ஸ்ரீராம தர்ம சரிதம்

களிப்பில் கவனம் கரையா திருக்க
அளிப்பா(ய்) அகத்தி(ல்) அணுவின் துளியாய்
அமுதனாம் ராம(ன்) அருளின் ஒளியை !
குமுதமாய்க் கும்பிடுவேன் கொண்டு. (2)

கொண்ட அறிவோ குறைவு, மனத்திலே
கொண்ட அளவோ குணராமன் கொண்ட
தருமத்தின் உச்ச தரத்தி னுயரம் !
குருசித்த மென்றிதைக் கொள். (3)

கொள்வதும் தள்வதும் கூடியோர் ஞானத்தின்
உள்ளிருக்கும் ஆத்ம உபதேசம் – பிள்ளையிவன்
அள்ளித் தருகின்ற அன்புக் கவிச்சுவையை
வள்ளியின் மைத்துனனே வாழ்த்து. (4)

வாழும் தருமமாம் மாமனித ராமனைச்
சூழும் பகையெல்லாம் சோகத்தில் வீழும்
வரலாற்றை இச்சிறுவன், வான்மீகி மெச்சத்
தரவேண்டும் இந்தக் கணம். (5)
(அறுசீர் விருத்தம்)
வால்மீகி சொன்ன கதையை
வழங்கிடவே என்னைப் பணித்தான்
வேல்வாங்கி நின்ற பெயரோன்
வெள்ளைமன “பால குமாரன்” !
நூல்வாங்கிக் கற்ற படிப்பும்
நூறாண்டாய்க் கேட்ட கதையும்
ஆல்போன்ற வம்ச குருவின்
அருளோடும் பாடத் துணிந்தேன் ! (6)

ஊமையான நான்யார் அருளில்
உயர்ந்தராம வாழ்வை அளக்க ?
தீமையிலே தோய்ந்த கருவா
திருமாலின் மேன்மை உரைக்க ?
தாமதமே இன்றிக் கவிதைத்
தரத்தோடு கொண்டு குவிக்க ?
நாமமது “ராம” சுகத்தால்
ஞானமது தானே சுரக்கும் ! (7)

(தர்ம சரிதம் வளரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.