மீனாட்சி பாலகணேஷ்

‘யுக யுகாந்தரங்களாக உலகங்கள் அனைத்திலும் தன்னந் தனியாக உன்னுடைய அன்பு என்னைத் தேடி அலைந்தது என்பது உண்மையா, உண்மை தானா, சொல்வாய்?’- — தாகூர் (The Gardener)

*******************************

ப்ரியா ஓரக்கண்ணால் தன் ‘பாஸை’ப் பார்த்து ரசித்தபடி மனதிற்குள் மகிழ்ந்து கொண்டாள். ஏதோ ஒரு பழைய தமிழ் சினிமாப் பாடலின் இருவரிகளை உற்சாகமாக முனகியபடி, ஒரு மீட்டிங்கிற்குக் குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தாள் ஷீலா.

அவளுடைய உற்சாகம் ப்ரியாவிற்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால் அவ்வப்போது நீண்ட சிந்தனையில் ஆழ்ந்து விடுகிறாளே, நெற்றியில் சுருக்கங்களும், முகம் கறுத்துக் கோணுவதும் பார்க்கச் சகிக்காமல், எழுந்து மேலும் கீழும் உலாவுவதுமாக- அது தான் ரொம்பவே கவலையைத் தந்தது.

டாக்டர் சுவாமிநாதனிடம் இன்னொரு அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கூட்டிக் கொண்டு போகலாம் என்றால், ஜிம், கீதா இவர்களின் வரவால் இப்போது ஷீலா ரொம்ப பிஸியாக இருக்கிறாள்.

அரைகுறையாக ஷீலாவின் வாயாலேயே கேட்டிருந்த கதைகளிலிருந்து ப்ரியா கனவு காணத் தொடங்கியிருந்தாள் தன் தோழிக்காக! ‘சுபம்’ என்று போட்டு இந்தச் சிக்கல்கள் நிறைந்த கதை முடிந்து ஷீலா புது வாழ்வு தொடங்குவதற்காக!

அப்படித்தான் இன்று ரயில்வே நிலையத்திலிருந்து வந்திருந்தாள் ஷீலா. ஒரு வாரமாக மாமல்லபுரம், காஞ்சிபுரம், பாம்புப்பண்ணை, முதலைப் பண்ணை என்று சென்றதில் நாட்கள் ஓடியதே தெரியவில்லை.

ab

கீதாவைத் தன் மகள் என்று சென்ற இடமெல்லாம் அறிமுகம் செய்ததில் பெருமை பொங்கி வழிந்தது. கீதாவிற்கு விதம் விதமான பட்டுப் பாவாடைகளும், இந்திய உடைகளும் வாங்குவதில் ஈடுபட்டுத் தன் பிரச்சினைகளைக் கூடச் சற்றே மறந்திருந்தாள் ஷீலா. ‘குழந்தையை’ – ஆமாம், ஷீலாவின் மனது இளங்குமரியான தன் மகளைப் பற்றி அப்படித்தான் எண்ணியது. ‘நாட்டியம் ஆடச் சொல்லிப் பார்க்க வேணும்; ஒரு சின்ன ப்ரோக்ராம் இந்த பங்களாவிலேயே ஏற்பாடு பண்ணினால் என்ன?’ என யோசித்து, அவளை அழைத்துக் கொண்டு போய் நாட்டிய உடை ஒன்று அளவெடுத்துத் தைக்கக் கொடுத்தாள்.

ஜிம்மையும் கீதாவையும் கேரளாவுக்கு ரயிலேற்றி விட்டாள் அன்று மாலை. தன் தாயையும் வருமாறு வற்புறுத்தி அழைத்தாள் கீதா. ஆனால், இது தான் தனக்குச் சிந்திப்பதற்கேற்ற நல்ல நேரம் என்பதால், ஜிம்மிடம் மட்டும் காரணத்தைக் கூறித் தங்கி விட்டாள் ஷீலா.

பத்து நாட்கள் அவர்கள் கேரளாவைச் சுற்றப் போகிறார்கள். ‘எனக்கும் பத்து நாள் அவகாசம்,’ மனது முனகியது. முதலில் சஞ்சலத்துடன், பிறகு எண்ண இயலாத பயத்துடன். யோசித்துப் பார்த்தபோது தோன்றியது- வேண்டும் என்றே, தான் இந்த முடிவெடுக்கும் படலத்தை ஒத்திப் போட்டுக் கொண்டு வந்திருப்பதாக உணர்ந்தாள்.

‘என்ன முடிவு எடுக்கின்றேனோ இல்லையோ, என் வாழ்வில் சில குறிக்கோள்கள் உள்ளன. அவற்றைச் செயல்படுத்த வேண்டும்.’ “ப்ரியா, லாயர் சுந்தர்ராஜனைக் கூப்பிட்டு ஒரு அப்பாயின்ட்மென்ட் வாங்கிக்கோம்மா!” என்றபடி பென்சிலைக் கடித்த வண்ணம் வெட்டவெளியை வெறித்தபடி எண்ணச் சுழல்களில் மிதந்தாள் ஷீலா.

“நாளைக் காலை பத்து மணிக்கு, முதல் அப்பாயின்ட்மென்ட் உங்களுடையது.” என்றாள் ப்ரியா.

‘ஜிம்முடன் அமெரிக்கா திரும்பிச் சென்று புதுவாழ்வு துவங்குவதானால் இந்தக் கம்பெனியை வாங்க விருப்பம் உள்ளவர்களுக்கு விற்றுவிட வேண்டும். ஆனால் திரும்பிப் போய் நான் என்ன செய்யப்போகிறேன்? இத்தனை நாள் என் தேவை, ஒரு மனைவியாகவோ, தாயாகவோ, ஏன், ஒரு ஹவுஸ்கீப்பராகவோ கூட ஜிம்முக்கு வேண்டியிருக்கவில்லை, என் மீது இரக்கப்பட்டுத் தான் இப்போது அழைக்கிறானா? நான் செய்ய வேண்டியது என்ன?’ நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தாள் இப்போது.

“ப்ரியா, எனக்குக் கொஞ்சம் அரசுடன் கனெக்க்ஷன் வாங்கிக் கொடேன்.”

போனில் உரையாடி முப்பது நொடிகளின் பின்பு, “ஷீலா, அவர் இப்போது ஹாஸ்பிடல் மீட்டிங் ஒன்றில் இருக்கிறாராம். மீட்டிங் முடிய இன்னும் ஒருமணி நேரமாவது ஆகுமாம். மிக முக்கியமான மீட்டிங், ஆகவே எமர்ஜென்சி என்றாலொழியத் தொந்தரவு செய்யக் கூடாது என்றிருக்கிறாராம்,” என்றாள் ப்ரியா.

இப்போது பென்சிலால் மேஜையைத் தட்டிய வண்ணம் யோசித்தாள் ஷீலா.

^^^^^^^^^^^^^^^^^^^^^

ஓடிக் கொண்டிருந்த ரயிலில் எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தனர் தந்தையும் மகளும்.

“டாடி, அம்மா என்ன முடிவெடுப்பாள் என்று உன்னால் ஊகிக்க முடியுமா?” மனம் தாயைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்ததை, வெகுளியாகப் பிறந்த கேள்வி, ஜிம்மிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியது.

“டார்லிங், அவள் என்ன முடிவெடுத்தாலும் நீ அதை ஏற்றுக் கொள்ளும் மனோதிடத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் அவள் உன்னைப் பெற்ற தாய். உன்னை மிகவும் நேசிக்கும் ஒரு ஜீவன் என்பதில் ஒரு மாற்றமும் இராது. புரிகிறதா கண்மணி?” மகளின் தலையை ஆதுரத்துடன் வருடியபடியே ஜிம் கூறினான்.

“டாடி, ஒன்ஸ் மோர் அதே கேள்வியைக் கேட்கிறேன். அம்மா நம்மைப் பிரிந்து ஏன் போனாள்? பலமுறை கேட்டிருக்கிறேன். உனக்குப் பதில் தெரியவில்லை. இப்போது ஏதாவது புரிகிறதா?

