அம்மி மேல் நின்பதம் எந்தை தூக்கிவைக்க…..

மீனாட்சி பாலகணேஷ்

பார்வதி பரமேசுவரர்களின் தெய்வத்திருமணம். வைதிக முறையில் நிகழ்கின்றது. யாரெல்லாம் இத்திருமணத்தைக் காணத் திரண்டெழுந்துள்ளனராம்? மறைகள் அனைத்தையும் உணர்ந்தவனான பிரமதேவன்- அவன் முண்டகம் எனப்படும் தாமரை மலராகிய ஆசனத்தில் முளைத்தெழுந்து அதிலேயே அமர்ந்திருப்பவன். முகுந்தன் எனப்படும் திருமால். குலிசம் எனும் வச்சிராயுதத்தைக் கையில் ஏந்திய தேவர்கள் தலைவனான இந்திரன். இவர்களைத்தவிர இன்னும் முப்பத்து முக்கோடி தேவர்களுடன் எண்ணற்ற புலவோரும் சித்தர்களும் சூழ்ந்திருந்து, “இத்தெய்வத் திருமணத்தைக் காண நமக்கு இதுவென்ன பாக்கியம்?” என உள்ளம் நெகிழ்ந்து உருகுகின்றனராம்.

சித்திரைத் திங்களில் பல திருக்கோவில்களிலும் ஐயன், அம்மையின் திருமண விழா நடைபெறும். அதுதான் இங்கு கூறப்படுகிறது.

பக்தியினால் உருகும் அன்பர்கள் உள்ளம் பச்சாதாபத்தினாலும் உருகுகிறதாம். எதனால் என்று பார்ப்போமா?

நமது வைதிகமுறைத் திருமணத்தில் ‘அம்மி மிதித்தல்,’ என ஒரு சடங்கு உண்டு. அதானது, மணப்பெண்ணின் இடது பாதத்தின் பெருவிரலை மணமகன் தனது வலக்கரத்தால் பிடித்தெடுத்து, ஒரு அம்மிக்கல்லின் மீதேற்றி வைப்பதாகும். இதன் பொருள் என்னவென்றால், “இந்தக் கல்லினைப்போல் கடினசித்தம் கொண்டவளாகி, மன உறுதியோடும், வலிமையோடும் வாழ்வில் என்னுடன் இணைந்து இன்பதுன்பங்களில் பங்குகொள்வாயாக,” எனக் கூறுவதாகும். இதற்கான மந்திரங்களை மணமகன் அப்போது உச்சரிப்பது வழக்கம்.

சிவனுக்கும் பார்வதிக்கும் நடைபெற்ற திருமணத்திலும் இச்சடங்கினை மணமகனாகிய சிவபிரான் செய்தார். அன்பர்களால் புகழ்ந்து துதிக்கப்பட்ட (துதி மணக்கின்ற) அம்பிகையின் பாதங்களிலொன்றை எந்தையாகிய பிரான் எடுத்து அம்மிமேல் வைத்ததால், கடினமான அம்மிக்கல்லில் பட்டுச் சிவந்துபோன அப்பாதத்தைக்கண்டு அடியார்கள் மனம்வருந்தி உருகுகிறார்களாம். பாதத்தைக் கண்டு உருகியது ஒருபுறம்; இவ்வாறு ஐயன் அம்மையின் மலர்ப்பாதத்தைக் கல்லின்மீது வைக்கும் தொழிலைக் கண்டும் உள்ளம் உருகுகிறார்களாம்.

ஏனெனில் ஒரு பெரியமனிதரை எந்த ஒரு சிறு செயலையும் செய்ய அவருடைய அடியார்களும், அன்பர்களும் விடமாட்டார்கள். அவர் செய்துவிட்டால் பொறுக்கவும் மாட்டார்கள்! சிவபிரான் என்ன சாமானிய மனிதரா?அந்தம் ஆதி அற்ற உயர்வானவனல்லவா? ஆனால் இந்தச் செயலை, சடங்கினை, அவனன்றி அவனுடைய திருமணத்தில் யாராலும் செய்ய இயலாதே!

அதுமட்டுமல்ல; இப்போது அன்னையே அத்தன் செய்த அத்தொழிலுக்காக உருகுகிறாளாம்.

தனது பாதத்தினை அவருடைய திருக்கரத்தாற் தூக்கி அம்மிமேல் இட்ட செய்கை மென்மையான அவளுடைய இதயத்தை உருக்கிவிட்டது. ஏன்? அவளை மணம் புரிந்து கொள்பவன் அகில சராசரங்களுக்கும் நாயகன். அகிலநாயகியான அவளுமே செயற்கரிய தவங்களைச் செய்தே அவனை அடைந்திருக்கிறாள். மற்றும் அவன் காலால் இட்ட பணியைத் தலையால் செய்ய தேவரும் மற்றோரும் காத்திருக்கிறார்கள். அவனோ தனது தகுதிக்கேற்றவண்ணம் பெருமிதம் கொண்டு நில்லாது, ‘இது நம் திருமணம்; இது ஒரு புனிதமான முதன்மையான சடங்கு,’ என்று உள்ளத்தில் கொண்டு, அம்மையின் பூம்பாதத்தைத் தன் திருக்கரத்தால் பற்றி, அதனை எடுத்து மென்மையாக அம்மிமேல் வைக்கிறான்.

அந்த மெல்லிய பூப்போன்ற பாதத்தை அம்மிமேல் தூக்கிவைக்க அவனுடைய மனமும் ஒப்பியிருக்காதுதான். ஆயினும் ஐயன் செய்வதனை உலகமே பார்த்தபடி உள்ளது. உலகத்தோர் நன்னெறிகளைக் கடைப்பிடிக்க ஐயன் தானே முன்னுதாரணமாகி நிற்கிறான். ‘ரோல் மாடல்’ எனக் கூறுவதுண்டல்லவா? அதுதான் இதுவும்.

திருமண வைபவத்தைக்கண்டு களித்துருகிய அடியார்கள் ‘அன்னையின் அடி நோகுமே’ என மனமுருக, ‘உலகிற்கே முதல்வன் தன்னடியைப் பற்றி தூக்கினாரே’ என அன்னை உருக, படிக்கும் நம்முள்ளத்தையும் உருக்கும் அழகிய பாடலிது.

இது திருவுத்தரகோசமங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் எனும் நூலில் காணப்படும் ஊசற்பருவப் பாடல். இயற்றியவர் பெயர் அறியக் கிடைக்கவில்லை. தமிழ்நயம், சொல்நயம், சந்தநயம் எனப் பல அழகுகளும் கொண்டு பொலியும் நூலாகும் இது. பாடலடிகளைக் காண்போமே!

ab
…………………………………………………………..

பாக்கிய நமக்கிதென்னப்
பார்த்துருக வுஞ்சித்தி ரைத்திங்க ளென்னப்
பதித்திடு மணச்சடங்கில்
துதிமணக் கின்றநின் பதமம்மி மேலெந்தை
தூக்கிவைத் துச்சிவந்த
தொழில்கண்டு பின்னுருக நீயுமவர் கையினால்
தூக்கிய தொழிற்குருகவும்
…………………………………………………………

புதுமணக் கோலமது கொண்டசுந் தரவல்லி
பொன்னூச லாடியருளே!

(திருவுத்தரகோசமங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ்- பொன்னூசற்பருவம்)
சென்ற கட்டுரையில் கண்டதுபோல் ஆதிசங்கரர் எழுதியருளிய அன்னைதெய்வத்தின் அழகுவடிவைப் போற்றும் சௌந்தரியலஹரி எனும் வடமொழிநூலில் உள்ள ஒரு பாடலின் கருத்தினையே இங்கு இப்பிள்ளைத்தமிழ் நூலாசிரியரும் அழகுற எடுத்தாண்டுள்ளார். சௌந்தர்யலஹரியினை வீரை கவிராஜ பண்டிதர் என்பவர் சுவைகுன்றாது தமிழில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளார். அப்பாடலைக் காணலாமா?

“அன்னையே! உன் பாதங்கள் பஞ்சின்மேல் வைத்தாலும் வாடுகின்ற மென்மையான தன்மையுடையவை; சிவந்த தாமரை மலர் போன்றவை; இவ்வாறு அவற்றைப் போற்றாது சிலர் (மாய, மந்திரங்களைக் கற்றவர்கள்) இதனை ஆமையின் மேல் ஓட்டிற்கு உவமை கூறி வீணாக வியப்பார்களாம். கருநிற மிடற்றரானவரும் (நீலகண்டன்) உனது கையை மணநாளில் பற்றுபவருமான (வரர்= வரிப்பவர், வரைந்து கொள்பவர்) பெருமான் அந்த மென்மையான உனது பாதத்தினை அம்மிக்கல் மீதும் ஏற்றி வைப்பாராம். இந்த நிகழ்ச்சியைக் கண்ணுற்றோருக்கு வஞ்சகக் கொடியநெஞ்சை உடையவர் அவர் எனவே எண்ணத் தோன்றும். ஆயினும் சிறிது எண்ணிப் பார்த்தால் அவர் அவ்வாறானவர் அல்ல, உன்பால் மெத்த அன்பு கொண்ட ஆண்டகையான் என்பது தெற்றென விளங்கும்,” என்கிறார் புலவனார்.

பஞ்சு அழுத்தினும் வாடு நின்பத
பங்கயத்து இணை ஒப்பெனா
விஞ்சை கற்றவர் வன்புறக் கம
டத்தை வீணில் வியப்பராம்
அஞ்சனப் புயல் அங்கை நின்வரர்
அம்மி மீதிலும் வைப்பராம்
வஞ்சகக் கொடு நெஞ்சர் அத்தனை
வல்லர் அல்லர் நினைக்கினே.
(சௌந்தர்யலஹரி- பாடல் 87- வீரை கவிராஜ பண்டிதர்)

ஆதிசங்கரரின் சுலோகம், “எவ்வாறுதான் அந்த ஈசனுக்கு உனது மென்மையான பாதங்களை, கடினமான அம்மிக்கல்லின்மீது ஏற்றிவைக்க மனம் வந்ததோ?” எனக் கேட்பதாக அமைந்துள்ளது நோக்கத்தக்கது.

ஒவ்வொரு புலவரும் தமது எண்ணத்திற்கியைய இக்கருத்தைச் சிறிது விரித்துப் பாடி மகிழ்ந்துள்ளனர். ஆகவே அனைத்துப் பாடல்களும் சொற்சுவையிலும் பொருட்சுவையிலும் சிறந்து விளங்குகின்றன அன்றோ?

மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}

************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *