நாட்டுப்புறப் பாடல்களில் குழந்தைப் பாடல்களின் தாக்கம்
-பீ.பெரியசாமி
முன்னுரை
நாட்டுப்புற இலக்கியத்தைப் பற்றி தொல்காப்பியா் கூறும் போது,
“பொருள்மர பில்லாப் பொய்ம்மொழி யானும்
பொருளோடு புணா்ந்த நமைமொழி யானும்“ (தொ.செய்.173) என்று கூறுகின்றார். இவ்விருவகையும் நாடோடிக் கதைகளைப் பற்றியனவே யாகும். குழந்தை இலக்கியம் குறித்த நாட்டார் பாடல்களைப் பற்றிப் பேசும் சா.வளவன் “தாலாட்டுப் பாடல்களைக் கொண்டு நாட்டுப்புறத்தாரின் சமுதாயப் பண்பாட்டினையும் குழந்தைப் பேறு, காதல் வாழ்க்கை, பரத்தமை நெறி, தொழில், கல்வி, ஏழ்மை, சாதி, உறவின் பெருமை என்ற தலைப்புகளில் எடுத்தியம்பும்“ எனக் கூறுகின்றார். இவற்றையெல்லாம் நோக்கும்போது குழந்தை இலக்கியம் அக்காலக்கட்டத்தில் நிலவிய சமூக, பண்பாட்டு மாற்றங்களையும் நம்பிக்கைகளையும் எடுத்துரைப்பனவாகவே உள்ளன என்பதை நம்மால் அறிய இயலுகின்றது. அது எவ்வாறு இலக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
குழந்தைப் பேறு இன்மை
பெண் என்பவள் தாயாய் மாறிய பிறகே முழுமை அடைகின்றாள் என்பது நம் சமூகக் கட்டமைப்பு ஆகும். இதற்கு மாறாக ஒரு பெண் தாயாகவில்லை என்றால் அவளை இச்சமூகம் ஒதுக்கி வைத்து கொடுமைப்படுத்துவது இன்று நேற்று இல்லை இது காலகாலமாய் நடைமுறையில் இருப்பதே யாகும். ‘மக்களைப் பெற்றவளே – மகராசி’ அப்படி பெறாதவளை ‘வரடி’, ‘மலடி’ எனத் தூற்றுகிறது சமுதாயம் – (நாட்டார் வழக்காற்றியல் – ப.193) என தே.லூர்து அவா்கள் தம் நூலில் கூறியுள்ளார். இதே கருத்தை இளையதம்பி பாலசுந்தரம் அவர்ள், “குழந்தைப் பேற்றினைப் பற்றி அறியாத மக்கள் குழந்தைப் பேறு பெறுவதற்காக வேண்டிப் பல்வேறு நம்பிக்கைகளைக் கொண்டிருக்கின்றனா். சொத்துரிமையுள்ள சமூகத்தில் குழந்தைப்பேறு இன்றியமையாததும் கூட. குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் சமூகத்தில் மலடி என்று சொல்லி மங்கள நிகழ்ச்சிகளில் இருந்து புறக்கணிப்பது ஈழத்திலும் நடைபெறுகிறது“ (ஈழநாட்டார் பாடல்கள் ப.281) என்று கூறுகின்றார். இதனை கீழ்க்கண்ட சொல்லாடலின் மூலம் தெளிலாம்.
“மலடி விளைநிலத்திற்குத் தீங்கானவள்
மலடி விளைநிலத்தைப் பாழ் நிலமாக்கினாள்“ (க.கிருட்டினசாமி (தொ.ஆ) கொங்கு நாட்டுப்புறப்பாடல்கள், ப.83)
மலடியால் ஏற்படும் தீங்குகளைப் பற்றிய மக்களின் நம்பிக்கைகள் பலவற்றைத் தமிழக நாட்டுப்புறப் பாடல்கள் பலபடக் கூறுகின்றன. இவற்றால் புத்திரப்பேறு அடையாத பெண்நிலை நன்கு அறிய இயலுகிறது.
குழந்தை வேண்டிச் செய்யும் நோன்புகள்
தன்னுடைய வம்சம் தழைக்க வேண்டும் என்பதற்காகவும், தனக்கென்று கொள்ளிவைக்க ஒரு பிள்ளை வேண்டும் என்பதற்காகவும் பெண்கள் குழந்தை வரம் வேண்டி நோன்பிருத்தல் காலகாலமாக நடக்கும் ஒரு வழக்கமாகும். இதனை,
“அரசே உனைவேண்டி
ஆடாத தீர்த்தமில்லை
பொருளே உனைவேண்டி
போகாத கோயிலில்லை“ (தாலாட்டுக்கள், ஐநூறு.ப.149)
என்று தாய் தன் குழந்தையைப் பார்த்துப்பாடும் பாடலின் கருப்பொருளாக உள்ளது. மேலும்,
“உறையூரு சென்று நீங்கள் ஒரு பன்றி வாங்கி வந்தால்
பன்றியை வளா்ந்திருவே நமக்குப் பாலன் பிறக்குமென்றாள்“ (சக்திக்கனல், க.பெ.பழனிசாமி (ப.ஆ) அண்ணன்மார் சுவாமி கதை.ப.63)
என்ற மனைவி தன் கணவனிடம் தான் பிள்ளையைப் பெற வேண்டி பன்றி வளா்க்கலாம் என்கிறாள். மேலும்,
“காசி விசிறி கொண்டு
கைலங்கிரி செம்பு கொண்டு
போகிறார் உங்கள் ஐயா – உன்னைப் போல்
ஒரு புத்திரன் வேண்டுமென்று“ (தாலாட்டுக்கள் ஐநூறு.ப.172)
என்று தன் குழந்தையிடம் தாய் கூறும் படியாக இப்பாடல் அமைந்துள்ளது.
குழந்தைப் பேறு
குழந்தைப்பேறு குறித்த நம்பிக்கைகள் காலகாலமாக நம் சமூகத்தில் வேரூன்றி உள்ளன. அவற்றுள் ஒன்று,
“தை மாதப் பிறை பார்க்கத்
தவம் பெற்று வந்தவனே“ (தாலாட்டுக்கள் ஐநூறு.ப.51)
இதில் தை மாதம் குழந்தை பிறப்பது நல்லது என்பது புலப்படுகின்றது.
“தலைச்சன் பிள்ளை பெற்றவருக்குத் தாலாட்டும்
அகமுடையான் செத்தவருக்கு அழுகையும் தானேவரும்“ (க.பஞ்சாங்கம், தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு.ப.79)
என்பதில் தலைச்சன் பிள்ளை பிறந்தவுடன் தாய்க்கு தானாகவே தாலாட்டு வரும் என்பது தெரிகின்றது.
“பத்து வருஷமா என் கண்ணே – நீ
பாலனில்லா வாசலிலே
கை விளக்குக் கொண்டு நீ
கலி தீர்க்க வந்தவனோ“ (நா.வானமாமலை (தொ.ஆ) தமிழர் நாட்டுப்பாடல்கள் ப.117)
என்பதின் மூலம் குழந்தைபேறு எவ்வளவு முக்கியம் என்பது தெளிவு.
ஏழ்மை
தாம் ஏழ்மையில் இருக்கும் போது ஒரு பிள்ளை பிறந்தால் அதை வேண்டாம் என்று யாரும் சொல்வதில்லை. தம் ஏழைக் குடிசையில் பிறந்த குழந்தையைத் தாலாட்டும் தாயொருத்தி
“முத்துச் சிரிப்பழகா
முல்லைப்பூ பல்லழகா
வெத்துக் குடிசையிலே
விளையாட வந்தாயோ?“ (தமிழண்ணல், தாலாட்டு.ப.99)
என்று பாடுகின்றாள்.
தாலாட்டு
தாலாட்டு என்பது தாய் தன் நாவிலிருந்து எழுப்பும் ஓசையினால் வெளிப்படுவதேயாகும். தால் – நாக்கு, ஆட்டு – அசைத்தல், நாவசைவினால் ஏற்படும் ஓசையே தாலாட்டாகும். “தாலாட்டுப் பாடுகின்றபொழுது முதலில் ராரி ராரி ராராரோ“ (கொங்கு நாட்டுப்புறப்பாடல்கள், ப.42) என்றோ “தூரி தூரி ராராரோ“ (மேலது-43) என்றோ ஆரம்பிக்கப்பட்டது என்கின்றார் க.கிருட்டினசாமி அவா்கள் அப்படிப் பாடப்பட்ட பாட்டொன்று
“ஆராரோ ஆராரோ – கண்ணே நீ
ஆரிரரோ ஆ ராரோ
ஆரடித்தார் நீ அழுக “ கண்ணே உன்னை
அடித்தவரை சொல்லி அழு“ (கி.வ.ஜ, மலையருவி.ப.294)
மேலும்,
“பாட்டி உன்னை அடித்தாளோ
பாலலூற்றும் கையாலே?
நீட்டி உன்னை அடித்தானோ
நெய்யூற்றும் கையாலே?“ (மேலது.பா.46)
எனும் தாலாட்டுக்கள் குழந்தையின் மென்மையையும் தாயின் குணத்தையும் பிரதிபலிப்பனவாக உள்ளன.
“ஏந்தான் அழுவானோ
ஏலம்பூ வா(ய்) திறந்து
கொஞ்சி அழுவானோ
கோவக் கனி வா(ய்) நோவ“ (கொங்கு நாட்டுப்புறப் பாடல்கள்.ப.46)
எனும் பாடலில் ஏன் குழந்தை அழுகிறான் என்பதை தெரியாத தாயின் மனத்துடிப்பு இங்கே புலப்படுகிறது.
விளையாட்டுப் பாடல்கள்
விளையாட்டு என்பது குழந்தைப் பருவ வரம் ஆகும். ஒரு தாய் தன் குழந்தையை சாய்ந்தாட வேண்டி பாடுகிறாள்.
“சாய்ந்தா டம்மா சாய்ந்தாடு
சாயக் கிளியே சாய்ந்தாடு
அன்னக் கிளியே சாய்ந்தாடு
………… ………… ………….
………… …………. …………….
மாடப் புறர்வே சாய்ந்தாடு” (கி.வா.ஜ.ப.326 மலை அருவி)
மேலும், கைவீச பழக்குதல்
“கைவீ சம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு
மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய்த் தின்னலாம் கைவீசு
சொக்காய் வாங்கலாம் கைவீசு
சொகுசாய்ப் போடலாம் கைவீசு” (மேலது)
கல்லாங்காய் விளையாட்டு
“கொக்குச்சி கொக்கு
ரெட்டை சில்லாக்கு
மூக்குச் சிலந்தி
……………… …………… …………..
…………… ………….. …………….
பது;துப்பழம் சொட்டு? (மேலது.ப.500)
சடங்குகள்
“மனித நாகரிகத்தின் முன்பிருந்தே சில பழக்கவழக்கங்களை மக்கள் மேற்கொண்டிருந்தனா். தொழில்கள் மாறியதால் சமுதாய மாற்றமும் நிகழ்ந்தது. சமுதாய மாற்றத்தால் பழக்க வழக்கங்களும் காலத்திற்கு ஏற்ப மாறி வந்துள்ளன. உலகில் உள்ள அனைத்து மக்களிடமும் பழக்க வழக்கங்கள் இருக்கின்றன. ஆனால், அவை நாட்டிற்கு நாடு இனத்திற்கு இனம் மாறுபடுகின்றன. மக்களின் வாழ்க்கை நடைமுறைக்கு ஏற்பப் பழக்க வழக்கங்கள் அமைகின்றன“ (நாட்டுப்புற இலக்கியம், ப.133) என்கிறார். கிருட்டினசாமி அவா்கள். “பன் மடங்கு பெருகும் என்ற நம்பிக்கையில் செய்யப்படும் ஒருவகை வளமைச் சடங்காரும்“ (The Indian Mother Goddess, P.3) என்கிறார். வில்லியம் க்ரூக் அவா்கள், ‘தீமை தரும் ஆவிகள் தலை, வாய், காது, மூக்கு ஆகிய உறுப்புகளின் வழியாக எளிதில் புகுந்துவிடும் என்ற நம்பிக்கையில் காதில் துளையிட்டு அதில் தீய ஆவிகளை விரட்டும் சக்தி படைத்த ஏதாவது ஒரு உலோகத்தை அணிவித்தால் காது வழியாக தீய ஆவிகள் நுழைவதை தடுக்கலாம் என்ற எண்ணத்தில் இப்பழக்கம் ஏற்பட்டிருக்கலாம்’ (Religion and Folklore of Northern India, P.306) என்று கூறுகின்றார்.
காது குத்துதல்
“காது குத்துகின்ற பொழுது புத்தாடை உடுத்தித் தட்டாரை அழைத்துக் காதில் துளையிட்டுக் கடுக்கன் (காதோலை) அணிவிக்கின்றனா்“ என்கிறார் சோமலே அவா்கள். (தமிழ்நாடு மக்களின் மரபும், பண்பாடும் ப.99) தாய் மாமன் காதுகுத்த சீர் கொண்டு வருவான் என்ற செய்தி இப்பாடலில் காணமுடிகின்றது.
“மன்னன் மருமகனோ?
என் அரசன்காது குத்த“ (நா.வானமாமலை (தொ.ஆ) தமிழ்நாட்டுப்பாடல்கள்.ப.116)
மூக்குக் குத்துதல்
தமிழ் பெண்களுக்கு அழகு மூக்குக் குத்துதல் இதனை புகழேந்திப் புலவா், “முகத்துக்கழகாக மூக்குத்தி தானணிவித்தான்“ (துரோபதை குறம்.ப.10) என்று கூறுகின்றார்.
முடிவுரை
இவ்வாறாகக் குழந்தைப் பாடல்களில் குழந்தைப் பேறின்மையினால் வரும் அவலங்கள், குழந்தை வேண்டி செய்யும் நோன்புகள், குழந்தைப் பேற்றின் அவசியம், ஏழ்மை, தாலாட்டு, விளையாட்டுப் பாடல்கள், சடங்குகள் குறித்தும் சமூகத்தில் நிலவும் பண்பாட்டின் வெளிப்பாடே இவையெல்லாம் என்பதையும் விளக்கும் விதமாக இக்கட்டுரை அமைந்தது. குழந்தைப் பாடல்கள் என்பவை சமூத்தின் காலக் கண்ணாடி எனில் மிகையாகா.
******
கட்டுரையாசிரியர்
தமிழ்த்துறைத் தலைவர்
டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி
விளாப்பாக்கம்