“அவன், அது , ஆத்மா” (52)
(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)
மீ.விசுவநாதன்
அத்யாயம்: 52
‘ கவிமாமணி ந.சீ.வரதராஜன்
கவிமாமணி நா.சீ.வரதராஜன் அவர்களை அவன் பாரதி கலைக்கழகக் கவியரங்கத்தில்தான் சந்தித்தான். அவர் ஒரு நல்ல ரசிகர். மற்றவர்களின் கவிதைகளைக் கூர்ந்து கேட்டு, படித்து அதன் நிறைகளை வாய்விட்டுக் கூறி பாராட்டி, ஊக்குவிக்கும் அற்புத ரசிகன்(ர்). அவரது கவியரங்கத் தலைமையில் கவிதை பாடுவது தனி அனுபவமாக அவனுக்கு இருந்தது. அவனிடமிருந்து கவிதைகளை வாங்கிப் படித்து விட்டு தேவைப்பட்டால் திருத்தங்களும் சொல்லுவார். கவிதையை மிக உணர்ச்சிபூர்வமாகப் படிக்கும் பொழுதே கேட்பவர்களின் இதயத்தில் அவர் சிமாசனம் போட்டு அமர்ந்து கொள்வார். ஒரு கவிதையை எப்படி அரங்கில் படிக்க வேண்டும் என்று அவனுக்குக் கற்றுக் கொடுத்தவர் அந்தக் கவிமாமணி. அவரது பிறந்த ஊர் நாங்குநேரி. அவனும் அவரது திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதால்,” டேய்…விசு..நானும் தாமிரபரணித் தண்ணியக் குடிச்வண்டா” என்று அவனிடம் வாஞ்சையாகப் பேசுவார். கவியரங்கங்களில் பங்கு பெரும் கவிஞர்களை அவர்தனது கவிதைவரிகளில் அழைத்து, பாடிய கவிஞரின் கவிதையின் ஜீவனைப் பிடித்து ரசித்து அதையும் தனது கவிதையிலேயே அவர் உணர்வுபூர்வமாகச் சொல்வதை நேரில் கேட்டவர்கள் பாக்கியசாலிகள்.
கவிஞர் வாலி ஆனந்தவிகடனில் ஸ்ரீராமாயணத்தை வசன கவிதையில் “அவதார புருஷன்” என்ற தலைப்பிட்டு எழுதி வந்தார். அவன் அதைத் தொடர்ந்து படித்துவிட்டு அன்றே காலை வேளையில் அந்தக் கவிதையின் அழகை, வார்த்தைப் பிரயோகத்தை கவிஞர் வாலியிடம் தொலைபேசியில் பகிர்ந்து கொள்வான். அவரும் அவனது கருத்துப் பரிமாற்றத்தை மிகவும் ரசிப்பார். அதுபோலவே கவிஞர் ந.சீ.வா.வும் அந்தத் தொடரைப் படித்து,” விசு…இந்தவாரம் படிச்சியா….அந்த ஆளு என்னமா எழுதறார் பாரு….ஒவ்வொரு வாரமும் பின்னி எடுக்கரார்ப்பா” என்று தொலைபேசியில் அவனோடு பகிர்ந்து கொள்வார். ஒரு முறை கவிஞர் வாலி அவர்களைச் அவன் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தான். அப்பொழுது கவிஞர் ந.சீ.வா.வைப் பற்றியும், அவர் “அவதார புருஷனை”ப் பற்றிப் பகிர்ந்து கொண்டது பற்றியும், “பீஷ்மன்” என்ற பெயரில் அவர் சிறுகதைகள், நாவல்கள் எழுதிவருவதையும் தெரிவித்தான். ” ஓ..பீஷ்மனா…அவரது கதை, கவிதைகளைப் படித்திருக்கிறேன். ஆனால் நேரில் பார்த்தது கிடையாது” என்றார் கவிஞர் வாலி. “ந.சீ.வா.வின் தொலைபேசி இருக்கிறது தரட்டுமா? என்றான். “தா..என்று வங்கிக் கொண்டு, உடனேயே அவரது இல்லத்தில் இருந்து ந.சீ.வா.வுடன் தொலைபேசியில் ஒரு பத்து நிமிடங்களுக்கு மேலாக உரையாடினார். பேசி முடித்ததும்,” விஸ்வநாதன்….ந.சீ.வா.வும் ஒரு ரசிகமணி. அவதார புருஷன் கவிதைகளை எப்படி ரசிக்கிறார் பாருங்க…அவரை ஒரு முறை வீட்டுக்கு அழைத்து வாருங்கள்” என்றார் கவிஞர் வாலி. வாரா வாரம் ந.சீ.வா. வாலியின் கவிதைகளை வரிக்கு வரி ரசித்து தொலைபேசியில் அவருடன் பகிர்ந்து கொள்வார். நேரில் பார்க்காமலேயே இருவரும் இப்படித் தங்களுக்குள் இலக்கியப் பரிமாற்றம் செய்து வந்த பொழுது, கவிஞர் ந.சீ.வா.வின் மகளின் திருமணத்திற்குக் கவிஞர் வாலி அவர்களை ந.சீ.வா.வின் மகன் பிரகாஷ் , மற்றும் குடும்பத்தார்கள் நேரில் சென்று அழைத்தனர். அவரும் வருவதாக உறுதி செய்தார். திருமணம் அடையாறில் இருக்கும் “ஆண்டாள் திருமண மண்டபத்தில்” வைத்து நடந்தது. திருமணத்திற்கு முந்தய நாள் காலையில் கவிஞர் வாலி அவர்கள் அவனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு,” விஸ்வநாதன்…..இன்று மாலையில் நம்ம ந.சீ.வா.வின் மகள் கல்யாண வரவேற்புக்கு வரலாம்னு இருக்கேன் . மண்டப வாசலில் நீங்கள் இருங்கள். நாம் இருவரும் சேர்ந்தே வரவேற்புக்குப் போகலாம்.” என்றார். அதன்படியே அன்று மாலையில் அவன் கவிஞர் வாலியின் வரவை எதிர் நோக்கி அந்த மண்டப வாசலில் காத்திருந்தான். அவரும் சரியான நேரத்தில் மண்டப வாசலில் வந்து காரில் இருந்து இறங்கிய உடன்,”விஸ்வநாதன்….எனக்கு ந.சீ.வா. யார்? என்பதைக் காட்டும். போனில்தான் பேசி இருக்கிறோம்..நேரில் சந்தித்தது கிடையாது” என்றார். அந்த மண்டபத்தில் பாரதிக் கலைகழகத்தின் தலைவர் இரா.சுராஜ், கவிமாமணி தமிழழகன், கவிஞர் ஐயாரப்பன் போன்ற இலக்கிய அறிஞர்களிடம் ந.சீ.வா. பேசிக் கொண்டிருந்தார். “அதோ நடுவில் இருக்கிறாரே..அவர்தான் ந.சீ.வா., அவரிடம் பேசிக் கொண்டிருப்பவர்தான் இரா.சுராஜ்” என்று கவிஞர் வாலியிடம் அவன் சொல்லிக் கொண்டு வந்தான். வாலி வருவதைப் பார்த்து மிகுந்த உற்சாகத்துடன் இருகைகளையும் நீட்டி,” வாருங்கள் கவிஞரே” என்று ந.சீ.வா. வரவேற்று அங்கு இருக்கும் நண்பர்களை வாலிக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்தக் காட்சியைப் பார்த்து அவன் மிகவும் மகிழ்ச்சி கொண்டான். நிகழ்ச்சி முடிந்து வாலி அவர்கள் புறப்படும் பொழுது,” ந.சீ.வா. ஒரு கவிஞர் மட்டுமில்லை…நல்ல ரசிகர்…நல்ல மனிதர் அவரது குடும்பம் நல்லா இருக்கும் விஸ்வநாதன் ” என்று வாயாரப் புகழ்ந்தார். அது நூற்றுக்கு நூறு உண்மை என்பது அவரிடம் நெருங்கிப் பழகிய அவன் போன்றவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
ந.சீ.வா. திருவல்லிக்கேணியில் வசித்து வந்த காலத்தில் அவரது வீட்டிற்கு அவனும், அவனுக்கு மனைவியும் அடிகடி சென்று பார்த்து பேசிக்கொண்டிருந்து விட்டு வருவார்கள். அவனுக்கு மனைவி சீதாலட்சுமி, வங்க எழுத்தாளர் “சரத்சந்திர சட்டர்ஜி”யின் நாவலை தமிழில் “கல்யாண மானவள்” என்ற தலைப்பில் மொழிபெயர்த்ததை “புதிய பார்வை” என்ற பத்திரிகையின் ஆசிரியர் பாவைச்சந்திரன் தொடராக வெளியிட்டு வந்தார். அந்தத் தொடரைத் தொடர்ந்து படித்து வந்த ந.சீ.வா., சீதாலட்சுமியின் மொழிபெயர்ப்பை மிகவும் பாராட்டி, அந்தக் கதையைப் பற்றியும் அவர் விவாதித்தது அவனுக்கு இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது. இப்படி உரையாடிக் கொண்டிருக்கும் பொழுதே ந.சீ.வா.வின் மனைவி அவனுக்கும், சீதாலட்சுமிக்கும் சுடச்சுட தோசை தந்து அன்போடு உபசரிப்பார்கள்.
அவன் எழுதிய “தேர்” என்ற சிறுகதையை சுபமங்களாவில் படித்து விட்டு அவனுக்கு ஒரு தபால் கார்டில் பாராட்டி எழுதியும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பேசி ஊக்கம் தந்தார். இது போன்று அவன் எழுதும் ஒவ்வொரு சிறுகதைகளையும் படித்துவிட்டு அவனோடு அவரின் விமர்சனக் கருத்தைப் பகிர்ந்து கொள்வார். கடிதமும் எழுதுவார். அதையெல்லாம் அவன் பத்திரமாக வைத்திருக்கிறான்.
பேராசிரியர் நாகநந்தி அவர்கள் பாரதியாரின் பாஞ்சாலி சபதம் கவிதையை (சேவா ஸ்டேஜ் மூலமாக நடிகர் எஸ்.வி.சகஸ்ரநாமன் குழுவினர் நடித்தது) பாரதி கலைகழகக் கவிஞர்களைக் கொண்டு நடிக்க வைத்து 1982ம் ஆண்டு நாடகமாக மயிலாப்பூர் பாரதிய வித்யாபவன் அரங்கில் அரங்கேற்றினார். அந்த நாடகத்தில் “விதுரன்” பாத்திரத்தில் மிகவும் உணர்ச்சிகரமாக ந.சீ.வா.நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.
ந.சீ.வா. எழுதிய கடேசிக் கவிதை “பிரிவு”. அதில் இருந்து சிலவரிகளை இங்கே பதிவு செய்கிறேன்:
“காலத்தின் மாயத்தில் கனவு நிழலும் மறைய
வேளை-வேகம்-மனைவி , வீட்டில் குழந்தைகள் !
ஓடியுடல் களைத்தேன்; ஓய்வுபெற்று நிற்கையிலே
நாடி வந்த இக்கடிதம் நமனுலகு நீசென்ற
சேதியினைச் சொல்கிறது! சிந்தை கலங்கவில்லை
போதிமர வாழ்க்கையதில் புத்தனென ஆனேனா?
என்றோஎன் நினைவில்நீ எரிந்துவிட்டாய் என்பதனால்
இன்றிங்கே நான்ஜடமாய் இறுகிப்போய் விட்டேனா?”
இந்தக் கவிதை அவர் இறப்பதற்கு முன்பாகக் கல்கி பத்திரிகைக்கு அனுப்பி இருக்கிறார். அது வெளியாகும் போது “ந.சீ.வா.” இவ்வுலகை விட்டு வெளியேறி விட்டார். அவர் இறந்த செய்தியை அவனுக்கு நண்பனும், ந.சீ.வா.வுக்கு மிகவும் பிரியமான எழுத்தாளரும், கல்கி பத்திரிகையில் ஆசிரியர் குழுவில் இருந்தவருமான “பா.ராகவன்” அவர்களிடம் அவன் சொன்னவுடன்,” விபரம் இன்று காலையில் எனக்குத் தெரிந்தது. மிகவும் வருந்துகிறேன். அவர் தந்த கவிதையைத்தான் இப்பொழுது இந்த வார கல்கி இதழுக்காக அச்சேற்றிக் கொண்டிருக்கிறேன். இதுதான் அவரது கடேசிக் கவிதையாக இருக்கும்” என்றார்.
கவிமாமணி, ரசிகமணி ந.சீ.வா.வின் அன்பான குடும்பத்துடன் பழகும் வாய்ப்பு அவனுக்கு இறைவன் அளித்த வரம். இன்றும் அவரது மகன் பிரகாஷ் மற்றும் குடும்பத்தார்களிடம் அவன் தொடர்பு வைத்து வருகிறான்.
20.10.2017 அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..