மரபணுச்சொந்தம் என்று நம்பப்படும் இந்திய – கொரிய உறவு வெறும் தொன்மப்புனைவா?

பவள சங்கரி

k

இந்தியா-கொரியா கலாச்சார உறவு குறித்த பரவலான ஆய்வுகளும், அது தொடர்பான பல்வேறு வரலாற்றுத் தகவல்களும், புராணக் கதைகளும், அவை சார்ந்த நம்பிக்கைகளும் இன்று உலகம் முழுவதும் பல வகையில் முன்னெடுக்கப்பட்டு, அவைகளின் தொடர்பான செய்திகள் ஊடகங்கள் மூலமாக புற்றீசல் போல பரவிக்கொண்டிருக்கின்றன. அதாவது, பொருளாதார, வரலாற்று, கலாச்சார மற்றும் மொழியியல் புள்ளியிலிருந்து இந்தியா-கொரியா தொடர்பான உறவுகள் உறுதியாக மையம் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. இதன் மூலம் இந்த இரண்டு நாடுகளுக்குமுள்ள பொருளாதாரக் கட்டுமானங்கள் வலுப்பெறக்கூடும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது. ஆசியாவின் இந்த இரண்டு பொருளாதார சக்திகளும் ஒன்றுக்கொன்று தங்களுக்கிடையேயான செழிப்பும் ஆரோக்கியமான உறவுகளுக்கும் பாலம் அமைக்கத் தக்க தருணமாக இருக்கலாம். இன்று உலகின் மிகவும் ஆற்றல் வாய்ந்ததும் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார மண்டலமாகவும் உள்ள மாபெரும் ஆசிய நாடுகளான கொரியா மற்றும் இந்தியா என்ற இந்த இரண்டு பெரிய நாடுகளிலும், அவர்களின் வளர்ச்சியும் பின்னிப் பிணைந்து உள்ளன. இவைகளைக் கருத்தில்கொண்டு பார்க்கும்பொழுது கொரியா-இந்தியா உறவுகளின் தற்போதைய மாற்றங்கள் வெறுமனே தற்செயலான நிகழ்வுகள் அல்ல என்றும் தோன்றுகிறது. சாம்சங், ஹூண்டாய் மற்றும் எல்ஜி போன்ற கொரிய பெரிய நிறுவனங்களின் பெயர்கள் இப்போது பெரும்பாலான இந்திய குடும்பங்களில் அன்றாட புழக்கத்தில் கலந்துவிட்ட பெயர்களில் ஒன்றாக மாறிவிட்டதையும் காணமுடிகிறது. இந்திய பொருளாதாரம் மற்றும் அதன் வளர்ச்சிக்கான அடிப்படைகளில் உள்ள நம்பிக்கையின் காரணமாக கொரிய நிறுவனங்கள் பெருமளவில் தொழில் முதலீடு செய்கின்றனர்.

இந்தியா சீனாவோடும் நெருங்கிய வர்த்தக மற்றும் கலாச்சார உறவுகளைக் கைப்பற்றியிருந்தது. பவளப்பாறைகள், முத்துக்கள், கண்ணாடி நாளங்கள் மற்றும் மணிகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்தும், சீனாவில் இருந்து ஜேட் மற்றும் பட்டும் இறக்குமதி செய்வதில் இந்தியா தொடர்ந்து ஈடுபட்டுவந்துள்ளது. இந்தியாவில் மகாபலிபுரம் மற்றும் தஞ்சாவூர் போன்ற பல இடங்களில் செம்பு அல்லது வெண்கலத்தால் செய்யப்பட்ட சீன நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. பண்டைய இந்தியர்கள் சீனாவைக் குறிப்பிடுகையில், கொரியா தன் சொந்த அடையாளத்தை கொண்டிருந்தாலும் கூட, சீனாவுடன் கொரியாவையும் உள்ளடக்கியதாகவே கூறப்பட்டிருக்கலாம். காரணம், சீன வம்சாவளியினருடன் அவர்கள் கொண்டிருந்த நெருங்கியத் தொடர்பாக இருக்கலாம்.

