க. பாலசுப்பிரமணியன்

 

திருமீயச்சூர் மாதா லலிதாம்பிகை

lalithambika

மலைமகளும் அலைமகளும் கலைமகளும் கைப்பிடித்து

மனமாளும்  ஓர்மகளாய் உலகாள வந்தவளே !

மடியாத அறிவுக்கும் முடியாத மூச்சுக்கும்

முதலாகி, இடையாகி முடிவான மூலப்பொருளே ]

 

விடைமீது அமர்ந்தோன் இடப்பக்கம் அருள்கொண்டு

மடைதிறந்த வெள்ளமென மனமுவந்து தருபவளே !

சடைகொண்ட சங்கரனின் சடவில்லாத் தாண்டவத்தில்

தடையின்றிக் கால்தூக்கி களம்வென்ற கல்யாணியே !

 

அருணனோடு கருடனுக்கும் அருள்தந்த அம்பிகையே

அரியணை மேலமர்ந்தாலும் அன்பின் வடிவானவளே

அகத்தியன் புகழ்பாட அகமெல்லாம் மகிழ்ந்தவளே

அபயக்கரம் கொண்டு அடியாரைக் காப்பவளே !

 

களையான கன்னமதைக்  காதலுடன் தொட்டுவிட

கலக்கமெல்லாம் நீங்கி காமேஸ்வரி களிப்புற்றாய் !

கண்டத்திலே  விடமடக்கி அண்டமிதைக் காத்தவனைக்

கைப்பிடித்த கருணையே ! சங்கரியே ! சாந்தநாயகி!

 

சக்கரத்தின் மேலமர்ந்து சங்கடங்கள் தீர்ப்பவளே !

வக்கிரங்கள் நீக்கிவிடும் மீயச்சூரின் மெய்ப்பொருளே !

மந்திரங்கள் தந்திரங்கள் மனம்நாடத்  தேவையில்லை

வந்திருந்து  வணங்கிவிட்டால் வளமெல்லாம் தருபவளே !

 

பந்தமென்று இவ்வுலகில் உன்னையன்றி யாருண்டு ?

சுந்தரியே !   வந்திடுவாய் ! சோதனைகள் நீக்கிடுவாய்

கொலுசொன்று வைத்திருப்பேன் கோமகளே ஏற்றிடுவாய் !

கொலுவிருக்க அழைக்கின்றேன் குணவதியே வந்தமர்வாய் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *