பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

21622086_1427486197305575_203494868_n

கோகுல்நாத் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (16.09.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “படக்கவிதைப் போட்டி (127)

 1. உயர்வாய்…

  பெற்றோ ரில்லா நிலையினிலும்
  பேணி வளர்க்கும் அண்ணன்மார்,
  உற்ற துணையாய் உடன்பிறந்தோர்
  உலகி லுயர்ந்த பாதுகாப்பு,
  சுற்ற மாகக் கால்நடைகள்
  சுழலும் வாழ்வும் சிறப்பாக,
  மற்ற தெய்வ மெல்லாமே
  மண்ணில் செய்த பதுமைகளே…!

  -செண்பக ஜெகதீசன்…

 2. உடலும் உயிரும்: துள்ளித் திரிந்த பிள்ளைப் பருவம்
  நினைக்க, நினைக்க, உள்ளம் இனிக்கும்!
  கள்ளம் இல்லா வெள்ளை உள்ளம்!
  கவலை இல்லா அருமைக் காலம்!
  தட்டான் பிடிக்க ஓடியதும்!
  நுங்கு வண்டி ஓட்டியதும்!
  குட்டையில் மீன் பிடித்ததும்!
  பச்சைக் குதிரை தாண்டியதும்!
  மரம் ஏறிக் குதித்ததும்!
  மாங்காய் பறித்துத் தின்றதும்!
  தென்னந் தோப்பு நிழலினிலே!
  தோழருடன் கூடிக் களித்ததும்!
  ஏற்றம் இறைப்பதை ரசித்ததும்!
  நெற்பயிர் வாசம் ருசித்ததும்!
  ஆட்டுக்குட்டியை தழுவி மகிழ்ந்ததும்!
  கன்றுக்குட்டியுடன் துள்ளிக் குதித்ததும்!
  பாம்பைக் கண்டு பயந்ததும்!
  வாய்ப்பாடு பாட்டாய் சொன்னதும்!
  கணக்குப் பாடம் கண்டு மிரண்டதும் !
  தமிழில் பாடம் படித்ததும்!
  இன்பச் சுற்றுலா சென்றதும்!
  மஞ்சு விரட்டு பார்த்து மனம் மயங்கி நின்றதும்!
  ஒழுக்கம், இரக்கம், உண்மை சொல்லித் தந்த!
  ஆசிரியரை தெய்வமாய் நினைத்ததும்!
  கிராமத்து வாழ்க்கை இன்பமடா!
  நகரத்து வாழ்க்கை நரகமடா!
  நான் அனுபவித்தததை சொல்லுகிறேன்!
  உங்களை அனுபவிக்க சொல்லுகிறேன்!
  உயிரெனும் கிராமத்தை கொன்று விட்டு!
  உடலெனும் நகரத்தில் வாழுகின்றோம்!
  உயிரற்ற உடலால் என்ன பயன்!
  உயிரும், உடலும் சேரட்டும்!
  இன்பம் என்றும் நிலைக்கட்டும்!

 3. ஏழைச் சிறுவனின் ஏக்கம்..!
  ======================

  உருளுகின்ற இவ்வுலகில் உழைக்கும் வர்க்கமாய்..
  ……….உழல்பவர்கள் ஏராளம்.! அதிலும் உழைக்காமலே..
  பொருளீட்டும் மாந்தரும் உண்டாம் இவர்களின்..
  ……….இருட்டு மனதிலேயாம் வெளிச்சம் தேடுகிறோம்.!
  மருண்டே வாழ்ந்து மண்ணில் மடிவதுதானெம்..
  ……….மக்களின் தலையில் எழுதியதலை விதிபோலாம்.!
  அருளுகின்ற இறைவனும் ஏழை எமக்கென்றே..
  ……….ஆரோக்கியமும் பிள்ளைச் செல்வமும் அருளினான்.!

  ஆனால்..

  பள்ளிசெல்லும் எண்ணமே சத்துணவுக் காகத்தான்..
  ……….படிப்பிலே கவனமிலாப் பலசோலி எங்களுக்குண்டு.!
  வெள்ளி முளைக்குமுன் வேகமாய் செயல்புரிந்தே..
  ……….வதைக்கும் உழைப்பால் படிப்பினில் நாட்டமில்லை,!
  பிள்ளையாய் இருக்கும்போதே இடுப்பில் இன்னொரு..
  ……….பிள்ளையைச் சுமக்க வேண்டுமா ஏழ்மையென்பதால்,!
  கள்ளமிலா மனதோடு கல்விகற்க ஆசைதானால்..
  ……….சல்லாபமாய் வாழநினையின் சங்கடமே வருகிறது,!

  அப்பனும் ஆத்தாளுமில்லை அரவணைத்து வளர்க்க..
  ……….ஆதரவாய் உற்றோர் உறவினருமென எவருமிலை.!
  தப்பேதும் செய்யாமலே தண்டனை மிகப்பெரிதோ..
  ……….தகும்நூலைப் படித்துயர ஒருபோதும் வழியில்லை.!
  எப்படி வாழ்வதென எண்ணியெ கலங்குகின்றோம்..
  ……….எங்கள் கடமைகளை அனுதினமும் செய்கின்றோம்.!
  இப்பாரினில் ஏழ்மைக் குழந்தைபடும் துயரம்போல்..
  ……….எவருக்குமே வராதென…..அருள்வாயா இறைவா..?

 4. இளங்கன்று பயமறியாது!
  துடிப்புடன் துவண்டுவிடாமல் புன்முறுவலோடு
  புதுமையினை ரசிக்கும் அழகான கவிஞனாய் !
  இனிவரும் காலம் சந்திக்கும்
  இளம் கவி காளைகள்
  மாட்டுக்கொட்டகை அல்ல …..
  மலர்வனம் போல ரசிக்கும்
  புன்னகை மிளிர்கிறது
  முகத்தில் சாந்து பூசாத முகத்தில் சாணத்தின் வாடை நுகராத மூக்கில் ???பாடாத தேனீக்கள் பசித்தது…. மறந்த பாலகர்கள் மலரட்டும் மகிழ்ச்சி எங்களுக்கு கிடைக்காத
  அற்புதமான இடம் கிடைத்த ஆனந்தமே …..ஆனந்தமே…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *