தவறின்றித் தமிழ் எழுதுவோமே! – பகுதி – 3

3

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ


அ : முயலல், முயற்சித்தல்…


உங்கள் கவனத்துக்கு :- இந்தப் பகுதி முதல் இரண்டு பகுதிகள் போல இராது..- இதன் தொடர்ச்சியைப் பகுதி 3 -ஆவில் காண்க. ________________________________
என் கட்டுரையின் 2 -ஆம் பகுதியை வேண்டுமென்றே ( இச்சொல்லைப் பெரிய எழுத்திலும் சிவப்பு வண்ணத்திலும் எழுதியது இதனால்தான்)இப்படி முடித்திருந்தேன் :’வேறொரு தவற்றைத் திருத்த முயற்சிப்போமா?’


இதற்கு மறுப்பு வருமோ? எதிர்ப்பு வருமோ?  என்று காத்திருந்தேன் ; கண்கள் பூத்திருந்தேன்.மறுப்பும் வரவில்லை ; எதிர்ப்பும் வரவில்லை!மாறாக, வந்தது ஒரு மடல் ; மகிழ்ச்சி தந்தது. இதோ அம்மடல் :

‘ Govindan R  tamil_ulagam
பேரா.பெஞ்சமின் அவர்களே!முயற்சிப்போமா? சரியா?முயல்வோமா என்பதுதானே சரி.விளக்க வேண்டுகிறேன்.அன்புடன்செம்மல்.’.


மகிழ்ச்சி ஏன்? ஒரு பதிலும் வராத நிலையில் ‘வாராது வந்த மாமணி ‘ போல் வந்ததே ஒரு மடல்! அதனால் மகிழ்ச்சி!’விளக்க வேண்டுகிறேன்’ என ஆர்வத்தோடு வேண்டுகோள் வைத்திருக்கிறாரே நண்பர் செம்மல், .அதனால் மகிழ்ச்சி!(இப்படி யாராவது கேட்கவேண்டும் என்பதுதானே என் எதிர்பார்ப்பு !)நண்பருக்கு நன்றிகள்.விளக்கம் தருமுன் வேறு சிலவற்றை விளக்கவேண்டும்.

முயற்சிப்போமா?’ – என நான் எழுதியது தவறு என்றால் யாராவது ஒருவர் மறுப்போ எதிர்ப்போ தெரிவித்து இருப்பார், இல்லையா!ஒருவரும் மறுப்போ எதிர்ப்போ தெரிவிக்கவில்லையே!அப்படியானால் நான் எழுதியது சரிதானே!இதிலிருந்து புலப்படுவது என்ன?’இப்படி எழுதுவது தவறு இல்லை ; சரிதான் ‘என்றே எல்லாரும் (கவனிக்க எல்லோரும் இல்லை, எல்லாரும்) அல்லது மிகப் பலரும் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் / ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் ஒரு சாரார்.

அடுத்து,  நண்பர் மடலைக் கவனியுங்கள். :’முயற்சிப்போமா? சரியா?முயல்வோமா என்பதுதானே சரி.‘இவர் முதல் சாராரிடமிருந்து விலகி நிற்கிறார்.ஐயப்படுகிறார் ; ஆனால், குழப்பத்தில் தவிக்கிறார்! முடிவுக்கு வர முடியவில்லை!இவரைப் போன்றவர்கள் 2 -ஆம் சாரார்.

இன்னொரு சாரார் இருக்கிறார்கள். அவர்கள் தாம் 3 – ஆம் அணியினர்.கனடிய நாட்டுப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் செல்வா (தமிழ் நன்கறிந்தவர் ; தமிழ் ஆர்வலர் ; கோவை மாநாட்டில் தமிழ் எழுத்துச் சீர் திருத்தத்துக்கு எதிராகக் குரல் கொடுத்த நால்வரில் ஒருவர்).’

அவை’ என்பதே பன்மை ; அதனோடு ‘கள்’ சேர்த்து ‘அவைகள்’ என எழுத வேண்டா (கவனிக்க,  வேண்டா – வேண்டாம் இல்லை) என்று வலியுறுத்தி ‘அது இலக்கணப்படி மிகப்பெரிய தவறு! பன்மைக்கும் பன்மையா,  சிறுமை ‘ என்கிறார்.(காண்க : https://groups.google.com/group/anbudan/browse_thread/thread/fc8c416a2b42f73a/59db18e562f01579?hl=es;db18e562f01579&pli=1 )

இவர் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கிறார், அதே கனடா நாட்டில் கணிப்பொறி வல்லுநராகப் பணியாற்றும் திரு அசன் புகாரி.(புதுக் கவிதைகளைத் திறம்பட எழுதுபவர்.  இவர் கவிதைகளை மரபுக் கவிதைகளாக மாற்றிக் காட்டுவார், அணுவியல் வல்லுநர் முனைவர் C. செயபாரதன்.

காண்க http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/fc8c416a2b42f73a/c844a4e1abd7ea7a?q=#c844a4e1abd7ea7a ).

‘அன்பின் செல்வா, அவைகள் என்பதை அப்துல் ரகுமான், கலைஞர், உ வே சா என்று பயன்படுத்தாதவர்களே கிடையாது…..அதைப்போலத்தான் இன்று முயற்சிக்கிறேன் என்பதும். பழக்கத்தில் வந்துவிட்ட ஒன்றை ஏற்கிறது எழுத்து.
இலக்கணம் என்பது எழுதிக்கொள்ள வேண்டிய ஒன்றுதான்.’

நண்பர்கள் செல்வாவும் புகாரியும் இப்படிக் கருத்துரையாடல் நடத்தியது 2007 -ஆம் ஆண்டு.இதனை இன்றும் மேற்கண்ட இணையதளத்தில் காணலாம்.அதனை நண்பர் புகாரி இப்படி முடிக்கிறார் :

முயற்சிக்கிறேன் என்பது இலக்கணக் கொலை இது நீங்கள்.

முயற்சிக்கிறேன் என்பது பயன்பாட்டுக்கு வந்துவிட்ட பிழை. இது நான்.

‘இவரைப் போல ‘முயற்சிக்கிறேன் ‘ என்பது பிழை என உணர்ந்தாலும் அதன் மீது காதலாகிக் கசிந்துருகிக் கட்டிப் பிடித்துக் கொண்டு இருப்பவர்கள் 3 -ஆம் அணியினர்.இவர்கள் எண்ணிக்கை குறைவு ; இவர்கள் எந்நாளும் கட்சி மாற மாட்டார்கள்.

இடம் இருந்தால், இவர்களுக்கு உரிய பதிலை இக்கட்டுரையின் கடைசியில் பதிவு செய்யலாம்.

பெரும்பானமையாக இருக்கும் முதல் சாரார், ‘முயற்சித்தல்’ என எழுதுவது பிழை என்பதையே அறியாதவர்கள்.( நண்பர் செம்மல் கவனிக்க : இதுவே உங்கள் வினாவுக்கும் விடை. ஐயம் அகற்றுக! நீங்கள் சொன்னதே சரி.)இதில் வேடிக்கை என்ன தெரியுமா? மரபிலக்கணம் கற்று அதன் வரம்பு மீறாமல், தளை தட்டாமல் அருமையாகக் கவி பாடும் அன்பர்கள் கூட இந்த முதல் அணியில் இருக்கிறார்கள்.

அன்னையர் அந்தாதி’, ‘திருமகள் அகவல்’, ‘வாழ்க்கை எதுக்கடா?’  போன்ற பாக்களை மரபிலே படைத்து அளிக்கும் ‘உத்தம புத்திரா’, குறள் ஒன்றுக்குப் பொழிப்புரை தரும் போது எழுதுகிறார்.

அன்பு அகத்தே இல்லாத உயிர் வாழ்க்கையானது, வல்லிய கற்பாறையின் மேல், வற்றிப்போன மரம்

தளிர்க்க முயற்சித்தல் போலாகும்’.

http://kuralamutham.blogspot.com/2009/08/78.html .

(கருத்தை வலியுறுத்தவே இத்தகைய மேற்கோள்கள் ; எவரையும் குறை கூற அன்று என்பதைக் கவனத்தில் கொள்க!).

இதோ இன்னொரு கவிஞர் ; இவர் மரபிலும் பாடுவார், புதுகவிதைக்கும் பதியம் போடுவார். மதிப்பிற்குரிய இஜட். ஜபருல்லாநானாவின் கவிதைகள்

*கால்கள்*

கால்கள் –

இவைகளால்ஓடப் பழகுவதை விட

உறுதியாக

நிற்க முயற்சிப்பதே

வெற்றியின் துவக்கம்.

https://mail.google.com/mail/?shva=1#inbox/131385fc5ad59c87

சிறுகதை, பெரு கதை, கட்டுரை… எழுதும் படைப்பாளிகள் பலரும் இந்த முதல் அணியில். இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள் தரின்,பக்கங்கள் பெருகும் ; ஆகவே தவிர்க்கிறேன்.

இணையதளத் தமிழிலும், அச்சில் வரும் தாளிகைத் தமிழிலும் இப்பிழை பரவிக் கிடப்பதைக் காணலாம் :
– அண்மையில் வந்த ‘சூனியர்’ விகடனில் :’பொட்டு சுரேஷை கஸ்டடியில் எடுக்க எத்தனையோ தடவை முயற்சித்தது, மதுரை போலீஸ்.  மிஸ்டர் கழுகு: கஸ்டடியில் கக்குவாரா ‘பொட்டு’

!http://www.vikatan.com/article.php?aid=9677&sid=267&mid=2

அவ்வை தமிழ்ச் சங்கம், புதுதில்லி :‘தொலைபேசி எண்ணுடன் avvaitamilsangam@gmail.com க்கு எழுதவும். நாங்கள் தினமணி நாளிதழுடன் தொடர்பு கொண்டு உங்களுக்கு நாழிதழ் கிடைக்க முயற்சிக்கிறோம்.

‘https://mail.google.com/mail/?shva=1#inbox/131ef46855d39959.

இக்காலத் தமிழில் இத்தகைய நிலைமையே நீடிக்கிறது.

அக்காலத் தமிழில் எப்படி?அங்கே இப்பிழையை எங்கேயும் காண இயலவில்லை!எதற்கெடுத்தாலும் வந்து நிற்கும் வள்ளுவர் இதற்கும் வருகிறார் குரல் கொடுக்க … இல்லை, இல்லை குறள் கொடுக்க :

1முயற்சி திருவினை ஆக்கும்

முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்.

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்.

2 ‘தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே’

எனப் பாண்டியன், ‘கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி’ பாடுவான்.-புறம் : 182 .

3  மணிவாசகம் படைத்த மாணிக்க வாசகரும்தம் அச்சோப் பதிகத்தில் (பாடல் எண் : 1 )

 

‘முத்திநெறி அறியாத’

மூர்க்கரொடு முயல்வேனைப்

பத்திநெறி அறிவித்துப்

பழவினைகள் பாறும்வண்ணஞ்

சித்தமலம் அறுவித்துச்

சிவமாக்கி எனை ஆண்ட

அத்தன்எனக் கருளியவா

றார்பெறுவார் அச்சோவே.’

 

4பாட்டுக்கொரு புலவர் பாரதி கூட, வெகு கவனமாக

‘கடவுளிந் நாட்டிற் கீந்ததோர் புனிதக்

கட்டளை தன்னினும் அதனைத்

திடனுற நிறுவ முயலுதல் மற்றித்

தேசத்தே பிறந்தவர்க் கெல்லாம்’

உடனுறு கடமை யாகு’ம்.

(தேசிய கீதங்கள் – பிற நாடுகள்50. மாஜினியின் சபதம் பிரதிக்கினை).

 

மேலும்,

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’.’

முயற்சி திருவினை ஆக்கும்’ போன்ற பழமொழிகளும் வழக்கில் உள்ளன.

தமிழ் மொழிக் காப்பில் கவனம் வைப்பவர்கள் நகர மாந்தர் அல்லர் ; சிற்றூர் மக்களே என்பது மொழி இயல் ஆய்வாளர் கருத்து. இந்த நோக்கை உறுதிப்படுத்துகிறார் , திரு அய்யாசாமி அரங்கநாதன் என்பவர் :

‘முயற்சிக்கிறேன் என்று கிராமப்பகுதிகளிலும் சரி, வேறு எங்கும் சரி பேசுவதை நான் கேட்டதேயில்லை.  ஏதாச்சும் முயற்சி செஞ்சாத்தானே. அதுக்கு எந்த ஒரு முயற்சியும் பண்ணமாட்டேங்கறா இவ்வாறெல்லாம்தான் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். முயற்சி செஞ்சா, முயற்சி பண்ணினா இவ்வாறுதான் பேச்சு வழக்கில் வருகிறது.’(200 7 சூன் திங்கள் 4 -ஆம் நாளில் திரு செல்வாவுக்கு எழுதிய மடல் https://groups.google.com/group/anbudan/browse_thread/thread/fc8c416a2b42f73a/59db18e562f01579?hl=es;db18e562f01579&pli=1).

“முயற்சித்தல்” என்பது வடிகட்டின அழுக்கு, பிழை, வழு. ; “முயற்சித்தல்” என்னும் வழக்கு வடிகட்டின அறியாமை. இதனை பெருங்கவிஞர் எழுதினாலும், யார் எழுதினாலும் தவறு. தவறு என்று அறிந்தும் தன் இறுமாப்பிலோ, புதுமை, புது வரவு போன்ற கெடு மயக்கத்திலோ ஒருவர் எழுதினால், அது அவரின் இழுக்கு.’ என மிடுக்கு நடையில் சாட்டை சொடுக்கும் என் இனிய நண்பர் செல்வா அவர்கள் கருத்தை மனத்தில் கொள்வோம்.

எனவே, ‘முயற்சி’ என்ற தொழிற் பெயர், ‘முயல்’ என்னும் வினை, அதன் அடிப்படையில் பிறக்கும் முயன்றான், முயல்வான்…போன்றனவே சரியான வடிவங்கள். முயற்சித்தல், முயற்சித்தான்… என்பன தவறான சொற்றொடர்கள் ; களையப்பட வேண்டிய களைகள்.இவற்றை உணர்ந்து, இனிமேலாகிலும் இவற்றைக் களைய முயலுவோமா?


பி.கு : இதன் தொடர்ச்சியில், முயற்சித்தல், முயற்சித்தான்… என்பன எப்படிப் பிழைகள் ஆகின்றன எனக் காண்போம்.
மேலும், மேலே குறிப்பிட்ட 3 -ஆம் அணியினர் கூறும் கருத்துகளுக்கு உரிய பதில்களைப் பார்க்கலாம்.

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “தவறின்றித் தமிழ் எழுதுவோமே! – பகுதி – 3

  1. ‘…மகிழ்ச்சி ஏன்? ஒரு பதிலும் வராத நிலையில் ’வாராது வந்த மாமணி ‘ போல் வந்ததே ஒரு மடல்! அதனால் மகிழ்ச்சி!’விளக்க வேண்டுகிறேன்’ என ஆர்வத்தோடு வேண்டுகோள் வைத்திருக்கிறாரே நண்பர் செம்மல், .அதனால் மகிழ்ச்சி!(இப்படி யாராவது கேட்கவேண்டும் என்பதுதானே என் எதிர்பார்ப்பு !)நண்பருக்கு நன்றிகள்.விளக்கம் தருமுன் வேறு சிலவற்றை விளக்கவேண்டும்…’

    ~ வேண்டுமென்றே இதை ஆமோதிக்கிறேன். வாசகர்களுக்கு ஆர்வமில்லையெனின், எழுதுவதைத் தவிர்த்து விடுவது நலனே என்பது என் கருத்து. இப்படி யாராவது கேட்கவேண்டும் என்பதுதானே என் வீண் எதிர்பார்ப்பும் ! அதான் என் பத்தி நின்று போய் விட்டது.

  2. நல்ல செய்தி. வினைச்சொல், பெயர்ச்சொல் (தொழிற்பெயர்) வேற்றுமையை
    பயன்பாட்டில் மறந்துவிட்டோம்.

    செய் – செயல் – செய்வோம்
    ஓடு – ஓடுதல் – ஓடுவோம்
    படி – படித்தல் – படிப்போம்
    முயல் – முயலுதல் – முயலுவோம் (முயல்வோம் அல்ல – சரிதானே??)
    பயில் – பயிலுதல் – பயிலுவோம்
    விழு – விழுதல் – வீழ்வோம்

    வினைச்சொற்களுக்கான தொழிற்பெயர் சொற்கள்
    படி – படிப்பு
    பயில் – பயிற்சி
    முயல் – முயற்சி
    விழு – வீழ்ச்சி (வி நெடிலாக மாறுகிறது)
    செய் – செய்கை
    ஓடு – ஓட்டம்

    சரியா? தவறிருப்பின் எடுத்துரைக்கவும்.

    செயல் – செயல்படு (செயற்படு??) (உடனடியாக செயற்படு) – செயற்பட்டான்
    முயல் – முயல்படு?? முயற்சிபண்ணு?? – முயற்சித்தான்

    தலைய சுத்துது. யார்ன விளக்குங்கள்

    – ஆ. சிவகுமார்

  3. ’கால்கள்’ அப்போ நூல்கள்/நூற்கள்??
    பல்+பொடி – பற்பொடி, பால்+கடல் – பாற்கடல்.
    நாட்கள் தவறு நாள்கள் தான் சரி என்று ஓரிடத்தில் படித்தேன். அப்படியா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.