-உமாஸ்ரீ

 

writer-mr-sundaramதிரு. எஸ்.ஆர்.ஜி. சுந்தரம் குழந்தைகளுக்கு ஏராளமான புத்தகங்களையும் கலை நிகழ்ச்சிகளையும் படைத்திருக்கிறார். இன்னும் எழுதிக்கொண்டே இருக்கிறார். அவர் அலைபேசி எண்: 99529 13872. சென்னை மூவரசன் பேட்டையில் வசிக்கும் அவருடன் ஒரு நேர்காணல்.

1. தங்களுக்குக் கதை எழுத வேண்டும் – குறிப்பாக சிறுவர்களுக்கு நூல்கள் எழுத வேண்டும் என்னும் ஆர்வம் எப்படி வந்தது?

நான் 21.8.1940 அன்று பிறந்தேன். . சென்னைத் துறைமுகத்தில் 37 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்றேன். மாணவர் பருவம்தொட்டே எனக்குப் பேச்சுக் குறைவு. சிந்தனை அதிகம். கூடவே தமிழ்ப்பற்றும் அதிகம். எனவே இதழ்களைப் படிக்கும் பழக்கம் உண்டு. பள்ளியில் ‘மாணவர் மன்ற‘ அமைப்பு நடத்திய பொது சிறப்புத்தமிழ்ப் போட்டிகளில் முதல் வகுப்புத் தேர்ச்சியும் பெற்றேன். இதனால் தமிழ்ப்பற்று மேலும் தொடர்ந்தது. ’ கல்கண்டு’ துப்பறியும் கதை இதழ்களை மிக்க ஆர்வமுடன் படித்து வந்தேன். துப்புறியும் நிபுணராகிக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவேண்டும் என்ற உள்ளுணர்வு இருந்தது. என்வே துப்பறியும் கதைகளை எழுதும் ஆர்வமே முதலில்  துளிர் விட்டது. இதே உணர்வுடன் ’கண்ணன்’ இதழில் நான் எழுதிய கதை பிரசுரமானது.

என் எழுத்தார்வம் பற்றிக் கஸ்தூரிபா சிறுவர் சங்கம் மூலம் அறிந்த அன்றைய வானொலி அண்ணா, என் வீட்டிற்குக் கடிதம் எழுதி, வானொலி நாடகங்களை எழுதத் தூண்டினார். அப்போது என் வயது இருபது. வாய்ப்பை ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டு செயல்பட்டேன். தொடர்ந்து பல சிறுவர் நாடகங்கள் ஒலிபரப்பாகின. தானாக வந்த வாய்ப்பைத் தூணாகப் பயன்படுத்திக் கொண்டேன்..தொடர்ந்து சிறுவர் சங்கம் ஒன்று அமைக்கவும் தூண்டப்பட்டேன். அமைத்துப் பல பல்சுவை நிகழ்ச்சிகளையும் அளிக்கத் துவங்கினேன்.

உரைச்சித்திர நாடகம், நகர்வலம், கால், அரை, ஒரு மணி நேர நாடகங்கள் எனப் பல பிரிவுகளிலும் என் படைப்புகள் இடம்பெறத் துவங்கின. தொலைக்காட்சியிலும் சிறியவர் பெரியவர்களுக்கான் நாடகங்கள் இடம் பெற்றன. பலப் பல இதழ்களிலும் என் படைப்புகள் இடம்பெறத் துவங்கின.

book-photoஇவ்வாறு என் நாடகப் படைப்புகளுக்குக் கிடைக்கப்பெற்ற தொடர் அங்கீகாரமும், வளர்ச்சியும் கதைகள் எழுத்த தூண்டின. இதுவே என் சிறுகதைப் படைப்புகளுக்கும், நூல்களின் ஆக்கத்திற்கும் காரணமாகத் திகழ்ந்து, இன்றும் என் படைப்பிலக்கியப் பயணத்தை நிகழ்த்தி வருகின்றன.

2. தங்கள் இலக்கியப் பணி எப்போது எப்படி வளர்ச்சி பாதையில் பயணிக்கத் தொடங்கியது?

1957இல் துவங்கிய எழுத்தார்வத்துடன் இருந்த நான் 1958இல் சென்னைத் துறைமுகப் பணியில் சேர்ந்தேன். அங்கே இலக்கிய ஆர்வம் கொண்ட நண்பர்களின் அன்பையும், தொடர்பையும்பெற்று இலக்கிய உணர்வுடன் பழகி வந்தேன். சில ஆண்டுகளில் இலக்கிய மன்றம் ஒன்றும் துவங்கப்பட்டது. அதன்மூலம், பல தமிழறிஞர்களின் அறிமுகமும், அவர்களது சொற்பொழிவும் என் இலக்கிய ஆர்வத்தை ஆழப்படுத்தின. பல இலக்கியப் போட்டிகளில் பங்கேற்று, வெற்றியும் பெற்றேன். யாப்பிலக்கணமும் கற்றேன். துறைமுகத்தில் இயல் இசை நாடகமன்றம் நிறுவி, பல கலைநிகழ்ச்சிகளை அளித்தேன்.

இன்றும் ‘அகில உலக எழுத்தாளர்கள் சங்கம், கவிதை உறவு, பாரதி கலைக்கழகம் தமிழ்ப் படைப்பாளர்கள் குரல், பாரதி வள்ளுவர் மிஷன், கம்பர் கழகம் இவற்றின் நிகழ்ச்சிகளில் அவ்வப்பொழுது கவிதைகள் படிக்கின்றேன். உரைகள் நிகழ்த்துகிறேன். மீண்டும் கவிக்கொண்டல் இதழில் பல ஆண்டுகளாக வெண்பாக்கள் எழுதி வருகிறேன்.

இலக்கிய ஆர்வம் காரணமாக தமிழ் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளேன்.

பல தனியார் அமைப்புகள் நடத்தும்  பலவிதப் போட்டிகளுக்கு நடுவராகவும், விழாவிற்கான சிறப்பு விருந்தினராகவும் அவ்வப்போது பங்கேற்று வருகிறேன்.

3. தாங்கள் ஏன் எழுதுகிறீர்கள்?

ஆம்! எழுதுகிறேன்… இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறேன்…ஊக்கம் குறையாமல்! அதுவும் 1957ஆம் ஆண்டு முதல்! எனது பதினேழு வயதிலிருந்து (தற்போது என் வயது எழுபத்தி ஏழு) இதற்கான உந்து சக்தி எது?

பெறுகின்ற காசுக்காகவா? வருகின்ற புகழிற்காகவா? தருகின்ற விளம்பரத்திற்காகவா ? தன்னுணர்ச்சி வெளிப்பாட்டிற்கா ? எதற்கு? ஏன்? என்னை நானே இப்படி ஆய்வுகுட்படுத்திப் பார்ப்பதில் மகிழ்வெய்துகிறேன்.

பள்ளியில் படிக்கும் காலத்தில் தமிழ்மீது தனிதாகம் ஏற்பட்டது. அதுவே இன்றும் தணியாத தாகமாகத் தொடர்ந்து வருகிறது.

தமிழ்வாணன் படைத்த சங்கர்லால்போல் துப்பறியும் நிபுணராக வேண்டும் என்ற உள்ளத்துடிப்பு!. இத்துடிப்பும், சமுதாய நலக் கண்ணோட்டமும், தமிழார்வமும் இணைந்து படைப்பார்வத்தை என் உள்ளத்தில் விதைத்தன. இவ்விதையின் வெளிப்பாட்டில் துளிர்விட்டன இரு துப்பறியும் கதைகள். ஒன்று சிறுவர் சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டு வெற்றியும் பெற்ற சிறுகதை; மற்றொன்று உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் வாசவன் அவர்கள் ஆசிரியராக இருந்து நடத்திவந்த ’துப்பறியும் கதை’ எனும் மாத இதழில் வெளிவந்த ‘காட்டிக் கொடுத்த கடிதங்கள்’ எனும் சிறுகதை. இவை முறையே 1. 01. 1957லும் டிசம்பர் 1957லும் – எனது பதினேழு வயதில் வெற்றிபெற்ற படைப்புகள். தொடர்ந்து ஜனவரி, 1958 ’துப்பறியும் கதை’  இதழிலும் ஒரு தொடர்கதையை முடித்தெழுதும் போட்டியில் எனது கதை முடிவு வெற்றிபெற்றது. இவையே என்னிடம் சிறுவர்களுக்கும்,  பெரியவர்களுக்குமான  இலக்கியங்களைப் படைக்குமாற்றல் இருந்ததை வெளிப்படுத்தி, எழுத்துலகில் என்னைத் தன்னம்பிகையுடன் தடம்பதிக்கச் செய்தது.

எனது சிறுவர் சிறுகதை ஒன்றைப் படித்த அப்போதைய வானொலி அண்ணா ரா. அய்யாசாமி அவர்களிடமிருந்து ஒரு நாள் அலுவலகக் கடிதமாக எனக்கு ஓர் அழைப்பு வந்தது; சந்தித்தேன். சிறுவர்களுக்கான நல்ல வானொலி நாடகங்களைப் படைத்துத் தரும்படி கூறி அதற்கான வழிகாட்டுதல் உத்திகளையும் கூறி, என்னைச் சிறுவர் இலக்கியத் திசையில் ஆழமாக வேரூன்ற வைத்தார். இது நடந்தது 1960-இல்! நல்ல வாய்ப்பு!

சிறுவர், சிறுமியர் உலகம் சீர்பட்ட திசையில் நடந்தால் எதிர்காலச் சமுதாயம் சிறந்துவிடும் என்ற சிந்தனை உந்த, இளம் மாணவமணிகளுக்குப் பழக வேண்டியவற்றை எடுத்துக் காட்டியும் பல வானொலி  நாடகங்களை வழங்கினேன். பாற்கடல் சிறுவர் சங்கம் என்ற ஒன்றையும் நிறுவி, நல்ல பல கருத்துகள் கொண்ட நகைச்சுவையுடன் கூடிய நாடகங்களை,  பாடல்களை, உரைச்சித்திரங்களைச் சங்கச் சிறுவர் சிறுமியர் மூலம் வானொலி, தொலைக்காட்சிகளில் அளித்தேன்.

இத்தைகைய ஆரோக்கியமான பின்னணியில் என் இலக்கியதாகத்தை வளர்த்துக் கொண்டதால் கட்டுரை, கவிதை, நாடகம், வெண்பா, சிறுகதை, மேடை நாடகம் – முதலிய பன் முகப்படைப்புகளில் இன்றளவும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன்.

எனவே “குழந்தைகள் சிறந்தால் குவலயம் சிறக்கும்”, “ இலக்கியத்தால் வாழ்க்கைக்கு ஒளிகூட்ட இயலும்” எனும் எனது உறுதியான கொள்கையாலும் மேனாட்டறிஞர் உட்சன்  சுட்டிக்காட்டியுள்ளபடி

அ) தன் அனுபவத்தைத் தானே வெளியிட வேண்டுமென்ற மனிதனின் விருப்பம்.

ஆ) ஏனைய மக்களிடத்தும் அவர்தம் செயல்களிடத்தும் மனிதன் கொண்டிருக்கும் ஈடுபாடு.

இ) மனிதன் தான்வாழும் உண்மையுலகிலும், கற்பனை உலகிலும் அவன் கொண்டிருக்கும் ஈடுபாடு.

உ) தன் அனுபவத்திற்குக் கலைவடிவம் கொடுக்கவேண்டும் என்ற மனிதனின் ஆர்வம்.

முதலிய படைப்பதற்குரிய காரணிகளாலும் நான் எழுதுகிறேன். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுதுவேன்.

4. தாங்கள் எப்பொழுது எழுதுவீர்கள்?

படைப்பிற்குத் தேவை, மனோநிலை. இவற்றிற்கேற்ப நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதுவேன். ஒரு நாளைக்குச் சுமார் ஆறு மணி நேரம் எழுதுவேன்.

5. படைப்புகளாக மாறிய சில அனுபவங்கள்

(அ) சென்னை லிங்குச்செட்டித் தெரு நடுவில் ஒரு பெரிய பாறாங்கல். அவ்வழியே இருமுறை சைக்கிளில் செல்ல நேரிட்டது . நானும் மற்றவர்களைப் போல் ஒதுங்கி சென்று விடுகிறேன். மீண்டும் மாலை வீடு திரும்பும்போது அக்கல்லை நகர்த்தி அப்புறப்படுத்த வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட, மிகச் சிரமப்பட்டு அக்கல்லை அப்புறப்படுத்தி விடுகிறேன். மனதில் மகிழ்ச்சி! உள்ளத்தில் பதிந்த அந்த அனுபவம் ஒரு சிறுவர் நாடகமாக உருவாகிவிட ’வழிகாட்டி’ எனும் அந்தச் சிறுவர் நாடகம் வானொலியிலும் ஒலிபரப்பாகியது.

(ஆ) நடைபாதை புத்தகக் கடை . ஒரு நல்ல புத்தகத்தைப் புரட்ட, எட்டாம் வகுப்புச் சிறுவனுக்கு  பரிசாக கிடைத்த லேபிள் அதன் மீது ஒட்டப்பட்டுள்ளதைக் கவனித்தேன். பரிசுப்பொருள் கடைவீதிக்கு வந்ததைக் கண்ட நான் அதை வாங்கிவந்து விடுகிறேன். சிறுவர்கள் தங்கள் பரிசுப் பொருள்களை இப்படி அலட்சியப்படுத்தக் கூடாது என்ற செய்தியைச் சொல்ல, ’பரிசின் பெருமை’ என்ற நாடகம் பிறக்க, அது வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டது.

(இ) பல வருடங்கள் முன் வீதியிலே சில சிறு சீட்டுக் கம்பெனிகள் தோன்றின. சிறுவர்களே அவர்களது இலக்கு. பல சிறுவர்களும் பெரியவர்களும் இது போன்ற சீட்டுக்கடையில் பணம்கட்டி ஏமாந்த செய்தி செய்தித்தாள்களில் வருகிறது. இதன் எதிரொலியாக எழுதப்பட்டு, ஒலிபரப்பாகிய வானொலி நாடகமே ’விழித்திரு!’

(ஈ).சிறுவர்கள் பிறரைப் பார்த்து எழுதும் தவறான பழக்கம் அன்றும் இருந்தது. இன்றும் இருக்கிறது. இப்படிக் ’காப்பி’ அடித்தே பாஸ் செய்யும் மாணவர்கள் சோதனையான சூழ்நிலைகளில் என்ன செய்வார்கள், என்று எண்ணிய போதுதான் ’செல்லாத ரூபாய்’ என்ற நகைச்சுவை நாடகம் பிறந்தது. மேடையில் பல முறை நடிக்கப்பட்டுப் பாராட்டப்பட்ட நாடகம்.

(உ).சமீபத்தில் எனது வீட்டுத் தோட்டத்தில் உள்ள சிறு பூச்செடிக்குள் ஒரு தேன்கூடு. தண்ணீர் விட்டால் தேனீக்கள் கிளம்பும், தண்ணீர் விடாமலும் இருக்க முடியாது . இதைக் கருவாகக் கொண்டு ’பூச்செடித் தேனடை’ என்ற நாடகத்தை எழுதினேன். ’சிறுவர் மணி 14.5.2016’ இதழில் பிரசுரம் ஆகியுள்ளது.

(ஊ). வீட்டில் ஒரு விருட்சி மரம், வெள்ளை கொத்துப் பூக்களுடன் காட்சியளிக்கும். ஓர் அமாவாசை இருட்டில் இப்பூக்கள்  மரம் தெரியாமல் மறைத்திருந்தன. இப்பூக்களின் காட்சியைக் கவிதையாக்கினேன். கவிதை உறவில் பிரசுரிக்கப்பட்டது.        ( அக்டோபர் 2008 – காரிருள் நேரத்தில்)

எ. “எது சுதந்திரம் ? “ – இது பற்றிய குழந்தைக் கவிஞரின் பாட்டு ஒன்றைப் படித்தேன். அதை விளக்கும் வகையில் சிறுவர்கான நாடகமாக்கினேன். 13.8.2016 சிறுவர் மணியில் வெளிவந்துள்ளது. வாழ்த்துஎன்ற நாடகமும் 22.10.16 சிறுவர் மணியில் வெளிவந்துள்ளது.

6.  படைப்புகளின் விவரங்கள்:

சிறியவர்களுக்கானவை:

உரைச்சித்திரங்கள்     :  13

குறு நாடகங்கள்       :  92

சிறுகதைகள்          :  68

கவிதைகள்/ பாடல்கள் : 77

கட்டுரைகள்           :  77

நடத்திய நிகழ்ச்சிகள்  : 72

சிறுவர் சங்க வகுப்புகள்     : 500 –க்கும் மேல்

நூல்கள்                 : 13

பெரியவர்களுக்கான படைப்புகள் பற்றிய விவரங்கள் :

வானொலியில்

35 நாடகங்கள் 50 நகர்வலச் செய்திகள்.

3 சிறுகதைகள், 3 பாடல்கள், 2 கவிதைகள்.

தொலைக்காட்சியில்

2 நாடகங்கள், 3 கவியரங்கள்.

இதழ்களில்

82 வெண்பாக்கள், 195 கவிதைகள், 27 கட்டுரைகள், 8 சிறுகதைகள்,            33 ஹைகூக்கள், ஓர் ஆங்கிலச் சிறுகதை.

கவியரங்களில்

48 நெடுங்கவிதைகள்

நடத்திய கலை நிகழ்ச்சிகள் 85

நூல்கள்

  1. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 2. நவபாரதச் சிற்பி ஜவஹர்லால் நேரு ஆகியோர் பற்றிய இரு வரலாற்று நூல்களின் தயாரிப்பில் ஆசிரியர் குழுவில் பங்கேற்று அவர்களைப் பற்றிய எழுத்தோவியங்களைத் தீட்டியுள்ளேன்.
  2. நக்கீர பூமி 4. தாய் தந்த தீபம் 5. திருவடிமாலை ( 108 வைணவத்தல வெண்பாக்கள்) 6. குணப்படுத்தலாம் ( மொழிமாற்று நூல்)

ஆராய்ச்சி நூல்

சமயம் சார்ந்த தமிழ் நூல்களும் தமிழ்நாட்டுக் கோவில்களும்.

7. எழுத்தாளனாக வாசிப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?

வெவ்வேறு வகையான படைப்புகளுக்குண்டான தனிப்பட்ட நடைகளை உணர்ந்து கொள்ளமுடியும் . வாசிப்பினால் விளைந்த மொழியறிவு, நடை, சிந்தனை ஓட்டம், கருக்கள் – பற்றிய உள்வாங்கலினால், ஓர் எழுத்தாளன் ஆளுகின்ற மொழி, நடை முதலியவற்றிலும் ஆக்கபூர்வமாகப் பிரதிபலிக்கும் வண்ணம் அமையக்கூடும். ஆனால் அவற்றை அப்படியே கையாளுவதிலிருந்து படைப்பாளன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும். .

8. நீங்கள் எழுதியதில் மிகவும் பிடித்தப் புத்தகம் எது?

எல்லா நூல்களையுமே எனக்கு நன்கு பிடித்த பின்புதான், பிறர் படிக்க எழுதுகிறேன். எனினும், ”புத்தகப் பூமாலை” எனும் நூல் இன்றைய  சிறுவர்களுக்கான விழிப்புணர்ச்சிச் சிறுகதைகள் என்பதால் கொஞ்சம் அதிகமாகப் பிடிக்கும்.

9. உங்களுக்குக் கிடைத்த விருதுகள்

குழந்தை இலக்கியத்தில் வள்ளியப்பர் இலக்கிய விருது, வானொலிப் பேரவையின் குழந்தை இலக்கிய ரத்னா விருது, என்சிஇஆர்டியின் விருது எனப் பலவும், பெரியவர் இலக்கியத்தில் பாரதி பணிச் செல்வர் விருது, தமிழ் இலக்கிய மாமணி விருது எனப் பலவுமாக இருபது விருதுகளுக்குமேல் பெற்றுள்ளேன். ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவையால் அண்மையில் (23.10.2016 அன்று) ’சாதனைச் செம்மல்’ என்னும் விருதும் பெற்றுள்ளேன்.

10. சிறுவர்களுக்குக் கதை எழுத நினைப்பவர்களுக்கு நீங்கள் தரும் அறிவுரை?

 ”முதலில் இன்றைய சிறுவர்களே நாளைய  இந்தியா” என்ற எண்ணத்தை மனதில் ஆழப்பதியுங்கள்! சரியான திசையில் வழிகாட்டப்பட்டால், அவர்கள் வாழ்வில் சாதனைபடைத்து, நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்ல மூலதனமாவார்கள் என நம்புங்கள்! இத்தகைய உண்ர்வோடு அவர்களைப் பாருங்கள், அணுகுங்கள்; பழகுங்கள்!  அப்போது அவர்களின் மனநிலை இயக்கத்தைப் புரிந்து கொள்வீர்கள். அதற்கேற்ப அவர்களை உற்சாகப் படுத்தவோ, வேறு ஆக்கத் திசைகளில் வழிநடத்தவோ தகுந்த கருக்களைத் தோற்றுவித்துக் கொள்ளுங்கள். இக்கருக்களை எளிய தமிழில், தாயன்போடு படையுங்கள்! பலன் உண்டு.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.