க. பாலசுப்பிரமணியன்

 

இன்று ..
உலக மிருகங்கள் தினம்.
ஐந்து நட்சத்திர விடுதிகளில் ..
பட்டயங்கள் ..
தோரணங்கள் ..
பாடல்கள் ..
பேச்சுக்கள் …
விருதுகள் ..
பல்சுவையில் சமைக்கப்பட்ட
மிருகங்களின்
உணவுகளுடன்….

நடுத்தெருவில்
சில காகங்கள் மட்டும்
பயந்துகொண்டே அமர்கின்றன.
அவைகளுக்கு கூட
சத்தம்போட்டுக் கரைந்தால்
சுட்டுவிடுவார்கள் என்ற பயம் ..
சில நாய்கள் மட்டும்
சங்கிலியின் சுதந்திரத்தோடு ..
சத்தம்போட்டுக் குரைத்தால்
சட்டம் மீறிடுமோ என்ற அச்சத்தில் ..

“என்று தணியும் எங்கள்
சுதந்திரத் தாகம்?”
மிருகசாலையில் ஒரு கூண்டுக்குள்ளிருந்து
ஒரு இனம் தெரியாத பாரதி ..
ஆனால் ..
அவன் மொழிதான்
எனக்குப் புரியவில்லை !

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க