-தமிழ்த்தேனீ

பாகம் 7

விவேகானந்தர்    ( நரேந்திரன் ) முதலில் ராமக்ருஷ்ண பரமஹம்ஸர்  சொல்லுவதைக் கவனிக்காமல் அவர் ஏதோ செய்து கொண்டிருப்பாராம்.  ஒரு நாள் ராம க்ருஷ்ணபரமஹம்சர் நரேந்திரனை அழைத்து நான் சொல்லுவதைக் கவனிக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று வினவ அதற்கு நரேந்திரன் தாங்கள் இறைவனைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.  ஆனால் கண்ணால் காணமுடியாத ஒன்றை எப்படி நம்புவது என்று நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்றாராம். அதற்கு ராமக்ருஷ்ணபரமஹம்சர் நான் உனக்கு இறைவனைக் காட்டுகிறேன் என்று கூறி தன்னுடைய தியான சக்தியால் நரேந்திரனை தன்கையால் தொட்டு அவருக்கு இறைவனைக் காட்டும் முயற்சியில் இறங்கினார். அப்போது தேஜோமயமாகத்  தாங்கவொண்ணா ஒளியாக இறைவன் நரேந்திரனுக்குக் காட்சி அளித்தாராம். அந்த அற்புத ஜோதிச்வரூபனை அந்த ஒளியின் விஸ்வரூபத்தை தாங்க முடியாமல் நரேந்திரன் திகைத்துப் போனாராம். அதற்குப் பிறகு ராமக்ருஷ்ணபரமஹம்ஸர் இறைவனைப் பார்க்க உனக்குள் சக்தியை ஏற்படுத்திக் கொள்; அப்போதுதான் இறைவனைப் பார்க்கமுடியும் என்னும் தத்துவத்தை போதித்தாராம். அப்போதுதான்  நரேந்திரன் விவேகானந்தராக மாறினார் என்பர்.

ஆன்மீகம் என்பது என்ன? மனிதன் எப்போது தன்னை மீறிய சக்தி ஒன்று இருக்கிறது, அது நம்மை எல்லா ஆபத்திலிருந்தும் காப்பாற்றும் என்று நம்பத் தொடங்கின வினாடியிலிருந்து  ஆன்மீகம் தோன்றி வளர ஆரம்பித்தது என்றும் சொல்லலாம். அல்லது மனிதன் ஏற்கெனவே இருக்கும் ஆன்மீகத்தை  உணரத் தலைப்பட்டான் என்றும் கொள்ளலாம்.

இந்தப் ப்ரபஞ்சத்தில் பிறந்த அத்தனை உயிர்களும் தங்களைக் காப்பாற்ற தங்களை மீறிய சக்தி ஒன்று இருக்கிறதாக நம்பத் தொடங்கின; அதனால்தான் எல்லா உயிர்களும் ஓரளவு தன்னம்பிக்கையோடு வாழத் தலைப்பட்டன.  இந்த இறை நம்பிக்கைதான் இன்றுவரை நம் எல்லோரையும் ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது.  ஆன்மீகம் என்ற ஒரு வழியினால்தான் மனிதன் ஓரளவு தன்னம்பிக்கையோடு வாழ்கிறான்.    நமக்கு மேல் நம்மைக் காப்பாற்ற ஒருவருமே இல்லை நம்மை நாமேதான் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்று நாத்தீக வாதிகள் சொல்கிறார்கள்; அப்படிப்பட்ட நாத்தீகவாதிகளுக்கு

”உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு“ என்னும் வள்ளுவன் வாக்கிற்கேற்றார்போல்  இடுக்கண் வரும்போது அதைக் களைய ஒரு நண்பனாவது வேண்டும். அப்போதுதான் ஏதோ ஒரு நண்பனாவது இருக்கிறான் நம்மைக் காப்பாற்ற என்று வாழ்க்கையின் மேல் ஒரு பிடிப்பு ஏற்படும். இல்லையென்றால் நாம் வாழ்வது வீண் என்று விரக்தி ஏற்பட்டுவிடும்.  கடலில் தத்தளிக்கும்போது பிடித்துக் கொள்ள ஒரு சிறு கட்டையாவது கிடைக்காவிடில் மூழ்குவது நிச்சயம். அது போன்று நமக்கு துன்பம் வரும்போது நம்மைக் காக்க நம்மினும் மேலான சக்தி இருக்கிறது என்கிற நம்பிக்கைதான் அந்தக் கட்டை போன்றது. தற்கொலை செய்து கொள்பவர்கள் பலர் தம்மைக் காக்க , அல்லது தங்கள் துன்பத்தைப் போக்க யாருமில்லை என்று தீர்மானமாக எண்ணுவதால்தான் உயிரை விடத் தீர்மானிக்கிறார்கள்.   அப்படித் தங்களையே அனாதைகளாய் நினைத்துக் கொள்ளுதல் கூடாது என்பதுதான் ஆன்மீகத்தின் நோக்கம்.

அதற்காகத்தான் பெரியவர்கள் இறைவன் இருக்கிறான்; அவன் நம்மை துன்பங்களிலிருந்து காப்பாற்றுவான் என்கிற நம்பிக்கையை வளர்த்தார்கள்.  ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும்போது அதைத் தனியே விட்டுவிட்டு வேடிக்கை பாருங்கள்.  சிறிது நேரம் விளையாடும். தன்னைச் சுற்றி யாருமே. இல்லை என்று உணரும் வினாடியில் அழத் துவங்கும்.அந்த நிலையிலேதான் எல்லா வளர்ந்த  மனிதர்களும் வளர்ந்தாலும் குழந்தைதான்.  அணைக்கும் கை இருக்கிறது, நமக்கு ஆபத்து வரும்போது ஆதரவாக நம்மைக் கையிலெடுத்து  ஆதரவு தர ஒரு கை எப்போதும் நம் அருகில் இருக்கிறது  என்கிற நம்பிக்கை இருக்கும் வரைதான் நாம் மனிதராக இருப்போம். எப்போது அந்த நம்பிக்கை நம்மை விட்டுப் போகிறதோ அப்போதே நாம் சக்தி இல்லாதவர்களாக உணர்வோம்.  அதனால்தான் ஆன்மீகம் என்று ஒன்றை ஏற்படுத்தி நம்மை காக்க எப்போதும் ஒருவர் இருக்கிறார் என்று நமக்கு ஒரு உணர்வை பெரியவர்கள் ஏற்படுத்தினர்.

***

பாகம்  8

இறைவன் இருக்கிறானா, இல்லையா என்பது நமக்குத் தேவையில்லாத சிந்தனை. இருக்கிறான் என்று எண்ணும்போது நமக்குக் கிடைக்கும் நிம்மதி அதுதான் என்றும் தேவையான ஒன்று. அந்த நிம்மதி நமக்குக் கிடைக்கவேண்டுமானால் இறைவன் என்று ஒருவன் உண்டு என்று நாம் நம்பித்தானாகவேண்டும். எல்லாமே மனிதனின் சுயநலத்துக்காகத்தான். மனிதனின் உடலில் உப்பு, சர்க்கரை, கொழுப்பு, கசப்பு ,அழுக்கு, தண்ணீ ர், காற்று , மண், எல்லாம் இருக்கிறது. ஆனால் எந்த  அளவு  இருக்கவேண்டுமோ அந்த அளவு இருக்கிறது. அந்த அளவு கூடினாலும், குறைந்தாலும் உடனே வைத்தியர் அதை சமனப்படுத்த மருந்து தருகிறார். அது போல நம்முடைய சுயநலத்துக்காக நாம் ஏற்படுத்திய ஆன்மீகம்  ஒரு பற்றுக்கோல் போல நமக்குப் பயன் படுகிறது. ஆனால் அங்கு சுயநலம் என்னும் பற்றுக்கோல்  சற்றே பருத்துச் சுயநலம் அதிகமாகும் போது பொதுநலம் மறந்து போகிறது.

உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் எல்லா மதத்தவருக்கும், எல்லா ஜாதியினருக்கும், எல்லா நாட்டினர்க்கும், பொதுவாக மானிடராய்ப் பிறந்த அத்தனை பேருக்கும் பொதுவாக ஏற்படுத்தப்பட்ட ஆன்மீகம் சிலபேருக்கு மட்டுமே சொந்தமான சொத்துபோல் ஆகும் போதுதான் அங்கு ப்ரச்சனை முளைக்கிறது.  தெய்வம் , இறைவன், ஸ்வாமி,அல்லா, இயேசு கிருஷ்ணன், ராமன் , வினாயகன், சிவன்,  சக்தி என்று எப்படி அழைத்தாலும் எல்லாம் ஒருவனே. ஒன்றே குலம் அது மனித குலம். ஒருவனே தேவன் அவன் பொதுவானவன் எப்பெயர் சொல்லி அழைத்தாலென்ன?

என் தாயை நான் அம்மா என அழைப்பேன். என் குழந்தைகள் பாட்டி என்று அழைக்கிறார்கள். என் குழந்தைகளின் குழந்தைகள் கொள்ளுப் பாட்டி என்று அழைக்கிறார்கள்.சில குழந்தைகள் பெரியம்மா என்று அழைக்கிறார்கள். சில குழந்தைகள் குழந்தைகள் அத்தை என்று அழைக்கிறார்கள். யார் எப்படி அழைத்தாலென்ன என் அம்மா தானே? அதுபோலத்தான் யார் வேண்டுமானாலும் அவரவர் இஷ்டம் போல் அழையுங்கள்.  ஆனால் இருப்பது ஒரே தெய்வம்  அது இறைவன்.

நமக்கும் மேல் பெரியவன், நம்மைக் காப்பவன்  அவ்வளவுதான்; இந்த உண்மை புரியத்தான் ஆன்மீகம் என்று ஒன்றைப் பெரியவர்கள் ஏற்படுத்தினார்கள்.   அந்த ஆன்மீகத்தின் நோக்கமே  பிரிவினை இல்லாது மனிதன் மனிதத் தன்மையோடு வாழவேண்டும் என்பதே.  நாம் அடிப்படையான இந்த நோக்கத்தையே மறந்து நமக்குள் பல பிரிவுகளை நாமே ஏற்படுத்திக் கொண்டு பிரிந்து நம்முடைய இளைய தலைமுறைகளுக்கும் அந்தப் பிரிவைச் சொத்தாக எழுதிவைத்து வருங்கால மக்களை,  மக்கள் என்னும் நிலையிலிருந்து மாக்கள் என்னும் நிலைமைக்குத் தள்ளிக் கொண்டிருக்கிறோம் ( மாக்கள் என்றால் மிருகங்கள் என்று பொருள்).

மக்களை மாக்கள் நிலைக்குத் தள்ளும் பிரிவினையை அரசியல்வாதிகள் வேண்டுமானால் அவர்களின் சுய லாபத்துக்கு உபயோகப் படுத்திகொள்ளட்டும். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்று ஒரு பழமொழி இருக்கிறது.  ஆதலால் நாம் அனைவரும் பிரிந்திருந்தால்தான் அவர்களுக்கு வசதி. ஆனால் நாம் இதை உணர்ந்து ஜாதி, மதம் , இனம் ,மொழி,கலாசாரம் கொள்கைகள், வழிபாடுகள், அத்தனையும் மாறுபட்டு இருந்தாலும் அவரவர் வழியை அவரவர் பின்பற்றிக் கொண்டு  முடிந்தால் எல்லா மனிதருக்கும் உதவிக் கொண்டு மேற்கூறிய அத்தனை பேதங்களையும் மறந்து மனத்தால் ஒன்றுபட்டால் நல்லதுதானே?

***

பாகம் 9

எங்கு மனிதருக்கு அநீதி இழைக்கப் படுகிறதோ அங்கு எந்த வித பேதமும் இல்லாமல்  அத்தனை மதத்தவரும் ஒன்று கூடி அநீதியை அழிக்க இணைந்தால்  அங்கே மனிதம் மலரும். விளங்க முடியாக் கடவுளைக் கூட விளங்கிக் கொள்ளமுடியும். கடவுள் மதத்திலில்லை, ஜாதியிலில்லை, இனத்திலில்லை, மொழியிலில்லை, நிறத்திலில்லை, மணத்திலில்லை, குணத்தில் இருக்கிறான். ஆமாம் மனிதம் தான் கடவுள். கடவுள் என்றாலே எல்லாவிதமான வேறுபாடுகளையும்  கடந்தவன் என்று பொருள். கட உள்  உன்னிலிருக்கும் கடவுளை உள்ளே சென்று பார்க்க உன் ஆன்மாவைப் பார்க்க எல்லா மனிதருக்கும்  உட் ப்ரயாணம் தேவை. உட்ப்ரயாணம் என்றால் ஆத்ம ஞானம்,ஆத்மயோகம். அன்பு ,கருணை, இரக்கம் சக உயிர்களை மதித்தல் , மனிதனை மனிதனாக மதித்தல், மனிதனை மனிதனாகவே நேசித்தல், மக்களை மாக்களாக்காமல்   மக்களாகவே இயல்பாக மனிதனாகவே நடத்துதல். மொத்தத்தில் மனிதம் என்பதுதான் கடவுள், இறைவன். அதுதான் ஆன்மீகம்.

விஞ்ஞானிகள் அவர்கள் வழியிலே  அண்டத்தின் அற்புதங்களை  அணுவின் உள்கிடக்கையை பிரபஞ்ச வெடிப்பின் பேரொளியை அப்பாற்பட்ட உலகங்களை ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதே போல்  ஆன்மீக வழியில் மெய்ஞ்ஞானிகளும்  சித்தர்களும்  மெய்ஞ்ஞான வழிகளில்  தியானம் யோகம் சித்து போன்ற  பல வழிகளிலும்  இறையைக் காண  இறையின் இருப்பை அறிய முயல்கின்றனர்.

அதீதப் புலனாற்றல் ஆய்வு மையம் :   ஐந்து புலன்களால் அறிவியல் பூர்வமாக அறியப்படுவது மட்டுமே மெய்; மற்றதெல்லாம் பொய் என்று நவீன அறிவியல் விஞ்ஞானிகள் சென்ற நூற்றாண்டு வரை கருத்துக் கொண்டிருந்தனர். ஆனால் விளக்க முடியாத ஏராளமான சம்பவங்கள் ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்டவையாக இருந்தன. ஆகவே இவற்றை ஆராய The Society for Psychical Research (S.P.R.) என்ற அதீதப் புலானாற்றல் ஆய்வு மையம் லண்டனில் 1882ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

மூடி சீலிடப்பட்ட கவர்களில் இருக்கும் செய்திகளைப் படிப்பது, தொலைதூரத்தில் இருப்பதைப் பார்ப்பது, எண்ணங்கள் மூலம் தொலை தூரத்தில் இருப்பவரைக் கட்டுப்படுத்துவது, அவர்களுக்கு ஆணை இடுவது, மனோசக்தியாலேயே பொருள்களை நகர்த்துவது, ஆவிகளுடன் பேசுவது, முற்பிறப்பு உண்மைகளைச் சொல்வது என்று இப்படி எண்ணில்அடங்கா விந்தைகளை ஆராய ஒரு மையம் ஏற்பட்டவுடன் நூற்றுக் கணக்கான விஞ்ஞானிகள் ஆயிரக்கணக்கான சோதனைகளை நடத்தி வருகின்றனர். அவர்களது சோதனை முடிவுகள் அனைவருக்கும் திகைப்பையும் பிரமிப்பையும் தருவதாக அமைந்துள்ளன!

ஜாகொல்லியட் :  எல். ஜாகொல்லியட் (L.Jacolliet -1901) என்பவர் ‘Occult Sciences in India’ என்ற தனது நூலில் காசியில் தான் சந்தித்த இந்திய யோகியைப் பற்றி விவரிக்கிறார். அந்த யோகி தனது மனோசக்தியால் நீர் நிரம்பியுள்ள மிகவும் கனமான வெங்கலத்தால் ஆன ஜாடியை ஜாகொல்லியட் நகர்த்தச் சொன்ன திசையில் நகர்த்துவாராம்! அதுமட்டுமின்றி தரையிலிருந்து 7 முதல் 8 அங்குலம் வரை அதை மேலே எழும்பச் செய்வாராம்!

டெட் செரியோஸ் : டெட் செரியோஸ் என்பவர் மனத்தில் தோன்றும் சித்திரங்களை அப்படியே போட்டோவில் படைக்கும் வல்லமை பெற்றவர்! இவரை எய்ஸன்புட் என்ற விஞ்ஞானி இடைவிடாது தொடர்ந்து சோதனை செய்தார். அவரது சோதனைச்சாலையிலும் சோதனைகள் தொடர்ந்தன. எதை செரியோஸ் நினைக்கிறாரோ அது போலாரய்ட் காமராவில் கூடப் படமாக விழவே அனைவரும் வியப்படைந்தனர். இவரது திறமையை- ‘Thoughtography’ – எண்ணப்படம் என்று கூறி ஒரு புதிய வார்த்தையையே உருவாக்கினர். டெட் செரியோஸ் பற்றி எய்ஸன்புட் எழுதிய நூலான ‘தி வோர்ல்ட் ஆப் டெட் செரியோஸ்’ (The World of Ted Serios-1967) மிகவும் புகழ்பெற்றது.

***

பாகம் 10

நினா குளாகினா : விஞ்ஞான உலகையே பரபரப்பூட்டியவர் நினா குளாகினா என்ற ரஷியப் பெண்மணி! இவரது கணவர் வி.வி.குளாகின் ஒரு எஞ்சினியர். அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இவரை சோதனை செய்தனர்; பிரமித்தனர்! ஒரு ப்லெக்ஸிகிளாஸ் கியூபுக்குள் (Plexiglass Cube) வைக்கப்பட்ட பொருளை இவர் மனோசக்தியால் நகர்த்திக் காட்டினார். அது காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருளோ அல்லது ஈர்க்கப்படாததோ, ஆர்கானிக்கோ, இனார்கானிக்கோ எந்த வகைப் பொருளானாலும் இவர் பார்த்தாலே போதும். அது நகர ஆரம்பித்து விடும்! 50 கிராம் எடையுள்ள பொருள்கள் எட்டு அங்குல தூரத்திலிருந்து இவரை நோக்கித் தத்தித் தத்தி வருவதைப் பார்த்த விஞ்ஞானிகள் திகைப்படைந்து அதைப் படம் பிடிக்கவும் செய்தனர்! ஒரு தராசில் 30 கிராம் படிக்கல் வைக்கப்பட்டவுடன் இவர் பார்வை பட்டவுடன் எதிரில் இருக்கும் வெற்றுத் தட்டு 40 கிராம் வைத்தது போலக் கீழே இறங்கும்!

அவரது தலை ஓட்டின் பின் எலும்பில் (Occipital region of the skull) எலக்ட்ரோடுகள் –  பொருத்தப்பட்டன. சாதாரணமாக இருப்பதை விட 50 மடங்கு அதிக வலிமை வாய்ந்த மூளை அலைகள் பதிவு செய்யப்பட்டன! இதர இடங்களில் மாட்டப்பட்டிருந்த எலக்ட்ரோட்கள் எந்த வித மாற்றத்தையும் காண்பிக்கவில்லை. கெய்ல் மற்றும் ஹெர்பர்ட் (1974)ஆகிய விஞ்ஞானிகள் இந்த சோதனை முடிவுகளை ஒரு நூலாக எழுதியுள்ளார்.

இப்படிப்பட்ட ஏராளமான சோதனைகள் ஐம்புலன்களுக்கு அப்பால் பல சக்திகள் உள்ளன என்பதை நிரூபித்து விட்டதால் அதீத உளவியல் (ParaPsychology) இன்று அங்கீகரிக்கப்பட்ட ஒரு அறிவியல் கிளையாக ஆகி விட்டது.

இந்திய யோகிகளின் எல்லையற்ற ஆற்றலை இந்த விஞ்ஞானிகள் ஆராய்ந்து அவற்றைக் குறிப்பிட்டு வியக்கின்றனர். அறிவியலின் எல்லையைத் தாண்டிய சித்தர்கள் அவ்வப்பொழுது தங்களின் ஆற்றலின் ஒரு சிறிய துளியைக் காட்டி உலகை பிரமிக்க வைக்கின்றனர். பேரண்டச் சக்தியின் எல்லையற்ற ஆற்றலில் தாங்கள் ஒரு மிகச் சிறிய துளிதான் என்று அவர்கள் பாடியுள்ளது நம்மை பிரமிக்க வைக்கிறது!

ஆகவே ஆன்மீகம் என்பது  ஒரு மிகப்பெரிய மாயையான கடல். அதை உணர வழிகள் அவசியம், விழிகளும் அவசியம்.  அதுவும் குறிப்பாக  ஞான விழிகள் அவசியமானவை அந்த  ஞான விழிகளை  வழிகளை ஆராய்வோம். இங்கே ஆன்மீகத்தில் முற்றுப் புள்ளி என்பதே கிடையாது. அதனால்தான்  அடியும் முடியும் காணமுடியாத ஆன்மீகம்  என்கிறார்கள். பூஜ்ஜியத்தில் ராஜ்ஜியம் அமைத்து அந்தப் பூஜ்ஜியத்தில் இருந்துகொண்டு ப்ரபஞ்சத்தையே  ஆட்டிவைத்துக் கொன்டிருக்கிறான் இறைவன் என்கிறார்கள்.  அணுவைச் சதகூறிட்ட அணுவிலும் உளன் என்கிறார்கள் மெய்ஞ்ஞானிகள்.  அதையேதான்  விஞ்ஞானிகளும் அணுவிலேதான் இருக்கிறது அத்தனை உயிர்ப்பும் , அழிவும் என்கிறார்கள். விஞ்ஞானிகள் ப்ரபஞ்ச வெடிப்பு என்கிறார்கள். மெய்ஞ்ஞானிகள்  ப்ரளயம் பேரழிவு , மீண்டும்  உயிர்ப்பு  என்கிறார்கள்.

ஆகவே ஆன்மீகம் என்பது இதுதான்  என்று அறுதியிட்டு இறுதியாகச் சொல்ல முடியாத  ரகசியம்தான். ஆன்மீகம் என்பதே இறைவனிடம் ஆழ்தல் ஆகவே ஆன்மீகத்தை ஆழ்மீகம் என்றும் சொல்லலாம்.  அதை நாம் முழுவதுமாகக் கண்டுபிடிக்கும் வரை. முழுவதுமாகக் கண்டுபிடிக்கவும் இயலாது  என்றே தோன்றுகிறது. ஆகவே ஆன்மீகம்   என்பதே ஒரு  புரியாத  புதிர். என்று இயற்கை சக்தி அதை விடுவிக்குமோ  அன்றுதான் நம்மால்  உணரமுடியும்;  அதற்கு  நாம் நம் சக்திகளை திரட்டி வைத்துக் கொண்டு அந்த ரகசியத்தை அறிய காத்திருக்கத்தான் வேண்டும். ஆகவே சக்தி திரட்டல் என்பதே ஆன்மீகம்  என்று இப்போதைக்கு வைத்துக் கொள்வோம், அது விஞ்ஞான சக்தியா மெய்ஞ்ஞான சக்தியா  என்பதைக் காலம்தான் உணர்த்த வேண்டும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.