மீ.விசுவநாதன்

பகுதி: நான்கு
பாலகாண்டம்

ஸ்ரீராம-தர்ம-சரிதம்-1-1
ஸ்ரீராமன் சந்தித்த அனுமனும், சுக்ரீவனும்

பம்பைநதிக் கரையில்தான் பணிவுமிக்க தூய
பக்தனான அனுமனைப் பார்த்தான்ஸ்ரீ ராமன் !
தெம்புதுளிர் விட்டதுபோல் திருமுகத்தில் மெல்லத்
தெரிந்ததுநல் நம்பிக்கை ! தேவிதனைத் தேட
அன்புள்ள சுக்ரீவன் அரவணைப்பும் பெற்றான் !
அக்னிசாட்சி யோடவனும் அன்னையைக் கண்டு
இன்பத்தைத் தருவதாக இதயத்தால் சொல்லி
இராமனுடன் நட்புதனை இயல்பாகப் பெற்றான் ! (31)

வாலி வதம்

அதன்பின்னே வாலியுடன் அவன்பகையைக் கூறி
அருள்கூர்ந்து தவுமாறு ஆறுதலாய்க் கேட்டான் !
இவன்கவலை போக்குதற்கு இப்போதே ஈந்தேன்
என்வாக்கை என்றுதன்வில் மீதடித்துச் சொன்னான் !
சிவபக்தன் ராவணனை சிறைபிடித்த வாலி
சேர்த்துள்ள பலந்தன்னை ஸ்ரீராமன் கேட்டு
அவன்கதை முடிப்பதற்கு ஆயத்த மானான் !
அங்குளஆச் சாமரங்கள் அத்தனையும் சாய்த்தான்! (32)

மலைபோன்ற துந்துபியின் வலிவுடலைக் காட்ட
மடக்கியதன் கால்விரலால் வானுயரம் வீச
சிலைபோல நின்றிட்ட சுக்ரீவ(ன்) அங்கே
சிரித்தஸ்ரீ ராகவனின் செம்மையினைக் கண்டான் !
உலையிட்ட அரிசியைப்போல் உள்வெந்த கோபம்
உடனங்கு பொங்கிவர கிஷ்கிந்தை வாசல்
இலைபோட்டு அழைத்ததுபோல் இடியோசை போலே
எதிர்ப்பகையை சுக்ரீவன் எதிர்கொண்ட ழைத்தான் ! (33)

குரல்வந்த திசைநோக்கி குகைவெளியில் வாலி
குதிபோட்டு வரும்வேளை குணவதியாம் தாரை
குரல்தாழ்த்தித் தடுத்தாலும் கோபத்தை வெல்லும்
குறியறியா வாலியினைக் கொன்றானே ராமன்
விரல்தட்டிச் விட்டிட்ட வினைமுடிக்கு(ம்) அம்பால் !
வேதனைதான் என்றாலும் வித்திட்டான் வாக்கை !
பரல்முத்து மணிமகுடம் சுக்ரீவன் ஏற்க
பறந்தனர்கள் வானரர்கள் சீதையினைத் தேடி . (34)

சுந்தரகாண்டம்

கழுகினமாம் “சம்பாதி” கருத்ததனைக் கேட்டு
கடல்தாண்டி அனுமனும் காற்றாகச் சென்று
மொழுகினதோ தங்கத்தால் முழுபூமி (இ)லங்கை
முத்தாக ஒளிர்வதிலே முகம்பார்த்துக் கொண்டான் !
மெழுகாக உருகிவரும் சீதைமுகங் கண்டு
மெய்முழுதும் பூமிவிழ விநயமுடன் நின்றான் !
தொழுதான், அறிமுகமும் கொண்டவுடன் (இ)ராம
தூதனவன் ஆதாரங் கொடுத்துப்பின் வந்தான் ! (35)

தன்னையங்கு எதிர்த்தவரை தவிடுபொடி ஆக்கி
தளபதி”அட் சயகுமாரன்” தலையினையும் கொய்தான் !
அன்னையவள் வைதேகி அசோகவனம் விட்டு
அத்தனையும் தீவைத்து ஆத்திரமும் தீர்த்தான் !
பின்னையவன் பெருங்கடலைப் பெருமையுடன் தாண்டி
பேரின்ப ராமனிடம், “கண்டேன்நான் சீதை”
உன்னையே நினைத்திருக்கும் உத்தமியாம் கோதை
உனக்கான செய்தியிது உண்மையெனச் சொன்னான் ! (36)

இராவண வதமும், சீதையின் தவமும்

கடல்நீரைக் குறிவைத்தே ஓரம்பை எய்த
கணப்போதில் கடல்மன்னன் காட்சியினைத் தந்து
“இடரொன்றும் இல்லாமல் இலங்கைக்குச் செல்ல
இப்போதே உதவிகளைச் செய்துதரு கின்றேன்
கடல்நீர்மேல் “நளன்”கல்லை வைத்தாலே போதும்
கடகடென கற்பாலம் கண்முன்னே தோன்றும்
திடமான பாலமிது வெற்றியுடன் நீங்கள்
திரும்பிவரும் நற்காலம் தெரிகிறதே” என்றான் ! (37)

போரினிலே இராவணனைக் கொன்றவுடன் சீதை
புடம்போட்ட தங்கமெனப் புரியவேண்டி அந்த
ஊரினிலே அனைவர்முன் உத்தமியைக் கோபக்
குரலாலே இராமனுமே குத்துகின்ற போது
மாரியிலும் தூய்மையாம் மகராசி அன்னை
மனத்தாலே தீக்குளித்து மானத்தைக் காத்தாள் !
வாரிவாரிப் பூச்சொரிந்து வாழ்த்தினரே அக்னி,
வானோர்கள் எல்லோரும் ! மகிழ்ந்தான்ஸ்ரீ ராமன் ! (38)

ஸ்ரீராமன் பரத்வாஜர் ஆஸ்ரமம் வருதல்

இலங்கைக்கு மன்னனாக வீடணனை ஆக்கி
இறந்துபோன வானரரை எழுப்பிவிடச் செய்து
கலங்கிநின்ற மனத்தோர்க்கு கவலைகளை நீக்க
கல்யாண ராமனாகக் காட்ச்சிதர வேண்டி
நிலங்குளிரும் கார்குணத்தான் நேரயோத்தி செல்ல
நினைத்தங்கு புட்பகச்சீர் விமானத்தில் ஏற்றிப்
புலம்பெயர்ந்தான் ! பரத்வாஜர் புகழ்க்குடிலில் கொஞ்சம்
பொழுததனைக் கழித்திடவே புத்திதனைக் கொண்டான் ! (39)

ஸ்ரீராம ராஜ்யம்

பக்திமிகு அனுமனிடம் பரதனிடம் சென்று
பக்குவமாய் வரும்செய்தி பகன்றிடவே சொன்னான் !
எத்திக்கும் இராமனையே எதிர்பார்க்கும் காலம்
இறங்கி”நந்தி கிராமத்தில்” இன்பமுடனி ருந்தான் !
தித்திக்கும் செய்தியினால் தேர்க்கூட்ட மாகத்
தேடிவந்த மக்களுக்குத் தேனாட்சி தந்தான் !
முக்திக்கு வழிகாட்டும் முனிவர்க(ள்) எல்லாம்
மோனத்தில் ஞானத்தில் மூழ்கிதனை வென்றார் ! (40)

இன்பத்தைத் தவிரவேறோர் எண்ணமின்றி மக்கள்
ஏற்றமுடன் வாழ்ந்தார்கள் ! எல்லோர்க்கும் தர்ம
உன்மத்த மேறிநல்ல உள்பலங்கொண் டார்கள் !
உடன்பிறந்தோர், நண்பர்கள், உற்றோர்கள் என்று
அன்பொழுக வென்றார்கள் ! ஐயங்கள் தீர்க்கும்
ஆசார்ய மேலோர்கள் அற்புதம்செய் தார்கள் !
பொன்போன்ற காலமிது ! புகழ்ராம காதை
பொய்யில்லா தர்மத்தால் புவியாண்ட சத்யம் ! (41)

பதினோறா யிர(ம்)ஆண்டு பற்றின்றி ஆட்சி
பார்த்துவந்தான் இராமராஜன் ! பட்டினியும் இல்லை,
பதிஇறப்பு மில்லை, பசுக்களுக்குப் பச்சைப்
பசேலென்ற புற்களுக்குப் பஞ்சமென்ப தில்லை !
நிதிக்குறையு மில்லை!ஓ(ர்) ஏழைகூட இல்லை !
நிறைவாக எவ்வுயிரும் எப்போதும் வாழ்ந்த
பதியன்றோ இராமனாண்ட பண்புள்ள தேசம் !
படிப்போர்க்கும் கேட்ப்போர்க்கும் பல்லாண்டு கூடும் ! (42)

 
(ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில்
முதலாவது ஸர்க்கம் (பகுதி) முடிவடைந்தது)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *