aj

எழிலரசி கிளியோபாத்ரா

[பேரங்க நாடகம்]

மூலம்: ஷேக்ஸ்பியர் & பெர்னாட்ஷா
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

அங்கம் -2 பாகம் -7

கிளிபாத்ரா ஓர் நாகப் பாம்பு! பார்க்க அழகாக இருக்கிறது! ஆனால் பக்கத்தில் நெருங்கினால் பாம்பு கொட்டி விடும்!”

டாலமி XIII

ஓ! உன்னத வாழ்வே!
விலை மதிப்பிலா ஒளிக்கற்கள்,
வேண்டாம் எனக்கு!
நீண்ட நாள் வாழ்ந்திட மட்டும்
வேண்டி நிற்பவள் நான்!

சாதாரணச் சமயத்தில் கூட
இருபது முறை பாவை யவள்
சாவதைப் பார்த்தி ருக்கிறேன்!
மரணமும் வலையை வீசி
மாதின் மீது காதல் கொள்கிறது!
மரணமும் மயங்கிக் கரம் பற்றும் புகழ்மாது!

வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]

நேரம், இடம்:

அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்:

பால்ய அரசன் டாலமி, போதினஸ், தியோடோடஸ், அக்கில்லஸ், ஜூலியஸ் சீஸர், ரூபியோ, ரோமானியக் காவலர், எகிப்தின் படையினர், கிளியோபாத்ரா, கம்பள வணிகன், பணியாளி.

கிளியோபாத்ரா: [கனிவுடன் சீஸரைப் பார்த்து] ரோமாபுரித் தளபதியாரே! கப்பநிதி கட்ட நான் தயார்! இரண்டு நிபந்தனைகள் அதற்கு! முதல் நிபந்தனை டாலமி அகற்றப்பட வேண்டும்! இரண்டாவது நான் எகிப்தின் தனி ராணியாக மகுடம் சூடி ஆசனத்தில் அமர வேண்டும்! அருமை நண்பரே! நாமிருவரும் ஒன்று சேர்ந்தால் இந்த உலகையே கைப்பற்றலாம்! எனது பெரியப்பா மகா அலெக்ஸாண்டர் கிழக்கே சென்று இந்தியாவைக் கைப்பற்றினார்! அந்தப் பாதை எனக்குத் தெரியும்! நாமிருவரும் சேர்ந்தால் நமது பராக்கிரமத்தால் சீனாவைக் கூடப் பிடித்து விடலாம்!

டாலமி: [கோவென அழத் தொடங்குகிறான்] ஜெனரல் சீஸர்! என்னைக் காப்பாற்றுங்கள். எகிப்தை என்னிடமிருந்து பறிக்காதீர். நாடோடி நங்கைக்கு மகுடம் சூட்டாதீர். கிளியோபாத்ரா ஓர் நாகப் பாம்பு! பார்க்க அழகாக இருக்கிறது பாம்பு! ஆனால் பக்கத்தில் நெருங்கினால் பாம்பு கொட்டி விடும்! எச்சரிக்கை செய்கிறேன்! உமது உடைவாளை உருவி, என்னை ஒரு நொடியில் கீழே தள்ளி விட்டாள். அவள் சொல்லைக் கேட்டு என்னை அகற்றி விடாதீர்! எனக்கு நீங்கள்தான் அடைக்கலம் தரவேண்டும்.

ஜூலியஸ் சீஸர்: [டாலமியைத் தட்டிக் கொடுத்து] கவலைப் படாதே, டாலமி! உன் உயிருக்கு ஒரு கேடும் வராது! உன்னைக் காப்பது என் பொறுப்பு. நீயும், அவளும் சேர்ந்து வாழ வேண்டும் என்பது என் ஆசை! அதை நிறைவேற்றி வைப்பது என் கடமை!

போதினஸ்: [கோபத்துடன்] ஜெனரல் சீஸர் அவர்களே! உண்மையைச் சொல்லுங்கள்! நீங்கள் வற்புறுத்திக் கேட்கும் பெருந்தொகை எங்கள் விடுதலை வாங்க யாம் உமக்கு அளிக்கும் விலைப்பணம்! தருகிறோம் உமக்கு! ஆனால் வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்க்காது செல்ல வேண்டும் நீங்கள்! எங்கள் அரசியல் பிரச்சனைகளில் தலையிட வேண்டாம்! எம் தோளிலிலிருந்து இறங்குவீர்! நீங்களும் உங்கள் படைகளும் பணத்தைப் பெற்றுக் கொண்டு உடனே வெளியேறுங்கள்! எகிப்த் நாடு எகிப்தியருக்கு உரிமை யானது!

ஜூலியஸ் சீஸர்: [வெடித்துச் சிரிக்கிறார்] நல்ல வேண்டுகோள் போதினஸ்! எகிப்து ரோமாபுரியின் ஆக்கிரமிப்பு நாடு! எங்களை யாரும் விரட்ட முடியாது!

aj1

கிளியோபாத்ரா: [கெஞ்சலாக] மேன்மைமிகு ஜெனரல் அவர்களே! நீங்கள் வெளியேறக் கூடாது! ரோமானியப் படை வெளியேறினால் நான் எகிப்தின் ராணியாக முடியாது! டாலமிக் கழுகுகள் என்னை உயிரோடு தின்றுவிடும்! உங்கள் பாதுகாப்பில்தான் நான் எகிப்தை ஆள முடியும்! அரண்மனையை விட்டு உங்கள் படையினர் நீங்கினாலும், நீங்கள் தங்கி யிருக்க வேண்டும்!

ரூஃபியோ: [கொதிப்புடன்] போதினஸ்! வாயை மூடு! எகிப்த் நாடு எகிப்தியருக்குத்தான்! ஆனால் ரோமாபுரிப் படையன்று எகிப்தில் பல்லாண்டு காலம் உள்ளதை மறந்தீரா? எகிப்த் நாடு ரோமாபுரிக்குக் கீழிருப்பதை மறந்தீரா? யாமிதை விட்டு நீங்க மட்டோம்! மதிப்புடன் உரையாடி மதிப்பைப் பெறாமல் நாக்கு பிறழ்வதைக் காண்கிறோம்! எச்சரிக்கை செய்கிறேன்! அறிவோடு உரையாடுவீர்! சிறிய பாலகன் போல் பேசாதீர்!

ஜூலியஸ் சீஸர்: [கனிவுடன் கிளியோபாத்ராவை அணுகி] கண்ணே, கிளியோபாத்ரா! உன்னை எகிப்துக்குப் பட்டத்து ராணியாக மகுடம் சூட வைப்பது என் பொறுப்பு! டாலமி இன்னும் பாலகனாக இருப்பது எமக்கு வருத்தமாக உள்ளது! நானிதைச் சற்றும் எதிர்பார்க்க வில்லை! மன்னர் டாலமி பொம்மை ராஜாவாக ஆசனத்தில் அமர, அமைச்சர் போதினஸ் உண்மை ராஜாவாக ஆள்வதை நான் விரும்பவில்லை!

அக்கிலஸ்: [சினத்துடன்] ஜெனரல் அவர்களே! உமது தவறான கூற்றை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்! எமது மன்னர் டாலமியை ஆசனத்திலிருந்து நீக்க உமக்கு எந்த உரிமையுமில்லை! எமது விரோதி கிளியோபாத்ராவை எகிப்துக்கு ராணி ஆக்கவும் உமக்கு உரிமை யில்லை! ஒருதலைப்பட்ட உமது முயற்சி நாட்டில் குழப்பத்தை உண்டாக்கும்!

தியோடோடஸ்: ஜெனரல் சீஸர் அவர்களே! எகிப்த் நாட்டுக்கு வருகை தந்த நீங்கள் எமக்குப் புதியவர்! எங்கள் நாகரீகம் அறியாதவர்! எங்கள் கலாச்சாரம் புரியாதவர்! யார் நாட்டை ஆளத்தகுதி உள்ளவர் என்பது எமக்குத்தான் தெரியும்! உமக்குத் தெரியாது! எகிப்தை ஒரு பெண்ணரசி ஆள்வது எனக்கு அறவே பிடிக்கவில்லை! காலை முதல் மாலை வரை கண்ணாடி முன்னின்று தனது வனப்பை எப்படி மிகையாக்குவது என்பதிலே காலம் களிப்பவர்! நாட்டைக் கவனிக்க பெண்ணரசிக்கு நேரம் ஏது? நினைப்பேது? கிளியோபாத்ராவை உயிரோடு நாடு கடத்தியது எமது தவறே! அவள் தற்போது உமது நிழலில் நின்று கொண்டு மன்னர் டால்மியின் ஆசனத்தைப் பிடுங்கப் பார்க்கிறாள்!

கிளியோபாத்ரா: [கைவாளை தியோடோடஸ் கழுத்தருகில் நீட்ட, தியோடோடஸ் நடுங்குகிறார்] கிழட்டுக் குருவே! எமது உப்பைத் தின்று உமக்குத் திமிர் மிஞ்சி விட்டது! டாலமிக்கு கூட்டல், கழித்தலைத் தவிர, பெருக்கல், வகுத்தல் தெரியாது. பிரமிடில் ஒளிந்திருக்கும் வான சாஸ்திரம் தெரியாது! வானத்தில் பரிதிக்குப் பக்கம் எந்த கோள் சுற்றுகிறது என்பது தெரியாது. சூரிய கிரகணம் எப்படி வருகுது என்று அறிய மாட்டான்! பிரமிடை அவனுக்காகக் கட்டினாலும், பித்தகோரஸ் கோட்பாடு தெரியாத மடையன்! கிழட்டுக் குருவே! எனக்கு நீவீர் சொல்லிக் கொடுத்த எதுவும் டாலமியின் மண்டை ஒட்டுக்குள் ஏன் நுழைய வில்லை? எனக்குள்ள அறிவும், ஞானமும், திறனும் அவனுக்குக் கிடையாது! அவன் பொம்மை ராஜாவாக இருந்தால், உம்மைப் போன்ற அரசாங்க ஊழியருக்குக் கொண்டாட்டம்தான்!

ஜூலியஸ் சீஸர்: [மிகவும் ஆச்சரியமடைந்து, கிளியோபாத்ராவின் கூந்தலைத் தடவி] மெச்சுகிறேன் கிளியோபாத்ரா! இருபது வயதுக் குமரிக்கு எத்தனை ஞானம் உள்ளது? பிரமிடின் அமைப்புக்கு வரைகணித மூலமான பித்தகோரஸ் கோட்பாடு உனக்குத் தெரியுமா? எனக்குக் கூடத் தெரியாதே! குருநாதரைப் படபட வென்று வெளுத்துக் காயப் போட்டு விட்டாயே! ஐயமின்றி எகிப்தை ஆளத் தகுதி பெற்ற பெண்ணரசி நீதான்! நீ ஒருத்திதான்! பாராட்டுகிறேன் உன்னை! எகிப்தின் பேரரசியாக வர வேண்டுமென உன்னை நீயே தயார் செய்து கொண்டது, என்னை வியப்பில் தள்ளுகிறது! உன்னைப் போலொரு ஞானப் பெண்ணை நான் எங்கும் கண்டதில்லை! நீயே எகிப்தைத் தனியாக ஆட்சி செய்வதை நான் விரும்புகிறேன்! உன்னை ஆசனத்தில் அமர்த்தி மகாராணியாக மகுடம் சூட்டிய பிறகுதான் நான் ரோமுக்கு மீளுவேன்! இது உறுதி!

கிளியோபாத்ரா: [புன்னகையோடு சீஸரின் கன்னத்தைத் தடவி] என்னருமைத் தளபதி! நீங்கள்தான் மெய்யான ரோமாபுரித் தீரர்! என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நண்பர்! என்னருமை நண்பர்! நீங்கள் எகிப்தை விட்டு ஏன் ரோமுக்குப் போக வேண்டும்? இங்கே எமது அரண்மனை விருந்தினராகத் தங்கி சில காலம் இருக்க வேண்டும்!

aj2

ஜூலியஸ் சீஸர்: என்னருமைக் கிளியோபாத்ரா! அது முடியாது! நான் ரோமாபுரிக்கு உடனே மீள வேண்டும்! கவலைப் படாதே! உன்னை எகிப்தின் ராணியாக ஆக்கிய பிறகுதான் செல்வேன்.

கிளியோபாத்ரா: நீங்கள் எகிப்தை விட்டு நீங்கினால், நான் நிரந்தர ராணியாக ஆட்சி செய்ய முடியாது! ஈதோ பாருங்கள் கழுகுகளை! கண்களில் கனல் பறக்கிறது! உங்கள் துணை அருகில் இல்லா விட்டால், என்னைக் கொன்று விடுவார்! நான் உங்களை விட்டுத் தனியாக எப்படி அரசாளுவேன்?

டாலமி: [கோபத்துடன்] பார்த்தீரா பசப்பியை? குழைந்து, நெளிந்து, மெழுகாய் உருகி விட்ட பாவையை!

தியோடோடஸ்: [சற்று மெதுவாக] மெழுகாய் உருகியது கிளியோபாத்ரா இல்லை! மகா வீரர் ஜூலியஸ் சீஸர்! சில வினாடிகளுக்கு முன்பு டாலமியும், கிளியோபாத்ராவும் ஒன்றாக ஆளப் போவதைக் கனவு கண்டார். சில வினாடிகளில் டாலமியை மறந்தார்! வாலிப மங்கை மீது வாஞ்சை வந்து விட்டது! சீஸர் சரியான ராஜ தந்திரி! சரியான அரசியில்வாதி! சரியான பச்சோந்தி! பாவையைக் கண்டதும் அவரது மோகக் கண்கள் திறந்து விட்டன! எகிப்த் ரோமா புரிக்கு அடிமை நாடு! ஆனால் சீஸர் கிளியோபாத்ராவின் அடிமை! இனிமேல் சீஸர் கிளியோபாத்ராவின் கைப் பொம்மைதான்!

அக்கிலஸ்: [போதினஸ் காதுகளில் மெதுவாக] தெரியுமா உனக்கு! சீஸருக்குச் சென்ற விடமெல்லாம் காதலியர் உண்டு! ஆம் இப்ப்போது எகிப்தில் ஓர் ஆசைக் கிளி! இது எத்தனை நாட்களுக்கோ?

போதினஸ்: [கோபத்துடன்] அக்கிலஸ்! அந்த காதல் பேச்சு உனக்குத் தேவை யில்லை! உனக்கு அறிவிருக்கு மானால், சீக்கிரம் சிறைப்படுத்து கிளியோபாத்ராவை! .. ஏன் தயங்குகிறாய்? போ கைப்பற்று அவளை! [அக்கிலஸ் உருவிய வாளோடு நகர்கிறான்]

ரூபியோ: [கோபத்துடன் வழிமறைத்து] நில் அக்கிலஸ்! நகராதே! மகாராணி கிளியோபாத்ரா பக்கத்தில் அடிவைத்தால், உமது சிரம் அறுபட்டுக் கீழே உருண்டோடும்! அங்கேயே நில்! எகிப்தின் பெண்ணரசிக்கு ரோமாபுரிப் படையினர் பாதுகாப்பு அளிக்கிறோம்! தள்ளி விலகி நில்! … என்ன மடத்தனமான செயலுக்கு உடன்பட்டிருக்கிறாய்? கூடவே ஜெனரல் சீஸரையும் சிறைப்படுத்தப் போகிறீரா? [வெடித்துச் சிரிக்கிறான்]

*********************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *