சிவபிரதோஷம் “வெண்பனித் தீயினன்”
மீ.விசுவநாதன்
மேனியின் ஆசையை மெள்ளநான் விட்டிட
மிகஆழ பக்தி வேண்டும்
ஊனிலே ஓடுற உதிரமா சக்தியில்
உமைபாகன் உறைய வேண்டும்
மானிடன் என்னுரு மாதொரு பாகனாய்
மனம்நன்கு காண வேண்டும்
ஞானியர் பக்கமே நான்தின மிருந்திட
நல்லசிவ னருள வேண்டும்
தீநிற வண்ணனே நீரணி அழகனே
தீரட்டும் பிறவிப் பிணியே
நீயொரு தத்துவ தெய்வீக ஒளியெனத்
தெளியட்டும் எந்தன் மனமே !
கந்தனும், முந்திய கணபதிப் பிள்ளையும்
கைலாய பதியி னுறவே
அந்தமும் ஆதியும் அற்புத வானமும்
அனைத்துமாய் ஆன அமுதே
விந்தைகள் செய்குவாய் வெண்பனித் தீயினை
வேண்டித்தான் சூடு கின்றாய்
சொந்தமும் நட்புமே நோய்நொடி வென்றிட
சுந்தரனே கண்கள் திறவாய்
தீநிற வண்ணனே நீரணி அழகனே
தீரட்டும் பிறவிப் பிணியே
நீயொரு தத்துவ தெய்வீக ஒளியெனத்
தெளியட்டும் எந்தன் மனமே !
(இன்று 03.10.2017 பிரதோஷம்)