பாரதி – ஒரு பார்வை
க பாலசுப்ரமணியன்
அணுவைத் துளைத்து
அதன்
கருவைக் கிழித்து
அதனுள்
தன் கருத்தை வைத்தான் !!
சொல்லைப் பிரித்து
அதனுள்
சுடரை வைத்து
சுதந்திரம் கொடுத்தான் !
மூச்சின் நெருப்பை
மொழியினுள் வைத்து
முழங்கிடச் செய்தான் !
முத்தமிழ் சொற்களை
பெற்றவள்போலே
உச்சிகள் முகர்ந்து
உலவிட வைத்தான் !
விழிகளினுள்ளே
வீரத்தைச் செதுக்கி
விண்ணிடம்
கதைகள் சொன்னான் !
விழித்திரை ஓரம்
வேதனை எழுதும்
பாவையை
விழித்திடச் சொன்னான் !
வறுமையில் வளவலாய்
விருந்திட்டு
குருவிக்கும் காக்கைக்கும்
வாழ்த்துரை சொன்னான் !
வல்லினம் இடையினம்
மெல்லினம் அனைத்தும்
ஓரினம் என்றே
உண்மையைச் சொன்னான் !