய நிவேதனங்கள் புஷ்பம் தேங்காய் போன்ற எல்லாவற்றையும் தயார் செய்து பூஜைக்கு தயார் நிலையில் இருந்தாள் துணைவியார்
சரி சீக்கிரம் வினாயகரை தயார் செய்யுங்கள் பூஜைக்கு என்றாள் சகதர்மிணி

என்னாது வினாயகரை பூஜைக்கு ரெடி பண்ணனுமா ! எப்போ எப்பிடி பூஜை பண்ணாலும் அவர் ஏத்துக்குவாரே அவரை எதுக்கு தயார் பண்ணனும் என்றேன் நான்.

போதும் அசடு வழியாதீங்க வினாயகருக்கு நெற்றிக்கு இட்டு எருக்கம் பூ மாலை போட்டு குடையை அவருக்கு பின்னாலே வெச்சு பூணூல் அணிவிச்சு எல்லாம் செஞ்சு தயார் பண்ணுங்க .அதுக்கு முன்னாடி களிமண்ணுலே வாங்கிண்டு வந்திருக்கற பிள்ளையாருக்கு அந்தக் குந்து மணி குடுத்திருக்கானே அதை சரியா வெச்சு கண்ணு பொருத்துங்க, என்றாள் அவள்

ஓ நீ அதைச் சொன்னியா என்று வழிந்தபடி சரி சரி என்று வினாயகரை தயார் செய்யத் தொடங்கினேன், முதலில் கண்ணைப் பொருத்திவிடலாம் என்று வினாயகா எல்லோருடைய அறிவுக்கண்ணையும் திறக்கறவன் நீ உனக்கு கண்ணு பொருத்தணும் நான், அதுக்கு நீதான் முகத்தை அசைக்காம காட்டணும் என்றேன் .

ஏனோ தெரியவில்லை யசோதை கிருஷ்ணனுக்கு ரசித்து ரசித்து அலங்காரம் செய்வாளாம். வேண்டுமென்றே கண்ணுக்கு மையெழுதும் போது நெற்றிக்கு திலகமிடும்போது சற்றே அசைத்துவிடுவானாம் குறும்புக்கார கிருஷ்ணன் மறுபடியும் இடுவாளாம் யசோதா அது நினைவுக்கு வந்தது

மிகக் கவனமாக ஒரே நேர்க் கோட்டிலே வினாயக்னின் தும்பிக்கையின் இரு பக்கமும் நெற்றியின் இருபக்கமும் மிகச் சரியாக இருக்கும்படி குந்து மணியின் சிகப்பு பாகத்தை கண்களின் உள்ளே பொருத்தி க்ருப்பு பாகத்தை வெளியே இருக்குமாறு பொருத்தி தூரத்திலே சென்று அவர் பார்க்கும் பார்வையில் மாறுபாடு உள்ளதா என்று பார்த்துவிட்டு சரியாக இருக்கிறது என்று மனத் திருப்தியுடன் எருக்கம் பூ மாலையை எடுத்து அவருக்கு சார்த்திவிட்டு. நானே என்னை ஒரு முறை பார்த்துக்கொண்டு எந்தப் பக்கமாக பூணூல் இருக்கவேண்டும் என்று சரிபார்த்துக் கொண்டு நல்ல நூல் எடுத்து மூன்று இழையாக திரித்து அதை பூணுலாக்கி ப்ரும்ம முடிச்சு இடது தோளின் மேல் இருக்க வேண்டும் வலது புறமாக கிழே வரவேண்டும் பூணூல் என்று சரிபார்த்துக்கொண்டு அதையும் அவருக்கு சார்த்திவிட்டு சரி அவருக்கு நெற்றியிலே திருமண் ஶ்ரீசுவர்ணம் இடவேண்டுமே நம்முடைய வைஷ்ணவர்களின் வழக்கப்படி என்று திருமண் ஶ்ரீசுவர்ணப் பெட்டியைத் திறந்து நெற்றியிலே திருமண்ணால் இரு பக்கமும் கோடு போட்டு கீழே நெற்றியின் மூலாதாரப் பகுதிக்கு கீழே அந்த இரு கோடுகளையும் இணைத்து நடுவிலே ஶ்ரீசுவர்ணக் கோடு வரைந்து ஆஹா எல்லா அலங்காரமும் பண்ணியாச்சு சரியா இருக்கா பாரு என்றேன்

நன்னா இருக்கு ஆனா நாம வடகலை ஆனா திருமண் யூ மாதிரி வராமே ஒய் மாதிரி கீழே நீட்டிண்டு இருக்கே பரவாயில்லையா என்றாள்

ஆமா பிள்ளையார் வடகலையா தென்கலையா அப்போதுதான் எனக்கே சந்தேகம் வந்தது.

சரி எதுக்கும் இருக்கட்டும் என்று அந்த நாமத்துக்கு கீழே விபூதியையும் பூசி ஒரு குங்குமப் பொட்டும் வைத்து வினாயகரை தும்பிக்கையாழ்வாராகவும் வினாயகனாகவும் விக்னேஷ்வரனாகவும் மூல முதல்வனாகவும் வேத வியாசர் சொல்லச்சொல்ல தன் தந்தத்தையே எழுத்தாணியாக்கி மஹாபாரதம் எழுதிய வினாயகரை பூஜை செய்யத் தொடங்கினோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.