வள்ளுவம் வலியுறுத்தும் புலால் மறுப்பு!
-மேகலா இராமமூர்த்தி
’வாழ்க்கை வாழ்வதற்கே’ என்று மக்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதில் மாற்றுக் கருத்தில்லை; ஆனால் எவ்வாறு வாழ்வது? அதற்கென்று ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா? என்ற கேள்வி உடனே நம் மனத்தில் எழுகின்றது. இதற்கான விடையைத் தன் அறிவாலும் அனுபவத்தாலும் கண்டறிந்து ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே ஏட்டில் எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார் ஒரு மாமனிதர்!
அவர் வேறுயாருமல்லர்… சிந்தனைத் தெளிவும் கருத்துச் செறிவும் மிளிர ஒன்றரை அடிகளிலேயே வாழ்வின் நீள அகலங்களை அளந்துவிட்ட நீடுபுகழ் வள்ளுவரே அந்த மாமனிதர்!
முடிமன்னர் முதல் குடிமக்கள் ஈறாகச் சாதி சமயப் பேதமின்றி, உயர்ந்தோர் தாழ்ந்தோர் வேறுபாடின்றி அனைவர்க்கும் வழிகாட்டும் அரிய நூல் வள்ளுவம் என்பது உலகறிந்த ஒன்று. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் மூன்றுங்கொண்ட ’முப்பால்’ தமிழகத்திற்கு அப்பாலும் புகழொளி பரப்பிவருகின்றது. விவிலியத்திற்கு (Bible) அடுத்தபடியாக உலகின் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது நம் திருக்குறளே என்பது தமிழரனைவரும் பெருமிதம் கொள்ளவேண்டிய சாதனை!
இந்த உலக சாதனை ஒருபுறமிருப்பினும், உள்ளூர்த் தமிழர்களாலேயே திருக்குறளுக்கு அடிக்கடிச் சோதனையும் நிகழ்ந்துவிடுகின்ற கொடுமையை என்னென்பது! மணக்குடவர் தொடங்கிக் (கவிஞர்) மகுடேஸ்வரன் வரைப் பலர் திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதியும், (Almost every major writer/scholar has written commentaries on it.) குறளில் பேசப்படுகின்ற கருத்துக்கள் சிலவற்றில் நம்மவர்க்கு இன்னமும் தெளிவின்றித் தாமும் குழம்பிப் பிறரையும் குழப்பிவருவது வேதனையளிக்கின்றது.
சான்றாக, அறத்துப்பாலில் இடம்பெற்றுள்ள இல்லறவியல், துறவறவியல் உட்பிரிவுகளைக் கருத்தில்கொள்வோம்.
இல்லறவியலில் இடம்பெற்றுள்ள அதிகாரங்கள் அனைத்தும் இல்லறத்தார்க்கே உரியன; துறவறவியல் அதிகாரங்கள் அனைத்தும் துறவியர்க்காகவே எழுதப்பட்டன என்ற எண்ணம் இந்தக் குழப்பவாதிகளுக்கு இருக்கின்றது. இந்த எண்ணம் சரிதானா?
இல்லறவியலிலுள்ள இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கட்பேறு, விருந்தோம்பல் முதலிய அதிகாரங்களை வேண்டுமானால் நாம் இல்லறத்தார்க்கு மட்டுமே உரியவை என்று கருதலாம்; அதில் பிழையில்லை. ஆனால், அன்புடைமை, இனியவை கூறல், நடுவுநிலைமை, ஒழுக்கமுடைமை, தீவினையச்சம், பயனில சொல்லாமை, ஈகை, புகழ் உள்ளிட்ட ஏனைய அதிகாரங்களும் இல்லறத்தார்க்கு மட்டுமே உரித்தானவை என்று கருதுவது பொருந்துமா?
அன்பும், இன்சொற்களும், நல்லொழுக்கமும், தீவினையச்சமும், நடுவுநிலைமையும் அரசன் முதல் ஆண்டிவரை அனைவரும் கைக்கொள்ள வேண்டிய அரும்பண்புகளாயிற்றே! இவற்றை ”இல்லறத்தார்க்கு மட்டுமே” என்று எவ்வாறு முத்திரை குத்தவியலும்? எனவே, இல்லறவியலில் பேசப்படும் பண்புகள் இல்லறத்தார்க்கு ’அவசியம்’ இருக்கவேண்டியவை; ஏனையோரும் பின்பற்றி ஒழுகவேண்டியவை என்று கொள்வதே அறிவுடைமை!
இனி, துறவறவியலுக்கு வருவோம்!
இப்பகுதியில் இடம்பெற்றுள்ள ‘புலால் மறுத்தல்’ எனும் அதிகாரம் அதிக அளவில் சர்ச்சைகளுக்கு ஆட்பட்டு வருவது கண்கூடு. ”புலால் மறுப்பு துறவியர்க்கானது” என்று ஒரு சாராரும், ”இல்லை…இல்லறத்தாரும் கடைப்பிடிக்க வேண்டியதே அது” என்று மற்றொரு சாராரும் முடிவில்லா விவாதத்தில் ஈடுபட்டுவரக் காண்கிறோம்.
இந்த வி(தண்டா)வாதம் இருக்கட்டும்! இதுகுறித்து வள்ளுவரின் உள்ளம் என்ன எண்ணுகின்றது என்பதைக் குறள்வழி அறிந்துவருவோம்!
’புலால் மறுப்பு இல்லறத்தார்க்கு அல்ல’ என்று உரத்து முழக்கமிடும் ஊனூண் பிரியர்கள் தம் கருத்துக்குச் சான்றுகாட்டும் குறட்பா பின்வருவது…
அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று. (குறள்: 259)
”அவிசொரிந்து (நெய் வார்த்து) வேள்வி செய்வதைவிட ஓர் உயிரைக் கொன்று உண்ணாதிருத்தல் நன்று” என்பது இக்குறளின் பொருள். புவியிலே, அவிசொரிந்து வேள்வி செய்வோர் யார்? முனிவர்கள்(அருளாளர்கள்); ஆகவே அவர்கள் மட்டுந்தான் உயிர்களைச் செகுத்தும் பகுத்தும் உண்ணக்கூடாது. பிறரெல்லாம் ’ஹலால் (இறைச்சிக்) கடையில் புலால் வாங்கி விலாப் புடைக்கப் புசிக்கலாம்…தவறில்லை என்று விளக்கமளிக்கின்றனர் இவர்கள்!
இவ்விளக்கம் ஏற்புடையதா என்பதையறிய நாம் வேறெங்கும் ஆதாரம்தேடி அலையவேண்டியதில்லை. புலால் மறுத்தல் அதிகாரத்திலேயே அதற்கான விடையும் நமக்குக் கிடைத்துவிடுகின்றது. ஆம், அந்த அதிகாரத்தின் ஆறாம் குறட்பாவை நோக்கி நம் பார்வையைப் பதிப்போம்!
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனில் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். (குறள்: 256) என்பது அக்குறட்பா.
இதன் பொருள்: ”பேதைமை காரணமாக அல்லது ஊன் தின்கை காரணமாக உலகம் கொல்லாதாயின் பொருள் காரணமாக ஊன் விற்பார் யாவரும் இல்லை. ‘உலகு’ என்பது ஈண்டு உயிர்ப்பன்மை மேல் நின்றது” என்று இக்குறளுக்கு அரிய விளக்கத்தைத் தருகிறார் பரிமேலழகர்.
’உலகு’ என்ற சொல்லை வள்ளுவர் இங்கே கையாண்டிருப்பது இக்குறள் துறவோர்க்கு மட்டுமன்று…துறவியரல்லாத பிறவோர்க்கும் சேர்த்துத்தான் என்பதைத் தெற்றென விளக்குகின்றது!
இக்குறளின் உட்கருத்தை இன்னும் நுட்பமாக நமக்குப் புலப்படுத்துகிறார் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். அதனையும் காண்க!
”விலைக்கு வாங்கி யுண்பாரும் வீட்டிற் கொன்று உண்பாரும் ஆக ஊனுண்பார் இரு திறத்தார். குற்றத்தைப் பொறுத்த அளவில் இவ்விரு திறத்தாரும் ஒரு திறத்தாரே. ஒருவன் ஓர் உண்ணப்படும் உயிரியைக் கொல்வதற்கு அதன் ஊனுண்பவரும் நேர்வகையிலும் நேரல்லா வகையிலும் தூண்டுபவராயிருத்தலால், அக் கொலைக் குற்றம் கொன்றானையும் தின்றாரையும் ஒக்கச் சாரும் என்பது வள்ளுவர் கருத்தாகும்.
ஊன் தின்பதற்காக ஓர் உயிரியைக் கொன்றால், அக் கொலைக்குற்றம் அதைக் கொன்றவனைச் சாருமே யன்றி அதன் ஊனைத் தின்றவரைச் சாராது, என்னும் புத்த சமய வுறழியை (வாதியை) நோக்கிக் கூறிய கூற்றாகும் இது!” – பாவாணர்
(கொன்றால்தான் பாவம்; ஏற்கனவே கொல்லப்பட்டதைத் தின்றால் பாவம் இல்லை எனும் புத்தமதக் கொள்கைக்கும் சேர்த்தே கொடுக்கப்பட்ட சம்மட்டி அடி இக்குறட்பா!)
இதே குறளை, கவியோகி சுத்தானந்த பாரதியின் ஆங்கிலக் கவிதை வரிகளில் சொல்வதானால்,
None would kill and sell the flesh
For eating it if they don’t wish.
ஆன்றவிந்தடங்கிய சான்றோரே…அருமைத் தோழர்களே! இனியேனும், ’புலால் மறுத்தல்’ துறவியருக்கு மட்டுமே எனும் பொ(அ)ருளற்ற வாதத்தை விடுத்து, ’அது மண்ணில் வாழும் மானுடர் அனைவர்க்கும் பொதுவானது’ என்பதை உணர்ந்து, ஊனுணவைக் கடிந்து ஒதுக்குவீர்; வள்ளுவ நெறியில் வாழ்வீர்!