“கீதா, வயதுக்கு மீறிய முதிர்ச்சி கண்ணே உனக்கு. நிஜம் தான். டாக்டர் ஆடலரசுடன் பேசியதிலிருந்து பல விஷயங்கள் புரிய வந்தன. உன் தாய் சைலஜா என்கிற ஷீலா, ஒரு அற்புதமான வித்தியாசமான மங்கை. வாழ்வை மிகவும் ஈடுபாட்டுடன் ரசிப்பவள்; ரசித்தவள். அவளுடைய இளமைக் காலத்துக் கனவுகள் பல. உன்னதமான கனவுகள் அவை. குமரிப் பருவத்துக்கே உரிய கனவுகளும் சில சேர்ந்து கொண்டன. ஒன்றன் பின் ஒன்றாக, கனவுகள் நிறைவேறும் வாய்ப்பும் தகுதிகளும் இருந்தும் அவை நிறைவேறாமல் அவளை ஏமாற்றத்தில் ஆழ்த்தித் துயரப் பட வைத்தனவாம். பின்னொரு நாள் விரிவாக இதைப் பற்றி நான் உனக்குக் கூறுகிறேன்.

“நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்து, விரும்பி, மணம் புரிந்து கொண்ட பின்பு தான் இந்தத் துயரமான எண்ணங்களிலிருந்து வாழ்க்கையைத் திரும்ப மீட்டு ரசிக்கத் துவங்கினாள் ஷீலா…

“… திடீரென்று கடந்த கால வாழ்க்கையின் நிழல் எங்கள் காதல் வாழ்வைத் தாக்கியது. அவளுடைய கஸின் என்ற ரூபத்தில். அவன் என்னவெல்லாமோ பேசி அவள் மனதைக் குத்திப் புண்படுத்தி, ஓ கீதா டார்லிங், என்னுடைய தேவதை ஷீலா — அவள் மனநோயாளியானாள்; தன்னம்பிக்கையை இழந்தாள். என் அன்பைக் கூட நம்பவில்லை. பிரிந்து பறக்க எண்ணி என்னை வற்புறுத்தி விவாகரத்து வாங்கிக் கொண்டாள்.

“இந்த வினோதமான மனநோய் வெவ்வெறு உருவங்களில் அப்பப்போது அவளை வாட்டியபடியே இருந்திருக்கிறதாம்…

கீதா குறுக்கிட்டாள், “ஆனால், டாடி, அம்மா ஒரு டாப் கிளாஸ் கார்ப்பரேட் பிஸினஸ் புள்ளி. மனநோய் இருந்தால் எப்படி இதெல்லாம் சாதிக்க முடியும்?”

“டாக்டர் அரசு சொன்னார் – இவர்கள் இரட்டை பர்ஸனாலிடி என்று. வெளியுலகுக்கு படாடோபமாக, பெரிய மனிதர்களாக, மிக நல்லவர்களாக இருப்பார்கள். உள்மனத்தை அரிக்கும் விஷயங்களை அழுந்த மூடி வைத்து விடுவார்கள். இதனாலேயே இவர்களுடைய சுயரூபம் யாருக்கும் தெரிவதில்லையாம்.

“இந்தியப் பண்பாட்டில் ஊறிப்போன உன் அம்மா, தன் விருப்பப்படி எப்படியெல்லமோ வாழ்ந்து கொண்டிருந்தாளே – ஊர் உலகம் எல்லாம் சிரிக்கும்படி. ஒன்றை நினைவு வைத்துக்கொள், மை சைல்ட். உன் தாயின் மீது நீ வைத்திருக்கும் அன்பும், மதிப்பும் இதையெல்லாம் கேட்ட பின்பு மாறியது என்றால் நான் மிகவும் வருத்தப்படுவேன். நீ பெரிய பெண், சிறுமி அல்ல என்ற எண்ணத்தில் நான் இவற்றை உனக்கு விளக்கிக்கூறுகிறேன்.

“ஒரு விஷயம் மட்டும் நன்றாகப்புரிகிறது. தன் இளமைப் பருவத்து நண்பர்களான ஆடலரசின் குடும்பத்தினரைச் சந்தித்தது ஷீலாவுக்கு ஒரு பெரிய ஆசீர்வாதம். அதுவும் ஆடலரசு டாக்டராக இருப்பது இன்னுமே ஒரு பெரிய உதவி. அவளுடைய மனநிலையை கவனித்து நல்ல நண்பராக உதவி வருகிறார். கடந்த சில மாதங்களில் அவள் மனநிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என்கிறார்.

“அவள் தன்னுள் ஒடுங்கிக் கொள்ளும் தருணங்கள் மிகக் குறைந்து விட்டனவாம். மை சைல்ட், நான் உன் தாயை மிகவும் நேசிக்கிறேன். அவளுடையது அழகான, உற்சாகமான, உணர்ச்சி மிகுந்த உள்ளம். பூப்போன்றது. அதை அப்படியே திரும்ப ஏற்றுக்கொள்ள நான் யாசிக்கிறேன். ஆனால் அவளாகத் தன் குழப்பங்களிலிருந்து விடுபட்டு நம்மிடம் திரும்பி வர ஒப்ப வேண்டும். நாம் காத்திருந்து பார்ப்போம்…” ஜன்னலுக்கு வெளியே பார்த்தான். பசேலென்ற நீர் நிறைந்த வயற்பரபில் வெள்ளைவெளேரென்ற ஒற்றைக் கொக்கு தன்னந்தனியாக நின்று தவமிருந்தது. ஏனோ அவனுக்கு அது ஷிவாவை நினைவு படுத்தியது; உள்ளத்தைப் பிசைந்தது.

“டாட்,” கீதா ஜிம்மின் முகத்தைத் தன் விரல்களால் தொட்டாள். ” நீ தைரியமாக இரு. வி லவ் ஹெர். அவளுக்கும் அது புரிகிறது. எல்லாம் நல்ல விதமாக முடியும்,” தந்தையின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு துயரை அழுந்த விழுங்கியது அந்தப் பெண்.

அவள் ஏக்கம் யாருக்குப் புரியும்? நினைவு தெரிந்த நாளிலிருந்து ஜிம் தான் தாய், தந்தை எல்லாம். என்ன தலைபோகும் வேலை ஆனாலும் தன் பெண்ணுடன் டின்னர் சாப்பிட ஆறு மணிக்கு வீட்டில் இருப்பான் ஜிம்.

விட்டுச் சென்ற தாயைப் பற்றி கீதாவின் நண்பர்கள் கேட்கும் வினோதமான கேள்விகளைக் குழப்பத்துடன் அவள் ஜிம்மிடம் வந்து கேட்கும்போது, “கண்ணே, உன் அம்மா மிக நல்லவள். உன்மீது அவளுக்கு மிகவும் அன்பு உண்டு. ஆனால் அவளுக்கென்று சில விருப்பங்கள் உண்டு. அதை மதிப்பதன் மூலம் நாம் அவள் அன்பை கௌரவப்படுத்துகிறோம்,” என்று சமாதானம் கூறுவான்.

ஏதோ ஒரு இந்தியன் கடையில் வாங்கின பொம்மை ஒன்று, அழகாகப் புடவை கட்டி, நீண்ட தலைப்பின்னலும், பொட்டும், வளையலுமாக- ரொம்ப நாட்களுக்கு கீதா என்ற சிறுமிக்கு அந்த ‘மம்மி பொம்மை’ தான் உயிருக்கு உயிரானது. அதனுடன் தான் உறங்குவாள். டைனிங்டேபிளில் அதற்கு ஓரிடம் உண்டு. எங்காவது வெளியூர் சென்றால் கூட, முதலில் வருவது ‘மம்மி பொம்மை’ தான். இப்போது கூட அவளுடைய சூட்கேஸின் ஒரு பத்திரமான மூலையில் அந்த பொம்மை இருந்தது. பொம்மைக்குப் பதில் நிஜமான மம்மியைக் கொண்டு போகும் ஆவலுடன் வந்திருந்தாள் கீதா.

