இனி என்னைப் புதிய உயிராக்கி-14

மீனாட்சி பாலகணேஷ்

 

‘மதியப் பொழுதின் வேலை முனைப்பில் நான் கூட்டத்துடன் ஒன்றிப் போய் விடுகிறேன். ஆனால் இந்த இருண்ட தனிமையான நாளில், உன்னை மட்டும் எதிர்பார்த்தே காத்திருக்கிறேன்’- தாகூர் (கீதாஞ்சலி)

^^^^^^^^^^^^^^^^

ஷீலா உறக்கம் பிடிக்காமல் தவித்தாள். எப்படி உறக்கம் வரும்? பங்களாவின் மற்றொரு அறையில் ஜிம், வேறொரு அறையில் கீதாஞ்சலி எல்லாரும் உறங்கிக் கொண்டிருக்கும்போது, அவளுக்கு எப்படி உறக்கம் வரும்?!

அவளுக்குத் தெரிந்து சமீபத்தில் இதயபூர்வமான களங்கமற்ற அன்பில் நனைந்து குளிர்ந்தது இன்று மாலை தான். இந்த வீடு கலகலப்பாக, இனிமை நிறைந்ததாக விளங்கியது இன்று தான்.

எட்டுமணி வரை அமுதா ஆடலரசு அவர்கள் குழந்தைகள் எல்லாரும் இருந்தனர். ஒரு எளிய, ஆனால் ருசியான டின்னருக்குப் பிறகு பேசிக் களித்த வண்ணம் இருந்தவர்கள், கீதா ‘ஜெட்லாக்’ எனப்படும் நேரம் மாறியதால் உண்டாகும் களைப்பினால் உறங்கத் தவிப்பதை உணர்ந்து, பேச்சுக்குத் தற்காலிக முடிவு கட்டிவிட்டுக் கிளம்பினார்கள்.

இத்தனை ஆண்டுகளுக்குப் பின் ஜிம் தன்னிடம் வெகு சகஜமாகப் பழகியதைக் கண்டு ஆனந்தக்களிப்பில் துள்ளியது ஷீலாவின் உள்ளம்.

இப்போதும் பொங்கிய மகிழ்வின் மிஞ்சிய தித்திப்பைத் திரும்பச் சுவைத்து எண்ண அலைகளைப் புரட்டினாள்.

ஜிம்மையும் கீதாவையும் வரவேற்க ‘ஏர்போர்ட்டு’க்குப் போவது என்று ஏற்பாடு. அமுதாவும் ஆடலரசும் உடன் வர வேண்டும் என்று பிடிவாதமாக வேண்டினாள். ஜிம், கீதாவுடனான அவளுடைய சந்திப்பு, நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு வித்தியாசமான சூழலில் நிகழும்பொழுது தாங்கள் இடைஞ்சலாக இருப்பதை அமுதாவும் ஆடலரசும் விரும்பவில்லை. ஆனால் ஷீலா மிகவும் வற்புறுத்தியதன் பேரில் ஒப்புக்கொண்டனர்.
விமானநிலையத்தில் ஷீலாவின் தவிப்பு வேடிக்கையாக இருந்தது. பத்து நிமிடம், இன்னுமொரு பதினைந்து நிமிடம் என்று விமானம் தாமதமாக வந்ததில் அவள் நெற்றிக் கண்ணைத் திறந்து விமானநிலையத்தையே எரித்து விடுபவள்போல் பொறுமையிழந்து தவித்தாள்.

விமானம் வந்து நின்ற அறிவிப்பைக் கேட்டதும் அமுதாவின் கரத்தைப் பற்றிக்கொண்டு ஆவலுடன், கண்ணிமைக்காமல் ஒவ்வொரு பயணியாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

கீதாவின் புகைப்படங்களை அடிக்கடி பார்த்திருந்ததால் அவள் எப்படி இருப்பாள் என்று தெரியும். ஆனால் ஜிம்மைப் புகைப்படத்தில் கூட இத்தனை நாட்களாகப் பார்த்திராததால் அவன் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு எப்படி மாறி இருப்பான் என ஊகிக்கக்கூட முடியவில்லை. தன் புகைப்படம் அவளுக்கு அனுப்பப்படக்கூடாது என்பதில் ஜேம்ஸ் மிகவும் உறுதியாக இருந்தான். அவள் மனத்தில் மேலும் சஞ்சலத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதில் அவன் மிகவும் கவனமாக இருந்தான்.

அதோ, அங்கே ஜிம்…. அது தானா, ஆமாம். அந்தச் சிறிய பெண், கீதா தான் அது. ஜிம் மாறவே இல்லை. அன்று கண்டது போல அப்படியே இருந்தான். குதிநடையிட்டு வரும் இளம்பெண் அப்படியே சிவகாமியின் அச்சாக இருந்தாள். விழிகள் மட்டும் ஜிம்மின் நீலவிழிகள்.

மனதில் சிறைப்பட்டுக் கிடந்த தாய்மை, பொங்கிப்புரண்டு பிரவகித்து, இனம் புரியாத சங்கடமான தவிப்பையும், பேரானந்தத்தையும் உண்டாக்கியதால் செய்வதறியாது மயங்கி நின்றாள் ஷீலா ராபர்ட்ஸ் என்ற சூப்பர் வுமன். ஆடலரசு இதற்குள் அவர்களைப் பார்த்து விட்ட பரபரப்பில் இவர்கள் பக்கம் விரைந்து வந்தான்.

“அமுதா, சைலஜா ஜூனியர் பார்த்தியா? அப்படியே அதே அச்சு!” பரவசத்தில் அமுதாவின் தோளை உலுக்கினான். ஷீலாவின் இதயம் சிறகடித்து பறந்துபோய் மகளை மானசீகமாகத்தழுவி ஆலிங்கனம் செய்து கொண்டது.

“தேர், தேர் ஷி இஸ், டார்லிங் கீதா, ஹியர் இஸ் யுவர் மதர்,” ஜிம்மின் குரல் அருகாமையில் கேட்டதும் ஷீலாவின் உடல் சிலிர்த்தது. “ஹலோ, கீதா டியர், எப்படி இருக்கே?” என்று இத்தனை வருடங்களாக அன்னியப் பட்டுப்போன தன் மகளாகிய அந்த இளம் பெண்ணின் கரங்களை, கம்பித் தடுப்பினூடே தனது கரங்களை விட்டுப்பிடித்தபடி மென்மையாக வருடிக் கொண்டு வினவினாள் ஷீலா.

“மம்மி டியர், ஓ. எவ்வளவு அழகாக இருக்கிறாய் நீ, உன்னைப் பார்த்ததில் நான் ரொம்பவும் பரவசப்பட்டுப் போயிருக்கிறேன்,” என்று உற்சாகமும் ஆனந்தமும் பொங்கக் கூறிய கீதா, ஷீலாவின் கரங்களை இழுத்துப் பற்றி, அழுத்தி முத்தமிட்டாள். ஷீலாவின் உணர்ச்சிகள் புயலாகக் கொந்தளித்தன. ‘நான் இரண்டாம் பட்சம் என்று ஒதுக்கிவிட்டு வந்தது எவ்வளவு இன்றியமையாததாக இன்று ஆகி விட்டது என்பதைப் புரிந்து கொள்ள எனக்கு இத்தனை நாட்கள் ஆயினவே,’ என்று பச்சாதாபத்தில் குமைந்தாள்.

தாய்- மகளின் சந்திப்பை அருகில் நின்று அமைதியாகக் கைகளைக் கட்டியவாறு பார்த்துக் கொண்டிருந்த ஜிம்மின் முகத்தில் மகிழ்ச்சியின் அலைகள். எப்போதுமே கலைந்தது போல இருக்கும் தலைமுடியை விரல்களால் கோதியபடி, “ஷீலா, ஹவ் ஆர் யூ? நான் இந்தியாவிற்கு கீதாவை அழைத்துக் கொண்டு வந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று அவள் கரத்தைப் பற்றிக் குலுக்கினான்.

ame
‘இத்தனை ஆண்டுகளின் பின்பு, டைவர்ஸ் செய்த ஆண்மகனின் கைகுலுக்கலில் இப்படி ஒரு மின்சாரம் பாயுமா? நான் மனதை மிகவும் அலைபாய விடுகிறேனோ? இல்லை, அவன் கடிதத்தில் எழுதி இருந்தவைகளால் தான் என் மனது திரும்பவும் வண்ணத்துப் பூச்சியாகப் பறக்கிறது. ஜிம் நீ எவ்வளவு உயர்ந்தவன்- நீ என்னைப் புரிந்து கொண்ட அளவில் நான்கில் ஒரு பங்காவது நான் என்னைப் புரிந்து கொண்டிருந்தால், இந்தக் குழப்பங்களெல்லாம் வந்தே இருக்காதோ என்னவோ–

‘ஜிம், நான் தேடி வந்ததைத் தவிர, அது கிடைக்காததை விட இழந்தது மிக அதிகம். என் சுய கௌரவம், மனிதத் தன்மை, பெண்மையின் இனிமையான தாய்மை உணர்வு, இன்னும் என்னென்னவோ- எல்லாம் இழந்து- நீயும் இல்லை என்றாகி விடுமோ என்று நொந்து போனபோது, ‘இதோ இருக்கிறேன்,’ என்று நீ இங்கு வந்தது என்ன நிகழ்வு? தெய்வச் செயலா? என் அதிர்ஷ்டமா……’

“சைலஜா, லக்கேஜ் எல்லாம் எடுத்துக்கிட்டு அவங்க வந்துட்டாங்க பாரு, வா போகலாம்,” ஷீலாவை இழுத்துக் கொண்டு ஜிம்மை நோக்கி விரைந்தாள் அமுதா.

“மம்மி டியர், ஐ லவ் யூ ஸோ மச்…..”

“கீதா பேபி, என் கண்ணே, லிட்டில் ஏஞ்சல்,” வார்த்தைகள் குழற, அந்த இளம் பெண்ணை அணைத்தபடி பிதற்றினாள் சைலஜா. பட்டுப் போன்ற கூந்தலிலும், கண், மூக்கு, முகம், கரங்கள் என முத்தமாரியில் நனைத்தாள். சுற்றுச் சூழலை மறந்தாள்.

அந்தக் குழந்தையும் தாயின் அணைப்பில், காலம் கடந்து கிடைத்தாலும், கிடைத்தற்கரிய பேரானந்தத்தைத் தரக்கூடிய ஒரே ஒருத்தியின் அணைப்பில் துவண்டு ஒடுங்கி, விசும்பியபடி அவளின் கரங்களில் தவழ்ந்தது.

அமுதா, கண்கள் பனிக்க, ஆடலரசின் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள். கலங்கிய கண்களை நாசுக்காகத் துடைத்தபடி, தன்னை ஜிம்மிடம் அறிமுகப் படுத்திக் கொண்டான் ஆடலரசு.

எல்லாரும் இவர்களையே திரும்பித் திரும்பிப் பார்த்தபடி கடந்து போகும் நிகழ்வினால் கூச்சமடைந்த அமுதா, “சைலா, வாம்மா, காருக்குப் போகலாம்,” என்று சைலஜா, கீதா இருவரையும் மெல்லத் தட்டி அழைத்தாள். ஒருவர் அணைப்பிலிருந்து மற்றவர் பிரியாமல் தாயும் மகளும் வந்து காரில் ஏறியதும், வீடு வந்ததும் ஏதோ கனவு போலத்தான் இருந்தது.

ஜிம் நாகரிகம் தெரிந்தவனாக இருந்ததால் தனக்கு ஹோட்டலில் ரூம் ரிஸர்வ் செய்து கொண்டிருந்தான். ஷீலாவின் பெரிய பங்களாவில் தங்குவதை அவன் எதிர் பார்க்கவில்லை. எனவே, டின்னருக்குப் பின் அவன் ஹோட்டலுக்குக் கிளம்பியதும், அதுவரை இதைப் பற்றி அறியாத ஷீலாவுக்குத் ‘துணுக்’கென்றது. மெல்ல ஆடலரசை விட்டு, “ஜிம்மை இங்கேயே தங்கிக்கச் சொல்லுங்களேன். எனக்கு ஒரு தொந்தரவும் இல்லை. ப்ளீஸ், ஆடலரசு, எனக்கு எப்படி அவரிடம் சொல்லிக் ‘கன்வின்ஸ்’ பண்ணுவது என்று புரியல,” என்றதும், ஜிம்மின் சமீபத்திய கடிதத்தின் உட்பொருளை நெருங்கிய நண்பர்கள் என்ற முறையில் அவர்களுடன் ஷீலா பகிர்ந்து கொண்டிருந்ததால், உரிமையுடன் ஆடலரசு, “ஏன் சைலா, நீங்களே சொல்ல மாட்டீங்களா? இதென்ன, அரசு விடு தூதா?” என்று குறும்பாக வினவினான்.

பதினைந்து வயதில் தான் அவள் முகத்தில் கண்டு ரசித்த நாணக் கலவை இப்போது அதே அளவில், மேலும் பொலிவோடு மின்னி மிளிரக் கண்டான். அன்று அந்த நாணம், அவனுக்குக் கழிவிரக்கத்தை ஏற்படுத்தியதென்றால், இன்றும் வேறு யாரையோ கருதி ஏற்பட்ட நாணம், அவனுக்குக் களிப்பையும், உல்லாசம் நிறைந்த மனக்கிளர்ச்சியையும் உண்டு பண்ணியது.

ஜிம்மை ரொம்ப வற்புறுத்த வேண்டியிருக்கவில்லை. ஷீலாவின் ஒரு வேண்டுகோளுக்காகக் காத்திருந்தவன் போல உடனே ஒப்புக்கொண்டு விட்டான்.

கீதா மிகவும் களைத்துப்போய் உறங்க விரும்பியதாலும் ஜிம்மின் கண்களில் ஷிவாவுடன் தனித்துப்பேசும் ஆர்வமும் ஆவலும் மின்னியது வெளிப்படையாகத் தெரிந்ததாலும், ஆடலரசும் அமுதாவும் விடை பெற்றுக் கொண்டனர்.

“குட் நைட் மம்,” கீதாவிற்கு என்று ஷீலா ஒரு அறையை அழகாகத் தயார் செய்து வைத்திருந்தாள். கீதா தன் தாயை இறுக அணைத்து முத்தமிட்டபடி, ‘குட் நைட்’ சொல்லிவிட்டு உறங்கச் சென்றாள்.

மெல்லத் திரும்பி வந்தவளிடம் ஜிம் தானும் களைப்பாக இருப்பதாகவும், இருந்தாலும், “ஒரு ஷவர் எடுத்துக்கொண்டு வருகிறேன். உன்னுடன் கொஞ்சம் பேசவேண்டும். உனக்கு நேரம் இருக்குமானால்….” என்றான். பத்துப் பதினைந்து நிமிஷங்கள் பால்கனியில் காத்திருந்த ஷீலா அவன் வரக்காணாதது கண்டு, ‘ஒருவேளை களைப்பினால் உறங்கிப் போயிருப்பான்,’ என எண்ணியபடி தன் அறைக்குச் சென்றபோது மணி ஒன்பது.

கடிகாரம் பத்து முறை அடித்து ஓய்ந்தது. உறக்கம் வராததால், சிந்தனை ஓட்டங்களில் தன்னை இழந்திருந்த ஷீலா மெல்லத் தன் அறைக் கதவைத் திறந்துகொண்டு பால்கனியில் வந்து நின்றாள். நிராசையில் மனம் துடிதுடித்தது. இரவில் மலர்ந்த மலர்களின் மெல்லிய வாசம் தோட்டத்திலிருந்து வந்து அந்த அமைதியான இரவில் அவளுடைய மனத்தின் அமைதியை மாத்திரம் கலைத்தபடி சவால் விட்டது. வானில் நட்சத்திரங்கள் ஒன்றையொன்று பார்த்து கண் சிமிட்டிக்கொண்டன.

“சைலஜா,” அழைத்தது யார் என்று திரும்பிப் பார்க்காமலே சொல்லிவிட அவளால் முடியும். இந்த அழைப்புக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தாளே- திரும்பிப் பார்த்தவளை ஜிம் மூக்குக் கண்ணாடிக்குப் பின்னாலிருந்து ஆழ்ந்த நீல நிற விழிகளால் கனிவுடன் பார்த்தவண்ணம் கைகளை நீட்டி அவள் கைகளைப்பற்றிக் குலுக்கினான். “உன்னைக் காக்க வைத்து விட்டேன், மன்னித்துக்கொள்.”

ஒன்றுமே பேசாமல் ஒரு புன்சிரிப்புடன் அவனையே சில கணங்கள் நோக்கியவள், என்ன பேசுவது எனப் புரியாத தவிப்பில், “ஜிம், நீ மாறவேயில்லை. அப்படியே இருக்கிறாய். சற்றுப் பருத்திருக்கிறாய்,” என்றாள். இரவின் நிசப்தத்தை கிழிக்க அச்சப்பட்டவள் போல சன்னமான குரலில் பேசினாள்.

“ஹ்ம், இதை நானும் உனக்குத் திருப்பிச்சொல்வேன் என்று நினைக்காதே. நீ ரொம்பவும் மாறி இருக்கிறாய்…”

நட்பின் கனிவோடு, பரிவாக வந்த வார்த்தைகள்- கண்களில் பொங்கிய நீரை அவன் காணாவண்ணம், திரும்பி, பால்கனியின் மறுகோடிக்கு நடந்தாள் சைலஜா.

“நான் ஏதாவது தப்பாகச் சொல்லி விட்டேனா சைலா?” பின் தொடர்ந்தான் ஜிம்.

“இல்லவே இல்லை. நீ எப்போதும் உண்மையை நேருக்கு நேர் கூறுபவன். அதனால் நான் உன்னை மிகவும் மதிக்கிறேன். நீ சொன்னது உண்மை. நான் மிகவும் மாறிவிட்டேன். பழைய சைலஜா இல்லை….” விரல்களைக் கோர்த்துக்கோர்த்துப் பிரித்தபடி வார்த்தைகள் வராமல் தடுமாறினாள்.

“நீ என் லெட்டரைப் படித்தாயா?” நேரடித் தாக்குதலாக வந்து விழுந்த கேள்வியின் பொருளுணர்ந்து திகைத்தாள் ஷீலா. சில நொடிகள் மௌனத்தின் பின் பேசினாள், “ஜிம்,… உன் கடிதத்தைப் படித்தபின்புதான் நான் புத்துணர்ச்சியில் புதுமனுஷியாக நடமாட ஆரம்பித்து இருக்கிறேன். நீ என்னிடம் எதிர்பார்க்கும் பதில் என்னவென்று எனக்குப்புரிகிறது. நானும் அதைக்கூறி விடுவேன். ஆனால் சில புதுவிதமான கவலைகளும் அச்சங்களும் தோன்றி என்னை அலைக்கழிக்கின்றன.

“என் கடந்தகால வாழ்வை, உன்னைப் பிரிந்து நான் வாழ்ந்த இந்த நாட்களை, வருடங்களை நான் சிந்தித்துப் பார்த்தபடி இருக்கிறேன். எனக்குக் சிறிது அவகாசம் கொடு..ப்ளீஸ்.. உன்னால் இது முடியுமா?”

“வேண்டிய அவகாசம் எடுத்துக்கொள். உன் பதில் மறுப்பாக இருந்தாலும் கூட எனக்கு அதை ஏற்றுக் கொள்ளும் மனோபலம் இருக்கிறது. ஒரு சிறு விஷயம்.. இதோ…” ஒரு சிறு நகைப் பெட்டியை டிரௌஸர் பாக்கெட்டிலிருந்து எடுத்தான். ரத்தச் சிவப்பான ‘ரூபி’ என்னும் மாணிக்கங்கள் பதித்த ஒரு அழகிய மோதிரம் வெல்வெட் குஷனில் அமர்ந்தபடி ஷீலாவைப் பார்த்துப் புன்னகைத்தது. “இதை நாங்கள் டெல்லியில் இருந்த ஆறுமணி நேரங்களில், கீதா உனக்காக வாங்கினாள். நான் இதை உனக்குப் பரிசாகத்தர வேண்டும் என்பது அவளது விருப்பம். அதுவும் நாம் இருவரும் தனிமையாக இருக்கும்போது என்றும் சொல்லியிருக்கிறாள். ‘டீன் ஏஜ்’ பெண் அல்லவா? காதல் சம்பந்தமான உணர்வுகள் மிகவும் அதிகமாகப் பாடுபடுத்தும் வயது! அவளுடைய விருப்பப்படி, ஏன், நானும் கூட விரும்பித்தான், உனக்கு இதைத் தருகிறேன்,” எனப் பெட்டியை அவளிடம் நீட்டினான்.

பெட்டியை வாங்கிக் கொள்ளாமல், ஒரு கையால் தூணை அணைத்தபடி மறுகை விரல்களை மடக்கிக்கொண்டு மோதிரவிரலை அவனிடம் நீட்டினாள். வெட்கமேயில்லாமல் கண்களிலிருந்து கண்ணீர் மழை பொழிந்து கொண்டிருந்தது.

மென்மையாக அவ்விரலைப்பற்றி மோதிரத்தை அணிவித்தவனுடைய கரங்களும் நடுங்குவதை அவளால் உணர முடிந்தது.

‘ஜிம், நீ தான் எனக்கு வேண்டும். நீ மட்டுமே எனக்கு வேண்டும். பகலும் இரவும் என்னைப் பொய்மை மிகுந்த எண்ணங்கள் அலைக்கழிக்கின்றனவே,’ என மனம் கதறியது. அந்த உயரமான ஆறடி ஆகிருதியில் தன்னைப் புதைத்துக்கொண்டு கதறத்துடித்தது உள்ளம். எது அவளை இப்போது பலாத்காரமாகத் தடுக்கிறது? வெறும் ஒரு சட்டபூர்வமான காகிதம், மனங்கள் விழையும் உறவைக் கூடாதென்று தடுக்குமா என்ன? இல்லை, இது வேறு ஏதோ ஒன்று.

புதிய ஒரு குழப்பம் ஷீலாவை அலைக்கழிக்கத் துவங்கி இருந்தது.

மோதிரம் அணிவித்த விரலையும் கரத்தையும் விட்டு விடாமல், “வித் யுவர் பர்மிஷன்,” என்று அக்கரத்தைத் தன் இதழ்களில் பதித்துக்கொள்ள விரும்பி அவள் முகத்தை ஏறிட்டான் ஜிம். ‘ஆமாம்,’ என்பது போல அவள் தலை லேசாக அசைந்தது. ஒரு மின்சார அலை ஆத்மாவை ஊடுருவிப் பாய்ந்து, நெஞ்சத்தைச் சம்மட்டி போலப் பிளந்தது.

தன் பாக்கட்டிலிருந்து ‘டிஷ்யூ’ பேப்பரை உருவி, அவள் கண்களை மென்மையாக ஒற்றித் துடைத்த ஜிம், “சைலஜா, உனக்கு இப்போது நல்ல ரெஸ்ட் தேவை. நாளை காலையில் பார்க்கலாம்,” என்றதும், அன்பான கட்டளைக்குக் கீழ்ப்படியும் குழந்தையைப் போல, தன் புதுமோதிரத்தைத் திரும்பத்திரும்பப் பார்த்துக்கொண்டு நடந்தவாறே தன் அறைக்குள் நுழைந்து உறங்க முயன்றாள் ஷீலா.

(தொடரும்)

தாரகை இணைய இதழ்

********************************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *