கைக்கொள்ள வேண்டிய கட்டளைகள் பத்து!
-மேகலா இராமமூர்த்தி
ஹீப்ருக்களின் விவிலியம் (Hebrew Bible) கடவுளின் கட்டளைகளாகப் பத்தைப் பட்டியலிடுகின்றது. மனித வாழ்வை நேரிய வழியில் பயணிக்கவைப்பதே இவற்றின் தலையாய நோக்கம்.
அக்கட்டளைகள் பின்வருமாறு:
1. I am the Lord thy God; thou shalt not have strange gods before Me.
நான் ஒருவனே ஏக இறைவன். ஆதலால் நீங்களாகவே (மக்கள்) போலியான கடவுளர்களை உருவாக்கிக்கொள்வதோ வணங்குவதோ கூடாது என்று எச்சரிக்கின்றது இக்கட்டளை.
’ஒருவனே தேவன்’ என்ற திருமூலரின் கருத்து இங்கே ஒப்புநோக்கத்தக்கது. சிறுதெய்வ வழிப்பாடு (The worship of demigods), பலகடவுளர் கொள்கை (poly-theism) முதலியவற்றை முதற்கட்டளை கண்டிக்கின்றது என்று கொள்ளலாம்.
(இங்கே இறைவனாகச் சுட்டப்படுபவர் யெஹோவா (Jehovah) என்று எண்ணுகிறேன். ஏசுகிறிஸ்துவை இவரின் திருமகனாகக் கருதுகின்றனர் கிறித்தவர்கள். யூதர்களுக்கு அதில் உடன்பாடில்லை எனத் தெரிகிறது.)
2. Thou shalt not take the name of the Lord thy God in vain.
என் பெயரைத் தேவையின்றி வீணாகப் பயன்படுத்தாதீர்கள் என்பது இறையனாரின் இரண்டாவது கட்டளை.
(கடவுளின் பெயரைச் சொல்லிப் பொய்சத்தியம் செய்வது, பிறரை ஏமாற்றுவது, இன்னபிற இதில் அடங்கும்.)
3. Remember that thou keep holy the Sabbath day.
இறைவழிபாட்டிற்கான நாளைப் புனிதநாளாக (Sabbath
Day) அனுசரியுங்கள்.
(பழைய ஏற்பாட்டின்படி (Old Testament) வாரத்தின் ஏழாவது நாளைக் கிறித்தவர்கள் புனிதநாளாக அனுசரித்திருக்கின்றனர். ஏனெனில், அந்நாளில்தான் இறைவன் தன் படைப்புத்தொழிலை நிறுத்திவிட்டு ஓய்வுகொண்டாராம்!)
4. Honor thy father and thy mother.
தந்தை தாயை மதியுங்கள் என்பது நான்காவது கட்டளை.
நம் தமிழ்மூதாட்டி அவ்வையோ இன்னும் ஒருபடி மேலேபோய், அன்னையை ஆலயமாகவும் , தந்தையின் சொல்லை மந்திரமாகவும் கருதச் சொல்லியிருக்கிறார்!
5. Thou shalt not kill.
கொலையைக் கடியுங்கள்; அதாவது கொல்லாமையை மேற்கொண்டு ஒழுகுங்கள்!
அவசியத்தின்பேரில் அறம்சார்ந்த கொலைகள் புரிவதை விவிலியம் கண்டிக்கவில்லை. போர்க்களத்தில் எதிரிகளைக் கொல்வது, தம்மைத் தாக்கவருவோரைத் தற்காப்பிற்காகக் கொல்வது, பெண்கள் தங்களிடம் முறைகேடாக நடந்துகொள்வோரைக் கொல்வது போன்றவற்றை அறம்சார்ந்த கொலைகள் (Lawful-killing) என்று நாம் கருதலாம்.
6. Thou shalt not commit adultery.
தனக்கு உரிமையில்லாத ஆணுடனோ/பெண்ணுடனோ மனிதர்கள் பாலுறவு கொள்வதைத் தவிர்க்கவேண்டும்.
அனைத்து வகையான முறைதவறிய பாலுறவுகளையும், ஏன்…ஓரினச்சேர்க்கையையும் (homo-sexuality) ’பாவம்’ என்றும், அது இறைவனின் விருப்பத்திற்கு எதிரானது என்றும் விவிலியம் விளம்புகின்றது.
ஆனால் தற்போது அந்த எண்ணம் மாறிவருகின்றது. ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவான குரல்கள் உலகெங்கும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. அர்ஜென்டினா, கனடா, ஸ்பெயின், நார்வே உள்ளிட்ட நாடுகள் ஓரினத் திருமணங்களை சட்டபூர்வமாகவே அங்கீகரித்துவிட்டன. நீதிமன்றம் இசைவுதெரிவித்துவிட்டது. ஆனால் இவற்றின் விளைவுகள் நாட்டிற்கும் சமூகத்திற்கும் இசைவானவையாக இருக்குமா என்பதைக் காலம்தான் கணிக்கவேண்டும்!
7. Thou shalt not steal.
பிறரின் உடைமைகளைக் களவாடாதீர்கள் என்கிறது ஏழாவது கட்டளை.