சென்ற ‘ஸம்மர்’ விடுமுறையில் கூடப் படிக்கும் ‘ரிக்’ என்னும் ரிச்சர்ட், கீதாவை ஒரு சிலமுறைகள் தியேட்டர்களுக்கு அழைத்துச் சென்றவன், “கீதா. எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது. நீ என் தோழியாக இருப்பாயா?” என்று கேட்டான்.

அடுத்த சில நாட்களுக்குத் தான் அனுபவித்த நூதன உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள ஆளில்லாமல் பரிதவித்தாள் கீதா. ‘மம்மி’ பொம்மையுடன் உரையாடியது ஜிம்மின் காதில் விழுந்தது. அவன் குறுக்கிட்டு, நீண்ட நேரம் அவளுடன் பேசி, அறிவுரை கூறி ஆதரவு தந்தான்; இருந்தாலும் அது அம்மாவின் அன்பு நிறைந்த பெண் மனதைப் புரிந்துகொண்ட அறிவுரைக்கு ஈடாகுமா? ஆகாதே!

தாங்கள் வாழும் அமெரிக்காவில் இது வெகு சகஜமாயிற்றே. தன் தந்தைக்கு வேறு பெண்நண்பர்கள் கிடையாதா? மறுமணம் ஏன் புரிந்து கொள்ளவில்லை என்று மனதில் உறுத்தியிருக்கிறது.

அமெரிக்கக் குழந்தையாயிற்றே. ஆறாம் வயதில் இருந்தே தந்தையிடம் இதைப் பற்றிக் கேட்டிருக்கிறாள். அப்போதெல்லாம் ஜிம் சிரித்துக்கொண்டே சொல்வான், “உன் அப்பா கொஞ்சம் விசித்திரமானவன், டார்லிங். உன் அம்மா இந்த இடத்தை இன்னும் காலி செய்யவில்லை,” என நெஞ்சைத் தொட்டுக் காண்பிப்பான்.

“ஐ லவ் யூ டாட், ஐ லவ் மம்மி டூ!” என்று குழந்தை ஒரு சேர ஜிம்மையும் மம்மி பொம்மையையும் இறுகக் கட்டிக்கொள்ளும்.

என்றேனும் ஒரு நாள் தாயைச் சந்திப்போம் என்று எதிர் பார்த்திருந்தாள். அது நீண்ட நாட்கள் கழித்தே நிகழ்ந்துள்ளது. அதுவரை அந்த எதிர்பார்ப்பு ஆவலும் அற்புதமும் நிரம்பிய உணர்ச்சியாக இருந்தது. அவளைச் சந்தித்ததும் தான், அந்த அணைப்பில், தாயின் ஸ்பரிசத்தில் மூழ்கியதும் தான், அந்தச் சிறுமி இத்தனை நாள் தான் இழந்திருந்ததின் பரிமாணம் என்னவென்று உணர்ந்தாள். இதைத் திரும்பத் தன்னுடன் கொண்டு செல்லவேண்டும் என்று குழந்தை மனத்தின் உத்வேகம் கூறியது. தாயின் மனநிலையை விளக்கமாக அறிந்த புத்திசாலி மகளின் மனம், ‘இது முடியாமலும் போகலாம்,’ என்ற உண்மையை உணர்ந்து தன் நிலைக்கும், தன் தாயின் நிலைக்கும் சேர்ந்து பரிதவித்தது.

‘காதல்’ என்ற உணர்வை உணர ஆரம்பித்திருக்கும் வாலிபப் பருவமாதலால், ஜிம், ஷீலாவைத் தன் கதையின் கதாநாயகர்களாக்கி, அவர்களின் அன்பை, அன்பால் அவர்கள் படும் அவஸ்தையை எல்லாம் கண்டும், கேட்டும், கதை எப்படி தொடரப் போகிறதோ என்ற தவிப்பிலும் இருந்தாள் அந்த இளம் பெண் கீதா.

(தொடரும்)

மறு பகிர்வு: தாரகை இணைய இதழ்

********************************************************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.