%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf

”பாப்பா நெமிலிவாழ் பாலா திரிபுரை,
காப்பாள், அடியார் கரம்பிடித்துச், -சேர்ப்பாள்
அதியற் புதமான ஆன்ம உலகில்:
துதியவளை சாக்லேட்டைத் தந்து’’….(1)

’’அமளி இலாத அமைதி லயத்தில்,
ரமண மயமாய் ரமிப்பு, -நெமிலிவாழ்,
பாண்டுரங்கன் சோதரி, பாலா திரிபுரையை
வேண்டி யுறங்க வரம்’’….(2)

‘’காளி அரக்கர்க்கு, கற்பகம் பக்தர்க்கு,
யாளி அமரும் எஜமானி, -தோளிரெண்டில்,
வேலா யுதன்அண்ணன் வேழனைச் சுமந்திடும்,
பாலா நவராத்ரிப் பெண்’’….(3)

’’வெள்ளை அரவிந்தம் வீற்று நெமிலியில்
கொள்ளை அழகாய் கொலுவிருக்கும், -பிள்ளையவள்,
பாலா திரிபுரையைப் போற்றிப் பணிவோர்க்கு
நாளாம் நவராத்ரி நாள்’’….(4)

’’சுப்ரமண்ய அய்யரின் சொப்பனத்தில் வந்(து)ஆற்றில்,
தெப்பமாய் நீந்திக்கண் தென்படுவேன், -அப்புறம்,
ஆலயம் வேண்டாம், அகத்தில் குடிவைப்பீர்’’,
வாலைபா லாஅருள் வாக்கு’’….(5)

‘’மூலாதா ரத்தினில் மூளும் கனலவள்,
கோலா கலகோ குலன்தங்கை, -பாலா
திரிபுரையைக் காண திருநெமிலி செல்வோம்
ஹரிசோ தரியே அரண்’’….கிரேசி மோகன்….(6)

”சுண்டு விரலளவு சொப்புப் பதுமையாய்
கண்டு பிடித்தனர் காட்டாற்றில், -கொண்டுவந்த,
நாலா யிரத்தோன் நவனீதன் சோதரி
பாலாம் பிகையவள் பேர்”….கிரேசி மோகன்….(7)

விடிகாலை வெளிச்சம்”….
———————————–

“மாலை மயக்கம், மதிய உதயம்அதி
காலை வெளிச்சம் கனவாகும், -பாலை,
திரிபுரையைக் கண்டு தரிசிப்போர் , தம்முன்,
எரிபவை கூட எழில்”…..கிரேசி மோகன்….(8)

”பாலாவின் பேர்சொல்லி பாம்பை எழுப்பிடு.
மூலாதா ரத்தில் முழிபிதுங்கும் : -தோளா
யிரத்தில் உறங்கிடும், யாதவன் தங்கை,
சிரத்தில் சிரிப்பாள் சிலிர்த்து’’….கிரேசி மோகன்….(9)

’’இமியளவும் தீங்கின்றி, இன்சொல் உரைக்க,
நெமிலிவாழ் பாலா நெகிழ்வாள் , -ஞமலியின்,
வாலை நிமிர்த்தித்தன், ஆளாய் அமர்த்துவது,
பாலை திரிபுரையின் போக்கு’’….கிரேசி மோகன்….(10)

ஞமலி -நாய்

”ஓலை ஜபமணி மாலை அபயமொடு
காலை மடித்து கொலுவிருக்கும் -பாலை
திரிபுர சுந்தரியைத் தேடி நெமிலி
வருபவர் வாழ்வில் வளம்….கிரேசி மோகன்….(11)

”பயமகல பாலா, பலம்பெருக பாலா,
லயமடைய பாலா, லலிதை -மயமான,
ரூப தியான ரமிப்பில் இருப்போர்க்கு,
ஆபத்(து) உதவி அவள்”….கிரேசி மோகன்….(12)

’’நெமிலி பாலா திரிபுர சுந்தரி’’….
————————————————————

tamil-daily-news-paper_49138605595

‘’திரிபுர சுந்தரி தேவி நமஸ்தே,
பரிபூ ரணமுணர பாலா -சரிபுகல்வாய்,
சாதகனாய் ஆக்கி சதாசர்வ காலமும்
மாதவத்தில் மூழ்கயென், மனு’’….கிரேசி மோகன்….(13)

”நெமிலி பாலா திரிபுர சுந்தரி”….
———————————————————–

”தாலேலோ தாலேலோ தாயாரின் தாலாட்டு,
பாலேலோ பாலேலோ பையனிவன் -தாலேலோ,
தூங்காமல் தூங்கும் திருமால் சகோதரி
ஓங்காரி பாலாவுக்(கு) ஓய்வு”….கிரேசி மோகன்….(14)

”நெமிலி பாலா திரிபுர சுந்தரி’’….
——————————————————–

‘’கல்லைச் சிலையாக்கும் கல்லுளி மங்கம்மா,
சொல்லைக் கவியாக்கும் சுந்தரி, -கொல்லை,
குமுதத்தில் பூப்பாள் குலம்ஜாதி காணா,
அமுதத்தன் தங்கை அவள்’’….கிரேசி மோகன்….(15)

”நெமிலி பாலா திரிபுர சுந்தரி’’….
—————————————————

‘’ஆலோல வள்ளியின் ஆம்படையான் அன்னையே,
தாலேலோ பாடவந்தேன் தாயுனக்கு, -பாலேலோ,
மாலோலன் தங்காய், மனோன்மணி கண்ணுறங்கு,
காலேல கண்மலர்ந்து கா’’….கிரேசி மோகன்….(16)

கா -காப்பாய்….

’’நெமிலி பாலா திரிபுர சுந்தரி’’….
————————————————————–

‘’பொற்கரத்தில் மாலையும், புத்தகமும் ஏந்தியவா(று)
அற்புதங்கள் செய்ய அலைந்தனையே, -கற்பகமே,
கண்ணுறங்கு பாலேலோ,கால்வலிக்கப் போகிறது,
பண்ணுறங்கப் பாடுமெனைப் பார்’’….கிரேசி மோகன்….(17)

’’நெமிலி பாலா திரிபுர சுந்தரி’’….
———————————————————-

‘’ஈசனிரு கண்ணை இறுகநீ மூடியதால்,
தேசம் இருண்டதே தேவியே ! -வீசிடும்
கண்ணிமைகள் பொத்தியதி காலை எழந்திடலாம்,
பெண்ணிமய பாலா படு’’….கிரேசி மோகன்….(18)

’’நெமிலி பாலா திரிபுர சுந்தரி’’….
——————————————————-

’’நையப் புடைப்பாள் நமதகந்தை போக்கிட,
ஐயம் அகன்றதும் ஆதரவாய், -கையைப்
பிடித்திழுத்துச் செல்வாள், பரமசுகம் கூட்ட,
படித்ததெலாம் பாலாமுன் பாழ்’’….கிரேசி மோகன்….(19)

”நெமிலி பாலா திரிபுர சுந்தரி”….
———————————————————–

”அமளியில் லாமல் , அமைதியைக் காத்தால்,
நெமிலிவாழ் பாலா நினக்குள், -கமலியாய்,
நெஞ்சகத் தாமரையில் நின்று நிலைத்திருந்து,
அஞ்சேல் அபயம் அளிப்பு”….கிரேசி மோகன்….(20)

’நெமிலி பாலா திரிபுர சுந்தரி’’…..
——————————————————

‘’சீட்டிப்பா வாடையும் ,சில்க்கில் சட்டையுமாய்,
நாட்டுப் புறஊர் நெமிலியின், -வீட்டுக்குள்
வீற்றவளே பாலா , வருக வருகநான்
சாற்றும்வெண் பாவை சகித்து’’….(21)….கிரேசி மோகன்….30-11-2015

‘நெமிலி பாலா திரிபுர சுந்தரி”….
——————————————————-

“கஷ்டம் கலைந்திடும் , இஷ்டம் இணங்கிடும்,
அஷ்ட இலக்குமிகள் ஆசியால் -இஷ்டமாய்,
சுக்குமி ளக்குதி திப்பிலி என்பதின்றி ,
லக்கு(LUCK)பாலா ஊர்நெமி லி “….(22)….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “”நெமிலி பாலா திரிபுர சுந்தரி”….

  1. சாக்லெட்டைக் கொடுத்து அந்த அதி அற்புத பாலிகை முன் குழந்தையாக ஆகிவிட்டீர்கள்.

    சாக்லெட் எனும் ஆங்கிலச் சொல்லுக்கு தமிழில் என்ன சொல்வார்கள்?

  2. ”கோகோ மிட்டாய்’’ என்று எல்லாம் வல்ல கூகிள் கூறுகிறது சார்….!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *