மீ.விசுவநாதன்

பகுதி: 12

பாலகாண்டம்

ஸ்ரீராம-தர்ம-சரிதம்-2

காலையில் நதிக்கரையில்

மங்கையரில் சிறந்தவளாம் கோசலையுன் அன்னை
மடிபெற்ற புண்ணியத்தால் வந்துதித்த ராமா,
செங்கதிரால் கோலமிட்டுச் சீர்கொண்டு உன்னை
தெய்வீக ராகத்தில் எழுப்புகிறான் சூர்யன் !
செங்கரும்பும் மஞ்சளுமாய் சேர்ந்தயிக் காட்டில்
சிறகடிக்கும் பறவையெலாம் செயல்மறந்து உன்றன்
செங்கமலப் பாதத்தை சிற்றலகால் தொட்டு
ஸ்ரீராமன் நீவிழிக்கக் கீர்த்தனைகள் பாடும் ! (1)

உதயகாலத்தில் கதிரவனை வணங்கினர்

சந்தியிது காலத்தில் தவநீரை வார்த்து
தர்மத்தை நிலைநாட்ட ஸ்ரீராம னோடு
வந்திருக்கும் இலக்குவனும் மதியொன்றி நின்று
மந்திரங்கள் சொல்லிப்பின் மாமுனியின் பாத
வந்தனைகள் செய்தங்கு கைகட்டி நின்றார் !
வழிகாட்டும் முனிவருடன் வழிநடந்து போக
வந்தடைந்தார் அக்”காமா சிர”மத்தின் பக்கம் !
மகத்தான முனிக்கூட்டம் வாசமிடும் கூடம் ! (2)

காமாசிரமம் வந்தடைதல்

ஆசார்யர் முகம்பார்த்து “அய்யனேநீர் சொல்வீர்
அழகாமிவ் வாசிரமம் யாருடைய” தென்று
லேசான தென்றல்போல் ஸ்ரீராமன் கேட்டார் !
“சிவனொருநாள் இங்குவந்து தவம்செய்யும் வேளை
பேசாமல் அவர்மீது ஏவிவிட்டான் அம்பை
பிரியமுள காமனெனும் சிற்றின்பத் தேவன் !
கூசாமல் விழித்தீயால் கொன்றிட்டார் காமக்
கொற்றவனை மாதேவன் ஓர்நொடியி லங்கே ! (3)

காமனை எரித்த இடம்

உடலற்ற அனங்கனென உருமாறிப் போனான்
உலகத்தில் காமத்தீ மூட்டுகிற தேவன் !
இடமிதையே உய(ர்)”அங்க தேச”மென்று சொல்வர் !
இன்றிரவு மட்டும்நாம் இங்குதங்கிப் போவோம்”
தடையேதும் இங்கில்லை தவத்தோர்கள் சேர்க்கை
சரியான பாதைக்கே சத்தியமாய்ச் சேர்க்கும்
விடையிதுதான் என்றுவிசு வாமித்ரர் சொல்ல
விநயமுடன் கேட்டார்கள் சீடரிரு வர்கள் ! (4)

 

(தர்ம சரிதம் வளரும்)
(ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 23ம் பகுதி நிறைந்தது)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *