கவிதைகள்

9/11: முனை!

அண்ணாகண்ணன்

twin tower attack

திடுக்கென்றொரு கனாதோன்றுதே – விரி
திசைக்கொன்றென வினாதோன்றுதே!
நடுக்காட்டிலும் ஒளிபூக்குதே! – விதை
நடும்போதிலே வனம்வாழுதே!

பழிவாங்கவே பலிவாங்கினார் – திருப்பிப்
பழிவாங்கவே பலியாகினார்!
குழிபறித்தவர் குழிக்குள்ளே – அவரைக்
குறிவைத்தவர் சுழிக்குள்ளே!

தடம்மாறியோர் தலைவீழ்த்தலாம் – ஆனால்
தலைவீழ்வதால் தடம்மாறுமோ!
முடச்சிந்தனை முடிப்பாயடா – உயர்
முழுச்சிந்தனை முகிழ்ப்பாயடா!

கணைவிட்டவர் கண்ணீர்விட்டார் – சிலர்
கண்ணீரதிலும் கப்பல்விட்டார்!
துணைசேர்த்தவர் இணையற்றவர் – நீ
துணிந்தேகினால் முனைமுந்தலாம்!

படமானவர் பாடமாகலாம் – மனப்
பாடங்களால் நடமாடலாம்!
சடமானவர் திடமாகலாம் – எந்தச்
சந்தர்ப்பமும் உவந்தேற்பமே!

===============================

படத்திற்கு நன்றி: http://en.wikipedia.org

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (2)

 1. நல்ல கவிதை!

  ஆனால்……….

  கண்கள் காண்பதும், செவிகள் கேட்பதும் உண்மையில்லை!
  புலன்களைப் புரட்டிப் போடும் புல்லர்கள் இருக்கும் வரை,
  ஒரு முறை, இரு முறை அல்ல ஆயிரம் முறையும் அல்ல
  ஐம்பதாயிரம் முறை எச்சரிக்கை அவசியம்!

 2. //குழிபறித்தவர் குழிக்குள்ளே – அவரைக்
  குறிவைத்தவர் சுழிக்குள்ளே!

  தடம்மாறியோர் தலைவீழ்த்தலாம் – ஆனால்
  தலைவீழ்வதால் தடம்மாறுமோ!//

  அருமை….. சூடான, சுவையான சொல்லம்புகள். சிந்தனையைத் தூண்டும் சிதறாத எண்ண அலைகள்! வாழ்த்துகள் திரு அண்ணாகண்ணன்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க