அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்களுடன் இவ்வார மடலில் உங்களுடன் கருத்தாடும் சந்தர்ப்பம் கிட்டியமைக்காக எனது அன்பு நன்றிகள். நேற்றுபோல இன்று இல்லை எனும் வரிகள் கவியரசரின் பாடல் ஒன்றில் ஒலிப்பதுண்டு. அது அரசியல் உலகிற்கு மிகவும் பொருந்தும். சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னால் திடீர் தேர்தல் ஒன்றிற்கு வாய்ப்புண்டா என்று இங்கிலாந்துப் பிரதமர் திரேசா மே அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு “நிச்சயமாகக் கிடையாது. ப்ரெக்ஸிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியத்தை வெளியேற்ற வேண்டும் எனும் ஐக்கிய இராச்சியப் பெரும்பான்மை மக்களின் ஆணைப்படி அதனை நடைமுறைப் படுத்துவது ஒன்றே எனது முன்னால் இப்போது இருக்கும் கடமை” என அறுத்து, உறுத்து அடித்துச் சொன்னார் பிரதமர். அதே பிரதமர் சுமார் எட்டு வாரங்களுக்கு முன்னால் ஜூன் மாதம் எட்டாம் திகதி திடீர்ப் பொதுத்தேர்தல் என்று அறிவித்து விட்டார்.

eng1என்ன இந்த மாற்றம்? நேற்று இல்லாத மாற்றம்? எனும் கேள்வி அனைவர் நெஞ்சங்களிலும் அலைமோதியது. பல ஊகங்கள், பல விளக்கங்கள். அரசியலைக் கலக்கிக் குடித்தவர்கள் என்று கருதப்படும் ஊடகவியலாளர்களுக்கோ மீண்டும் ஒரு தீபாவளி எனும் வகையில் ஒரே குஷி. விளக்கு, விளக்கு என்று அனைத்து வகைகளிலும் விளக்கித் தள்ளி விட்டார்கள் போங்கள். பிரதமரின் திடீர் மாற்றத்திற்கு ஒரு காரணம் இருக்கத்தானே வேண்டும்! அது என்ன? அதற்குப் பின்வரும் சில காரணங்களாக இருக்கலாம்.

அரசப் பெரும்பான்மை பலம்:
2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அரசாங்கம் வெறும் 13 பெரும்பான்மை மட்டுமே கொண்டிருந்தது. அதிலே ஒரு பாரளுமன்ற உறுப்பினர் விலகிக்கொள்ள அது வெறுன் 12 ஆகக் குறைந்து விட்டது. பன்னிரண்டு பெரும்பான்மை உள்ளதுதானே பின் எதற்கு இந்த அவசரம் என்று எண்ணலாம். இந்த ப்ரெக்ஸிட் எனும் பூதம் இருக்கிறதே அது ஒரு பதட்டமான சூழலைக் கொடுத்துள்ளது. அப்படி என்ன பதட்டமான சூழல்? அது வெறும் அரச, எதிர்க்கட்சிகளுக்கிடையிலான போராட்டம் அல்ல, கட்சி பேதங்களைக் கடந்து இந்த ப்ரெக்ஸிட்டுக்கான ஆதரவும் எதிர்ப்பும் அனைத்துக் கட்சிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. உதாரணத்திற்கு பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதை விரும்பாத பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கச் சார்பானவர்களிலும் இருக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான அடிப்படை ஒப்பந்தம் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்கு வருகிறது என்று வையுங்கள் அதற்கு எதிராக வாக்களிக்கும் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து வெறும் 13 அரசப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து விடுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.பிரதமர் அம்போதான்!

