இலக்கியம்கவிதைகள்

சர்வதேச மகளிர் தினக் கவிதை

எம்.ரிஷான் ஷெரீப்

நிர்பயா, சேயா, வித்யா, ஜிஷா, ஸ்வாதி, நந்தினி, ஹாஷினி, ரித்திகா மற்றும் பாலியல் வன்முறையில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து குழந்தைகள், சிறுமிகள், பெண்களுக்காக…

ghk-356x220

நீர்ப் பூக்குழி

தொலைவிலெங்கோ

புகையிரதம் நகர்ந்தபடி ஊளையிடும் ஓசை

ஒரு பட்சியெனச் சிறகடித்துப் பறக்கும்

மலைமுகடுகளிடையே அமைந்திருந்தது

அந்த ஆதி மனிதர்களின்

நதிப்புறத்துக் குச்சு வீடு

ஊற்று

ஓடையாகிப் பின்

நீர்த்தாரையாய் வீழ்ந்து

பெருகிப் பாய்ந்து

பரந்து விரிந்த பள்ளங்களில்

தரித்திராது ஓடும் ஆறு

கற்பாறைகளைத் தேய்த்துத் தேய்த்து

உண்டாக்கும் பூக்குழிகள்

நதியின் புராண தடங்களை

நினைவுறுத்தி வரலாறாக்கும்

தண்ணீரில் தம் இரைக்கென

காத்திருந்த பட்சிகளை

அலறிப் பறக்கச் செய்த

சிறுமியின் ஓலம்

அவளது குடிசையின்

மூங்கில் கதவு, களிமண் சுவர்களை

எட்டவிடாது துரத்தியது

அக் கணத்தில் தடதடத்துக் கூச்சலிட்ட ரயில்

குரூர வேட்டைக்காரனொருவனின்

கரம் தீண்டி சுவாசம் நின்றதிர்ந்த

பட்டு வண்ணத்துப் பூச்சியின் உடல்

ஒரு பூக்குழியில் மிதந்த நாளில்

கொக்குகளும், மீன்கொத்திகளும், நீர்க்காகங்களும்

அச் சின்னஞ்சிறிய பெண்ணின்

சடலத்துக்குக் காவலிருந்ததைக் கண்டன

சின்னவளைக் காணாது

வனமெங்கும் தேடிய விழிகள்

ஆந்தைக் குரல்

அபாயத்தின் ஒலி
பறவைச் சிறகின் உஷ்ணம்

பாதுகாப்பைக் குறிக்கிறதென
சொன்னாயெனினும்

சிறுமியின் கூரிய பற்களும் நகங்களும்
வேட்டைக்கானவை என அவளுக்கு

ஏலவே அறிவுறுத்த

மறந்து விட்டாய் அம்மா

 

– எம்.ரிஷான் ஷெரீப்

mrishanshareef@gmail.com

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (1)

 1. Avatar

  ////கொக்குகளும், மீன்கொத்திகளும், நீர்க்காகங்களும்

  அச் சின்னஞ்சிறிய பெண்ணின்

  சடலத்துக்குக் காவலிருந்ததைக் கண்டன ///

  உள்ளத்தை ஊடுருவும் ஊசி மொழி. உலகப் பெண்டிர் தினத்தன்று நமக்கு நினைவூட்டுகிறது : ஈழக் குடிமக்கள் படுகொலைக்குக் காரணமான ஈழ நாட்டு அரசாங்க அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும்.

  சி. ஜெயபாரதன், கனடா

  சி. ஜெயபாரதன்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க