மீனாட்சி பாலகணேஷ்

நந்தின் கடமும் உடையாதோ!

ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களின் பாட்டுடைத்தலைவர்களாக விளங்கும் சிறு குழந்தைகளான முருகன், திருமால் ஆகியோரிடம் சிறுபெண்கள் தாம் கட்டும் மணல் வீட்டினைக் காலால் உதைத்து அழிக்கவேண்டா என முறையிடுவர். அவ்வாறு முறையிடுங்கால் அச்சிற்றிலை எப்பாடுபட்டு என்னவெல்லாம் வைத்துக் கட்டினோம் என்று நயம்படக்கூறும் ஒருபாடல் சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் சிற்றில் பருவத்தில் காணப்படுகிறது.

ba
சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் எனும் இவ்வருமையான நூல் பொற்களந்தை எனும் ஊரினரான அந்தகக்கவி வீரராகவ முதலியார் என்பவரால் இயற்றப்பட்டது. இதைத்தவிர இந்த முருகன் பேரில் இவர் ஒரு கலம்பகமும் பாடியுள்ளார். இவர் பிறவியிலேயே கண்பார்வை இல்லாதவராக இருந்தாலும், கல்வியில் மிகச்சிறந்து விளங்கினார் என அறிகிறோம். அருமையான இப்பிள்ளைத்தமிழின் சிற்றில்பருவத்திலிருந்து நாம் காணப்போகும் இரு பாடல்களே இதற்குச் சாட்சியாகும்.

தமது சிறுவீட்டினைக் காலால் எற்றி உதைத்து அழிக்கவரும் முருகப்பெருமானிடம் நயமாகவும், கெஞ்சியும், சாமர்த்தியமாகவும் “எம் சிற்றிலைச் சிதைக்காதே,” எனும் பாடலிதுவாம்.

தமது தாய்மார்கள் செய்வதுபோல, வீட்டை சுத்தம் செய்வதும், அடுப்பில் உலையேற்றிச் சமைப்பதும், குழந்தைக்குப் பால்கொடுத்து நீராட்டி, உறங்க வைப்பதும் இவர்களுடைய விளையாட்டு. எதிர்காலத்தில் தாம் ஆற்றவேண்டிய கடமைகளுக்காக இப்போதே தயாராகிறார்கள் போலுள்ளது! இதுவே சின்னஞ்சிறுமிகளின் மனோபாவம்! பொங்கிப்பெருகும் தாய்மை உணர்வை இச்சிறு பிராயத்திலிருந்தே வெளிப்படுத்தும் குழந்தைத்தனம் நிறைந்த அழகு இதுவே!

சிறுமியர் ஒளிபொருந்திய குளிர்ச்சியான அழகான முத்துக்களை அரிசியாக வைத்துக்கொண்டு, அதில் இனிமையான தேனையும் வார்த்து உலையில் இட்டுப் பொய்தல் விளையாட்டு விளையாடுகிறார்கள்; அதாவது சோறு சமைப்பது போலப் பாவனை செய்து விளையாடுகிறார்கள். இது உண்மைச் சோறு இல்லையானதால் பொய்தல் விளையாட்டு எனப்படும். “இந்த உலையைக் கவிழ்த்து விடாதே முருகா!” எங்கின்றாள் மங்கையர்க்கரசி எனும் சிறுமி.

சங்கினைச் சோறு சமைக்கும் பாத்திரமாக வைத்துக் கொண்டுள்ளனர்; நெருப்பின் நிறம் கொண்ட மாதுளை மலர்களை, அடுப்பில் தீ எரிவது போலப் போட்டுவைத்துள்ளார்கள். குளிர்ச்சி பொருந்திய பவளக்கொடிகளை தாம் கட்டியுள்ள சிறுவீட்டினுக்கு விளக்குகளாகப் பொருத்தி உள்ளனராம். “இந்த சங்குக்கடத்தை உடைத்து விடாதே! மாதுளைத்தீயை அவித்துவிடாதே! பவளவிளக்கை அணைத்து விடாதே!” எனவெல்லாம் கமலம் முருகனை வேண்டுகிறாள்!

அதுவுமின்றி, பாவைகளுக்குத் திருமணம் நிகழ்த்துகிறோம் என்று கூறித் தாய்மார்களிடமிருந்து பலவிதமான தின்பண்டங்களையும் வாங்கிவந்திருக்கிறார்கள்; திருமண விருந்து படைக்க வேண்டுமல்லவா? “அந்த விருந்தெல்லாம் வீணாகிப் போய்விடாதோ முருகா?”எனக்கேட்கிறாள் குமுதம்!

சிறுபெண்களின் குழந்தைத்தனமான பெரியமனித விளையாட்டில் இன்னொன்று! கேட்பவர்களுக்கு நகைப்பை விளைவிக்கும்! தாமரை மொட்டுகளை முலைகள்போல தமது இளம் மார்பில் வைத்துக் கட்டிக்கொண்டு அன்னைமார் குழந்தைகளுக்கு முலைப்பால் ஊட்டுவதுபோலத் தாமும் தமது (மண்ணால் செய்த) பொம்மைகளுக்கு விளையாட்டாகப் பாலூட்டி உறங்க வைத்துள்ளார்கள். “அந்தக் குழந்தை தனது தாமரைபோன்ற கண்ணை விழித்துத் திகைத்துத் தேம்பி அழும் அல்லவோ முருகா?” என்று கேட்கிறாள் சுந்தரி.

bal

“ஆகவே குழந்தாய் முருகா! எங்கள் சிறிய இல்லமாகிய இச்சிற்றிலை நீ சிதைக்காதே,” என எல்லாருமாகத் தொழுது வேண்டுகிறார்கள் போல் உள்ளது.

நமக்குமொரு இனிமையான பாடல் படிக்கக் கிடைத்ததல்லவோ?

நகைத்தண் டரளத் திரளரிசி நறுந்தே னுலையுங் கவிழாதோ”
நந்தின் கடமு முடையாதோ நளிமா துளைத்தீ யவியாதோ
தொகைத்தண் பவள விளக்கணைந்து விடாதோ வடியேம் வதுவையெனச்
சொல்லிச் சொல்லிக் கொணர்ந்தசிறா விருந்தும் வருந்திச் சோராதோ
முகைப்புண் டரிக முரம்பிணித்து முலையென் றறிந்து னிடத்திரங்கி
மொழிந்து துயிற்று மணற்குழந்தை முழுத்தா மரைக்கண் விழித்துமனந்
திகைப்புண் டழுது தேம்பாதோ சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சேயே சேயூர்ப் பெருமானே சிறியேஞ் சிற்றில் சிதையேலே.

(சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்- சிற்றிற்பருவம்- அந்தகக்கவி வீரராகவ முதலியார்)

*****

பிள்ளைத்தமிழ்ப்பாடல்கள் அனைத்துமே தொன்மங்களும் கதைகளும் குறைவில்லாத இரத்தினச் சுரங்கள்கள்! தத்துவ வேதாந்த விளக்கங்களின் தொகுப்புகள்! கூறிய கதைகளையே திரும்பக் கூறிடினும் கூறும்விதத்தை வேறுபடுத்துவதனால் ஒவ்வொரு பாடலும் புதுமை மாறாமல் இலங்குகிறது.

சிறுபெண்கள் இழைக்கும் சிற்றில்; அதனை உதைத்துச் சிதைக்க வரும் பாட்டுடைத் தலைவனான சேயூர் முருகன். முறையிடும் பெண்கள்; தொடரும் சுவையான, புதுமையான வாக்குவாதங்கள்.

என்னவென்றுதான் பார்ப்போமே! சிறுபெண்கள் தங்கள் சிற்றிலைச் சிதைக்க முயலும் முருகனிடம் சண்டையிடுகிறார்கள் போலுள்ளதே!

“பண்டு உன் மாமன்- அவன் பெரிய வித்தகன் அல்லவோ?- சூரியன் எரிக்கும் பகல்பொழுதினை பாண்டவர்களுக்காக இரவாக்கித் தந்திரம் செய்ய வல்லவன்- அவன் எல்லார் வீட்டிலும் விருப்பப்படி புகுந்து வெண்மையான பாலையும் தயிரையும் உறியிலிருந்து எடுத்து உண்டுவிட்டான்; அவர்கள், அதுதான் அவ்வீட்டார், அந்த ஆய்ச்சியர் அவனைப் பிடித்து இரு கைகளையும் கட்டிப்போடவில்லையோ?அந்த இடையர்குலப் பெண்கள் ‘உலகினைக் காக்கும் பரந்தாமன் இவன்’ என பயபக்தியினால் அவன் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும் என விட்டுவிட்டார்களா என்ன? விடவில்லையே?

“கேட்டுக்கொள் முருகா! நீ நாங்கள் பாடுபட்டுக் கட்டிய இந்தச் சிறிய வீட்டினைச் சிதைத்துவிட்டால் நாங்கள் ‘ஐயோ’ என அழுது புலம்பி உன்னுடைய அன்னைமார்களிடமும் செவிலித்தாய்மார்களிடமும் சென்று முறையிடுவோம் தெரியுமா? அப்போது உன்னிடம் அவர்கள் சீறிச் சினம் கொள்ள மாட்டார்களோ? (கட்டாயம் சினம் கொள்வார்கள்) அனைத்துப் பொருட்களும் சுட்டும் பெரும் தலைவனாகி நிற்கும் எம் அண்ணல் சிவபிரானின் செல்வச் சிறுமகன் நீ என்று பயத்தினால் உன்னைத் தண்டிக்காமல் அஞ்சி நிற்பார்களா என்ன? மாட்டவே மாட்டார்கள்!

“ஆகவே எங்கள் சிற்றிலாகிய இந்தச் சிறிய மணல்வீட்டினை அழிக்கும் தொழிலைச் செய்யாதே முருகா! சிறு குழந்தையே! சேயூரில் உறையும் பெருமானே! சிறுபெண்களாகிய எங்கள் சிறியவீடுகளைச் சிதைத்து அழிக்காதே!” என வேண்டுகின்றனராம்.
அருமையான சுவை நிரம்பிய பாடல்கள்.

வெய்யோன் பகலை யிரவாக்கும் விரகிற் பெரிய நின்மாமன்
மேனாட் பொதுவ ரகம்புகுந்து *வெண்பா லுறியி னடுக்குழிப்பக்
கையோ ரிரண்டும் பிணித்திலரோ குடவர் மடவார் சகங்காக்குங்
கடவு ளெனத்தான் பயந்தனரோ கட்டா தகல விட்டனரோ
வையோ புலந்து தமியேமு மன்னை மார்க்குஞ் செவிலியர்க்கு
மழுது மொழிந்தாற் சீறாரோ வனைத்து மொருவ னாகிநிற்குஞ்
செய்யோன் மகனென் றஞ்சுவரோ சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சேயே சேயூர்ப் பெருமானே சிறியேஞ் சிற்றில் சிதையேலே
(சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்- சிற்றிற்பருவம்- அந்தகக்கவி வீரராகவ முதலியார்)

மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}

********************************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *