மீனாட்சி பாலகணேஷ்

நீயே எனக்கு எல்லாமாக இருக்கிறாய் என நான் கூறிக் கொள்ளும்
வகையில் ‘என்’னுடைய ஒரு சிறு பகுதி மட்டும் என்னிடம்
எஞ்சியிருக்கட்டும்’ – தாகூர் (கீதாஞ்சலி).
********************************

unnamed (1)

ஆடலரசு பணிபுரியும் மருத்துவமனை. அவனுடைய கன்ஸல்டிங் ரூமில் ஜிம், கீதா இருவரும் அமர்ந்து கொண்டு கவலை தோய்ந்த முகத்துடன் ஆடலரசு கூறுவதைக் கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.

” உன் சிந்தனையின் ஓட்டத்தில் உன் அன்பை, கருணையைத் தன்னலமற்றதாக்கிப் பார் என்று கூறினேன், அவள் முகம் எப்படி ஒளிர்ந்தது தெரியுமா அதைக் கேட்டு…

“…எனக்குக் கூட கடைசி நிமிஷத்தில் தான் அவள் திருவண்ணாமலைக்குக் கிளம்பிய விஷயம் தெரியும். டிரைவர் மாத்யூவைக் கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டுத் தானே டிரைவ் செய்து கொண்டு போனாளாம்.

“திரும்பி வந்தவள் நேராக என்னுடைய இந்த அறைக்குள் வந்தாள். அப்பப்பா, முகத்தில் என்ன தீவிரம். அவள் சொன்னதை எல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தாலும் உடல் சிலிர்க்கிறதே ஜிம்!” ஆடலரசு இங்கு சிறிது மௌனமானான்; மனக்கண்ணில் அந்த உரையாடலை ‘ரீ ப்ளே” செய்து பார்ப்பது போல….

***

மனதில் தெளிவு பிறந்ததும் சைலஜாவுக்குத் திருவண்ணாமலையில் இருப்புக் கொள்ளவில்லை. பென்ஸைப் புயல்வேகத்தில் ஓட்டிக் கொண்டு சென்னை வந்து சேர்ந்துவிட்டாள். அவளுடைய திறமை மிகுந்த சாரத்தியத்தை மாத்யூ பார்த்திருந்தால் அசந்து போயிருப்பார். வந்தவள், நேராக ஆடலரசின் ஆஸ்பத்திரிக்குப் போனாள்.

“டாக்டர் இருக்கிறாரா? அர்ஜென்டாகப் பார்க்கணும்.” புருவத்தை வியப்பில் உயர்த்திய செக்ரெடரி, இன்டர்காமில் விசாரித்து அவளை உள்ளே அனுப்பினாள்.

அன்றைய கேஸ்களின் விவரங்களைக் குறிப்பெழுதிக் கொண்டிருந்த அரசு, பேனாவை வைத்துவிட்டு நிமிர்ந்தான். “எஸ்…” என்ற தொனியில் புருவம் கேள்வியைத் தொக்கியது.

“அரசு, உங்களிடம் ஒரு யாசகத்துக்கு வந்திருக்கிறேன். அன்று உங்களிடம் பேச வந்தபோது அந்த மாற்றுச் சிறுநீரகம் தேவைப்படும் ஒரு எஞ்சினீயரிங் கல்லூரி மாணவனைப் பற்றிச் சொன்னீர்களல்லவா? அவன் பெற்றோர் வசதி இல்லாதவர்கள். தந்தை, ரிடையரான ஸ்கூல் வாத்தியார். மூன்று பெண்களுக்குப் பின் பிறந்த மிகப் புத்திசாலியான பையன். திடீரென்று இப்படி கிட்னி பழுதாகி டயாலிஸிஸ் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் கூறினீர்களே…

“என் கிட்னி ஒன்று அவனுக்குப் பொருந்துமா என்று பாருங்களேன். ஐ வான்ட் டு ஹெல்ப் ஹிம். ப்ளீஸ், நான் அவனுக்கு உதவ நீங்கள் எனக்கு உதவுங்களேன்….”

ஆடலரசு திடுக்கிட்டு எழுந்து ஷீலாவின் தோள்களைப் பற்றி அமர வைத்து, குளிர்ந்த நீர் குடிக்கக்கொடுத்து, முதலில் அவளை ஆசுவாசப் படுத்தினான்.

“சைலஜா, நீ யோசித்துத்தான் பேசுகிறாயா? இது என்ன திடீர் என்று இப்படி ஒரு யோசனை? என்ன ஆயிற்றம்மா?”

இப்போது அவள் குரல் சமனப்பட்டிருந்தது. “அரசு, என்னை நானே தேடிக் கண்டுகொண்ட விடை இதுதான். ஜிம்முடன் நான் ஒரு புது வாழ்வு தொடங்கவேண்டும் என்றால் நான் திரும்ப உயிர்த்து வர வேண்டும். இதற்கு ஒரே வழி தன்னலமற்ற சிந்தனை என்றீர்கள். முன்பின் நான் பார்க்காத ஒரு உயிர் இந்த தானத்தின் மூலம் நன்றாக உயிர் வாழ முடியும் எனில், என் புதுவாழ்வை நான் தொடங்க அதை தெய்வத்தின் உத்தரவாக எடுத்துக்கொள்வேன். ப்ளீஸ், என் சிறுநீரகம் ஒன்று ‘மாட்ச்’ ஆகுமா என்று பாருங்கள்; நான் முடிவை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.”

“உணர்ச்சி மிகுதியால் அவள் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. முதலில் ஆரோக்கியமான உடல்நிலையை அறிய உண்டான பரிசோதனைகளை எல்லாம் செய்து விட்டு ‘டிஷ்யூ மாட்ச்’ செய்ய டெஸ்ட் எடுத்தோம்.

“வாட் வாஸ் த ரிஸல்ட் டாக்டர்?” கீதா குறுக்கிட்டாள். ஜிம் கூறினான், “டார்லிங், இப்போது நமக்குத் தான் தெரியுமே, அது மாட்ச் ஆனதும், ஸர்ஜரி நடந்து முடிந்ததும் எல்லாம். உன் அம்மா இப்போது ஆஸ்பத்திரியில் தான் இருக்கிறாள்.” சொல்லியபடி தன் மகளை இறுக அணைத்துக் கொண்டு, ஆண்டவனுக்கு நன்றி கூறுவது போல அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.

“ஜிம், ரிஸல்ட் வரக் காத்திருந்த நேரம் அவளுக்கு நரகமாக இருந்தது. எல்லாம் மாட்ச் ஆகிறது என்றதும், முதல் தடவையாக என்னிடம், ‘ஜிம் இப்போது என்னருகில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்,’ என்று குறைப்பட்டுக் கொண்டாள். நீங்களும் இதோ வந்து விட்டீர்கள்…”

“டக், டக்.” கதவு தட்டப் பட்டது. செக்ரெடரியின் தலை உள்ளே நீண்டது. “டாக்டர், ஆபரேஷன் தியேட்டரில் இருந்து கூப்பிடுகிறார்கள், மேடம் ஷீலாவைப் பற்றி…”

பாய்ந்து போனை எடுத்துப் பேசிய ஆடலரசு, “சைலா இஸ் ஆல்ரைட். என்னைப் பார்க்கணுமாம். நீங்களும் வாங்க.”

‘ட்ரிப்’ டியூப், ஆபரேஷன் ரூம் உடை, வெளிறிய முகம், இவற்றின் நடுவே கண்கள் மட்டும் அனைத்தையும் மீறித் தெளிவாகச் சுடர் விட்டன. ஜிம்மைக் கண்டதும், அவன் கரங்களைப் பற்றிக்கொண்டு, “இனி என் பயணம் உன்னோடுதான் தொடரப் போகிறது ஜிம்.” என்று கூறியவள், கண்களை மூடியபடி நிம்மதியான உறக்கத்திலாழ்ந்தாள்.

***

ஷீலாவின் பங்களா விழாக்கோலம் பூண்டிருந்தது. புரியவில்லையா? ஒரு திருமண ரிசப்ஷன் நடந்து கொண்டிருந்தது. யாருடைய திருமணமா? கீதாவுக்குத் திருமணம் நிகழத்தான் இன்னும் சில ஆண்டுகள் செல்ல வேண்டுமே!