பிரதமரின் அதிகாரம்:
அது என்ன பிரதமரின் அதிகாரம்? 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டவர் டேவிட் கமரன் ஆவார். அவர் அளித்த தேர்தல் அரசியல் விஞ்ஞாபனத்தை ஆதரித்து அவருக்கு பிரதமராகும் அதிகாரத்தை மக்கள் வழங்கினார்கள். தானளித்த வாக்கின் அடிப்படையில் 2016ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடரும் அங்கத்துவத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பை நடத்தினார் அன்றைய பிரதமர் டேவிட் கமரன். ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படைத் திட்டங்களில் சில மாற்றங்களுக்கு வழிவகுத்து ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்து அங்கம் வகிப்பதே எமது நாட்டு நலனுக்கு உகந்தது எனும் கருத்தை முன்வைத்தார் டேவிட் கமரன். ஆனால் அனைவரின் எதிர்பார்ப்புகளுக்கும் முரணாக அவரது கருத்துக்கு எதிரான நிலைப்பாட்டையே மக்கள் எடுத்தார்கள். விளைவு ப்ரெக்ஸிட் எனும் முள்மரம். தான் எடுத்த நிலைப்பாட்டுக்கெதிரான நிலைப்பாட்டை மக்கள் விரும்புவதால் அதனை நிறைவேற்றும் தகுதி தனக்கில்லை என்று ஜனநாயகக் கோட்பாடுகளுக்கே ஒரு எடுத்துக்காட்டாகத் தனது பிரதமர் பதவியிலிருந்து மட்டுமல்ல அரசியலில் இருந்தே ஒதுங்கி விட்டார் முன்னாள் பிரதமர் டேவிட் கமரன். ஓட்டுநர் இல்லாமல் வாகனம் இடைத்தெருவில் நிறுத்தப்படும்போது மற்றொரு ஓட்டுநர் அதனை அதன் இறுதித் தரிப்பிடம் வரை கொண்டு செல்ல வருவது போல பிரதமர் நாற்காலியில் வந்து உட்கார்ந்தார் அம்மையார் தெரேசா மே. மக்களின் ஆணையின்றிப் பின் கதவால் வந்து அமர்ந்த இந்தப்பிரதமருக்கு மக்களின் ஆணையை நிறைவேற்றும் அதிகாரம் எப்படி இருக்கும் என்று ஆங்காங்கே சில குரல்கள் வலுவாக ஒலித்துக் கொண்டிருந்தன. தனக்கென ஒரு மக்கள் ஆணையைப் பெறுவது ஒன்றே தனக்குச் சரியான அதிகாரத்தை வழங்கும் என்று தெரிந்து கொண்டார்.

கருத்துக்கணிப்பு முடிவுகள்:
அந்த நேரத்தில்தான் கருத்துக்கணிப்புகள் பிரதமரின் கன்சர்வேடிவ் கட்சி, லேபர் கட்சியை விட 27 வீதப் புள்ளிகள் முன்னணியில் நிற்கின்றது எனத் தொடர்ந்து சில வாரங்கள் அறிவித்தன. லேபர் கட்சிக்கு ஜெர்மி கோர்பன் தலைவராக வந்த நாள்முதல் அக்கட்சிக்குள் அவருக்கெதிரான உட்பூசல்கள் ஓய்ந்தபாடில்லை. இத்தகைய சூழலில் லேபர் கட்சி வெற்றி பெற்று அரசமைப்பது என்பது நடைபெற முடியாத விடயம் எனப் பல அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்தார்கள். பிரதமர் தெரேசா மே அவர்கள் ஒரு கணிக்கப்பட்ட சிக்கலான முடிவொன்றை (calculated risk) எடுத்தார். தனது பாராளுமன்றப் பெரும்பான்மை பலத்தைக் கூட்டுவதற்காகவும், தன்னையே மக்கள் ப்ரெக்ஸிட் விடயத்தில் நம்பியிருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதற்காகவும் தனது வெற்றி உறுதியானது எனும் துணிச்சலில் பாராளுமன்றத்தைக் கலைத்து ஜூன் 8ஆம் திகதி திடீர்த் தேர்தல் ஒன்றை அறிவித்து விட்டார்.

மேற்கூறிய மூன்று முக்கிய காரணிகளுமே பிரதமரின் இந்த மனமாற்றத்துக்குக் காரணம் என்பது பல அரசியல் அவதானிகளின் அனுமானம். சரி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதும் அனைத்துக் கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டன. பிரசார ஆரம்பத்தில் அனைத்து அரசியல் விமர்சகர்களின் கருத்தும் ஒருமித்த வகையில் திரு ஜெர்மி கோர்பன் தலைமையிலான லேபர் கட்சி படுபயங்கரமான தோல்வியைத் தழுவப் போகின்றது என்றே ஒலித்தது. ஜெர்மி கோர்பன் அவர்களைப் பொறுத்தவரை அவருக்கு எதிரானவர்கள் கூட அவரின் நேர்மையையும்,கொள்கையிலிருந்து வழுவாத தன்மையையும் பாரட்டினார்கள் என்பது உண்மை. ஆனால் அதேசமயம் அத்தகைய நேர்மை இன்றைய அரசியல் சூழலில் மக்களிடையே எடுபடாது ஆகையால் அவரும், அவரால் வழிநடத்தப்படும் லேபர் கட்சியும் வெற்றியடைவது என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்றாகவே கருதப்பட்டு வந்தது.

  • NHSஎனும் அனைவராலும் போற்றப்படும் இங்கிலாந்து தேசிய சுகாதாரசேவை உடையுமளவுக்கு தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலை,
  • அரச சமூகசேவை சேவையில் அடிமட்டம் வரை சென்று விட்ட நிலை,
  • மக்களின் வாழ்க்கைத்தரம் குன்றிய ஒரு நிலை,
  • அரச ஊழியர்களுக்கு கடந்த ஏழு வருடங்களாக ஊதிய உயர்வு அளிக்கப்படாத ஒரு நிலை

 என்று பல காரணிகள் அரசுக்கு எதிராக இருக்கும் ஒரு நிலையில் சாதாரணமாக இத்தேர்தலில் எதிர்க்கட்சி கொடிகட்டிப் பறக்க வேண்டும் ஆனால் ஜெர்மி கோர்பன் எனும் காரணி லேபர் கட்சியை கீழ்நோக்கி இழுக்கிறது என்பதாகவே பொதுக்கருத்து இருந்தது.

ஏன் ஜெர்மி கோர்பன் மீது இத்தனை காட்டம்?

  • தனது முப்பது வருடகால அரசியலில் திரு.ஜெர்மி கோர்பன் அவர்கள் எப்போதும் தனது கட்சியில் ஒரு தனி மனிதராகவே அடையாளம் காணப்பட்டார்.
  • மிகவும் தீவிரவாத சோசலிசக் கோட்பாடுகளைத் தனது கொள்கைகளாகக் கொண்டிருந்தார்,
  • அவரது கட்சியான லேபர் கட்சி டோனி பிளேயரின் தலைமையின்கீழ் அரசாட்சி செய்தபோது இறங்கிய ஈராக், லிபியா யுத்தம் அனைத்துக்கும் எதிராக வாக்களித்த ஒரு மனிதர்.
  • அணுவாயுதங்கள் அனைத்தையும் இங்கிலாந்து சுயாதீனமாகக் கைவிடவேண்டும் என்பதைத் தனது தீவிரக் கொள்கையாகக் கொண்டிருந்தவர்.
  • அதைத்தவிர அயர்லாந்து தீவிரவாத அமைப்பான ஜ.ஆர்.ஏ எனும் அமைப்பு இங்கிலாந்தில் பல குண்டுவெடிப்புத் தாக்குதல்களை நிகழ்த்திக் கொண்டிருந்த வேளையில் அவ்வமைப்பின் அரசியல் அங்கமான சின் வெயின் எனும் கட்சியின் தலைவர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தார்.
  • மேற்கத்தியநாடுகளினால் பயங்கரவாத அமைப்பென்று அறிவிக்கப்பட்ட ஹமாஸ் அமைப்பின் தலைவர்களை இங்கிலாந்து பாரளுமன்றத்துக்கு தன்னிடைய அதிதிகளாக அழைத்திருந்தார்.

இது போன்ற காரணங்களினால் ஜெர்மி கோர்பன் அவர்கள் தேசப்பற்று அற்றவர் எனும் கருத்து பெரும்பான்மையான இங்கிலாந்து மக்களிடையே நிலவி வந்தது. ஆனால் இன்றோ லேபர் கட்சியின் தலைவராகிவிட்ட நிலையில் அணுவாயுதங்கள் தொடர்பான தனது கொள்கையைச் சற்று மற்றியுள்ளார்.

அதைத் தவிர பயங்கரவாத அமைப்புகளுடன் உள்ள தொடர்பு பற்றிய குற்றச்சாட்டுக்கு “நான் எப்போதுமே அனைத்து பயங்கரவாதச் செயல்களுக்கும் எதிரானவன், அச்செயல்களில் ஈடுபட்டோருடன் தான் தொடர்பு கொள்ளவில்லை. அச்செயல் புரிவோரைக் கட்டுபடுத்தக்கூடிய அரசியல் அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு அச்செயல்களுக்கு அரசியல் தீர்வு ஏற்படுத்த முயன்றேன்” என்று விளக்கமளித்துள்ளார்.

இன்றைய அரசியல் களத்தின் நிலை: 
பிரதமர் திரேஸா மே அவர்களையே அச்சம் கொள்ளும் அளவுக்கு மாற்றமடைந்திருக்கிறது. எப்படி என்கிறீர்களா? 22வீதம் முன்னணியில் இருந்த கன்சர்வேடிவ் கட்சியின் eng2ஆதரவு 3 வீதமளவுக்கு குறைந்து விட்டிருக்கிறது. காரணம் என்ன? ஜெர்மி கோர்பன் அவர்களுக்கு இழப்பதற்கு ஒன்றுமேயில்லை ஏனெனில் அவர் பிரதமராவது நடைபெறாத விடயம் என்று பெரும்பான்மை முடிவாக இருந்தது. ஆனால் மக்களிடையே புகுந்து அவர் மக்களது அன்றாடப் பிரச்சனைகளுக்குத் தீர்வளிக்கும் வகையில் தமது கொள்கைப்பிரகடனங்களை அழுத்தமாகக் கூறிவருவது அவரின் மீது மக்களுக்கிருந்த கருத்தை அவருக்குச் சாதகமாக திருப்பிக் கொண்டிருக்கிறது. ஊடகங்களின் தொடர்ச்சியான ஜெர்மி கோர்பன் மீதான தாக்குதல்கள் அவர் மீது ஓர் அனுதாப அலையைக் கிளப்பி விட்டிருக்கிறது என்றே கூற வேண்டும். நேற்று அதாவது 31.05.2017 அன்று இங்கிலாந்து தொலைக்காட்ச்சி பீ.பீ.சி நடாத்திய தேர்தல் விவாதத்தில் அனைத்துத் தலைவர்கள் கலந்துகொண்ட போதிலும் பிரதமர் தனக்குப் பதிலாக தனது உள்துறை அமைச்சரை அனுப்பியது பிரதமர் ஜெர்மி கோர்பனுடன் நேருக்கு நேராக மோதுவதற்கு அச்சப்படுவதான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமன்றி படுத்த படுக்கையில் விழும் வயதானவர்களுக்கு அரச உதவி தேவைப்படும் பட்சத்தில் அதற்கான செலவை அவர்களின் மரணத்தின் பின்னர் அவர்களைது உடமைகளை விற்பதன் மூலம் அரசு எடுத்துக் கொள்ளும் எனும் கொள்கையிலிருந்த விரிசல்களை ஜெர்மி கோர்பன் சுட்டிக்காட்ட அதன் விளைவுகள் கொடுத்த தாக்கத்தைச் சமாளிக்க பிரதமர் தனது கொள்கையை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டி வந்தது ஜெர்மி கோர்பனுக்கு கிடைத்த வெற்றி என்றே கருதுகிறார்கள்.

வெல்லவே முடியாத நிலையிலிருந்த ஜெர்மி கோர்பனின் வெற்றியைத் தடுக்க வேண்டும் என்று கன்சர்வேடிவ் கட்சி செயல்படும் அளவுக்கு ஜெர்மி கோர்பன் தனது செல்வாக்கை உயர்த்தியுள்ளார். இது அவரது கொள்கையின்பால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையா? இல்லையானல் பிரதமர் மீதும் அவர் கட்சியின் மீதும் கொண்ட சந்தேகத்தினால் ஜெர்மி கோர்பனுக்கு ஏற்பட்ட அனுகூலமா? எனும் விவாதம் பல வட்டங்களில் நடந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரேயொரு வாரமே உள்ள நிலையில் தமது கட்சிக்கான பிரசார நடவடிக்கைகளைத் தனக்கு நம்பிக்கை உள்ள ஒருவரிடம் முழுதாகப் பிரதமர் ஒப்படைத்துள்ளார்.

ஜெர்மி கோர்பன் வெற்றி பெற்று அரசமைப்பது என்பது சந்தேகமே! இருப்பினும் தெரேஸா மே அவர்கள் எதிர்பார்த்த அளவில் அவரின் கட்சி அமோக வெற்றியடையுமா? என்பதும் சந்தேகமே. ப்ரெக்ஸிட் பற்றிய சர்வஜன வாக்கெடுப்பின் முடிவும், டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் வெற்றியும் அனைவருக்கும் கொடுத்த அனுபவம் எதனையுமே தீர்க்கமான முடிவாகக் கூறிவிட முடியாது என்பதுவே.

எப்படிப் பார்த்தாலும் இந்தத்தேர்தல் வித்தியாசமானதே! எனது அடுத்தடுத்த மடல்கள் வரை பொறுத்திருப்போமே!

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *