இந்த வார வல்லமையாளர்! (239)
செல்வன்
இவ்வார வல்லமையாளராக அன்பு நண்பர் வேந்தன் அரசு (இயற்பெயர் ராஜு ராஜேந்திரன்) அவர்களை தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
வேந்தரின் 69ஆம் பிறந்தநாள் இவ்வாரம் வந்ததால் அவர் அனைவராலும் வாழ்த்தப்படுகிறார். அந்த வாழ்த்துகள் வேந்தரின் வலையுலக எழுத்து வன்மைக்கு சான்றுகூறுவதாக அமைந்தன. அவ்வன்மையை 2005ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டுவரை முதல்வரிசையில் அமர்ந்து கண்டுகளிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியதை மிகப்பெரும் பேறாக கருதுகிறேன்.
2005ஆம் ஆண்டு அன்புடன் எனும் குழுவில் முதல்முதலாக நுழைந்தேன். அதுவே தமிழ் வலையுலகில் என் முதல் எழுத்துப்பயணம். அன்புடனில் என்னை ஈர்த்தவர்களில் முதன்மையானவர் வேந்தர். அங்கே நுழைந்ததும் அவர் கோவையை சேர்ந்தவர் என்பதும் நான் படித்த மணிப்பள்ளியில் படித்தவர் என்பதும் இருவரையும் உடனே இணைத்தன. அதன்பின் சுதந்திர பொருளாதாரம் குறித்து அவர் எழுதிய மடல்கள் என்னை மிகக் கவர்ந்தன. அவுட்சோர்ஸிங் மூலம் இந்தியாவுக்கு நன்மை கிடைப்பதை ஒரு மிகக் குறுகிய கதை மூலம் எழுதி என்னை வியப்பில் ஆழ்த்தினார். நான் சிரமப்பட்டு பத்தி, பத்தியாக எழுதும் கட்டுரைகள் தரும் தாக்கத்தை விட ஒரு வரி, ஒரு பத்தியில் அவர் எழுதும் கதைகள், கருத்துக்கள் ஆகியவை சுதந்திர பொருளாதார கோட்பாட்டை எளிதில் விளக்கின.
வேந்தர் நேசிக்கும் விசயங்கள் என பட்டியல் இட்டால் மூன்றாமிடத்தில் சுதந்திர பொருளாதாரம், இரண்டாமிடத்தில் அவர் வாழ்ந்த கோவை மாநகரம் மற்றும் முதலிடத்தில் ஐயன் திருவள்ளுவர் ஆகியோர் இடம் பிடிப்பார்கள். வள்ளுவர் மேல் கொண்ட தளராத அன்பினால் “வள்ளுவம் என் சமயம்” என வள்ளுவத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றவர் வேந்தர். சும்மா சொல்வதுடன் நின்றுவிடாமல் தமிழை ஆதரித்து கட்டுரைகள், தன்னால் இயன்ற அளவு தமிழறிஞர்களுக்கு நிதியுதவி என செய்துவந்தவர்.
தமிழ் இணைய வரலாற்றை யாகு குழுக்கள் காலம் 1.0, கூகிள் குழுக்கள் காலம் 2.0, முகநூல் காலம் 3.0 மற்றும் தற்போது விசுவல் மீடியா காலம் 4.0 என பிரித்தால் வேந்தர் இரண்டாம் தலைமுறையை சேர்ந்தவர். இணையம் 2.0 தலைமுறையில் குழுக்களில் 500, 1000 பேர் இருந்தாலே அது மிக அதிகம். மிக நீள மடல்களை தட்டி அனுப்பி ஓரிரு பேர் நாள்கணக்கில் விவாதம் செய்வோம். அவ்வகையில் இணையம் 2.0 ஒரு மிக கடினமான தளம் என கூறவேண்டும். அந்த தளத்தில் வேந்தர் போன்ற முன்னோடிகளிடம் நான் நிறைய கற்றுக்கொண்டேன்.
வேந்தரின் 60வது பிறந்தநாள் விழாவுக்கு நேரில் சென்று அவரைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் உரையாடுகையில் அவரது முற்போக்கு கருத்துக்களை அறிந்துகொண்டேன். பெண்ணியம், ஆன்மிகம், திராவிடம், பகுத்தறிவு போன்ற பல விசயங்களில் மிக முற்போக்கு கருத்து கொண்டிருந்தாலும், தன் கருத்தை சுயபரிசீலனை செய்ய அவர் தயங்கியது இல்லை. குறிப்பாக இவ்விசயங்களில் ஆழ்ந்துள்ளவர்கள் ஏதோ ஒரு அரசியல் கட்சியின் தொண்டர்களாக, அல்லது தலைவர்களின் அபாலஜிச்டுகளாக மாறிவிடுவது வழக்கம். வேந்தர் விதிவிலக்கு. தன் கருத்தை தன் கருத்தாக எடுத்து வைப்பாரே ஒழிய எந்த அரசியல் தலைவரையோ, தத்துவஞானியையோ மேற்கோள் காட்டமாட்டார். அவ்வளவு ஏன் அவர் நேசிக்கும், ஐயன் வள்ளூவரின் கருத்துக்களை கூட விவாதங்களில் மேற்கோள் காட்டியதில்லை. கடவுள் மறுப்பில் உறுதியாக நின்று திருவள்ளுவரை கூட அவர் இதில் மறுத்துள்ளார்.
இவரது அக்கரை சீமையிலே எனும் மடல் தொடர் மூலம் சின்சினாட்டி நகர் வாழ் அமெரிக்கர்களை குறித்து அறிந்து கொள்ள இயன்றது. தற்போது நீள் மடல்கள் இடுவதை மிக குறைத்துக்கொண்டு ஒருவரியில் ட்வீட் போல தன் கருத்துக்களை சுருக்கி மடலாடல் குழுக்களில் எழுதி வருகிறார். முகநூலுக்கு பெருமளவு இவரது எழுத்து குடிபெயர்ந்து விட்டது
இணையம் 4.0வில் வெற்றிக்கொடி நாட்டவிருக்கும் இணையதலைமுறைக்கு வேந்தரின் நற்பண்புகள் அமைய உதவும் என நம்பி அவரை இவ்வார வல்லமையாளராக அறிவிக்கிறோம்.
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]
அருமையான தேர்வு. வேந்தன் அரசுக்கு என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள். வேந்தன் அரசு ஆழ்ந்த தமிழ்ப்புலமை உள்ளவர். மிகவும் புதுமையான கோணங்களில் சிந்தித்துக் குறும்பாகக் கருத்துக் கூறவல்லவர். அவருடைய புதிய திருக்கலான சிந்திப்புக்கோணத்தைப் புரிந்துகொள்ளாதவர்கள் அவருடைய கூற்றைத் தவறுதலாக எடுத்துக்கொள்ளவும் கூடும். சங்க இலக்கியத்தில் நல்ல அறிவும் தமிழ் மொயியியலிலும், திராவிட மொழியியலிலும் புதிய கோணத்தி சிந்திப்பவர். தேர்ந்தெடுத்த செல்வன் அவர்களுக்குப் பாராட்டுகள். [இப்பதிவை இப்பொழுதுதான் காணநேர்ந்தது]