கிரேசி மோகன்
—————

அட, ஒரு பேச்சுக்கு… ஒருவேளை அன்று போலவே இன்றும் வியாசர் விருப்பத்தின் பேரில் மகாபாரதம் மீண்டும் ஒரு தபா நடந்தால்..! அட ஒரு பேச்சுக்கு… அன்று போலவே இன்றும் தர்மபுத்திரர் “நச்சுப்பொய்கையில்” நீர் அருந்த சென்றால்…! அன்று போலவே இன்றும் கண்களுக்குப் புலப்படாத அருவமான அசரீரி யட்சதேவனுக்கும் அரசர் தர்மபுத்திரருக்கும் இடையே கேள்வி – பதில் பகுதி ஆரம்பித்தால்…!

கேள்வி கேட்டுக் குடைய நினைத்த அசரீரிபுரத்து யட்சத்தேவசாமியை அசர வைக்கும் அளவுக்குத் தர்மபுத்திர ராஜா பதில்கள் இன்றைய சூழ்நிலைக்கேற்ப ஏக்குத்தப்பான ரூட்டில் கீழ்க்கண்டவாறு செல்லும்…

அசரீரி: “தர்மபுத்திரா… நச்சுப் பொய்கையில் மயங்கிக் கிடக்கும் உன் தம்பிமார்கள் பிழைக்க வேண்டுமென்றால் நான் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதிலைக் கூறு… உலகிலேயே பெரியது எது?”

தர்மர்: “யட்சதேவா… யாம் அறிந்த வரையில் தற்சமயம் உலகிலேயே பெரியது திருவல்லிக்கேணி சிங்கராச்சாரி தெரு ஒண்டுகுடித்தனத்தில் வசிக்கும் கே.எஸ். சந்தானகோபாலனின் குடும்பம் தான்..!

அசரீரி (வழக்கத்துக்கு விரோதமான பதிலால் குழம்பினார் அசரீரி!): “குந்தியின் புதல்வா… என்ன குழப்புகிறாய்…?

தர்மர்: குழப்பவில்லை தேவா… சத்தியம் பகிர்கிறேன்… கே.எஸ். சந்தானகோபாலனின் குடும்பத்தில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை முப்பத்துநான்கு!”

அசரீரி: “என்ன… இன்று இருக்கும் விலைவாசியில் முப்பத்துநான்கு நபர் அடங்கிய குடும்பத்தை சந்தானகோபாலன் குடும்பத்தில் முப்பத்துநான்கு பேரா? தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, வெட்டியான சித்தப்பா, விதவை அத்தை, வேலூரிலிருந்து வந்து நிரந்தரமாகத் தங்கிவிட்ட மாமா என்று பட்டியல் போட்டால் கூட முப்பத்துநான்கு தேரவில்லையே… சொல்ல வந்ததை நேரடியாக சொல்…”

தர்மர்: “உம்… மொத்தம் முப்பத்துநான்கு பேர்… சந்தானகோபாலன்… சகதர்மி சகுந்தலா… இவர்கள் இருவரது இருபது வருட மனைமாட்சியின் மகத்தான சாதனையாக முப்பத்திரெண்டு மக்கட் செல்வங்கள்…! கணக்கு சரியா…?

அசரீரி: என்னது! சந்தானகோபாலன் – சகுந்தலா தம்பதிக்கு முப்பத்திரெண்டு குழந்தைகளா…?

தர்மர்: “ஆம் தேவா… அந்த முப்பத்திரெண்டு குழந்தைகழில் பதினாறு ஆண் குழந்தைகள்… பதினைந்து பெண் குழந்தைகள்…”

அசரீரி: “நீ சொல்வதை பார்த்தால் முப்பத்தொன்றுதானே வருகிறது… எப்படி முப்பத்திரெண்டு என்று கூறினாய்…?

தர்மர்: “முப்பத்திரெண்டாவது குழந்தை ஆணா பெண்ணா என்று அறிவதற்கு நாம் இன்னும் ஏழு மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும். ஆம் சகுந்தலாவுக்கு இது மூன்றாவது மாதம்!”

அசரீரி: (தர்மபுத்திரரை மடக்க வந்த அசரீரிக்கு சந்தானகோபாலன் – சகுந்தலா குடும்பப் புள்ளிவிவரக் கணக்கில் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கியது…): அப்போ… இனிமேல்தான் முப்பத்திரெண்டாவது குழந்தை பிறக்க போகிறதா…? தர்ம புத்திரா, ஒரு சந்தேகம் சந்தானகோபாலன் – சகுந்தலா தம்பதி மனித இனத்தை சேர்ந்தவர்களா… இல்லை… முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் இனத்தை சேர்த்வர்களா…? எனக்கு நேரமாகிறது… எங்கே மளமளவென்று சந்தானகோபாலனின் குழந்தைகளின் பெயர்களை வரிசையாகச் சொல்லிவிட்டு… மயங்கிகிடக்கும் உன் தம்பிமார்களை அழைத்துச் செல்…”

தர்மர்: “யட்சதேவா… இந்தக் கேள்விக்கு சரியான பதிலை கூற குழந்தைகளைப் பெற்ற சந்தானகோபாலனே திணருவான்…”

(இந்தக் கலிகாலத்தில் இப்படியும் ஒரு குடும்பமா என்ற ஆச்சரியத்திலும்… இனிமேலும் சந்தானகோபாலன் சகுந்தலா சம்பந்தபட்ட குடும்ப விஷயத்தில் மாட்டிக்கொண்டு தர்மபுத்திரரிடம் தான் தவிப்பதைத் தவிர்க்கவும்… யட்சதேவன் இந்தப் பதிலைச் சாக்காக வைத்து மயங்குவது போல் நடித்து, தான் உருவாக்கிய நச்சுப் பொய்கையில் தானே தொப்பென்று விழுகிறான்…)

தர்மர் (தம்பிமார்களை எழுப்பிவிட்டு… தனக்குதானே…): இருபது வருட தாம்பபத்யத்தில் முப்பத்திரெண்டு குழந்தைகள் எப்படிப் பொறந்ததுன்னு கேக்கத் துப்பில்லை… இவன்லாம் ஒரு அசரீரி…வாங்கடா..! (தம்பிமார்களோடு தர்மபுத்திரர் செல்கிறார்).

அசரீரி -தர்மர் சம்பாக்ஷிணையை வேண்டுமானால் சந்தானகோபாலன் சகுந்தலா தம்பதியை அறிமுகப்படுத்த எழுதிய கற்பனை உரையாடலாகக் கொள்ளலாம். ஆனால், சந்தானகோபாலன்- சகுந்தலா தம்பதி செய்த இந்த சிசுப்புரட்சி உலகப் பிரசித்தமில்லாவிட்டாலும் உள்ளூர் திருவல்லிக்கேணியில் மிகவும் பிரபலம்! திருவல்லிக்கேணியில் ஒரு சிறு குழந்தையைக் கேட்டால்கூடச் சந்தானகோபாலன் வீட்டை அடையாளம் காட்டும். பாதி சமயங்களில் நாம் அட்ரஸ் கேட்ட அந்தக் குழந்தையே சந்தானகோபாலனின் வம்சவிருட்சத்தில் ஒரு கிளையாக இருக்கும்!

‘அது சரி… எப்படி இருபது வருடத்தில் முப்பத்தோரு குழந்தைகள்…? ஒன்பது மாசக் குழந்தை போல் கணக்கு உதைக்கிறதே…’ என்று அசரீரி சார்பாக நீங்கள் கோரஸாக அலறுவது காதில் விழுகிறது. ஆரம்பத்தில் வருடத்துக்கு ஒரு பிரசவம், பிரசவத்துக்கு ஒரு குழந்தை என்ற நியாயமான விகிதாசாரத்தில் வம்சவிருத்தி செய்ய ஆரம்பித்த சகுந்தலா, ஐ.ந்தாவது ஆண்டிலிருந்து உற்சாகமடைந்து உற்பத்தித் திறனை உயர்த்த ஆரம்பித்தாள். அடுத்த சில ஆண்டுகள்… ஆண் – ஆண், பெண் -பெண், ஆண் -பெண், பெண் – ஆண் என்று பல காம்பினேசன்களில் ப்ளஸ் டூ பிரசவத்தில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தாள். ரெட்டை என்ற பெயரில் ஒரு குழந்தையோடு இரண்டாவதை இலவச இணைப்பாகக் கொடுத்து அலுத்தவள் அதன் பிறகு ஆவேசமடைந்து ஒரே பிரசவத்தில் பவுண்டரி, சிக்ஸர் என்று ஸ்ரீகாந்த் கணக்காக வேகமாக ஆட ஆரம்பித்தாள்.

சென்ற பிரசவததின்போது சகுந்தலாவை ‘ஸ்கேன்’ செய்து பார்த்த டாக்டர் வெலவெலத்துவிட்டார்! ஸ்கேனிங்கில் கிடைத்த படம் காமிரா ட்ரீக் ஷாட் போல் இருந்தது. ஆம்.ஐந்தாறு குழந்தைகள் அடங்கிய குரூப் போட்டோ. இந்த இருபதாவது பிரசவத்தில் புள்ளிவிவரக் கணக்குப்படி பார்த்தால் சகுந்தலாவிடமிருந்து குறைந்தபட்சம் ஏழு குழந்தை
களாவது எதிர்பார்க்கப்படுகிறது! (கணக்கு வாத்திியார்களா இருக்கும் வாசகர்களே! குழைந்தைகளைக் கூட்டி நம் மீது தவறு கண்டுபிடிக்கவேண்டாம். சந்தானகோபாலனே குழந்தைகள் கணக்கைத் தப்பும் தவறுமாகச் சொல்வது சர்வசாதாரணம்.

இந்த இருபது வருடத்தில் சகுந்தலா மசக்கையாக ஒரு மாமரத்தையோ சாப்பிடிருக்கிறாள்! சந்தானகோபாலன் வீட்டுப் பின்புறம் வளர்ந்த அந்த மாமரம் அடையாறு ஆலமரம் போல் திருவல்லிக்கேணி மாமரம் என்று பெத்த பெயர் வாங்கியது..குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இப்போது அரசமரத்தைச் சுற்றுவதை ஓல்டு ஃபாஷன் என்று விட்டு விட்டு சந்தானகோபாலன் வீட்டு மாமரத்தைச் சுற்ற ஆரம்பித்துவிட்டார்கள். சந்தானகோபாலன்-சகுந்தலா தம்பதிக்கு வேட்டி புடவை கொடுத்து வேண்டிக்கொண்டு அந்த மாமரத்தில் தூளி கட்டித் தொங்கவிட்டால் ஆண்களுக்கே கர்ப்பம் உண்டாக்கிக் குழந்தை பிறக்கும் என்ற அளவுக்கு நம்பிக்கை வளர்ந்தது!

இத்தனைக்கும் சந்தானகோபாலனும் சரி, சகுந்தலாவும் சரி… அவர்களது பெற்றோருக்கு ஒரே வாரிசு! சந்தானகோபலனைப் பெறுவதற்குக் குடந்தை சீனிவாசன் பட்டபாடு ‘கொஞ்சநஞ்சமல்ல… காசி, ராமேஸ்வரத்தில் ஆரம்பித்து நாகூர் தர்கா, அன்னை வேளாங்கண்ணி என்று ஒரு கோயில் விடவில்லை…

அவரது நாற்பதாவது வயதில் சந்தானகோபாலன் வாராது வந்த மாமணியாக உதித்தான். நாற்பது வயது வரை மலடன் என்ற பெயரில் தந்தை பட்ட கஷ்டத்தை, தன் சார்பாகப் பழிவாங்க ‘ரிவெஞ்ச்’ எடுக்கும் தமிழ் கதாநாயகன் போல் சந்தானகோபாலன் முப்பத்தோரு குழந்தைகளைப் பெற்றுவிட்டான். ஆரம்பத்தில் சந்தானகோபாலன் ஆபீஸில் தன் பெயரைக் குடந்தை சந்தானகோபாலன் என்றுதான் எழுதுவான். நாளாவட்டத்தில் நண்பர்கள் குடந்தை சந்தானகோபலனைக் குழந்தை சந்தானகோபாலன் என்று கூப்பிட ஆரம்பிக்க, தனது இனிஷியலை கெ.எஸ். என்று சுருக்கிக் கொண்டுவிட்டான்.

திருமணத்தன்று “பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க” என்று சந்தானகோபாலன்-சகுந்தலா தம்பதியைப் பலபேர் தெரியாத்தனமாக வாழ்த்திவிட, இருவரும் அதை வேதவாக்காக ஏற்றுக்கொண்டு, தலா பதினாறு என்று கணக்கு வைத்துப் பெற்றுத்தள்ளி இந்தப் பிரவசத்தோடு முப்பத்திரண்டைத் தொட்டு விழி பிதுங்குகிறார்கள்!

குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் விஷயத்தில் சந்தானகோபாலன் சினிமாவுக்குத் தலைப்பு வைக்கும் கதாசிரியன் போல் மண்டையைப் பீய்த்துக் கொள்வான்! எந்தப் பெயர் வைத்தாலும் அந்தப் பெயரில் ஏற்கெனவே ஒரு பிள்ளை இருப்பதைப் பார்த்து அலுத்துப் போன சந்தானகோபாலன், சில குழந்தைகளுக்கு ஐந்து வயதாகியும் இன்னமும் பெயரே வைக்கவில்லை!

மாலையில் வீடு திரும்பியதும் எல்லாக் குழந்தைகளும் வந்துவிட்டதா என்று உறுதிப்படுத்திக்கொள்ள அட்டெண்டன்ஸ் எடுக்க வேண்டிய நிலை, சாப்பாட்டு நேரத்தில் குழந்தைகள் சத்துணவுக்கூடம் போல க்யூவில் நிற்க வேண்டிய நிர்ப்பந்தம். இரவு படுக்கும் நேரம்… இரண்டு குழந்தைகளுக்கிடையே இடைவெளி இல்லாமல் முப்பத்தோரு குழந்தைகளும் மூச்சுத் திணற ஒன்றன்மீது ஒன்று உருள வேண்டிய கட்டாயம்!

ஒரு நாள் இரவு… ஓய்ந்துபோன சந்தானகோபாலன் ‘என்ன செய்தால் வசதியாக வாழலாம்’? என்று யோசித்தபடி வெளியே வர…எதிர்ச்சுவரில் ‘கு.க’ விளம்பரம் கண்ணில் பட்டது. வீட்டுக் குள்ளிருந்து சகுந்தலா வாந்தியெடுக்கும் சத்தம்.. வெறுத்த்துப்போனவன் விறுவிறுவென்று பார்த்தசாரதி கோயிலை அடைந்தான்.

கோயில் பிராகாரத்தில் சந்தானகோபாலனின் புராண கால பார்ட்னர் குசேலர் கதை உபன்யாசம் நடந்து கொண்டிருந்தது.

“ஒரு பிடி அவல் கிருஷ்ணனுக்குக் கொடுத்துக் குசேலன் குபேரனானான்!” – உபன்யாசகர் உரைத்தது இவன் மனத்தில் உரைத்தது! எதிரே உள்ள மளிகைக் கடைக்கு ஓடி உபன்யாசகர் கையால் அபிநயித்துக் காட்டிய ஒரு பிடி அவலை வாங்கிக்கொண்டு சந்நிதிக்கு விரைந்தான்…

அந்த ஒரு பிடி அவலைத் துண்டில் முடிந்து அர்ச்சகர் பார்க்காத சமயம் பெருமாள் பாதத்தில் போட்டுவிட்டு ‘கிருஷ்ணா, உன் கூடப் படிச்சாத்தான் குசேலனா? குழந்தைங்க பெத்தா குசேலன் இல்லையா…? நான் சூப்பர் குசேலன்… என்னைக் குபேரனாக்கமாட்டியா… கரெக்டா ஒரு பிடி அவல் போட்டுட்டேன்… அப்புறம் உன் சௌகரியம்’ – மனசுக்குள் வேண்டிக் கொண்டு வீடு திரும்பினான்.

சந்நிதியில்… ருக்மணி தாயார் பெருமாளைப் பார்த்து “பிரபோ… இது என்ன உங்கள் காலடியில் டவல் நிறைய அவல்?” என்று கேட்டாள். பேசாமலிருந்த பெருமாளின் கண்களில் குசேலன் எபிஸோட் ஃப்ளாஷ்பாக்காக ஓடியது. குசேலன் கதையை ஆக்ஷன் ரீப்ளே செய்து பார்க்கும் ஆர்வம் அவரது நீல நயனங்களில் தோன்றியது.

“வேண்டாம் இந்த விபரீதம். கலி அழகு என்று ருக்மணிதேவி எச்சரித்தாள். அவள் சொல்வதைக் கேட்காமல் தான் எடுத்த முடிவை நிறைவேற்றிப் பார்க்கும் ஆசையில் பெருமாள் சிலையிலிருந்து பிரிந்து மனித வடிவில் சந்நிதியை விட்டு வெளியே வந்து, ‘பெரிய தெரு சீவல் ஸ்டோர்ஸ்’ கடையில் புகையிலை குதப்பும் கலியுகக் குசேலன் சந்தானகோபலனை நோக்கி நடந்தார். சந்தானகோபாலனுக்கு தெரியாமல் அவன் ஜிப்பா பாக்கெட்டில் குலுக்கலில் நீட்சயம் முதல் பரிசு பெறப்போகும் அரியானாவில் ஆரம்பித்து அமிஞ்சிக்கரைவரை உள்ள அத்தனை பம்‌பர் லாட்டரி டிக்கெட்டுகளையும் சொருகி விட்டு வந்த சுவடு தெரியாமல் கிருஷ்ண பரமாத்மா சந்நிதிக்குத் திரும்பினார்.

முன்னேற்றம் எதுவும் இல்லாமல் முப்பது ஆண்டுகள் ஓடியது. பிரகாரத்தில் அதே குசேலர் கதையை அதே திரைக்கதையில் வேறு யாரோ ஓர் உபன்யாசகர் கூறிக் கொண்டிருந்தது சந்நிதிக்குள் இருந்த கண்ணன் காதில் விழுந்தது. கூடவே குசேலன் பார்ட்-டூ – அதாவது சந்தானகோபாலன் நினைவும் வந்தது. தான் அளித்த செல்வத்தால் சந்தானகோபாலன் சௌக்கியமாய் இருப்பதைப் பார்க்கும் ஆசையில் மூலவர் உற்சவராகிச் சந்நிதியைவிட்டு வெளியே வந்தார்.

சந்தானகோபாலன் கூடியிருந்த ஒண்டுக்குடித்தனம் இருந்த இடத்தில் இப்போது ஏழு மாடி ஃப்ளாட் இருப்பதைப் பார்த்தார். வாசலில் ‘சகுந்தலா அபார்ட்மென்ட்ஸ் பலகை தொங்கியது. கீழ் போர்ஷன் வாசலில் வயதான சந்தானகோபாலன்-சகுந்தலா தம்பதி சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்க… அவர்களைச் சுற்றிப் பேரக் குழந்தைகள்.

‘பரவாயில்லை… கிடைத்த செல்வத்தை வீணாக்காமல் வீடு கட்டி வாடகைக்கு விட்டு வாழ்கிறானே’ என்ற சந்தோஷத்துடன் பெருமாள் அவர்களைப் பார்த்து விட்டுக் கட்டடத்துக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த செக்யூரிடியை எழுப்பி விசாரித்தார்.

“ஏம்பா… இந்த ஏழு மாடிக் கட்டடத்துல எத்தனை பேர் குடியிருக்கலாம்…?”

“அம்பது குடும்பம் குடியிருக்கலாம். ஆனா, இப்போ ஒரு குடும்பம்தான் குடியிருக்கு.”

“ஏன்…சாந்தானகோபாலன் மீதி போர்ஷனையெல்லாம் வாடகைக்கு விடலையா…?

“விடறதுக்கு ஏது சார் போர்ஷன்…? அம்பது போர்ஷன்லயும் அய்யா குடும்பம் தான் கீது…!”

“ஏன்…?!”

“ஏனா… அவர் மூத்த் புள்ளைக்கு முப்பது குழந்தைங்க…ரெண்டாவது புள்ளைக்கு இருபத்தாறோ இருபத்தேழோ புள்ளைங்க… மூணாவது புள்ளைக்கு அப்பன் மாதிரியே முப்பத்திரண்டு. நாலாவது புள்ளைக்கு நேத்து பொறந்ததோட சேத்தா நாப்பத்தொண்ணு… மொத்தம் கணக்குப் போட்டுப் பார்த்தா கிட்டதட்ட முந்நூறு பேர்… ஐயா குடும்பமே மொத்த எல்லா ஃப்ளாட்லேயும் இருக்காங்க. சாமி… சாமி, எங்கே போற…?”

தலையை தொங்கவிட்டபடி சந்நிதிக்குள் நுழைந்த பெருமாளைப் பார்த்து ருக்மணி தாயார் “என்ன ஆச்சு?” என்று வினவ…

“சே… பேசாம விட்டுருந்தா அப்பன் பட்ட கஷ்டத்தைப் பார்த்துப் பசங்களாவது புத்தி வந்து ஒண்ணு ரெண்டோட நிறுத்தியிருப்பாங்க… பணம் வந்த தெம்புல பசங்களும் அப்பன் மாதிரி ஆளுக்கு அம்பது அறுபதுன்னு கூறுகட்டிப் பெத்திருக்காங்க ருக்மணி இனிமே யாராவது குசேலன்னு சொல்லிக்கிட்டு வந்தா தயவுசெஞ்சு தடுத்து நிறுத்து… இனிமே நானும் கு.க.வைக் கடைப்பிடிக்கப் போறேன்.”

“கு.க.வா…? சுவாமி, என்ன சொல்கிறீர்கள்…? கு.க. என்றால் குடும்பக் கட்டுப்பாடு…!”

“நான் சொன்னா கு.க. எனக்கு… குசேலர் கட்டுப்பாடு.”

அர்ச்சகர் நுழைய… இருவரும் மௌனமாகச் சிலையாகிறார்கள்….! கிரேசி மோகன்….!
————————————————————————————————————————-

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *