திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (3)

க. பாலசுப்பிரமணியன்

இறைவன் எவ்வாறு நமக்கு அருளுகின்றான் ?

திருமூலர்-1

மாயையால் பின்னப்பட்ட இந்த உலகில்,  மாயையை உண்மை என மனம் நம்பி அதன் பின்னே செல்கின்றது.  நிலையற்ற பலவற்றை உண்மை என்று எண்ணி அதைப் பாதுகாக்கவும் பேணிப்போற்றவும் நினைக்கின்றது. “நான், எனது, தனது” என்ற உரிமைப்போராட்டத்தில் தன் மதியை இழந்து தவிக்கின்றது.

“கயிற்றைப் பார்த்து பாம்பாக நினைத்து” பயத்தில் வாழ்கின்றது!  பயம் வரும்பொழுது மட்டும் இறைவனை நாடித் துணை சேர்க்கின்றது. எல்லாநேரத்திலும் எந்தவிதச்சூழ்நிலையிலும் இறைவன் தன்னோடு இருக்கின்றான் என்று நம்ப மறுக்கும் நெஞ்சம் “இறைவா. இப்பொழுது மட்டுமாவது என்னோடு கூட வா” என்று  அரற்றுகின்றது.

நாம் பிழைகளை உணர்ந்து வருந்தி அழுதாலும் அவன் வருவானோ என்று ஏங்கும் பட்டினத்தார் தன்னுடைய ஐயத்தை எவ்வாறு வெளிப்படுத்துகின்றார் ? :

கையொன்று செய்ய, விழியொன்று நாடக்

கருத்தொன்று எண்ணப்

பொய்யொன்று வஞ்சக  நாவொன்று

பேசப் புலால் கமழும்

மெய்யொன்று சாரச், செவியொன்று கேட்க,

விரும்பிடும் யான்

செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய்

வினை தீர்த்தவனே  !

இறைவன் நம்மை விட்டு எப்பொழுதாவது பிரிகின்றனா? இல்லை, நாம் தான்  நம் அறியாமையால் மாயையில் வீழ்ந்து இறைவனைத் தனிப்படுத்தி பிரிந்து நிற்கின்றோம். இறைவனின் பேராண்மையை எப்படி நம்மால் அறியவோ  வர்ணிக்கவோ கற்பனை செய்யவோ முடியும் ?

இறைவன் நம்மை எப்படி ஆட்கொள்ளுகின்றான்? மாயையை விலக்கி எப்படி அவனோடு ஒன்றுபடுவது? நமது முயற்சியின்றியே நம்மை ஆட்கொள்ளும் இறைவனின் அளவற்ற கருணையை கண்டறிந்த மாணிக்க வாசகரோ இவ்வாறு பாடுகின்றார்.

கறந்தபால் கன்னலொடு, நெய்கலந்தாற்போலச்

சிறந்து , அடியார் சிந்தனையுள் தேனூறி நின்று,

பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்!

இவ்வளவு நல்ல குணங்களுடன் ஒளிப்பிழம்பாக நம்மை காக்கும் இறைவனைத் திருமூலர்  எவ்வாறு காண்கின்றார்?

இணங்கி நின்றான் எங்குமாகி நின்றான்

பிணங்கி நின்றான் பின் முன்னாகி நின்றானும்

உணங்கி நின்றான் அமராபதி நாதன்

வணங்கி நின்றார்க்கே வழித்துணையாமே!

நம்முடைய கற்பனைக்கும், எண்ணங்களுக்கும், சிந்தனைகளுக்கும் இடம் கொடுத்து கூப்பிட்ட குரலுக்கு நினைத்த உருவத்தில் இணங்கி வருபவனன்றோ அவன்! நாம் அவனை அழைக்காமலே தான் படைத்த உயிரினங்களைக் காக்க இசைந்து வருபவனன்றோ! அவன் நம்மைக் காக்க வரும்போது நமக்கு முன்னும் பின்னும் சுற்றியும் நின்று ஒரு அரண்போல் அமைந்து காக்கின்றான்

இதனால் தானோ வள்ளலார் அவன் கருணையை இயற்கையின் ஒவ்வொரு அசைவிலும் காண்கின்றார்?

கோடையில் விளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த

குளிர்தருவே தருநிழலே நிழல் கனிந்த கனியே

ஓடையில் ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே

உகந்த தண்ணீரிடை மலர்ந்த சுகந்த மண  மலரே”

ஐம்பொறிகளின் உணர்வுகளிலும் உள்ளுணர்வாய் அவன் பரவிநிற்க ஐம்பொறிகள் படைத்தவனை வள்ளலார் எப்படியெல்லாம் ஆராதிக்கின்றார்!

“எங்குமாகி நின்றான்” என்ற வார்த்தைகள் உலகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு அணுவிலும் அவன் பிரதிபலிப்பைக் காட்டுகின்றது. உயிர், உயிரில்லாப் பொருட்கள், ஐம்பொறிகள், இயற்கையின் எல்லா வடிவங்களிலும் அவன் படர்ந்து நிற்பவன்.

இறைவனுடைய இந்த இணையற்ற நிலையை உள்ளுணர்த்த காரைக்காலம்மையாரின் பாடல் நம் அறிவுக்கு நல்லதோர் விருந்து

அறிவானுந்  தானே  அறிவிப்பான் தானே

அறிவாய் அறிகின்றான் தானே – அறிகின்ற

மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாயம்

அப்பொருளுந்தானே அவன்.

“வணங்கி நின்றார்க்கு வழித்துணையாமே” என்று உறுதிப்பட திருமூலர் சொல்லும்போழுதில் இறைவன் நம் வாழ்வில் நமக்கு ஒரு வழிகாட்டியாக மட்டுமின்றி, ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பதை நம்மால் உணரமுடிகின்றது. பெரிய புராணத்தில் சேக்கிழாரோ “வல்லை வந்தருளி என்னை வழித்தொண்ட கொண்டாய் போற்றி” என இறைவனின் கருணையைப் பார்த்து வியந்து போற்றுகின்றார் !

அப்படியானால், வணங்காதவர்க்கு அவன் வழித்துணையாயில்லையா என்ற   நம் மனதில் தோன்ற வாய்ப்புண்டு. இந்த அச்சத்தைப் போக்கும் வகையில் திருமூலர் இன்னொரு பாடலில் பதிலளிக்கிறார்.

எனக்கிறை அன்பிலன் என்பர் இறைவன்

பிழைக்க நின்றார் பக்கம் பேணி நின்றானே

 

எனக்கு இறைவன் அன்பு காட்டுவதில்லை எனறு ஒதுங்கி  நின்றோர்களும் பிழைக்க வேண்டும் என்று வேண்டும்போதெல்லாம் அவன் அவர்களுக்கு வழிகாட்டியாக மட்டுமின்றி நண்பனாகவும் உறுதுணையாகவும் இருக்கின்றான்.

என்னே இறையின் கருணை !

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க