கசக்கி பிழியப்படுகிறார்களா மக்கள் ?
பவள சங்கரி
தலையங்கம்
திரையரங்குகளுக்கு வசூலிக்கப்படும் நுழைவுக் கட்டணத்தை 25% ஆக உயர்த்திக்கொள்ள அனுமதித்து தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு மேல் ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரிகளும் சேர்த்து வசூலிக்கப்படும். இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரே திரைப்படத்திற்கு திரையரங்குகளுக்குத் தகுந்தாற்போல் கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுதான். குளிர்சாதன வசதி இல்லாத அரங்கிற்கு ஒரு கட்டணம், குளிர்சாதன வசதி இருக்கும் அரங்கிற்கு ஒரு கட்டணம், மல்டிபிளக்ஸ் அரங்குகளுக்கு ஒரு கட்டணம். இது மட்டுமன்றி திரையரங்கு நகராட்சி பகுதிகளில் இருந்தால் ஒரு கட்டணம், மாநகராட்சி பகுதியில் இருந்தால் அதிக கட்டணம். இதன் மூலமாக திரையரங்கு உரிமையாளர்கள் ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் உரூபாய் வரை கொள்ளையடித்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் போதாமல் திரையரங்கை மூடி வேலை நிறுத்தம் செய்யப்போகிறார்களாம். திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்களுடைய வருமானத்தில் 25% குறைத்துக்கொள்ள மாட்டார்கள். பல கோடிகள் சம்பளமாகப் பெறும் நடிகர்கள் தங்கள் சம்பளத்தில் 25% குறைத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனாலும் மக்களிடம் அதிகமாகக் கொள்ளையடித்து இந்த ஒரு சில நூறு பேர்களை வாழவைக்கவேண்டும் என்று முடிவெடுத்திருக்கின்றனர். இதில் புதிய திரைப்படங்களை வெளியிடமாட்டோம் என்ற அறிவிப்பு வேறு. உண்மையிலேயே திரைப்படங்கள் வெளியிடப்படாவிட்டால் பொது மக்களுக்கு பெரிய பாதிப்பு என்பதெல்லாம் இல்லை. பாதிப்புகள் ஏகப்பட்ட இலாபம் பார்க்கும் திரைத்துறையினருக்குத்தான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அந்த வகையில் திரையரங்கக் கட்டணங்களை மிக அதிகப்படுத்துவதால் திரைத்துறை நலிவடைந்து அழியும் அபாயத்திற்கு உள்ளாகும் என்பதே நிதர்சனம்.