சிறுவர் இலக்கியம் படைப்பது எப்படி (3)
பவள சங்கரி
ஒரு குயவன் பானையை உருவாக்குவதற்கும், தச்சன் மர அலமாரி செய்வதற்கும், சிற்பி சிலை வடிப்பதற்கும் சில நெறி முறைகளையும், சட்ட திட்டங்களையும் கடைபிடிக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் அனைவரும் பாராட்டும்படியான கலைகளாக அவைகள் பரிமளிக்க வாய்ப்பே இல்லாமல் போகலாம். இதே போலத்தான் சிறுவர் இலக்கியம் என்ற அற்புத கலையின் உருவாக்கமும்.
கதையின் உருவாக்கம்
நல்ல எழுத்தாளர்கள் பல நேரங்களில் தெரிந்தே, எந்தவிதமான கட்டுத் திட்டங்களையும் மீறுவதற்குத் தயங்குவதில்லை.
குழந்தைகளுக்கான சுவையான கதைகள், நல்ல கருப்பொருள்கள், சரியான திட்டமிடல், பொருத்தமான கட்டமைப்பு, நினைவில் நிற்கும் கதாப்பாத்திரங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள், கவர்ச்சிகரமான பாணி, எளிய நடை, எதிர்பாராத திருப்பம் / முடிவு போன்ற அனைத்து பகுதிகளிலும் அதீத கவனம் கொண்டு உருவாக்கவேண்டியவை.
கருப்பொருள் :
ஒரு கதை நமக்கு என்ன சொல்ல வருகிறது என்பதை அறிய கருப்பொருள் முக்கியமாகிறது. அதாவது நம் வாழ்க்கைக்குத் தேவையான எதையாவது சொல்ல வருவதே அந்த கருப்பொருள். எல்லா கதைகளும் கருப்பொருள் கொண்டதாக இருப்பதில்லை என்றாலும் அப்படி இருப்பது சிறப்பு.
அதிகமான அறிவுரைகள் அவசியமற்றது. கதையிலிருந்து பூத்து வருகிற கருப்பொருளே வாசகர்களுக்கு தன்னிச்சையாக எதையோ கற்றுக்கொண்ட நிறைவை ஏற்படுத்துகிறது. கதைக்கான நீதியை தனியாகச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.
காட்சி :
பெரும்பாலும் கதையின் முக்கியமான கதாப்பாத்திரத்தின் மோதல் அல்லது போராட்டமே கதைக்கான காட்சி. அந்த மோதல் மற்றொரு கதாபாத்திரத்துடனோ அல்லது அது சம்பந்தப்பட்ட விசயங்கள் அல்லது அந்த கதாபாத்திரத்தின் உள்ளுணர்வுகள் அல்லது தேவைகள் பற்றியதாக இருக்கலாம்.
முக்கியமான கதாபாத்திரமான ‘கதாநாயகன் / கதாநாயகி’ என்றால் அது வெற்றியோ அல்லது தோல்வியோ சந்திக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சமாக ஓரளவிற்காவது, அடுத்தவரால் காப்பாற்றப்படாமல், தன்னையே காப்பாற்றிக் கொள்ளும் அளவிற்கு தனித்து இயங்கக்கூடியதாக இருக்கவேண்டும். பெரும்பாலும் கதாநாயக கதாபாத்திரம் முன்னுதாரணமாக இருக்கக்கூடியதும் பாடம் கற்பிக்க வல்லதாகவும், தம் பிரச்சனைகளுக்கான தீர்வைக் கண்டடையக்கூடியதாகவும் இருக்கும். அந்த பாத்திரம் என்ன கற்றுக்கொள்கிறதோ, அதற்கான சூழல் எதுவோ அதுதான் அந்தக் கதைக்கான களம் என்கிறோம்.
கதையில் மோதல் என்று வரும்போது அது அதிகமான அழுத்தமும் உற்சாகமும் ஏற்படுத்தவேண்டும். அந்த அழுத்தம் உச்சத்தைத் தொடவேண்டும். அதேபோன்று கதையின் உச்சக்கட்டத்தில் அந்த அழுத்தங்கள் படிப்படியாகக் குறைந்து இயல்பாகிவிட வேண்டும்.
காட்சியமைப்பின் அடிப்படை கட்டமைப்புகள் – மோதலின் ஆரம்பம், சரியாகவோ, தவறாகவோ செல்லலாம். இறுதியில் வெற்றி அல்லது தோல்வி அல்லது அடிபணிதல் என்பதை சார்ந்திருக்கும். மீண்டும் சரி – தவறு காட்சிகள் தொடரும்.
ஒரு புதினத்தில் அதிக மோதல் காட்சிகள் இருக்கலாம் ஆனால் சிறுகதை என்று வரும்போது அங்கு ஒரேயொரு மோதல் காட்சி மட்டுமே இருக்கவேண்டும்.
கதை அமைப்பு :
ஆரம்பத்திலேயே நேரடியாக செயல்பாட்டிற்குள் (ஆக்ஷனில்) இறங்கிவிடவேண்டும். இறுதிப் பகுதியை நீட்டி முழக்காமல் சுருக்கமாக விரைவாக முடித்துவிடவேண்டும்.
முதலில் கதையை தன்னிலையில் எழுதப்போகிறீர்களா அல்லது படர்க்கையிலா என்பதில் தெளிவாக இருக்கவேண்டும். படர்க்கையில் எழுதப்போவதானால், அவர், அவள், அது என்ற வகையில் இருக்கும் என்பதால் அடுத்தவரைப் பற்றிய கதையாக அது இருக்கும். நான், எனது, எனக்கு என்று அமையும் தன்னிலையில் எழுதுவதாக இருந்தால் அது உங்களுக்கு நேர்ந்த நிகழ்வாக இருக்கும். அதனால் ஆரம்பத்திலேயே தெளிவாக இதை முடிவு செய்துகொள்வது அவசியம்.
படர்க்கை நிலையில் சொல்வதாக இருந்தாலும், இயன்றவரை கதை முழுவதையும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தின் வாயிலாக கூறுவதாக இருக்கட்டும். அந்த கதாபாத்திரத்திற்கு தெரியாத எந்த ஒன்றையும் சொல்லிவிடாதீர்கள். இதைத்தான் ‘கண்ணோட்டம்’ என்று சொல்கிறோம். நீங்கள் வேறு ஏதாவது சொல்ல நினைத்தால் முற்றிலும் தனியானதொரு வேறு பாத்திரத்தை உருவாக்கி அதன் கண்ணோட்டத்தில் சொல்லவேண்டும்.
அடுத்து காலத்தை நிர்ணயிக்க வேண்டும். இறந்த காலமா அல்லது நிகழ்காலத்தில் எழுதப்போகிறீர்களா என்பதை முடிவு செய்யவேண்டும். இறந்த காலம் என்றால் அந்த கதை ஏற்கனவே நடந்து முடிந்ததாக இருக்கும். பல கதைகள் பெரும்பாலும் இறந்த காலத்திலேயே எழுதப்படுகிறது. நிகழ்காலத்தில் எழுதுவதென்றால் அந்தக் கதை அப்போதைய நேரத்தில் எழுதக்கூடியதாக இருக்கும். ஏதாவது ஒரு காலத்தை தேர்ந்தெடுத்து கதை முழுவதையும் அதே காலத்தில் கொண்டு செலுத்தவேண்டும்.
கதாபாத்திரங்கள்:
எழுத ஆரம்பிக்கும் முன்னர் உங்கள் கதாபாத்திரங்கள் குறித்து நன்கு அறிந்து வைத்திருங்கள்.
முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது வாசகர்களுக்கு, தங்களுள் ஒருவராகவோ அல்லது தாங்கள் அக்கறை கொள்ளத்தக்க ஒருவராகவோ இருப்பது அவசியம். அந்த பாத்திரத்தைப்பற்றிய முழுமையான விவரிப்பு தேவையில்லை. அந்தப் பாத்திரத்தின் தோற்றம், நடவடிக்கை பற்றி ஓரிரு செய்திகள் கூறினாலே போதுமானது.
முக்கியமான கதாபாத்திரத்திற்கு ஏதேனும் ஒரு குறைபாடோ அல்லது பலவீனமோ இருந்தால்தான் அது வாசகர்களுக்கு ஆர்வம் கூட்டுவதாக அமையும். ஒழுக்கமான கதாபாத்திரங்கள் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துவதில்லை. அது பொதுவான குணாதிசயமாகவோ அல்லது பரிதாபம் ஏற்படுத்துகிற படைப்பாகவோ இருக்காது. அதில் பாடம் பெறவும் ஏதும் இல்லாமல் போகலாம். இதுமட்டுமன்றி, அது எவ்வளவுதான் மோசமான பாத்திரப்படைப்பாக இருப்பினும், ஏதாவது ஒரு நல்ல விசயமாவது அதனிடம் இருக்கவேண்டும்!
கதையமைப்பு:
கதையின் காலம் அல்லது முக்கியமான சம்பவம் நடக்கும் இடம் வாசகர்களுக்கு பழக்கப்பட்ட ஒன்றாகவோ, ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடியதாகவோ இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
நடையும், பாவனையும்:
உங்கள் கதைக்கு ஏற்ற நடையை தெரிவு செய்யுங்கள். இயன்றவரை என்ன நடக்கிறது என்பதை நேரடியாகச் சொல்லாமல், செயல்பாட்டின் மூலமாகவோ, காட்சியமைப்பின் மூலமாகவோ உணரும்படி செய்யுங்கள்.
வசனங்கள் நேரடியாக இருக்கவேண்டும். உதாரணமாக, “வெளியேபோ” என்று நேரடியாகச் சொல்ல வேண்டிய இடத்தில், “அவன் அவளை வெளியே போகச்சொன்னான்” என்று சுற்றி வளைத்துச் சொல்லாதீர்கள்.
நல்ல எழுத்திற்கு அலங்கார வார்த்தைகள் அவசியமில்லை. எளிமையான வார்த்தைகளும், எளிமையான நடையும் வாசகர்களுக்குத் தொல்லையில்லாத வாசிப்பைக் கொடுப்பதால் படிப்பதற்கு ஆர்வமும் கூட்டுவதாக அமையும்.
உற்றார் உறவினருடன் உல்லாசப் பயணம் செல்லும் சிறுவர்கள் அடிக்கும் லூட்டி சுவையானது. குழந்தைகளுடன் செல்ல நேரும்போது நல்ல கதைக்களமும், வசனங்களும் அமையும் வாய்ப்புகள் அதிகம். 12/13 வயது சிறுவன் நீண்ட பயணக் களைப்பில் எப்படியொரு வசனம் சொல்வான்? குழந்தைத்தனத்திற்கேயுரிய குறும்பும் குசும்பும் கலந்த அந்த பேச்சு, “யப்பா.. டிக்கி ஃபயரிங்..” இதன் யதார்த்தம் இவனுடைய சம வயது சிறார்களை எப்படி கவர்ந்துவிடாமல் போகும்?
மிகச்சிறந்த வார்த்தைகளை – தெளிவாக விளங்கச்செய்யும் சரியான வார்த்தையை, காட்சியின் பிம்பத்தை சரியாகக் காட்டும் அந்த வார்த்தையைத் தேடிப்பிடித்துப் போடுங்கள். அப்படிப்பட்ட வார்த்தைகள் கிடைக்காவிட்டால் நிகண்டுகளின் உதவியை நாடலாம். ஒவ்வொரு வார்த்தை, சொற்றொடர்கள், வரிகள், பத்திகள் என அனைத்திலும் முழு கவனம் செலுத்தி சரிபார்க்க வேண்டியது அவசியம். உங்களுடைய ஆகச்சிறந்த படைப்புதானா இது என்பதை உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். ‘ஆம்’ என்ற பதில் கிடைத்தால் மட்டும் வெளியிடுங்கள். இல்லையென்றால் மீண்டும் திருத்தி எழுத முயலுங்கள்.
அகத்தூண்டுதல் :
“அந்த காலத்தில் ‘நீதி போதனை’ என்று ஒரு வகுப்பு வாரந்தோறும் வைப்பார்கள். அப்போது நல்ல கதைகளை மாணவர்களுக்குச் சொல்வார்கள். நாங்கல்லாம் வாரம் பூரா அதுக்காகக் காத்திருப்போம். இப்போல்லாம் நல்லதெல்லாம் போயே போயிடிச்சே..” என்று பெரியவர்கள் அடிக்கடி அங்கலாய்ப்பதைக் கேட்கும்போது தற்காலக் குழந்தைகளின் தேவைகளும், எதிர்பார்ப்புகளும் எந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறது என்பதை இவர்கள் அறியாதவர்களாகவே இருக்கிறார்களே என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. வெறும் நீதிக்கதைகளைச் சொல்லி அவர்களை நிறைவடையச் செய்யமுடிவதில்லை என்பதே நிதர்சனம். தொழில்நுட்ப வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி, சமுதாய பொதுஅறிவு வளர்ச்சி போன்ற அனைத்தின் முன்னேற்றங்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் சிறார்களின் பொழுதுபோக்குகள் எதிர்பார்ப்பிலும் பிரதிபலிக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் இன்றைய சிறுவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய கடமைகளும் படைப்பாளர்களுக்கு உண்டு.
உண்மையில் நம் அனைவருக்குள்ளும் ஒரு படைப்பாளி இருந்துகொண்டுதான் இருக்கிறான்.
எழுத்தாளர்கள் எங்கிருந்து படைப்பாற்றல் பெறுகிறார்கள்? கதைக்கான கரு எப்படி கிடைக்கிறது? அந்த கருவைக்கொண்டு ஒரு காட்சியை எப்படி கட்டமைக்கிறார்கள் அவர்கள்?
தொடருவோம்