ஜேம்ஸ், சைலஜாவினுடைய மறுமணம்தான் இங்கே கொண்டாடப்படுகிறது. மிக எளிய முறையில் திருமணம் பதிவு செய்யப்பட்டாலும், அமுதா, ஆடலரசு, செக்ரெடரி ப்ரியா, இன்னும் பல நன்மைவிரும்பிகளின் விருப்பப்படி, பெரிதாக ரிசப்ஷனை நடத்திக் கொண்டிருந்தார்கள். ஆடலரசு தான் எல்லாவற்றிற்கும் பொறுப்பேற்றுக் கொண்டிருந்தான்.

சைலஜாவின் சிறுநீரகத்தைத் தானம் பெற்றுக் கொண்ட மாணவன் நல்ல முறையில் தேறி வந்தான்.

“என் பையனுக்கு உயிரு கொடுத்த மகராசி நீங்க நல்லா இருக்கணும்.” எனப் பையனின் தாயார் சைலாவின் கரங்களைப் பற்றிக் கொண்டு கண்ணீருகுத்து உணர்ச்சி வசப்பட்டாள். இதுவே தன் புனர்வாழ்வுக்கான வாழ்த்தாகப்பட்டது சைலாவுக்கு.

உடல் நலம் தேறியதும் முதலில் ஜிம்முடன் தன் மறுமணத்தை ரிஜிஸ்தர் செய்துகொண்டாள். ஆடலரசின் ஏற்பாட்டின்படி கீதாஞ்சலியின் நடன நிகழ்ச்சி கலைவிருந்தாகப் படைக்கப் பட்டுக் கொண்டிருந்தது. தமிழ் நாட்டில் தங்கியிருக்கும் நாட்களை வீணாக்காமல், ஒரு பிரபல ஆசிரியரிடம் இன்னும் கொஞ்சம் கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்திருந்தாள் சைலஜா. மெருகேறிய கலை மேடையில் பிரகாசித்தது. சைலாவின் தாயுள்ளம் பெருமையில் பூரித்து மகிழ்ந்தது. தன்னையே மேடையில் கண்டு தன் சிறுமிப்பருவத்து நினைவுகளில் லயித்தாள்.

‘நடனமாடினார்’ என்ற பாடலுக்கு கீதா ஆடியபோது, ஷீலா வேண்டுமென்றே ஆடலரசை வம்புக்கிழுத்து, சிறு வயதில் தன் நடனத்தை அவன் ஒளிந்திருந்து பார்த்ததையும். அதிகமாகச் சாய்ந்ததால் கதவு எதிர்பாராமல் திறந்து கொண்டதையும், ஜிம்மிற்குக் கூறி ஆடலரசை கூச்சப்பட வைத்தாள்.

ஸ்பெஷலாக, ‘வருகலாமோ’ பாடலுக்கு கீதாவை நடனம் கற்றுக் கொள்ள வைத்திருந்தாள். ஊனும் உயிரும் உருக நின்றபடி தன் பெண்ணின் நடனத்திறமையை ரசித்தாள். தனிமையாக இருக்கும்போதில் இதன் பொருளை ஜிம்முக்கு விளக்கிச்சொல்ல வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

‘பவழ மல்லிகை’ காம்பினேஷன் பட்டுப் புடைவையில் உயிர் ஓவியமாய் மின்னிய சைலஜாவைப் பார்த்து ரசிக்க ஜிம்மிற்கு இரு கண்கள் போதவில்லை. பட்டு வேட்டி சட்டையில் நெற்றியில் சந்தனக் கீற்றுடன் அவனும் இந்தியக்களை வீச நின்றான்.

நடனம் முடிந்து டின்னர் தொடங்கியது. ராபர்ட்ஸ் குடும்பம் அமர்ந்திருந்த டேபிளைச் சுற்றி ஒரே கும்மாளம்.

“சைலா! குழந்தை வாயில லட்டுவைப் போடம்மா. உங்க வாழ்க்கை இனிப்பா ஆரம்பிக்கட்டும்!” அமுதா.

“ஷீலா, இந்த பனானா சிப்ஸ் நீ பண்ணித்தருவது போல அவ்வளவு டேஸ்டியாக இல்லை.” ஜிம்.

“மம், இந்த ஸ்வீட் பாரிட்ஜை…” என கீதா ஆரம்பித்ததும், “பாயசம் என்று சொல் கீதா.” என அரசு திருத்த, “எஸ், பாயசத்தை நீயும் டாடியும் ஒரே கப்பிலிருந்து ஒரே சமயம் சாப்பிட வேண்டும். முடியுமா?” என வம்புக்கிழுத்தாள்.

இன்னும் சம்பிரதாயமான சீண்டல்களுடன் விருந்து நடைபெற்றது.

மெல்ல ஒவ்வொருவராக மனமேயின்றி விடைபெற்றுச் செல்ல ஆரம்பித்தனர்.

இந்த தம்பதிகளை வாழ்த்தி விடைபெற, சிறுநீரகம் பெற்றுக் கொண்ட மாணவனின் தந்தை, ரிடையர்ட் பள்ளி ஆசிரியர் வந்திருந்தார். ஒரு கவிதைத்தொகுதியை தன் பரிசாக அவர் மகன் அனுப்பியிருந்தான். முதல் பக்கத்தில், ‘தன்னுடலின் ஒரு பகுதியைத் தந்து என்னுயிர் காத்த இனிய சகோதரி, இன்று நான் புதிய உயிராகி உன்னை வாழ்த்தி வணங்குகிறேன், ரவி.” என்று கையொப்பமிட்டிருந்தான்.

“இது எனக்குமே புனர்ஜென்மம், ஐயா.” என்றாள் ஷீலா அப்பெரியவரிடம். கையை உயர்த்தி ஜிம்மையும் ஷீலாவையும் ஆசிர்வதித்தார் அவர். ஷீலா கூறியதன் பொருள் அருகிலிருந்த ஆடலரசுக்கும் அமுதாவுக்கும் மட்டுமே ‘தெள்’ளென விளங்கிற்று.

அமுதா, ஆடலரசுக்கு வீடுதிரும்ப மனமே இல்லை. ஜிம், ஷீலாவுக்கும் அவர்களுக்கு விடை தர விருப்பமே இல்லை!

“இன்றிரவு இங்கேயே தங்கி விடுங்களேன். நாம் பேசவும் பிளான் செய்யவும் நிறைய விஷயங்கள் உள்ளனவே.” என்றான் ஜிம்.

“புதுமணத் தம்பதிகளுக்குத் தொந்தரவாக நாங்கள் எதற்கு? கீதாவையும் கூட்டிக்கொண்டு எங்கள் வீடுதிரும்பலாம் என எண்ணினோம்.” அமுதா.

“ஐயையோ, இல்லை, இல்லை. உங்கள் உதவியால் தான் இந்தப் புது வாழ்வு சாத்தியமானது. ஆடலரசு, உங்கள் தேவதையின் கட்டளை இது. இருங்களேன், இங்கு.” இறைஞ்சினாள் ஷீலா.

மிகுந்த தயக்கத்தின் பின்னர் அமுதாவும் ஆடலரசும் இதற்கு ஒப்புக் கொண்டனர்.

ரிஸப்ஷனுக்காகத் தோட்டத்தில் போடப்பட்டிருந்த மின்விளக்குகள் சில இன்னும் ஒளிவீசின. அந்த வெளிச்சத்தில் தோட்டத்தைச் சுற்றி நடந்தபடி அந்த அன்புக் குடும்பம் பலப்பல விஷயங்களைப் பற்றிப் பேசி மகிழ்ந்தது.

பவழமல்லி மலர்கள் விரிய ஆரம்பித்து விட்டன. ஜிம் அதிசிரத்தையுடன் ஐந்தாறு மலர்களைப் பறித்து எடுத்து வந்து அதன் இயல்புகளைத் தன் மகள் கீதாவுக்கு விளக்க முற்பட்டான்.

“எளிய இனிய மலர். நெருங்கி முகர்ந்து பார்த்தால் தான் இதன் சுகந்தம் தெரியும். மண்ணில் விழுந்தாலும் கூட எடுத்து பூஜையின் போது இறைவன் அடியில் இடுவார்கள்.” என சொல்லிக் கொண்டே, ‘என் சைலாவை மாதிரி அழகான இனிய மலர்..’ என மனதில் எண்ணிக் கொண்டான்.

கீதா சடாரெனத் திரும்பித் தன் அம்மாவை, சைலஜாவை, இரு கைகளாலும் அணைத்து இறுக்கிக்கொண்டாள்.

பலமாக வீசிய காற்றில் ‘பொல’, ‘பொல’வெனப் பவழமல்லி மலர்கள் உதிர்ந்து விழுந்து அவர்களை ஆசிர்வதித்தன.

(நிறைந்தது)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *