-சிந்து.மூ

தமிழரின் இறைநெறி இயற்கை சார்ந்த ஒன்றாகவும், வழிபடும் மக்கள் சார்ந்த ஒன்றாகவும் இருந்ததைப் பண்டைய இலக்கியங்கள் உணர்த்துகின்றன. “முருக வழிபாடு” என்று பிற்காலத்தில் “கௌமார” தத்துவமாக சங்கரர் காலத்தில் உருவெடுத்தமை, தனித்த சமயத் தத்துவமாக உருப்பெறுதற்குரிய சில வித்துக்களைப் பண்டைய இலக்கியங்களின் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வகையில் இவ்விலக்கியங்கள் வழி வரலாற்று நிலையில் முருகன் தொடர்பான செய்திகளையும், குறிஞ்சி நிலத்தில் முருக வழிபாட்டின் நிலையினையும்  இக்கட்டுரை எடுத்தியம்புகிறது.

குறிஞ்சி நிலத்தின் தன்மை

குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த பகுதியாகும். இதனைப் பற்றித் தொல்காப்பியர் அகத்திணையில்,

“சேயோன் மேய மைவரை உலகமும்” 1 (தொல்.அகம்.நூ – 5) என்று  கூறுவதால் முருகன் வாழும் பகுதி மலைப்பகுதி என்பதை அறிய முடிகிறது. குறிஞ்சித் திணைக்குரிய பொழுதுகள்  கூதிர் காலமும், யாமமும் ஆகும்.(கூதிர் – ஐப்பசி, கார்த்திகை, யாமம் – நள்ளிரவு)

கருப்பொருள்

தொல்காப்பியர் குறிஞ்சி நிலத்திற்குரிய கருப்பொருள்களாகப் பின்வருவனவற்றைத் தொகுத்துரைக்கின்றார்.

தெய்வம்        – முருகவேள்

உணவு             – தினை, ஐவனம், வெதிர் நெல்

விலங்கு         – யானை, புலி, பன்றி, கரடி

மரம்                    – வேங்கை, கோங்கு

பறவை            – மயில், கிளி

பறை                  – வெறியாட்டு, தொண்டகம்

தொழில்         – தேனழித்தல்

யாழ்                   – குறிஞ்சி

பூ                           – வேங்கைப்பூ, குறிஞ்சிப்பூ

நீர்                         – சுனைநீர், அருவிநீர்

உரிப்பொருள்

குறிஞ்சித் திணையின் ஒழுக்கமாக உரிப்பொருளாக

“புணர்தலும் புணர்தல் நிமித்தமும்” 2                 (தொல்.அகம்.நூ -16) சுட்டப்படுகிறது.
குறிஞ்சி நிலம் மலையும் மலைசார்ந்த பகுதியும் என்பதால் அந்த மலைப்பகுதிக் கடவுளான முருகனை குறிஞ்சிநில மக்கள் வழிபாடு செய்தனர் என்பதனை அந்நிலத்தில் மக்கள் பயன்படுத்திய சொற்கள் வாயிலாக அறியலாம்.

குலம் நினையல் நம்பிகொழுங் கயற்கண்ணிவள்ளி
நலம்
நுகர்ந்தான் அன்றே நறுந்தார் முருகன்” 3   (த.மு.வ ப – 5)

என சீவக சிந்தாமணியிலும்,

குறமகள் அவள் எம் குலமகள் அவளொடும்
அறுமுக
ஒருவநின் அடியிணை தொழுதேம்” 4  (சிலம்பு வ.பா-17)

என சிலப்பதிகாரத்தில் வள்ளியுடன் இணைத்துப் பேசப்பட்ட குறிஞ்சிக் கடவுளான பெரும்பெயர் பெற்ற  முருகனின் “வேலனாடல்” அல்லது “வேலன் வெறியாடல்” என்ற தனிப்பண்பு சங்க  இலக்கியத்தில் அகத்திணைக் கூறாகச் சுட்டப்படுகின்றது. கடம்பு, காந்தள் மற்றும் வேங்கை போன்ற மலர்கள் முருகனுடன் மட்டும் தொடர்புபடுத்தப்பட்ட நிலையையும் சங்க இலக்கியத்தில் காணமுடிகிறது.

மேலும் குறிஞ்சித் திணையில் வழங்கப்பட்ட கொடிநிலை, கந்தழி, வள்ளி, வெறியாட்டு ஆகியவற்றைப் பற்றித் தொல்காப்பியர்,

கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கி
சிறப்பின் முதலான் மூன்றும்
கடவுள்
வாழ்த்தொடு கண்ணியே வருமே” 5  (தொல்.புறம்.நூ -85)

என்று குறிப்பிடுகிறார். கொடிநிலை, கந்தழி, வள்ளி ஆகிய மூன்றும் பாட்டுடைத் தலைமகனைச் சார்ந்ததாய் உள்ளன. இவை பின்னர்த் தோன்றிய இலக்கியத்தில் கடவுள் வாழ்த்தோடு பொருத்திப் பார்ப்பதற்கு இடமுண்டு.

கொடிநிலை

கொடிநிலையாவது கீழ்த்திசைக் கண்ணே தோன்றும் வெஞ்சுடர் மண்டிலம் எப்புறம் நீளுதல் தன்மையுடையதாதலின் கொடிநிலை எனக் கூறுவர். சூரியன், சந்திரன், அக்கினி ஆகிவற்றை வெஞ்சுடர் எனலாம்.

பூங்கண் நெடுமுடிப் பூவைப்பூமேனியாள்
பாம்புண்
பறவைக் கொடிபோல – ஓங்குக
பல்யானை
மன்னர் பணியப் பனிமலார்த்தாது
கொல்யானை
மன்னன் கொடி” 6  (பு.வெ- பா.திணை.பா-41)

குளிர்ந்த மலரால் புனைந்த மாலையினையும், கொல்லும் யானையினையும் உடைய தங்கள் மன்னன் கொடி பலவாகிய யானைகளையுடைய மன்னர் வணங்கா நிற்ப, பொலிவுடைய திருக்கண்களையும், நெடிய திருமுடியினையும், காயாம் பூவை ஒத்த திருமேனியினையும் உடைய மாயவனது பாம்பையுண்ணும் இயல்பையுடைய கருடக் கொடியை ஒப்ப, உயர்க என்று கொடிநிலையில் கூறப்படுகிறது. பாட்டுடைத் தலைவன் மன்னரின் சிறப்பினைக் குறிப்பதாகக் கொடிநிலை அமைகிறது.

கந்தழி

கந்தழி என்பது மன்னனின் அல்லது வீரனின் உயர்வைச் சுட்டும் தன்மை உடையதால் அவனது இயங்கு ஆற்றலைச் சுட்டக்கூடிய ஒன்றாக இருந்தமையைப் பின்வரும் பாடல் உணர்த்துகின்றது.

அன்றெறிந் தானும் இவனால் அரண்வலித்து
இன்றிவன்
மாறாய் எதிர்வார்யார் கன்றும்
அடையார்
மணிப்பூண் அடையாதார் மார்பின்
சுடராழி
நின்றெரியச் சோ” 7  (பு.வெ- உ.திணை.பா.7)

எக்காலத்தும்  மூட்டார்ந்த மணி அணிகலன்களையுடைய  பகைவரது மார்பின் கண் தனது ஒளியை உடைய சக்கரப்படை நின்று அழலாநிற்ப அந்த நாளிலே சோ என்னும் அரணத்தை அழித்தவனும் இவ்வேந்தனே. அத்தகைய இவன் மாறா அரண் வலியதாம் என்று தேறி இந்நாள் இவனை எதிர்க்கும் பகைவர் யாரோ உளர்? என்று கந்தழியில் கூறப்படுகிறது.

வள்ளி

வள்ளி என்பது ஓர் இலக்கிய உத்தியாக அமைந்துள்ளதை,

வந்தது கொண்டு வாராத துணர்தல்” 8  (தொல்.மர.நூ -110)

என்பதனால் அறியலாம். புலவராற்றுப்படை முதலாகிய  மூன்றும் சார்த்தி வருமெனவும் கொள்ளலாம்.முருகாற்றுப்படையுள்,

மாடமலி மறுகிள் கூடற்
இருஞ்சேற்று
அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த
முன்தாள்
தாமரைத் துஞ்சி”

என்ற வழி, ஒரு முகத்தாற் பாண்டியனையும் இதனுள் தொடர்புபடுத்தி அறியலாம்.

பூண் முலையார் மனமுருக
வேல்முருகற்கு
வெறியாடின்று” 9   (பு.வெ- பா.திணை.பா-41)

அணிகலன்களையுடைய மகளிர் தம் நெஞ்சம் நெகிழும்படி வேலேந்திய முருகக் கடவுளுக்கு வெறியென்னும் கூத்தை ஆடிய இனிப்பரவற்குச் சார்ந்து வருவதை கெடலரு மாமுனிவர் நிமிர்ந்துடன் என்னுங் கலிபாட்டினுள்,

அருதிறல் ஒருவநிற் பரவுதும் எங்கோன்
தொடுகழற்
கொடும்பூண் பகட்டெழின் மார்பில்
கயலொடு
கலந்த சிலையுடைக் கொடுவரிப்
புயல்உறழ்
தடக்கைப் போர்வேல் அச்சுதன்
ஒன்று
முதுகடல் உலகம் முழுவதும்
ஒன்றுபுரி
திகிரி உருட்டுவோன் எனவே” 10 (யாப்பு.விருத்-மேற்.28)

என்பதனுள் பாட்டுடைத் தலைமகனைச் சார்த்தியவாறு காணலாம்.

கொற்றவள்ளை

கொற்றவள்ளை என்பது புகழ்தல் கருத்தாகும் என்ற இடத்துப் பாடாண் திணையாகிறது.

மன்னவன் புகழ்கிளந்
தொன்னார்
நாடழி பிரங்கின்று”

வஞ்சி வேந்தனது புகழை எடுத்தோதி அவ்வேந்தனின் பகைவர் நாட்டின் அழிவிற்கு வருந்தீர்.

கொற்றை வள்ளை ஓர் இடத்து ஆன” 11  (தொல்.புறம்.நூ -28)

என்று தொல்காப்பியார் கூறுகிறார்.

(உ.ம்)வல்லாராயினும் வல்லு
புகழ்தலுற்
றோர்க்கு மாயோன
ஊரைசால்
சிறப்பின் புகழ்
நின்ஒன்று
கூறுவது உடையேன் என்எனின்”12  என்பதாம்.

(பு.வெ- பா.தி.பா-41)

குறிஞ்சி வேந்தன்

நான்கு நிலங்களில் ஒன்றாகிய குறிஞ்சி மலை நிலம் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மரங்கள் இருப்பது. இது குறிஞ்சி எனப்பட்டது.

சேயோன் மேய மைவரை யுலகு”

என்ற தொல்காப்பியரது வசனப்படி குறிஞ்சி நிலத்துக்கு அரசன் குன்றுதோறும் ஆடுங்குமரன் ஆவான்.

விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ”

என்று திருமுருகாற்றுப்படையில் கூறப்படுகிறது.

வேலன் வெறியாட்டு

வேலன் வெறியாட்டில் மிகச் சிறந்த தலைமையினையுடைய கோழிக் கொடியோடு பொருந்துமாறு செய்து நெய்யோடு வெண் சிறுகடுகையும் அப்பி, தான் வழிபடுதற்கு உரிய மந்திரத்தை மறைவாக ஓதி வழிபட்டு வளமான மலர்களைத் தூவி, வடிவாலும், நிறத்தாலும் ஒன்றுடன் ஒன்று மாறுபட்ட இரண்டு ஆடைகளை உள்ஒன்றும் புறம் ஒன்றுமாக உடுத்தி சிவந்த நூலைக் கையில் காப்பாகக் கட்டுவர். வள்ளைப் பொறியைத் தூவி வலிமை மிக்கதும் பெரிய காலையுடையதும் ஆகிய கொழுத்த கிடாயினது குருதியோடு பிசைந்த தூய வெள்ளரிசியைச் சிறு பலியாக இட்டுப் பிரப்பரிசி(பூவும்,அரிசியும்) கலந்து கொள்கலங்களில் வைப்பார்கள் மற்றும்  சிறிய மஞ்சளோடு நறுமணங் கமழும் சந்தனம் முதலியவற்றைத் தெளித்துப் பெரிய குளிர்ந்த செவ்வலர் மாலையினையும், பிற நல்ல குளிர்ந்த மாலைகளையும் ஒத்த அளவினதாக அறுத்து, அசையும்படி அவற்றைத் தொங்கவிட்டு மரங்கள் செறிந்த மலைப் பக்கத்தில் உள்ள நல்ல ஊர்களைப் பசியும் பிணியும்  பகையும் நீங்குக என்று வாழ்த்துவார். நறுமணப் புகை கொடுத்துக் குறிஞ்சிப் பண் பாடி முழங்குகின்ற ஓசையையுடைய அருவியுடன் இனிய இசைக் கருவிகளை முழக்குவர். சிவந்த நிறத்தினையுடைய பல பூக்களைத் தூவி அச்சம் வரும்படி குருதி கலந்த திணையையும் பரப்பி, குறமகளிர் முருகனுடைய இசைக் கருவிகளை முழக்கி “இறைவன் இவன்” என்பார் அஞ்சும்படி அம்முருகக் கடவுள் வேலன் மீது ஆவேசித்து வரச் செய்து வழிபடுவர் அம்மக்கள் வாழும் அச்சம் மிகுந்து பொருந்திய நகரின் கண் என்பதனை,

மாண்தலைக் கொடியோடு மண்ணி அமைவர
……………………………………………..
முருகு ஆற்றுப் படுத்த உருகெழு வியல் நகர்”

என்ற பாடலால் அறியலாம்.

முடிவுரை

மேற்கூறிய சான்றுகளின் வாயிலாகக் குறிஞ்சி நிலக்கடவுளாக முருகன் விளங்கியதும், குறிஞ்சி நிலத்தில் நடைபெற்ற முருக வழிபாட்டு முறைகளும், புலப்படுகின்றன.

துணைநின்ற நூல்கள்

1) மா.காந்திதாசன், தமிழகத்தில் முருக வழிபாடு, என்னெஸ் பப்ளிகேஷன், உடுமலைப்பேட்டை.

2) பேரா.மு.சண்முகம்பிள்ளை, தொல்காப்பியம், முல்லைநிலையம்,சென்னை.

3) பொ.வே.சேமசுந்தரனார், புறப்பொருள் வெண்பாமாலை, சைவசித்தாந்த நூற்பதிப்பு கழகம்,சென்னை.

4) மாணிக்கவாசகன், சிலப்பதிகாரம் தெளிவுரை, தமிழ்நிலையம், சென்னை.

5) வேங்கடசாமி நாட்டார், யாப்ப்பருங்கலக்காரிகை, சைவசித்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை.

******

கட்டுரையாளர்
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக்கழகம்,
ஈச்சநாரி,
கோவை-21.

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *