இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சீதாம்மா!

பவள சங்கரி

காலங்கள் மாறுகின்றனdsc_0021-300x298
ரசனைகள் மாறுகின்றன
மனிதனின் வாழ்வு முறையும் மாறுகின்றன
மாற்றங்களில் நீச்சல் அடிக்கின்றோம்
சிலர் ஓட்டத்துடன் நீந்துகின்றனர்
சிலர் எதிர் நீச்சல் போடுகின்றனர்
மாறுதல்களைப் பார்த்து எழும் நெஞ்சக் கொதிப்பையும்
காலம் ஆற்றிவிடும்
இதுதான் வாழ்க்கை

வாழ்க்கையின் நிதர்சனத்தை உள்வாங்கி அதன் போக்கில் எதிர் நீச்சல் போட்டே வாழ்ந்து காட்டியுள்ள துணிச்சலான பெண்மணி இவர்! பாரதி பிறந்த எட்டயபுரத்தில் பிறந்து, பாரதி பயின்ற அதே பள்ளியிலேயே தானும் பயின்று, பாரதி வாழ்ந்த வீட்டிலும் சிறிது காலம் வாழ்ந்தவர் திருமிகு சீதாலட்சுமி அம்மையார். இதுமட்டுமில்லை, அந்த காலகட்டத்தில் எட்டயபுரத்தில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடித்த முதல் சுட்டிப் பெண்ணும், கல்லூரிப்பட்டம் பெற்ற முதல் வீரப் பெண்ணும், ‘சீதாம்மா’ என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் திருமிகு சீதாலட்சுமி. சமூகநலச் சேவகியாக, துணை இயக்குனராக தமிழக அரசில் முப்பத்துநான்கு ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர் சீதாம்மா. எட்டயபுர வரலாறு, வரலாற்றுப் பயணம், சீதாம்மாவின் குறிப்பேடு, நினைவலைகள், எண்ணங்கள் ஊர்வலம், முத்தொள்ளாயிரம் ,மலரும் நினைவுகள் என பல்வேறு வரலாற்று ஆவணங்கள் படைத்தவர் இவர்.

dsc_09761

திண்ணை மின்னிதழில் பல காலங்களாக இவர் எழுதிவந்த கட்டுரைகள் அனைத்தும் பிரபலமானவை. மிக வெளிப்படையாகவும், துணிச்சலாகவும் பேசும் சீதாம்மா இன்றும் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் வழிகாட்டுதலில் பெரும்பங்கு எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற வகையில் நமக்கெல்லாம் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்பவர். நேற்று 83வது பிறந்தநாள் கண்ட அம்மா இன்றும் தன்னுடைய பல்வேறு உடல் உபாதைகளைக்கூட சட்டை செய்யாமல் எத்தனையோ திட்டங்களையும், ஆய்வுப் பணிகளையும் (குறிப்பாக சித்தர் சக்திகள், அமானுஷ்யங்கள்) முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. முதன்முதலில், ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மரபு அறக்கட்டளை நிகழ்ச்சியில், தலைவர், தோழி முனைவர் சுபா மூலம் அறிமுகம் ஆனவர் அம்மா. அன்று முதல் எங்கள் நட்பு தொடர்ந்து இன்று எனக்கு ஒரு தாயாகவே உரிமையுடன் கடிந்துகொள்ளும் அளவிற்கு இதய நட்பு கொண்டவர். குறிப்பாக என் அம்மா இறந்தபோது, ‘உனக்கு இன்னொரு அம்மா நானிருக்கிறேனே, ஏன் இன்னும் புலம்பிக்கிட்டிருக்கே’ என்று அதட்டியே என்னை இயல்பாக்கியவர் சீதாம்மா. இத்தனைக்கும் அவர் இருப்பதோ அமெரிக்காவில், நான் இருப்பதோ இந்தியாவில். உலகின் ஆளுக்கொரு கோடியில் இருப்பினும், இடைப்பட்ட தூரம் எங்கள் அன்பிற்கு ஒரு தடையாகவே இருந்ததில்லை என்பதே சத்தியம். மணிக்கணக்காக தொலைபேசியில் பேசினாலும் அத்தனையும் பதிவு செய்து சேமித்துக்கொள்ள வேண்டிய முக்கியமான செய்திகளாகவே இருக்கும். எந்த விசயத்தைப் பற்றி கேட்டாலும் உடனே அது பற்றிய விளக்கங்களை விரல் நுனியில் வைத்திருப்பார் இவர். அதற்கான வல்லுநர்களின் பெயர்களையும் தடையின்றி குறிப்பிடுவார். என் படைப்புகள் பலவற்றிற்கு அம்மாவிடம் ஆலோசனை பெற்றிருக்கிறேன் என்பதை நன்றியுடன் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். சென்ற வாரம் சென்னை வந்துள்ள அம்மாவை சந்தித்து வந்தது பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் மீண்டும் அமெரிக்கா கிளம்பிவிடுவார். அடுத்த முறை வரும்போது மேலும் பல சாதனைகள் புரிவதற்கான திட்டங்களும் வைத்திருப்பதுதான் ஆச்சரியம். ‘காலனே நீ வந்தால் காலால் எட்டி உதைப்பேன்’ என்றானே பாரதி, அப்படித்தான் இவரும் இன்று துணிந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். அம்மா இன்னும் பல்லாண்டு, பல்லாண்டு நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை வாழவேண்டும் என்று எல்லாம் வல்ல எம் இறையைப் பிரார்த்திக்கிறோம்.

2014 ஆம் ஆண்டில் சீதாம்மாவிற்கு, நம் வல்லமை இதழ் மூலம் வல்லமையாளர் விருது வழங்கியபோது, தோழி தேமொழி எழுதிய கட்டுரையை இங்கு காணலாம்.

அன்புடன்
பவளா திருநாவுக்கரசு

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சீதாம்மா!

 1. இக்கால இளந்தலைமுறையினருக்கு பெரியோர்களின் வழிகாட்டுதலோடு கூட ஆசிர்வாதமும் அவசியம். 83 வயதைக் கொண்டாடும் அம்மாவிற்கு ஆசிர்வாதம் வழங்க வயதிருக்கிறது. அதை அன்புடன் பெற்றுக்கொள்ள நமக்கெல்லாம் வயதிருக்கிறது.

  சீதாம்மாவின் அனுபவங்களும், பதிவுகளும் அனைவருக்கும் தேவை. மேன்மேலும், தேகசுகத்தோடு எழுத்துலக வாழ்க்கையில் வலம் வர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  பிறந்த நாள் செய்தியை வெளியிட்ட ஆசிரியர் பவளசங்கரிக்கு நன்றி.

  அன்புடன்
  பெருவை பார்த்தசாரதி

 2. மதிப்புக்குரிய சீதாம்மா,

  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தமிழ்நாட்டுடன் இந்தியாவே தீபங்கள் ஏற்றி, வான வேடிக்கைகளோடு உங்கள் பிறந்த நாளைக் கொண்டாடுகிறது இன்று.

  எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்வாழ்வும், நீள்வாழ்வும் அளிக்கட்டும்.

  அன்புடன்,
  சி. ஜெயபாரதன்

 3. 83வயதினிலும் எழுதத்துடிக்கும் சீதாம்மா
  என்றுமே தமிழினத்தின் சொத்தம்மா
  இளையவரின் வாழ்வினுக்கு விளக்கம்மா
  இன்பமுடன் வாழ்கவென்று வாழ்த்துகிறேன் !

  வல்லமையால் இனங்கண்ட முத்தம்மா
  வண்ணதமிழ் எழுதிநிற்கும் கையம்மா
  நல்லவாழ்த்து சொல்லுகிறேன் நற்றமிழால்
  நாளெல்லாம் இன்பமுடன் வாழ்ந்திடுங்கள் !

  அன்புடன்
  எம்.ஜெயராமசர்மா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *