புலமையிலக்கணம் கூறும் தவறியல்பு
-முனைவர் சு.சத்தியா
தமிழ் இலக்கணம் மிகத் தொன்மையானது. காலந்தோறும் இலக்கியங்கள் வளர்ச்சி அடைந்தது போலவே இலக்கணங்களும் வளர்ச்சி அடைந்தன. தொல்காப்பியர் காலத்தில் எழுத்து, சொல், பொருள் என்று தொடங்கி இன்று பல்வேறு நிலையில் வளர்ச்சி அடைந்து எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, புலமை என வளர்ந்து தற்பொழுது அறுவகை இலக்கணம் என்ற நிலையில் தமிழ் இலக்கணத்தின் வளர்ச்சி நிலையைக் காணமுடிகிறது. அவ்வகையில் ஆறாவது இலக்கணமான புலமையிலக்கணம் கூறும் தவறியல்பினை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
புலமையிலக்கணம்
தமிழ் இலக்கண வரலாற்றில் புதியதொரு சகாப்தத்தை ஏற்படுத்தியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். இவர் இயற்றிய அறுவகை இலக்கணம் எனும் நூலில் இலக்கணம் ஆறு வகைப்படும் அவை எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, புலமையிலக்கணம் எனக் கூறியுள்ளார். இப்புலமையிலக்கணமாவது மேற்கூறிய ஐந்து இலக்கணங்களையும் கற்பவர் எவ்வகைப் புலமையோடு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக இயற்றப்பட்டுள்ளது. போற்றுதற்குரியதாகும். புலமை என்பதற்கு,
”அறியும் தன்மையைப் புலமை ஆம்எனப்
பற்பல பெரியோர் பகர்ந்தனர் அன்றே” என்று ஐம்புலனாலும் ஒரு பொருளை அறிதலே புலமையெனச் சுட்டியுள்ளார். இப்புலமையிலக்கணம் தேற்றவியல்பு, தவறியல்பு, மரபியல்பு, செயல்வகை இயல்பு என்னும் நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் தவறியல்பின் சிறப்பினை இக்கட்டுரை எடுத்தியம்புகிறது.
தவறியல்பு
இந்நூலாசிரியர் தமிழ் மாணவர்களிடமும் புலவர்களிடமும் இருக்கக் கூடாத பண்புகளையே தவறியல்பாகச் சுட்டுவதோடு அப்பண்பினை உடையவர் முழுவதும் மனமாற்றம் பெறவேண்டும் என்கிறார். இதனைப் பின்வரும் பண்புகள் வழி அறியலாம்.
புலமைக்காய்ச்சல்
நன்கு கற்றறிந்த புலவர்களிடம் தற்பெருமை, புலமைக்காய்ச்சல் எனும் பொறாமை போன்ற தீயபண்புகள் இயல்பாகவே இருக்கும். இவை அறவே இருக்கக் கூடாது என்பதைத் தவறியல்பின் முதல் நூற்பா கீழ்வருமாறு உரைக்கிறது.
சாராது ஒழிப்பரன் தவறுஇயல்பு உரைக்குதும்
பேரா நலம்எனப் பிணங்கவொண் ணாதே. (அறுவகை.புலமையி.34)
புலமைச்செருக்கு
நமது வாழ்க்கையில் எந்தச் சூழ்நிலையிலும் நான் எனும் செருக்குக் கொண்ட எண்ணம் எவருக்கும் ஏற்படக்கூடாது. குறிப்பாகக் கல்வி அறிவினைப் பெற விரும்புபவருக்கு எள்ளளவும் கூடாது என்பதை,
எள்ளிடைப் புலமை இசையும் முன்னம்
நெல்லிடை யாண்மை நிலவல்ஓர் தவறே. (அறுவகை.புலமையி.37 )
எள்ளளவும் கல்வியறிவு பெறுவதற்கு முன் நெல்லளவும் செருக்கடைவது தவிர்க்கப்பட வேண்டுமெனக் கூறுகிறது. இதனையே ‘கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு’ என நம் தமிழ் மூதாட்டி கூறியுள்ளது இங்கு ஒப்புநோக்குவதாகும். இதனை மாணவர்கள் நன்கு உணரவேண்டும். தானெனும் செருக்கு இருப்பவருக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படாததோடு எவ்வித அறிவு வளர்ச்சியுமிராது. கல்வியில் உண்மையான ஈடுபாடு கொண்டவர் துளியும் செருக்கின்றி வாழ்வர்.
புலவரைப் புலவர் மதியாத நிலை
மனிதனை மனிதன் மதித்து வாழ்வதே மனிதநேயமாகும். இருந்தும் புலவர் ஒருவர் மற்ற புலவர்களை மதிப்பதில்லை. இது மிகவும் தவறாகும் என்பதை,
காகப் புள்என இனத்தொடு கவ்வாது
ஞாளிபோற் பகைக்கும் நாவலர் பலரே. (அறுவகை.புலமையி.38)
என்று காகத்தின் ஒற்றுமையுணர்வினைச் சுட்டி, இதுபோல் வாழாது நாயினது வேற்றுமை குணத்தையே தனது குணமாக்கி வாழும் புலவர் பலராவர். இப்பண்பு அவர்கள் கற்ற கல்வியினால் வந்த மமதையாகும் என்பதோடு அவ்வாறு இருப்பது தவறு என்றும் ‘உவப்பத் தலைக்கூடி உள்ளப்பிரிதலே புலவர் தொழிலாக’ வேண்டுமெனவும் கூறுகிறது.
நிலையற்ற நட்பு
தமிழின் சிறப்பை உணர்ந்த புலவர்களின் நிலையான நட்பைப் பார்க்கிலும் பொருட்செல்வத்தை மட்டுமே பெற்றிருக்கும் அரசர், அமைச்சர், பெருஞ்செல்வந்தரின் நிலையற்ற நட்பே சிறப்புடையதெனக் கருதுபவர் சிறந்த நூலாசிரியராகத் திகழ்ந்தாலும் அவர் புலவரிலும் இழிந்தவராவார் என்பதை,
தமிழ்அறி புலவோர் தங்கள் உறவினும்
பொருளுடை மன்னர் ஆதியர் பொய்உறவு
உயர்வுஎனக் காண்பான் ஒள்ளிய பனுவற்
காரன் எனினும் கடைப்படும் அன்றே. (அறுவகை.புலமையி.39)
இன்றைய உலகில் அறிவுடன் கூடிய நட்பினைப் பார்க்கிலும் செல்வத்துடன் கூடிய நட்பையே எங்கும் காணமுடிகிறது. இத்தகைய நட்பினை இழிவென உரைக்கிறது இந்நூல்.
பெரும்புலவர் இளம்புலவரைச் சோர்வடையச் செய்தல்:
அறிவில் முதிர்ந்த பெரும்புலவர்கள் வளர்ந்து வரும் இளம் புலவர்களை இழிவுபடுத்தும் நிலையினை நாம் இன்றும் காணமுடிகிறது. இதனைத்தான்,
தேறாப் புலவனைச் சிந்தை நோவப்
படுத்தும் பாவலர் பதர்அனை யாரே. (அறுவகை.புலமையி.40)
என்று பகர்வதோடு அத்தகையவர் உள்ளீடற்ற வெற்றுத்தானியம் போன்று பயனில்லாதவராவர் என்பதோடு குறிப்பாக அறிவில் தம்மைவிடக் கீழ்நிலையில் உள்ளவர்களைத் துன்புறுத்தவே கூடாது என்றும் வலியுறுத்துகிறது.
சொல் திருடல்
சிறந்த புலவர்களின் சொற்றொடர்களை அவர்கள் எழுதியவாறே எழுதித் தான் எழுதியது எனக் கூறும் புலவர்களின் செயல் பெருந்தவறாகும். இதனையே,
சீரிய புலவர்தம் செஞ்சொல் திருடிப்
பாழ்த்த புன்கவி பகர்வோர் பலரே. (அறுவகை.புலமையி.41)
என்றுரைக்கிறது. பிறருடைய சொல்லையும் கருத்தையும் தன்னுடையதெனப் பொய்யாக மொழியும் இலக்கியத் திருட்டு கூடாதென்பதையே முன்வைக்கிறது.
அகந்தை
இன்று மட்டும் அல்ல காலந்தோறும் ஆற்றல் பெற்ற பெரும்புலவர்களில் சிலர் தானெனும் அகந்தையுடன் தனக்குப் பின்வரும் இளம்புலவர்களிடம் நடந்துகொள்வதைக் காணமுடிகிறது.அப்படிப்பட்டவர்களின் ஆணவத்தைத் தக்க முறையில் சான்றுடன் நிரூபித்து மூளியாக்க வேண்டும் என்பதை,
“முறைப்படி வென்று மூளி ஆக்கான்” (அறுவகை.புலமையி.42)
என்கிறது. சான்றாக, பாண்டியமன்னன் உக்கிரப் பெருவழுதி மதுரையில் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த காலம். சங்கத்துப் புலவர்களெல்லாம் மதுரையில் கூடியிருந்தனர். தமிழ்ப் புலமையில், தங்களைவிட எவருமிலர் என்று அகந்தையுடனிருக்கையில் ஔவையார் அச்சங்கப்புலவர்களின் செருக்கினை அடக்க முனைந்து புலவர்கள் சூழ்ந்த அவையில், சைகையால் குறிப்புணர்த்தித் தம்முடைய ஐந்து விரல்களையும் மடக்கி மூடி சைகை காட்டினார். பின்னர் கையைக் கொஞ்சம் திறந்துக் காட்டினார். அதன்பிறகு சுட்டுவிரலை மாத்திரம் நீட்டிக் காட்டினார். பின் அதற்கு விளக்கம் கேட்டார். பதிலுக்குப் புலவரிலொருவர்,
இவ்வளவு கண்ணுடையாள்
இவ்வளவு சிற்றிடையாள்
இவ்வளவு போன்ற
இளமுலையாள்? இவ்வளவா
நைந்த உடலாள்
நலமேவு மன்மதன் தன்
ஐந்து கணையால் வாடினாள்! என்று பாடினார். அதனைக் கேட்டு மனம் புழுங்கிய ஔவையார் அப்புலவர்களின் ஆணவத்தை அடக்கத் தமது குறிப்பினை உணர்த்தும் கீழ்வரும் பாடலைப் பாடலானார்.
ஐயம் இடுமின்!
அறநெறியைக் கைப்பிடிமின்!
இவ்வளவேனும் அன்னம்
இட்டு உண்மின்! தெய்வம்
ஒருவனே என்று
உணர வல்லீரேல்
அருவினைகள் ஐந்தும் அறும்! (தனிப்பாடல்-2)
எனப்பாடி புலவர்களின் செருக்கினை அடக்கினார். இது இங்கு ஒப்புநோக்கத்தக்கதாகும். ஒருவருக்கு கல்வியினால் பெரும்பயன் கருணையே அதுவே நாவலர்க்கு இறையாகும் என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.
பொறுமை
‘பொறுத்தார் பூமி ஆள்வார்’, பொறுமை கடலினும் பெரிது’ என்பது ஆன்றோர் முதுமொழி. இதனை,
முற்றும் பொறுத்தலும் மூக்கிற் கோபம்
வைத்துத் திரிதலும் வண்டமிழ்ப் புலவர்க்கு
ஆய தன்மைஎன்று அறையஒண் ணாதே.
இவ்வாறு புலவர்கள் தனது கோபத்தை இடம், பொருள், ஏவல் அறிந்து காட்ட வேண்டும்.அதுவே சான்றாண்மையுமாகும் என்றுரைக்கிறது. அதற்காக அனைத்தையும் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது இல்லை. சூழ்நிலைக்கேற்றவாறு ஒழுகுதல் நன்று என்றே கூறுகிறது.
காமச்சுவை
காமக் கடலே கதிஎனக் கருதிப்
போவார் புலமையிற் புண்ணியம் இன்றே. (அறுவகை.புலமையி.45)
தமிழ்ப் புலமையை வெளிக்காட்ட வேண்டும் என்பதற்காக ஆபாசமான நாகரிகமற்ற பண்பாட்டைச் சீர்க்குலைக்கும் சொற்றொடர்களைக் கூறுவதால் எவ்விதப் பயனுமில்லை. இதனை உணர்ந்து புலவர்கள் தமிழின் சிறப்பினை உயர்த்தும் வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும். தமிழின் பெருமையை சீர்கெடச்செய்யும் விதமாகத் தமிழரின் அகவாழ்க்கையைக் கொச்சைப்படுத்தக் கூடாது என்பதையே வலியுறுத்துகிறது. மகாகவி பாரதியாரும் தன் சின்னச் சங்கரன் கதையில் இவ்வவல நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
புரிந்துகொள்ளாத நாவலர்கள்
கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பர். குறிப்பாகத் தமிழ்க்கல்வி அறம், பொருள், இன்பம், வீடுபேறு எனும் நான்கு உறுதிப்பொருள்களை அளிக்கும் சாதனமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த நம் தாய்மொழிக்கல்வியால் பொருளீட்டவும் அதனால் இன்பம் அடைவதை மாத்திரமே குறிக்கோளாகக் கொண்டவர் புல்லியர் ஆவார். இதனை,
தெய்வம் புகழும் சிறப்பும் செந்தமிழ்
பொருந்தும்என்று உணராப் புலவர்புல் லியரே. (அறுவகை.புலமையி.46)
என்று கூறுகிறது.பொருளுக்காகவும் அதனால் பெறும் இன்பத்துக்காகவும் தமிழ்க் கல்வியைப் பெறுதல் கூடாது என்பது தெள்ளிதின் புலனாகிறது.
இரக்கம் இல்லாத புலவர்கள்
அனைத்து உயிர்களிடமும் அன்புகாட்ட வேண்டும். எவ்விடத்தில் உண்மையான அன்பு மேலோங்கி நிற்கிறதோ அங்கே தெய்வ அருளினைக் காணலாம். இரக்கம் என்பது ஐந்தறிவு உயிரினங்களிடமும் அன்பு காட்டுவதாகும். உயிர்களைக் கொன்று உணவு சமைப்பவர்களின் இழிந்த செயல்களைப் போற்றிப் பாடுகின்ற இரக்கம் இல்லாத புலவர்களை மேலோர் பேய்க்குணம் வாய்த்தவரெனப் பழிப்பர் என்று கூறுவதோடு நூல் படைப்பதன் தலையாய நோக்கம் மக்களுக்கு நன்னெறி காட்டுவதற்கே என்றும் கூறுகிறது. அதைவிடுத்து உயிர்களைக் கொலைசெய்தல் கூடாதென்பதற்கு,
கொல்லல்ஊன் சமைத்தல் ஆகிய விரித்துக்
கழறுந் துணிவுடைக் கவிப்புல வோரைப்
பேயர்என்று உலகம் பெரிதுஇகழ்ந் திடுமே. (அறுவகை.புலமையி.48) என்றுரைக்கிறது.
புலமையை விலை பேசுதல்
அரியநூலை இயற்றி அதனைப் பணத்திற்கு விலைபேசுதல் சிறப்பாகாது எனவே ஒருவரது புலமைத்திறன் விலைமதிப்பற்றது என்பதறிந்து அதனால் அதை விலைபேசுதல் தவறாகும் என்பதை உணர்ந்து தமிழ்த் தொண்டாற்ற வேண்டுமென்பதை,
புகலரும் பனுவல் பொற்பணம் கருதி
விற்கத் துணிவது மேம்பாடு அன்றே. (அறுவகை.புலமையி.49) எனவும் கூறுகிறது.
கல்வியின் சிறப்பறியாதார்
கல்வியின் சிறப்பையும் அதனைக் கசடறக் கற்றவரின் புலமைத்திறனையும் அறியாத ஒரு செல்வர் முன்சென்று தம் பெருமைகளைக் கூறி அவரை பாராட்டிப் பரிசில் வழங்குவார் என எதிர்ப்பார்ப்பது தவறாகும் என்பதை,
அருமை அறியான் அவையிடைப் புகுந்து
பெருமை பாராட்டலும் ஏனையும் பிழையே. (அறுவகை.புலமையி.50)
என்பதோடு அவர்களிடம் கைநீட்டிப் பரிசில் பெறுவதை இழிவெனவும் கூறுகிறது.
காரணம் காரியம் காணாப் புலமை
எந்தவொரு நிகழ்வுக்கும் காரண காரியம் உண்டென்பதை உணர்ந்து கற்பவரே கற்றலில் முழுமை நிலையைப் பெறுவர். அவ்வாறு இல்லாதவரின் கல்வியாற்றலை முழுமைப் பெற்றதாகக் கூறமுடியாது என்பதோடு இவ்வுலக நிலையாமையை உணர்ந்து வாழ்பவரின் புலமையே நிலையானதாகும். இதனை உணர்ந்தவராய் வாழவேண்டும் என்றும் கூறுகிறது.
தவறில்லாது தெளிவுற உரைத்தல்
”தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று” எனும் வள்ளுவரின் குறளுக்கேற்ப தாம் பாடத்தொடங்கிய துறையில் தவறாகப் பாடுவாராகில் இவ்வுலகில் எவரும் அவரை மதிக்கமாட்டார். இப்படிப்பட்டவரை,
கொண்ட துறையினைக் கோதுபடக் கூறின்
மண்டலத் தாரும் மதியார் அன்றே. (அறுவகை.புலமையி.53) என உரைக்கிறது.
அறிவு மயக்கத்தின் செருக்கு
‘அருட்பே ராளருக்கு அஞ்சாப் புலமை’
இறை அருளின் மேன்மையைப் பெற்ற பெரியவர்களிடம் புலமைச் செருக்குடன் இருத்தல் கூடாது. அவர்களிடம் பணிவுடன் நடத்தல் வேண்டும். அதாவது பயப்பக்தியுடன் கூடிய மரியாதையுணர்வுடன் பேசவேண்டும் என்பதையே கூறுகிறது.
புலவர்களின் அடிமைநிலை
ஒரு புலவர் ஒரு செல்வந்தருக்கோ அல்லது தலைவருக்கோ அடிமையாய் இருத்தலைவிட வணிகனாக இருக்கலாம் என்கிறது. மேலும் ஒருவரது புலமையை அடிமையாக்குவது அல்லது விற்பது பெரும் தவறாகுமெனவும் சாடுகிறது.
அறிவுடைமைக்குப் பொருந்தாதவை
எவரேனும் ஒருவர் இயற்றிய நூலில் அல்லது பாடலில் ஏதாவதோரிடத்தில் தவறு இருப்பது தெரிந்து அந்நூல் முழுமையும் அல்லது அப்பாடல் முழுமையும் தவறெனக் கூறுவது அறிவுடையாருக்கு ஏற்ற செயலாகாது. இதனை,
பலவகை நயங்களும் பாராது ஒருவிதக்
குற்றம் கருதிக் குதிப்பதும் புலமைக்கு
இழிந்த பான்மைஎன்று இயம்பிடல் இசைவே. (அறுவகை.புலமையி.62)
என்பதோடு இழிவான செயலெனவும் கூறுகிறது.
நற்புலமைக்கு ஆகாதன
அரசியல், ஆதாயம், பொருள் வருவாய், எளிய வழியில் செல்வாக்கடைதல் போன்றவற்றைப் பெறவேண்டி தமிழ்ப்பற்றை மிகைப்படுத்திக் காட்டிக்கொள்ளும் காரியவாதியாக இருத்தல் தவறாகும். புலமைபெற்றவர்கள் தனது புலமைக்கு ஆகாதன எவையெவை என்பதை அறிந்து நற்புலமையையே கைக்கொள்ளவேண்டும். இவ்வாறு புலமையில் களைய வேண்டிய தவறுகளை 34 நூற்பாக்கள் வழியாக அறுவகையிலக்கணம் தவறியல்பாக எடுத்துரைக்கிறது.
*****
பார்வை நூல்கள்
1.அறுவகை இலக்கணம், புலவர்.ப.வெ.நாகராசன்
2.தனிப்பாடல் திரட்டு (ஔவையார்)
கட்டுரை மிக அருமையாக உள்ளது. இலக்கணத்தை விளக்கியமை மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள்.. முனைவர் சத்தியா..