முதியோர் வைப்புத்தொகையின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது நியாயமா?
பவள சங்கரி
தலையங்கம்
முதியோர் வைப்புத்தொகையின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது நியாயமா? தொழில் முனைவோர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுப்பதற்காக முதியோர் சிறுசேமிப்பு செய்த பணத்தை டெபாசிட் செய்கிறவர்களின் தலையில் கை வைப்பது நியாயமா?
முதியோரின் மன நிலையை ஆட்சியாளர்கள் அவசியம் உணர வேண்டும்.. இறுதிக் காலத்தில் யாரிடமும், பெற்ற பிள்ளைகளாக இருந்தாலும், கையேந்தாமல் தன்னிறைவு பெறவேண்டும் என்ற முனைப்பில் அரும்பாடுபட்டு சேமித்து வைத்து அதை அரசு வங்கிகளை மட்டும் நம்பி வைப்புத்தொகையாக வைத்து, வட்டியை மட்டும் வாங்கி செலவு செய்துகொண்டிருக்கும் முதியவர்களின் நிலை பற்றிய உளவியல் பிரச்சனை இது..
யதார்த்தமாக வாழ்க்கையை சந்திக்கக்கூடிய மனிதர்கள் நாங்கள். ஜிஎஸ்டி வரிவிதிப்பை எதிர்க்கவும் முடியவில்லை, வரவேற்கவும் முடியவில்லை. இது எங்கள்மீது திணிக்கப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளில் எந்தவொரு புதிய சட்டமாக இருப்பினும் மக்களின் ஒப்புதலுக்குப் பிறகே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. உதாரணமாக பிரிட்டனில் பிரெக்ஸிட் இப்படித்தானே நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி வரிவிதிப்பால் ஒரு சாதாரண வியாபாரி மாதத்திற்கு ஒரு இலட்சம் ரூபாயும் போக்குவரத்து நிலையங்கள் (லாரி பயன்பாட்டாளர்கள்) ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 2 வண்டி பயன்படுத்தினாலே 6 இலட்சம் ரூபாய் ஜிஎஸ்டியாக செலுத்தப்பட வேண்டியுள்ளது. இத்தனை ஆண்டுகளாக இவை அரசுக்கு செலுத்தப்படாத வருமானங்கள். இன்று 2 இட்லி சாப்பிட்டாலே 5 ரூ ஜிஎஸ்டி வரியாக செலுத்த வேண்டியுள்ளது. இப்படி ஒரு சூழலில் ஒரு நாளைக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் புதிய வருமானமாக வருகின்றன. இன்னும் 15 நாட்களில் ஸ்குவாட் வேறு வரப்போகிறது. இப்போது மக்கள் தாமாக முன்வந்து வரிவிதிப்பை ஏற்கும்போது முதியோரின் சிறு சேமிப்பில் கைவைத்து அவர்களின் வாழ்வாதாரங்களை பாழாக்குவது சரியா? நம் கண்முன்னே ஒரு நாட்டில் தம் மக்களுக்கு வாழ்வதற்காக ஆண்டுதோறும் சுமாராக 1 இலட்சம் டாலர்களை மக்களுக்கு வழங்கி அவர்கள் வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு சுவீடன் நாட்டில் நடந்தது. மிகப்பெரிய ஒரு வருமானம் வரும்போதுகூட அரசு ஏன் முதியோர் சிறுசேமிப்பில் கை வைக்க வேண்டும்? தற்போது உள்ள அரசு வருமானங்களை சரியான முறையில் நிர்வகித்தாலே மக்களுக்கு பல நன்மைகள் செய்ய முடியுமே?
பிரதமர் மோடி அவர்களின் முகநூல் பக்கத்தில் பதியப்பட்டுள்ள ஒரு முதியவரின் வேதனையான மடல் இது 🙁
மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி ஜீ!
மதிப்பிற்குரிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஜீ!
உங்கள் பொன்னான நேரத்தில் சில நிமிடங்களை இதைப் படிப்பதற்காக செலவிட்டு இந்த விஷயத்தில் சரியான ஒரு முடிவு எடுப்பீர்கள் என்னும் நம்பிக்கையில் நன்றி சொல்லிக்கொள்கிறேன் முதலில்.
நான் இந்த நாட்டின் மூத்த குடிமகன். 1.8.2012 அன்று அரசுடமை வங்கியில் 40 லட்சம் ஐந்து வருடங்களுக்கு டெபாசிட் செய்தேன். ஒவ்வொரு மாதமும் எனக்கு ரூ. 35,352/- கிடைத்தது. எந்தப் பிரச்சினையுமில்லாமல் என் வாழ்க்கையை நடத்த முடிந்தது. 5 வருடம் முடிந்ததும், இப்போது மீண்டும் அந்தப் பணத்தை டெப்பாசிட் செய்தேன். இப்போது மாதம் ரூ.26489/- தான் கிடைக்கிறது. ஏற்கனவே வாங்கியதை விட ரூ.8863/-, அதாவது 25% குறைவான தொகை இது. இந்த இழப்பை எப்படி சரிக்கட்டுவது அல்லது மருந்து, காய்கறி, பருப்பு இவைகளில் எதைத் தியாகம் செய்வது என நீங்களே சொல்லுங்கள்.
2014ல் நீங்கள் பொறுப்புக்கு வந்த பிறகு மூத்த குடிமக்களுக்கு எதையும் நீங்கள் செய்யவில்லை. புதிதாக எந்த வசதிகளையும் செய்து தரவில்லை. ஆனால் இருப்பதையும் குறைத்து விட்டீர்கள். எந்தப் பொருட்களின் விலையும் 2014ல் இருந்தது போல் இல்லை. உங்களால் புள்ளி விபரங்களைக் குறைக்க முடிந்திருக்கிறதே தவிர விலைகளை குறைக்க முடியவில்லை. பருப்பு, உப்பு, வெங்காயம், இப்போது தக்காளியென தினசரி பயன்படுத்தும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது. சமயங்களில் சில பொருட்களை எட்டி பார்க்கக் கூட திராணி இல்லை எங்களுக்கு.
இந்த வட்டி விகிதக் குறைப்பிற்கு Demand மற்றும் supply ஐக் காட்டி அரசியல் மட்டும் கோட்பாட்டு ரீதியான காரணத்தை உங்களால் சொல்ல முடியும். ஆனால் பொருட்களின் விலையேற்றத்திற்கான காரணங்களைச் சொல்ல முடியாது. முதலீட்டாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்க தாங்கள் விரும்பினால், அது டெபாசிட் செய்கிறவர்களின் தலையில் கை வைப்பதாய் இருக்கக் கூடாது. வராக்கடன்கள் என்னும் எரிமலைகளின் மீது வங்கிகள் இயங்குகின்றன.
தங்கள் பொன்னான காலங்களை எல்லாம் பல நிறுவனங்களுக்கும், தேசத்துக்கும் சேவை செய்து வாழ்ந்த எங்களைப் போன்ற மூத்த குடிமக்கள் மரியாதைக்குரிய வாழ்க்கையை மேற்கொள்ள வைப்பது அரசின் கடமையல்லவா? இந்த 25 % இழப்பினை எப்படி ஈடு கட்ட முடியும் என்பது எங்களுக்குத் தெரிகிறது. எந்த அமைச்சரோ, எம்பியோ, எம்.எல்.ஏவோ தங்கள் வருமானத்தை குறைத்துக் கொள்ள முன் வருவார்களா? இல்லையென்றால் மூத்த குடிமக்கள் மட்டும் ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும்?
உங்களைப் போல எங்களின் ஊதியத்தை நாங்களே நிர்ணயித்துக் கொள்ளும் நிலையில் இல்லை. எந்த விவாதமும் இல்லாமல் உங்கள் ஊதியத்தை நிர்ணயிக்க உங்களுக்கு இரண்டு நிமிடங்கள் போதும். ஆளும் கட்சி மேஜைகளில் இருப்பவர்களும், எதிர்க் கட்சி மேஜையில் இருப்பவர்களும் ஒன்று சேர்ந்து நிறைவேற்றிக் கொள்ள முடியும். பற்றாக்குறை, பொருளாதாரம் மற்ற எல்லாக் காரணங்களையும் உங்களால் கடந்து விட முடியும்.
மூத்த குடிமக்களுக்கான இந்த டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் ஆரம்பத்தில் 9.20 சதவீதமாக இருந்தது. ஜூலை, 2014ல் அது 8.3 சதவீதமாக குறைந்தது. அதுவும் 15 லட்சம் வரைதான். இந்த வட்டி விகிதம் ஓய்வு பெறுகிற ஒருவருக்கு கிடைப்பதைப் போல 12 சதவீதமாக இருக்க வேண்டும். மூத்த குடிமக்கள் பொருளாதார ரீதியான மரியாதையோடு தலை நிமிர்ந்து வாழ்வதை இந்த அரசு உறுதிப்படுத்த வேண்டும். எங்களின் சேமிப்பு மூலமாக வாழும் அவலநிலையில் நாங்கள் இருப்பதை தாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நான் எதுவும் தவறாகச் சொல்லி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.
மரியாதையோடும், நன்றியோடும்-