-மீனாட்சி பாலகணேஷ்

“என் அன்பே, ஒரு கண்ணீர்த் துளியுடனும், ஒரு கீதத்துடனும் அர்ப்பணிப்பதற்காகவே இந்த இதயம் உள்ளது.”
“என் நண்பனே, உன்னுடைய இந்த வார்த்தைகள்                     எனக்குப் புரியவில்லையே”  ……. தாகூர்.

                                                *****************

அன்று மாலை களைத்த உடலுடனும், சோர்வடைந்த மனத்துடனும், தளர்ந்த நடையுடனும் வீடு திரும்பிய ஷீலாவுக்கு தடிமனான ஒரு வெளிநாட்டுக் கடிதக்கவரின் வடிவில் ஒர் ஆச்சரியம் காத்திருந்தது! அனுப்பியவர் முகவரி இருக்கும் இடத்தில், ஜேம்ஸ் ராபர்ட்ஸ், கீதாஞ்சலி ராபர்ட்ஸ் என்று எழுதியிருந்த கையெழுத்து மனதைக் கவர்ந்தது.  ‘டு ஷிவா ராபர்ட்ஸ்’ என்று எழுதியிருந்ததை வாய்விட்டு மெல்லப்படித்தவள், ஏதோ ஒரு நினைவில் கனவில் நடப்பதுபோல மெல்ல நடந்து, சோபாவில் அழுந்திச் சாய்ந்துகொண்டாள்.

father & daughterமனம் முழுவதும் உணர்ச்சிகளின் கலவை.  இனம் காண முடியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தாள்.  கடிதத்தை அவசரமாகப் பிரிக்க மனம் வரவில்லை. என்ன செய்திகளைத் தாங்கி வந்திருக்கிறது என்று அறிந்துகொள்ள ஆவலாக இருந்தாலும், இன்னும் சிலபொழுது அந்த எதிர்பார்ப்பை வளர்த்து நீட்டவேண்டும் என்று மூளை வேதாந்தம் பேசியது.

‘நீ கனவு கண்டது போல, அடுத்த மனைவியைப் பற்றி எழுதியிருப்பான் ஜிம்.  போட்டோ கூட அனுப்பியிருக்கலாம்.  அவனுக்குத் தான் இந்தியா என்றால் உயிராயிற்றே-  தேனிலவுக்கு வருகிறேன் என்றும் கூட எழுதியிருப்பான்….

‘சீச்சீ, இரண்டாம் மனைவியுடன் ஹனிமூன் போக, டைவர்ஸ் செய்த முதல் மனைவியிடம் எந்த மடையனாவது ஆலோசனை கேட்பானா……

‘என்னதான் இருக்கும் இந்தக் கடிதத்தில்?’  வருடாவருடம் இரு கடிதங்கள் ஜிம்மிடமிருந்து ஷீலாவுக்கு வரும். புத்தாண்டு வாழ்த்துகள்-  அதனுடன் முக்கியமாக கீதாவின் வளர்ச்சி, அவள் படிப்பு, மற்ற விவரங்கள் பற்றிய நீண்ட விளக்கங்களுடன் அவளுடைய சமீபத்திய புகைப்படத்துடன் ஜிம் எழுதியிருப்பான்.  தாய் என்ற முறையில் அவள், அதாவது ஷீலா, தெரிந்து கொள்ள வேண்டும் என்று கீதா சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் விவரமாக எழுதுவதைத் தன் கடமையாகக் கொண்டிருந்தான்.  இன்னொரு கடிதம் அவளுடைய பிறந்த நாள் சமயம் கீதாவிடமிருந்து வரும்-  ‘மம்மிக்கு வாழ்த்துகளு’டன் தன் பள்ளி, நண்பர்கள் பற்றிய விவரங்களுடன் மற்றுமொரு புகைப்படத்துடன் வரும்.

இதில் விநோதம் என்னவென்றால், தாயும் மகளும் பிரிந்திருந்த இந்தப் பத்துச்சொச்சம் ஆண்டுகளில் ஒருமுறை கூட, தொலைபேசியில் பேசிக் கொண்டதோ, ஒருவரை ஒருவர் சந்திக்க விரும்பியதாகவோ காட்டிக் கொள்ளவில்லை.

குழந்தை கீதா தன் தந்தையிடம் கேட்டிருப்பாளோ என்னவோ, “அம்மா எங்கே, தான் ஏன் அவளைப் பார்க்க முடியாது?” என்றெல்லாம் கேட்ட பொழுது ஜிம் என்ன கூறியிருப்பான்?  “உன் அம்மா நம்மை எல்லாம் வேண்டாம் என்று விட்டு விலகி ஓடிப் போய் விட்டாள்-  வேறு எதையோ தேடிக் கொண்டு போய் விட்டாள்.  அவளை நாம் எதற்காகப் போய் பார்ப்பது?” என்றிருப்பானோ-

‘கட்டாயம் இருக்காது- அவன் சராசரி ஆண்மகனல்ல.  உயர்ந்த எண்ணங்களும் பரந்த மனதும் உடையவன்.  “உன் அம்மாவைச் சந்திக்க இன்னும் வேளை வரவில்லை.  கொஞ்சம் பொறுமையாக இரு டார்லிங்,” என்று ஷீலா அத்தகைய ஒரு விருப்பத்தைத் தெரிவித்து எழுதும் வரை காத்திருக்கச் சொல்லி இருப்பான்.

‘அவன் இன்னொரு திருமணம் செய்து கொண்டதாகவோ வேறு பெண் நண்பர்கள் இருப்பதாகவோ தெரியவில்லை.  குழந்தையை நல்லபடியாக வளர்க்க வேண்டுமே என்ற கடமைக்காக ஒருவன் தன் இளமையையும் வாழ்வின் இனிய தருணங்களையும் மனமொத்த ஒரு துணையுடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்ப்பானா என்ன?

‘விவாகரத்து வாங்கிக் கொண்ட போது கூட, என்றேனும் ஒருநாள் நான் திரும்பி வருவேன்- கீதாவுக்காகவாவது, என்று தானும் சேர்ந்து எனக்காகக் காத்திருக்கிறானோ?

பலவிதமாகச் சிந்தனைக் குதிரையைத் தட்டிப் பறக்கவிட்டுக் கொண்டிருந்த ஷீலா இன்னும் கடிதத்தைத் திறக்க எத்தனிக்கவில்லை. மடியிலேயே அந்த கனமான உறை கிடந்தது.

ஜேம்ஸ், கீதாஞ்சலி என்ற பெயர்களைத் திரும்பப் பார்வையால் வருடினாள்.  வெறுமையாய் இருந்த மனதில், மெல்ல நம்பிக்கைத் துளிர்கள் அரும்ப ஆரம்பித்தன.  ‘என்ன ஆயிற்று ஷீலாஉனக்கு?’ என்றது அவள் உள்ளம்.

முடிவும் ஆழமும் தெரியாத ஒரு சுரங்கத்துள் புகுந்தது போல, தன் மனம் புகுந்து அலையும் எல்லையற்ற ‘தேடலில்’ சலித்து, போகும் போக்கில் ஏதோ ஒன்றைத் ‘தேடிய பொருள்’ என்று எண்ணி, ஏமாந்து, பின்னும் தேடி, சுழன்று சுழன்று, ஒரு சக்கர வட்டத்துக்குள் அகப்பட்டுக் கொண்டவள், இத்தனை காலம் கடந்து, தனது பொருளற்ற செய்கையை உணர்ந்து தவித்தாளோ என்னவோ- கண்ணோரங்களில் முத்துக்கள் அரும்பின.

************

பெண், டைவர்ஸ் வாங்கிக் கொண்டு மனநோயாளியாகத் திரும்பி இந்தியா வந்ததும் அவளுக்குத் தந்தையாக மட்டுமின்றி, உற்ற தோழனாக, ஆசானாக, அன்னையாக ஆறுதல் கூறி, அவளுடைய குழப்பத்தையும் சிந்தையையும் தெளிவிக்க வெங்கடேசன் என்னென்னவோ முயற்சிகளை எடுத்துக் கொண்டார்.  கோவில்கள், ஆசிரமங்கள் மற்றும் பொழுதுபோக்கு, விடுமுறை வாசஸ்தலங்கள் ஒன்றும் அவள் குழப்பத்தையும் மனநிலையையும் தெளிவிப்பனவாக இல்லை.

மிகவும் யோசித்து, வெங்கடேசன் துணிச்சலுடன் ஒரு முடிவுக்கு வந்தார்.  அவர் வேலை பார்த்து வந்த கெமிக்கல் இண்டஸ்டிரியின் முதலாளி ஒரு சகாயமான விலைக்குக் கம்பெனியை வெங்கடேசனுக்கே விற்று விட்டார்.  முதலாளியின் ஒரே பிள்ளை ‘காபி, டீ எஸ்டேட்’ என்று அவ்வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததால் ‘கெமிக்கல்ஸை’ப் பற்றி அவ்வளவு ஈடுபாடு கொள்ளவில்லை.  கடந்த இரு வருடங்களாக வெங்கடேசன் தான் இண்டஸ்டிரியை நிர்வாகமே செய்து வந்தார்.

‘சைலாவும் ஒரு கெமிஸ்ட் தானே.  அவளையும் இந்த பிஸினஸில் ஈடுபடுத்தி வியாபாரத்தையும், சரக்குகளையும் விரிவு படுத்தினால், அவளுக்கு மனத்தையும் தன் எண்ணங்களையும் ஒருமுகப்படுத்தி, ஒரே காரியத்தைச் சிந்திக்க வாய்ப்பு உருவாகும்- தற்போதுள்ள மனநோயாளி என்ற நிலை மாறும்’ என்று துணிந்து சிந்தித்தது அந்தத் தந்தையுள்ளம்.

 ஷீலாவிற்கும் இந்த யோசனை பிடித்திருந்தது.  அவளுக்குத் தன்னை நாளும் பொழுதும் பாதித்துக் கொண்டிருந்த எண்ணங்களில் இருந்து விடுபட்டால் போதும் என்றிருந்தது.

தந்தையும் மகளுமாகப் பாடுபட்டு, பிளான் பண்ணி, ‘பெர்ஃப்யூம்’ எனும் வாசனைத் திரவியங்களுக்குத் தேவைப்படும் மூலப் பொருட்களை உயர்ந்த தரத்தில் தயாரித்து ‘சப்ளை’ செய்யும் கம்பெனியாக எஸ். வி. இண்டஸ்டிரீஸை உருவாக்கினார்கள்.  மூன்றே ஆண்டுகளில் ஏற்றுமதி கூட பல லட்சங்களை எட்டிப் பிடித்தது.

வெற்றியையும், அதன் பாதையையும் ருசி கண்டு கொண்ட ஷீலாவின் உள்ளம் களிவெறி கொண்டாடியது.  பெண்ணின் சொந்த வாழ்வின் சிக்கல்களைப் பிரித்துச் சீராக்குவதில் உதவ முடியாத வெங்கடேசனின் இதயம் துயரத்தில் தனித்து நீந்திக் களைத்து தன் களைப்பை வேலை நிறுத்தத்தின் மூலம் தீர்த்துக் கொண்டது.  தாயும் மகளும் என்றோ அன்னியப்பட்டு விட்டனர்.

வெங்கடேசனின் காலத்திற்குப் பின் அலமேலு திருச்சியில் தன் சகோதரி வீட்டில் போய் இருந்து கொண்டு கோவில் குளம் என்று காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தாள்.  மகளைப் பற்றிய செய்திகள் அவ்வபோது காதில் விழுந்து பெற்ற வயிற்றைக் குமுற வைத்தன.

தனியொரு பெண்ணாக நின்று எஸ். வி. கெமிக்கல்ஸை ஒரு ‘கார்ப்பரேட்’ ஸ்தானத்துக்கு உயர்த்தி, வெளிநாட்டுக் கம்பெனிகளுடன் பிஸினஸ் செய்து கொண்டிருந்த ஷீலாவின் திறமையையும் சாம்ர்த்தியத்தையும் கண்டு பிஸினஸ் வட்டாரத்தில் வியக்காத, பொறாமைப்படாத மனிதர்களே இல்லை எனலாம்.

தனிமை; முடிவற்ற தனிமை.  தனியொருத்தியாக நின்று வெற்றிகரமாக பிஸினஸ் செய்வதால் வந்த துணிவு.  பழைய ஆங்காரங்கள் புது வடிவில் உருவெடுத்தன.  ஒரு சுண்டுவிரலின் அசைவில் தன் விருப்பங்கள் கட்டளைகளாக மாறி நிறைவேறுவது போதை தந்தது.  யாரெல்லாமோ வந்து போடும் கூழைக் கும்பிடுகளும் தன்னுடைய நட்புக்காக ஏங்கி நிற்கும் சொஸைட்டியின் மேல் தட்டு மனிதர்கள், தன்னால் ஆட்டி வைக்கக் கூடிய பொம்மைகளாக நிற்பதும் மனதில் ஒரு மமதையை வளர்த்தது.

‘என் மனப்புண் ஆறுவதற்கு இது தான் வேண்டியிருந்தது,’ என்று தீர்மானித்து, அந்த முடிவில் திருப்தி கண்டாள் ஷீலா.  தன் கடந்தகால வாழ்வின் நினைவுகளை மனதின் ஒரு மூலையில் போட்டு அழுந்த மூடி ‘ஸீல்’ வைத்தாள்.  இதனாலேயே ஜிம், கீதா இருவருடனும் பேசவோ, அவர்களைப் பார்க்கவோ முயற்சிக்கவே இல்லை.

கடந்த சில ஆண்டுகளாக அருணின் பரிச்சயம் வேறு;  யாரும் செய்வதற்குத் தயங்கும் காரியங்களைத் துணிச்சலோடு  செய்து காட்டி, மற்றவர்களைப் பிரமிக்க வைத்து, அந்தப் பிரமிப்பையே புகழ்ச்சியாக மாற்றிக் கொள்வது ஷீலாவுக்கு கை வந்த கலையாகி விட்டிருந்தது.

வேஷதாரியாகி வாழ்வை ஒரு நாடகமாக நடித்து வந்தவளின் வாழ்வில் நிஜங்களுக்கு இடமில்லை.  அருண் வெளியேறியதும் அந்த வெறுமை முகத்தில் அறைந்தது.  ஆனால், ஆடலரசு குடும்பத்தினர் காட்டிய அன்பும், பாசமும், அளித்த கௌரவமும், இத்தனை நாட்களாக உணர்ந்தறியாத வினோதமான ஆனால் இனிய எண்ணங்களை எழுப்பி இன்ப அவஸ்தைக்குள்ளாக்கின.  வாழ்வில் இழந்து விட்ட சந்தோஷங்கள் திரும்ப வருமா என்ற ஏக்கம் பிறந்தது.

‘ஷீலா, உன்னிடம் என் மனதைத் திறந்து பேசி யுகாந்தரங்களாகி விட்டன.  நீ என்னை விட்டுப் பிரிந்து போன போது உன்னிடம் கோபத்தை விடப் பரிதாபமே எனக்கு எஞ்சி நின்றது.  என்றாவது, கூடிய சீக்கிரம், என்னை நாடித் திரும்ப வருவாய் என்று எண்ணிக் காத்திருக்க ஆரம்பித்தேன்.  உன்னுடன் நான் வாழ்ந்த வாழ்வை, பகிர்ந்து கொண்ட நேசத்தை, ஒரு வெறும் சட்ட சம்பந்தமான காகிதம், ‘இல்லை’ என்று ஆக்கி விட முடியாது என்ற பயித்தியக்கார எதிர்பார்ப்பு அது.

‘இத்தனை ஆண்டுகள் நான், என் நினைவுகள் வேண்டவே வேண்டாம் என நீ இருந்த உறுதியைக் கண்டு என்னுள் வியக்கிறேன்.  நீ என்னை வெறுத்து ஒதுங்கிப் பிரியவில்லை.  உன்னை நீயே உணர முடியாது அப்போது இருந்த சூழ்நிலையில் பயந்து ஓடிவிட்டாய் என்று தான் கருதுகிறேன்.  இப்போது கூட நீ இதை ஒத்துக் கொள்ள மாட்டாய் இல்லையா?’

இந்த வரிகளைப் படிக்கும் போது, ஜிம்மின் அமைதியான முகமும், கண்ணாடிக்குப் பின்னிருந்து அவளை ஒரு உள்ளடங்கிய சிரிப்புடன் கனிவாக ஊடுருவி நோக்கும் அவனுடைய நீலக் கண்களும் கண்முன் தோன்றின.  தொடர்ந்து படித்தாள்.

‘ராபர்ட்ஸ் என்று உன் பெயரின் பின்னால் போட்டுக் கொள்வதை நீ எப்போது மாற்றவில்லையோ அப்போதே உனக்கு என்மீது வெறுப்பில்லை என்று தெரிந்து கொண்டேன்,’  இங்கு ஷீலா லேசாகத் தனக்குத் தானே புன்னகை புரிந்து கொண்டாள்.

அவள் ராபர்ட்ஸ் என்ற பெயரைத் துறக்காமல் வைத்துக் கொண்டிருந்ததன் காரணமே வேறு.  ஏற்கெனவே ஷீலா என்ற பெயர் எப்படி வந்தது என்று முக்கால்வாசிப்பேர் ஆச்சரியப் பட்டனர்.  அத்துடன் ராபர்ட்ஸையும் சேர்த்துக் கொண்டு அவர்களைத் திணற அடித்து விடத்தான் அவள் ஷீலா ராபர்ட்ஸாக இருந்தாள்.

இன்னும் தன் மன ஓட்டங்களைத் தெளிவாக விளக்கி இருந்த ஜிம்மின் கடிதத்திலிருந்து அவனுடைய இதயக் கதவுகள் இன்னமும் அவளுக்காக விரியத் திறந்திருந்தது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது.

லெட்டரின் அடுத்த பாதி இன்னுமே உற்சாகம் தரும் செய்திகளைத் தாங்கி இருந்தது.  கீதாஞ்சலிக்குப் பதினைந்து வயது முடிகின்றது.  பரத நாட்டியம் கற்றுக் கொண்டிருக்கிறாள்.  அவளையும்  அழைத்துக் கொண்டு, அவளுடைய தாய்நாடான இந்தியாவை அவளுக்குக் காட்ட, இன்னமும் நாற்பது நாட்களில் கிளம்புவதாகத் தெரிவித்திருந்தான்.  இரு மாதங்கள் தென்னிந்தியாவை அவளுக்குச் சுற்றிக் காட்டப் போவதாகத் திட்டம் என எழுதியிருந்தான் ஜிம்.

கடிதத்துடன் நான்கைந்து புகைப்படங்கள்- கீதாவின் பரதநாட்டியப் படங்கள்- எத்தனையோ ஆண்டுகளில் முதல்முறையாக ஷீலாாவின் தாய்ப்பாசம் மேலிட்டு, உள்ளம் பெருமையில் விம்மியது.

கீதாவின் இரண்டு பக்கக் கடிதமும் உடன் இருந்தது.  தாயைப் பார்க்கத் துடிக்கும் இளங்கன்றின் ஏக்கத்தை வரிக்குவரி உணர முடிந்தது.

****************

‘ட்ரிங், ட்ரிங்,’ என ஒலித்த போன் சத்தத்தில் திடுக்கிட்டு விழித்த ஷீலா, சுதாரித்துக் கொண்டு போனை எடுத்தவள் பேசத் தடுமாறினாள்.  மறுமுனையில் ஆடலரசு தான்…..

“என்ன சைலா, எனி பிராப்ளம்?” அவன் குரலில் கவலையும் பரிவும் தொனித்தன.

“இல்லையே, ஐ ஆம் ஓகே,” கலகலவென்று பேச ஆரம்பித்தவள், கடிதக் கற்றையை அணைத்தபடி, எண்ணங்களில் நீந்திக் களைத்துத் தான் உறங்கி விட்டிருந்ததை எண்ணிச் சிரித்தாள்.  மறுமுனையில் சிரிப்பொலியைக் கேட்டவன், விஷயத்தை உணர முடியாமல் தவித்தான்.

“அமுதாவுடன் ஒரு அரைமணி நேரம் இங்கு வர முடியுமா? உங்களிருவருடனும் ஒரு இனிய ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்,” என்று குழந்தை போலக் குதூகலித்தாள் சைலஜா.

(தொடரும்)

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.