களவாடுவதா…? பிறர் பொருளைக் களவாடவேண்டும் என உள்ளத்தால் உள்ளுவதும் தீது என்பது நம் வள்ளுவப் பேராசானின் உயர்ந்த கருத்து.
”உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்” என்பது குறள்.
8. Thou shalt not bear false witness against thy neighbor.
அண்டை அயலாருக்கு எதிராகப் பொய்சாட்சி சொல்லாதிருக்கவேண்டும் என்பது எட்டாவது கட்டளை.
’பொய்க்கரி போகன்மின்’ என்று சிலப்பதிகாரமும் இதுகுறித்து எச்சரிக்கின்றது.
இதனை விளக்கும் சுவையான சம்பவம் ஒன்றும் சிலப்பதிகாரத்தில் உண்டு!
பூம்புகாரில் வாழ்ந்துவந்த தீயவன் ஒருவன் அயலான் மனைவிக்குக் கேடுவிளைவிக்கும் வகையில் பொய்சாட்சி சொன்னான். இதனையறிந்தது புகாரின் சதுக்கபூதம்! தீயோரைத் தண்டிப்பதையே தன் தொழிலாகக் கொண்ட அப்பூதம், அந்தத் தீயவனைத் தன் கைகளால் பற்றிப் புடைத்துண்ண முற்பட்டது. இதனைக் கேள்வியுற்ற கோவலன் அவ்விடத்திற்கு விரைந்துவந்தான். அங்கே பூதத்தின் கையில் அகப்பட்டிருந்த அத்தீயவனின் நிலைக்காக வருந்தி அவனுடைய தாய் கண்ணீர்சிந்திக்கொண்டிருப்பதைக் கண்டான். கோவலன் உள்ளத்தில் அருள் சுரந்தது. பூதத்தருகே சென்று ”என்னுயிரை எடுத்துக்கொள்! இவனை விட்டுவிடு!” என்று கெஞ்சினான். அந்தப் பூதம் அவன் கோரிக்கையை ஏற்க மறுத்து,
நரகன் உயிர்க்கு நல்லுயிர் கொண்டு
பரகதி யிழக்கும் பண்பீங்கு இல்லை என்று கம்பீரமாகக் கூறிவிட்டு அந்தத் தீயவனை உண்டுவிட்டதாம்!
(அந்தச் சதுக்கபூதம் மட்டும் இப்போது இருந்தால் காவல்துறைக்கும் நீதிமன்றங்களுக்கும் எவ்வளவோ வேலை குறையும்!).
9. Thou shalt not covet thy neighbor’s wife.
’தவறான உறவு கூடாது’ என்று ஏற்கனவே ஆறாவது கட்டளை எச்சரித்திருக்கக் கண்டோம். ’பிறன்மனை விழையாமை வேண்டும்’ என்று மீண்டும் அதனையே வேறுசொற்களால் வலியுறுத்திச் சொல்கின்றது ஒன்பதாவது கட்டளை.
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு என்று வள்ளுவமும் பிறனில்விழையாமையின் அவசியத்தை எடுத்தியம்புகின்றது.
10. Thou shalt not covet thy neighbor’s goods.
பிறர் பொருளை நயவாதிருக்க வேண்டும் என்பது பத்தாவது கட்டளையாகக் கூறப்பட்டிருக்கின்றது.
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்பது இல்” என்பது வள்ளுவம்.
’வேண்டாம்’ என்று கூறும் மனமே சிறந்த செல்வம் என்பதே இக்குறள் நவிலும் நற்பொருள்! ’போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து’ எனும் பழமொழி நாமறிந்ததுதானே?
மனிதனின் ஆசையே எல்லாத் துன்பங்களுக்கும் ஆணிவேர் என்பதைப் புத்தர் ஏசு வள்ளுவர் என அறிஞர் பலரும் அட்டியின்றி ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால் ஒருசிலரோ…‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்று மக்களை ஆசைப்படுகுழியில் தள்ளுகின்றார்கள். விளைவு? அவ்வளவுக்கும் சேர்த்து அவஸ்தைப்படுகிறார்கள் மக்கள்!
விவிலியம் விவரிக்கும் பத்துக் கட்டளைகளும் பத்தரைமாற்றுத் தங்கங்களாய் மின்னுகின்றன. இவற்றைப் பின்பற்றி வாழ்ந்தால் மானுடம் சிறக்கும்!
மோசஸின் பத்துக் கட்டளைகளைச் சிறப்பாக விளக்கியதற்குப் பாராட்டுகள் மேகலா. இதுபோல் நாலடியார், சித்தர் பாடல்களுக்கு விளக்கம் எழுதுங்கள்.
சி. ஜெயபாரதன்
பாராட்டுக்கு நன்றி ஜெயபாரதன் ஐயா.
தங்கள் விருப்பப்படியே, நேரம் கிடைக்கும்போது, நாலடியார், சித்தர் பாடல்களுக்கும் விளக்கம் எழுதுகிறேன்.
அன்புடன்,
மேகலா
Excellent Explanation regarding ten commandments.- R.Parthasarathy
Thanks for your compliment Parthasarathy sir.
-Megala