-எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

மனங்கவரும் மார்கழியில்
மகத்தான நாட்கள்வரும்
இந்துக்கள் கிறீத்தவர்கள்
எல்லோரும் பங்குகொள்வர்    jayarama
வைஷ்ணவமும் சைவமும்
வாழ்த்திநிற்கும் திருவெம்பா
மார்கழியின் முக்கியமாய்
மனமாசை அகற்றிநிற்கும்!

ஒளிவிழா எனும்பெயரால்
உத்தமராம் யேசுபிரான்
வழிநிற்போர் அனைவருமே
வாழ்த்துக்கூறி நிற்பார்கள்
பீடுடைய மாதமாய்
மார்கழியும் அமைந்துதுநின்று
பெருமகிழ்ச்சி வருவதற்குத்
தைதனக்கு வழிகொடுக்கும்!

தைபிறந்தால் வழிபிறக்கும்
என்கின்ற நம்பிக்கை
தளர்வுநிலை அகன்றுவிடத்
தானுரமாய் அமைந்திருக்கு
பொங்கலென்னும் மங்கலத்தை
பொறுப்புடனே தருகின்ற
எங்கள்தையை எல்லோரும்
இன்பமுடன் வரவேற்போம்!

புலம்பெயர்ந்த நாட்டினிலும்
பொங்கலுக்குப் பஞ்சமில்லை
நிலம்பெயர்ந்து வந்தாலும்
நீங்கவில்லை பண்பாடு
நலந்திகழ வேண்டுமென்று
யாவருமே நினைத்தபடி
உளம்மகிழப் பொங்கலிட்டு
உவகையுடன் இருந்திடுவோம்!

வாசலிலே தோரணங்கள்
வடிவாகக் கட்டிடுவோம்
வண்ணப் பொடிகொண்டு
கோலங்கள் போட்டிடுவோம்
எண்ணமெலாம் இறைநினைவாய்
எல்லோரும் இருந்திடுவோம்
எங்கள்வாழ்வு விடிவுபெற
இணைந்து நின்றுபொங்கிடுவோம்!

ஆரோக்கியம் ஆனந்தம்
அனைவருக்கும் வரவெண்ணி
ஆண்டவனை மனமிருத்தி
ஆவலுடன் பொங்கிடுவோம்
வேண்டுகின்ற அத்தனையும்
விரைவாகக் கிடைத்துவிட
நாங்களெல்லாம் ஒன்றுசேர்ந்து
நன்றாகப் பொங்கிடுவோம்!

 

 

                 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.