திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (10)
க.பாலசுப்பிரமணியன்
ஆசைகளின் வடிவங்கள்
மனிதனுடைய மனத்தில் எத்தனையோ வகையான ஆசைகள் பிறக்கின்றன. ஆனால் பெரியோர்கள் அவைகளிலே நம்மைப் பின்னித் துயரத்தில் தள்ளும் ஆசைகளை மூன்று வகையாகப் பிரித்திருக்கின்றனர். – மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்று. இந்த மூன்றும் ஒரு மாயவலையில் சிக்க வைத்து அவன் மனத்தின் அமைதியை அறவே அழிக்கின்றன.
ஓர் நண்பர் சென்னையிலே வீடுகள் பல வாங்கியிருந்தார். அவருடைய கடைசிக் காலத்தில் அவருக்குப் பெரும் குழப்பம் – அவைகளை என்ன செய்வதென்று. அவர் செல்லும் “வீட்டிற்கு” இந்த வீடுகளை உடன் எடுத்துச் செல்ல முடியாத நிலை. இந்த மண்ணாசையால் அவர் பெற்றது துன்பம் தான் – கடை நாட்களில் வீட்டுக்கும் கோர்ட்டுக்கும் அலைந்தே அவர் நிம்மதி அழிந்தது.
மண்ணாசையில் மேலும் மேலும் நிலங்களையும் வீடுகளையும் வாங்கிவிட்டு முழிக்கின்றவர் எத்தனை பேர்!
திருமூலர் சொல்கின்றார்
” மன்றத்தே நம்பி மாடம் எடுத்தது
மன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான்
மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான்
சென்றத்தா வென்னத் திரிந்திலன் தானே.“
மாட மாளிகைகளைக் கட்டிவிட்டு, பல்லக்கில் படுக்கைவிரித்து உறங்கி, பல பேர்களுக்கும் கோடிகோடியாகத் தானம் வழங்கினாலும், அவனுக்கு இறைவன் பெயரை நினைப்பதற்கு நேரம் இருப்பதில்லை.
இந்தத் துயர மாயவலையிலிருந்து விடுபட வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொல்லும் பட்டினத்தார் கேட்கின்றார் :
“ஆசையாய் பாசத் தகப்பட்டு மாயாமல்
ஓசைமணித் தீபத்தி லொன்றி நிற்ப தெக்காலம்?”
ஒரு முறை ஒரு பேராசைக்காரன் இறைவனிடம் வேண்டுகிறான் – கண்ணுக்கெட்டியவரை உள்ள பூமிக்கு அவன் சொந்தக்காரனாக வேண்டும் என்று.
அவனுக்கு தரிசனம் கொடுத்த இறைவன் கூறுகிறார். “நீ இன்று காலை முதல் ஓடத் தொடங்கு. எவ்வளவு தூரம் உன்னால் சென்று மாலை கதிரவன் மறைவதுற்குள் இங்கு வருகின்றாயோ அவ்வளவு நிலமும் உனக்குச் சொந்தம்”.
அவன் காலையில் ஓடத்தொடங்குகின்றான். மனம் இன்னும் கொஞ்ச தூரம் இன்னும் கொஞ்ச தூரம் என்று அவனை ஊக்குவிக்கிறது. மாலை மூன்று மணி அளவில் அவன் நினைக்கிறான் தன்னால் புறப்பட்ட இடத்திற்கு திரும்பிவிட முடியுமா என்று.!
வேக வேகமாகத் திரும்பிகின்றான். ஓடுகிறான், ஓடுகிறான். .மூச்சு விட முடியாமல் கிழே விழுகின்றான். இறைவன் அவனுக்கு கொடுத்த வரத்தை அவனால் சரியாக உபயோகிக்க முடியவில்லை. இதுதான் நம் வாழ்க்கையின் நிலையும்.
தெளிவின்றி வாழ்க்கையை ஒரு ஒட்டப்பந்தயமாக நினைத்து ஓடுகின்ற பல மனிதர்கள் பின்பு மனம் வருந்தி “இதற்காகவா நாம் இப்படி ஓடினோம்? இவ்வாறெல்லாம் பாடுபட்டோம்?” என்று நினைத்து வாழ்க்கையில் விரக்தி அடைகின்றனர். இந்த நிலையை அழகாக வர்ணிக்கின்றார் திருமூலர்:
கரும்புந் தேனுங் கலந்ததோர் காயத்தில்
அரும்புங் கந்தமு மாகிய ஆனந்தம்
விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்
கரும்புங் கைத்தது தேனும் புளித்ததே.
ஐம்பொறியின் ஆசைகளுக்கு உணவிட்டு அடங்கிய நெஞ்சம் தன்னைத்தானே குறைகூறிக்கொள்கின்ற நேரம் வரும்பொழுது காலம் கடந்து விடுகின்றது. இந்த அறிவு நமக்கு முன்னமேயே வந்திருக்கக் கூடாதா என்றும் தோன்றுகின்றனது. அப்படிப்பட்ட ஒரு நெஞ்சின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றார் பட்டினத்தார்:
சந்தனமுங் குங்குமமுஞ் சாந்தும் பரிமளமும்
விந்தைகளாய்ப் பூசிமிகு வேடிக்கை பொய்யாரக்
கந்தமலர் சூடுகின்ற கன்னியருந் தாமிருக்க
எந்தவகை போனாயென் றெண்ணிலையே நெஞ்சமே
வாழ்வின் உண்மை நிலை பற்றி அவர் எவ்வாறு விளக்குகின்றார்?
அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடியாரோடு மத்தணங் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே!
அநித்தியமான இந்த வாழ்வை நித்தியமாக நம்பி நாம் போற்றும் பொழுது இதன் நிலையற்ற தன்மையை நாம் மனத்தில் கொள்ளுதல் மிகவும் அவசியம்
(தொடரும்)