கொரியர்கள் தங்களின் வேரைத் தேடி அறிய முற்பட்டபோது சீனர்களாலும் சப்பானியர்களாலும் எழுதப்பட்ட வரலாறுகளின் மூலம் அவர்களுக்குக் கிடைத்த தகவலின்படி கொரிய ஆய்வாளர்கள் அவர்களின் முதல் அரசி மேற்குத் திசையில் இருந்து புலம் பெயர்ந்தவர் என்ற தகவலின் அடிப்படையில் தங்கள் தேடலைத் தொடங்கினர். இந்தியா – கொரியா என இரு நாடுகளுக்குமிடையேயான வரலாற்றுத் தொடர்பான உறவுகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே உள்ளன. புத்த மதம் கொரியா மற்றும் இந்தியா இடையே உறவுப்பாதையே உறுதியாக்கி வளர்த்தும் வந்துள்ளது.

buddha

நான்காம் நூற்றாண்டின் இடையில் கொஹுரேயோவால் புத்தம் கொரியாவுக்கு அறிமுகமானது என்றாலும் அதற்கு பல காலம் முன்பாகவே, கொரியாவின் மூன்று இராச்சியங்களின் வரலாறு மூலமாக புத்த மதம் முதன்மை பெற்றிருந்ததை அறிய முடிகிறது. ஆம் கிம் சுரோ (371-384) ஆட்சியின் போது, கொரியாவில் புத்தமதம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. சீனாவைப் பொறுத்தவரை இந்தியாவிலிருந்து கொரியாவுக்கு புத்தமதம் வந்தது என்று கூறுகிறது.

1910ஆம் ஆண்டில் கொரியா ஜப்பானியக் காலனி ஆட்சியில் கட்டுண்டது. 1907ஆம் ஆண்டில் யீ வம்சாவளியினரின் அரசியான இராணி மின் என்பவரை ஜப்பானியச் சேனைகள் கொன்றுவிட்டதோடு அரசன் கோஜோங் யையும் வலுக்கட்டாயமாக அரியணையை துறக்கச்செய்தனர். கொரியா ஜப்பானிய ஆதிக்கத்தினுள் சென்றது. இந்த இணைப்பு கொரியாவின் தேசிய ஒருமைப்பாட்டையும், கலாச்சார பாரம்பரியங்களையும், பொருளாதார வளங்களையும் வேரோடு பிடுங்கிப்போட்டது. இந்தச் சூழலில் கொரியாவில் பெரும் புலம்பெயர்வு நிகழ்ந்தது. மக்கள் கொரிய தீபகற்பத்தினுள்ளும், சீனா, அமெரிக்கா, மெக்சிகோ போன்ற நாடுகளுக்கும் புலம் பெயர்ந்தனர்.

இந்த காலகட்டத்தில் கொரிய அரசு பள்ளிகளில் சொற்பமான பெண் குழந்தைகளே கல்வி பயின்றனர். பெரும்பாலான குழந்தைகள் தனி வகுப்புகளில் சீன, கொரிய இலக்கியங்கள் மட்டுமே பயின்றனர். ஜப்பானிய ஆதிக்கத்தில் ஜப்பானிய மொழியே அதிகாரப்பூர்வ அரசு மொழியாக இருந்ததால் ஜப்பானிய மொழி கற்காதவர்கள் கல்வி கற்கவும் இயலாமல் இருந்தனர். ஆண் குழந்தைகளைப் பொருத்தவரை மத்திய தர குடும்பத்தில் இருந்தவர்கள் பள்ளி கல்வி மட்டுமே கற்றனர். மேல் மட்டத்தினரில் சிலர் சியோல், ஜப்பான் போன்ற இடங்களுக்குச் சென்று கல்லூரியிலும், உயர் கல்வியும் கற்றனர்.

காதல் திருமணம் என்ற ஒரு கோட்பாடே அறிமுகம் ஆகாத காலகட்டமாக அது இருந்தது. பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர்கள் மூலமோதான் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணம் என்பது இரண்டு குடும்பங்களுக்கான ஒப்பந்தமாகவே இருந்தது. குழந்தைகளாக இருக்கும்போதே அவர்கள் சம்பந்தப்பட்ட குடும்ப உறவுகளும் உறுதி செய்யப்பட்டுவிடும் வகையிலேயே இருந்தது. பெரும்பாலும் கன்பூசியத் தத்துவங்களே கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளன.

ஹூர் (ஹூ, ஹோ) குடும்பத்தின் மரபணுத் தொடர்புகள் நூலின் மூலமாக, கயாவின் மன்னன் கிம் சுரோ – அரசி ஹூ ஹ்வாங் ஓக் தம்பதியினரின் 35 வது பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தாங்கள் என்பதை அறிந்துகொள்கின்றனர். கி.பி. 42 – 562 காலகட்டத்தில், கொரிய தீபகற்பத்தில், கயா, சில்லா, பேக்ஜே என்ற மூன்று இராச்சியங்கள் பூசனின் வடமேற்குப் பகுதியில் 20 மைல் தொலைவில் உள்ள கிம்ஹே பகுதியில் கயா என்ற இராச்சியத்தை உருவாக்கியவன் மன்னன் கிம் சுரோ. அடுத்து வருவது சாம்குக் யுசா எனும் புராணக்கதை. ஹூர்ஹ் தனக்கு ஏற்படும் முக்கியமான சந்தேகம், மன்னன் சுரோவுடன் அந்த இளவரசி எந்த மொழியில் பேசியிருப்பார் என்பதுதான். இதற்கான விடையே இந்த கதையின் முக்கியமான முடிச்சுகளை அவிழ்க்கக்கூடிய ஒன்றாக இருக்கலாம். இந்த இடத்தில்தான் கொரிய மக்களின் மொழிகளில் கலந்துள்ள 6,000 ற்கும் மேற்பட்ட தமிழ் சொற்கள் இதன் விடையாக அமையலாம் என்பதும் சில கொரிய மொழியியலாளர்களின் அனுமானமாக உள்ளது.

கொரிய அகழ்வாராய்ச்சியாளரான ஹூர்ஹ், தன் பாரம்பரியத்தின் வேரைக்கண்டுபிடிக்கும் முயற்சியில், சுரோ மன்னனின் அரசியாக வெளிநாட்டிலிருந்து வந்தவர் இந்திய நாட்டின் அயோத்தியைச் சேர்ந்தவர் என்ற அனுமானத்தின் அடிப்படையில் ஹூர்ஹ் தன் தேடலை துவக்குகிறார்.

தன் பெற்றோருக்கு அளிக்கப்பட்ட அசரீரி வாக்கின்படி தங்கள் அன்பு மகளை இரண்டு மாத கடல்வழிப் பயணமாக அனுப்பி வைக்கிறார்கள். அவள் கொண்டு வரும் பரிசுப் பொருட்கள் மற்றும் பாதுகாப்பிற்கான கல் திட்டைகள் போன்றவைகள் புத்த மதச்சின்னங்களை நினைவுகூர்வதாக இருந்தது. அவள் கொண்டு வந்த மீன் சின்னம் மூலம் 157 ஆண்டுகள் வாழ்ந்து நல்ல முறையில் மக்களுக்கும் சேவை புரிந்த மகாராணி வந்த பட்டுப்பாதையைக் கண்டுபிடிக்க முனைகிறார். இதற்காகத் தன் பயணத்தைத் தொடங்குபவர், முதலில் மொகஞ்சதாரோவில் தன் தேடலைத் தொடங்கி தொடர்ந்து இந்துகுச் மலைவரைச் சென்று மீன் சின்னத்தைத் தேடுபவர், அதனைக் கண்டுபிடிக்க முடியாததால் அடுத்து பாகிசுதான் செல்கிறார். அங்கிருந்து அடுத்து பெசாவருக்குப் பயணம் செய்தவர் தாம் ஆச்சரியப்படும் வகையில் அங்கு காணும் இடமெல்லாம் இரட்டைமீன் சின்னத்தைக் காண்கிறார். அந்த சின்னம் ஏதேனும் சமயம் சார்ந்த சின்னமாக இருக்க வாய்ப்பில்லை என்றும் மாறாக அது ஏதேனும் சிறந்ததொரு மரபின் குறியீடாக இருக்கலாம் என்று எண்ணுகிறார். அடுத்து அயோதியா நகருக்குச் சென்றவர் அதன் புராணம் சார்ந்த பெருமைகளான, அது இராமாயனக்கால நகரம் என்று பெருமையாகப் பேசப்படுவதை அறிந்தவர் கொரிய அரசி இப்படிப்பட்ட புண்ணிய பூமியிலிருந்து வந்திருக்கலாம் என்று ஒருவித தயக்கத்துடனே முடிவெடுக்கிறார்.

அடுத்தபடியாக கொரியாவிலும் ஆதாரங்களைத் தேட முனைந்தவர் அங்குள்ள மலை சார்ந்ததொரு பகுதியில் தன் தேடுதல் வேட்டையை மேற்கொள்கிறார். அந்த மலைக்கு மீன் கடவுள் மலை என்ற பெயர் இருப்பதோடு, அங்கிருந்த புத்த விகாரையில் புத்தரின் சிலைக்கு அடியில் இரட்டை மீன் சின்னம் இருந்ததையும் அறிந்தவர் அந்த இரட்டை மீன் சின்னம் புத்த மதக்குறியீடாக இருக்கலாம் என்றும் அனுமானம் கொள்கிறார். ஆனால் இந்த நிகழ்வுகள் அனைத்தும் 1ஆம் நூற்றாண்டில் நடந்ததாகக் கூறப்பட்டிருந்த நிலையில் கொரிய வரலாற்றில் புத்த மதம் 3ஆம் நூற்றாண்டில் நுழைந்தது என்ற தகவல் அவருடைய குழப்பத்தை அதிகப்படுத்துகிறது. முடிவில் இந்தியாவிலிருந்து கடல்வழி மற்றும் தரைவழிப் பயணமாக வணிகம் செய்யும் பொருட்டு கொரியா வந்தவர்கள் புத்த தருமங்களையும், அவருடைய கொள்கைகளையும் பரவச் செய்திருக்கலாம். அதன் பொருட்டே அங்கு இரட்டை மீன் சின்னம் நிலைபெற்றிருக்கலாம் என்றும் அனுமானம் கொள்கிறார். மேற்கொண்டு அவருடைய ஆய்வுகள் மீன் சின்னம் புத்த குறியீடா என்பதில் இருக்கிறது.

கொரியாவில் கி.பி முதலாம் நூற்றாண்டில் தொடங்கி கி.பி 4 ஆம் நூற்றாண்டுவரை கோலோச்சிய கயா அரசு பல்லாயிரம் ஆண்டுகள் மூத்த குடியாக நற்சிந்தைகளை பரவச்செய்து பொருளாதார மேம்பாடு தொழில் நுட்ப வளர்ச்சி ஆகிய அனைத்துத் தளங்களிலும் இன்றுவரை தென் ஆசியாவில் முன்னணியில் இருக்கும் இரு நாடுகளின் இணைப்புச் சங்கிலியாக இருந்த அந்த இளவரசி ஆதாரங்களின் அடிப்படையில் தமிழகத்தைச் சேர்ந்தவரா என்று கண்டுபிடிக்கும் ஆய்வுகள் ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருப்பதும் நிதர்சனம்.

இந்த நிலையில்,

SOUTH KOREAN OFFICER IN KOREAN WAR WON MOO HURH, “I WIIL SHOOT THEM FROM MY LOVING HEART”

என்ற தமது நூலில் விவாதித்துள்ள சில சுவையான பகுதிகளின் தமிழாக்கத்தைப் பார்ப்போம்:

தங்கள் முன்னோர்களைத் தேடி ஒரு தொல்பொருள் ஆய்வாளரின் வரலாற்றுப் பயணம்

woo
geneஏப்ரல் 1, 2009இல் ’உய்சாங் கிம் கிளானின் , ‘உய்சாங் கிம் – சீ ஸாங்போ’ என்ற ஒரு காலாண்டு பத்திரிக்கையில் வந்த செய்தியான, ‘நாம் ஹூங்கோவின் வடக்கு பழங்குடியினரின் வாரிசுகளா’ என்ற தலைப்பிலான கட்டுரையை வாசித்தபோது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. நானும் அந்த கிளான் குடும்பத்தைச் சார்ந்தவன் என்பதால் கிளானின் அதிகாரப்பூர்வமான பத்திரிக்கையில் இப்படியொரு அற்புதமான ஆய்வு தொடர்பான அட்டகாசமான வினாவைப் பார்த்தவுடன் வியப்பாக இருந்தது.

இந்த நிலையில் (927- 936) சில்லா வம்சத்தின் சோக், கியோங்ஓக் அரசின் இளவரசனே கிளானின் மூதாதையர் என்று குறிப்பிட்டிருந்தார் அவர். இது பல நூற்றாண்டுகள் முன்பாக ஒற்றை இன நாடாக இருந்து பிற்காலத்தில் நவீன பன்முகக்கலாச்சாரத்தில் மாறிப்போன அரசு பற்றிய சமகால கொரியர்களின் வெளிப்பாடு என்பது தெளிவாகத் தெரிந்தது. இது கொரிய மக்களின் பன்முகக் கலாச்சார மாற்றத்தினால் நடந்தது.

உண்மையில் 21ஆம் நூற்றாண்டிற்கு முன்பு, ஹாம் குக் கி கிவித்வா சாங்சி யின் ஆசிரியர் கிம் ஸோங்க் – ஹோ ( இயற்கையான கொரிய குடும்பப் பெயர்கள் குழுக்கள்) வின் கூற்றுப்படி சில கொரிய கிளான் உறுப்பினர்கள் மிகவும் உணர்வுப்பூர்வமாகவும், தங்கள் இனம் மற்றும் நிற அடையாளங்களை, குறிப்பாக தங்கள் முன்னோர்கள் வெளிநாட்டு பூர்வீகம் கொண்டவர்களாக இருப்பவர்கள் என்பதை அறிந்து அதை வெளியில் சொல்வதற்கு தயக்கம் காட்டினர். அந்த ஆசிரியர் ஒரு செய்தித்தாள் தொடரில் சில கொரியப் பாடல் மற்றும் பழமொழி வாயிலாக யதார்த்தமாக அவர்களுக்கு வெளிநாட்டுப் பூர்வீகம் இருப்பதை கண்டுபிடித்தபோது சில கசப்பான நினைவுகளைப் பெற வேண்டியதாயிற்று. இதற்காக அவர் மீது நான்கு அவதூறு வழக்குகள் போடப்பட்டன. ஆனாலும் இன்று வெளிநாட்டு இன பூர்வீகங்களுக்கான களங்கம் கற்பிப்பது குறைந்துள்ளதோடு வளர்ந்து வரும் கொரிய இளைஞர்கள் தங்கள் இனம் மற்றும் நிற வேர்களையும், பாரம்பரியங்கள் குறித்தும் விசாரித்து அறிவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த புதிய ஆர்வம் , அலெக்ஸ் ஹெய்லியின் வேர்களின் வெளியீட்டிற்குப் பிறகு ஆப்பிரிக்க, அமெரிக்கர்களிடம் ஏற்பட்ட ஆர்வத்தைப் போல் இல்லை.

2000ற்குப் பிறகு பன்முகக் கலாச்சாரம் பொது மக்களிடம் பிரபலமான தலைப்புச் செய்தியாக ஆவதற்கு முன்னால், கிம் பியூங்க் – மோ, 1960களில் தங்களின் முன்னோர்களான கயா நாட்டின் அரசன் கிம் சுரோவின் மனைவியின் பூர்வீகம் பற்றி அறிய முற்பட்டார். இந்தப் பகுதியில், நான் கிம் பியுங்க் – மோ வின் இனப் பயணம், கொரியர்கள் தங்களின் முன்னோர்களின் வேர்கள் மற்றும் கொரியாவில் நாடுகளுக்கிடையேயான திருமண வரலாறுகளின் தேடலின் ஆர்வம் குறித்தும் விளக்குகிறேன்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “மரபணுச்சொந்தம் என்று நம்பப்படும் இந்திய – கொரிய உறவு வெறும் தொன்மப்புனைவா?

  1. அம்மா, அருமையானதொடக்கம்.

    தொடர்ந்து படிக்கவிரும்புகிறேன். முடிவை எதிர்பார்த்து மனம் துடிக்கத்தொடங்கிவிட்டது!

Leave a Reply

Your email address will not be published.