**வல்லமை வாசகர்கள் படைப்பாளிகள் அனைவர்க்கும் எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!**

-மேகலா இராமமூர்த்தி

seashore playing

கடற்கரையோரம் அக்கறையோடு மணல்வீடு கட்டும் மழலையரை அழகிய புகைப்படமாக்கியிருக்கின்றார் திரு. வெங்கட் சிவா. இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவரும் என் நன்றிக்குரியவர்கள்.

”ஓடி விளையாடு பாப்பா – நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா”
என்றான் மகாகவி.

விளையாட்டு, குழந்தைகளின் உடலுக்கு உரம் சேர்க்கும். உளத்துக்கு வளம் சேர்க்கும். ஆதலால் பிள்ளைகளைப் பள்ளிப் படிப்புக்குள் முடக்கிப் போடாமல் துள்ளித் திரியவும் அனுமதிப்பதே நன்று!

புகைப்படத்திற்குத் தம் கற்பனையால் மெருகூட்ட வருகின்றார்கள் கவிஞர் பெருமக்கள். அவர்களுக்கு நல்வரவு சொல்வோம்!

*****

கருவிலிருக்கும் குழந்தைக்கும் கல்விபுகட்டும் மடமையை, அன்னை மொழியை மறந்து அந்நிய மொழிக்குச் சாமரம் வீசும் பாமரத்தனத்தைச் சாடும் கவிஞர் . செந்தில் குமார், பிள்ளைகளின் பாடச்சுமை குறைப்போம்; நற்சிந்தனைகளால் அவர்தம் உளம் நிறைப்போம் என்று பொன்மொழி பகர்கின்றார்.

அகவைக்குரிய கல்வியளிப்போம்! அன்னை மொழியைக் காப்போம்!!

நீலக் கடலோரம்
நிலமகளின் மடிதவழும்
பொன்னிற மணற்பரப்பில்
பொங்கிவரும் பூரிப்பில்
பள்ளி விடுமுறையில்
பக்கத்துக் கடற்கரையில்
புத்தகப் பொதிதுறந்து
பாடத்தின் சுமைமறந்து
மனவழுத்தம் நீங்கும்படி
மனதினிக்க விளையாடி
பொழுதைக் கழிக்கின்ற
பாலகரின் இனிக்கின்ற
உளக் களிப்பினூடே
உலகத்தைச் சிந்திப்போம்!

இந்தத் தலைமுறையின்
இளம் பிஞ்சுகளின்
சின்னஞ் சிறுமுகத்தில்
சிங்காரத் திருமுகத்தில்
இம்மி அளவேனும்
இருக்கிறதா பூரிப்பு?
கருவிலிருக்கும் குழந்தைக்கும்
கல்வி புகட்டுகின்ற
கலிகால உலகமிது!
தன்னிகர் இல்லாத
தாய்மொழியைப் புறக்கணித்து
அலங்கார மொழியாக
ஆங்கிலத்தைத் தலையில்வைத்து
வியப்புடன் கொண்டாடும்
விந்தை உலகமிது!

அகவைக்குரிய அளவின்றி
அதிகளவு சுமையேற்றி
பயிற்றுவிக்கும் கல்வியினால்
பள்ளிக் குழந்தைகளும்
சிறகொடிந்த கிளியாகி
சிரிப்பறியா விலங்காகி
பெற்றோரின் ஆசிரியரின்
பேராசைக்கு உட்பட்டு
வதைக்கு ஆட்பட்டு
வாடிப்போய் நிற்கின்றார்!
அன்னைமொழி கொண்டு
ஆங்கிலமொழி களைந்து
அகிலத்தில் கோலோச்சும்
அயல்நாடுக ளேராளம்!

இதையே மனதிற்கொண்டு
இனியேனும் குழந்தைகளைப்
பாடாய்ப் படுத்தாமல்
படிப்பின் சுமைக்குறைத்து
பக்குவப்பட்ட நிலையுடனே
பரந்த மனதுடனே
நீதிநெறிகள் புகட்டி
நற்பண்பு பலகொண்ட
நல்ல குழந்தைகளை
நாளைய தலைமுறையை
ஒழுக்கத்தில் சிறக்கும்படி
ஒற்றுமை பேணும்படி
உருவாக்கி உலகுக்களிப்போம்!
உன்னத நிலையடைவோம்!

*****

”மின்னல்போல் மறையும் நீர்க்குமிழி வாழ்க்கையில் யார்க்கும் இன்னல் இழைக்காது அன்பைத் தேடு அறிவை நாடு” என்று மழலையரை அழகாய் வழிநடத்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

தேடு தேடு…

சின்னப் பிள்ளைகள் மணலினிலே
சிதறிய காசைத் தேடுதல்போல்,
மின்னல் போலே மறைந்துவிடும்
மிகவும் சிறிய வாழ்வினிலே,
இன்னல் எவர்க்கும் செய்யாமல்
இணைந்தே ஒன்றாய் வாழந்திடவே,
அன்பைத் தேடு மனிதரிடம்
அறிவைத் தேடிடு அகிலத்திலே…!

*****

”எட்டுமறிவை இளமையில் இழந்தால் நட்டம் பலவுண்டு தம்பிகளா! கட்டும் மணல்வீடு கடலலை வந்தால் கரைந்தோடிப் போய்விடும் நம்புங்கடா” என்று வெள்ளத்தால் அழியாத கல்வியின் சிறப்பைத் தன் கவிதையில் அழகாய்ச் செப்புகின்றார் திரு. எஸ். கருணானந்தராஜா. 

சின்னப் பசங்களா என்ன பண்றீங்கடா
இன்னும் பள்ளிக் கூடம் போகலையா
மண்ணைக் குமிச்சிப் பொய்மாளிகை கட்டவா
எண்ணி இருக்கீங்க வாண்டுகளா!

கட்டிடும் வீட்டைக் கடலலை வந்து
கரைச்சிக் கொண்டோடிடும் தம்பிகளா
கற்குமறிவை அழித்திட எந்தக்
கடலலையாலும் முடியாதடா!

எட்டுமறிவை இளமை இழந்திடில்
நட்டம் பலவுண்டு நம்புங்கடா.
விட்டு விட்டாலெங்கள் கல்வியை வீணில்
விலைகொடுத்தாலும் கிடைக்காதடா!

மண்ணைக் குவித்துப் பல் மாளிகை கட்டினும்
வாழப் பொருந்துமோ வாண்டுகளா
உண்ணவுணவும் உறையுளும் சேர்த்திட
எண்ணத்தைக் கல்வியில் வையுங்கடா

கற்பனைகூட்டிக் கடற்கரை மீதில் மண்
கட்டிடம் கட்டுதல் இன்பமடா
சொற்பமும் கல்வியில் அக்கறை யின்றியே
சோம்பிடிலோ வரும் துன்பமடா

கைப்பணி, சித்திரம், சிற்பமென்றே பல்
கலைகள் பழகவும் வேண்டுமடா
கற்பதிலும் நம் கவனமிருந்திடில்
அற்புதமாகிடும் வாழ்க்கையடா

எப்படியாச்சும் உம் கல்விக்கு முன்னிடம்
என்றும் கொடுங்களெம் தம்பிகளா
அப்புறம் ஓய்வில் அனைவரும் சேர்ந்து
அடியுங்கள் லூட்டி அஃதின்பமடா.

***** 

மண்ணிலே கட்டும் வீட்டைப் போல் மண்ணுலக மாந்தரும் வேந்தரும் கட்டும் எண்ணிலா மனக்கோட்டைகளும் நிலைப்பதில்லை எனும் வாழ்வியல் உண்மையைத் தன் சந்தக் கவியில் சத்தமாய்ச் சொல்லியிருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி. 

மண் வீடு..! மனக்கோட்டை..!

மண்ணில் உழலுகின்ற பல்லுயிரிலே…மனிதர்களுக்குள்…
……….மனதிலாசை பேராசை இல்லாதவர் உண்டோசொல்.?.
மண்ணில் பிறந்தவரெலாம் பாவச்செயல் செய்தாலும்…
……….மேலுலகுநரகுக்குச் செல்லாரெனச் சொல்ல முடியுமா.?.
மண்ணில் பிறந்தமனித வுயிரொன்று இந்நிமிடம்வரை...
……….மனதாலும் பாவம்செய்விலார் யாரெனக் கூறுவாயா.?.
அண்டக் கோள்கள் தங்களுக்குள் சண்டையிட்டால்…
……….உண்டிதான் கிடைக்குமா.? உலகம்தான் செழிக்குமா.?.
.
மண்ணுலகை ஆட்சிசெய்த மன்னனின் மனதிலெழும்…
……….நல்லெண்ணம் எல்லாவற்றும் வெல்வதில்லையே ஏன்.?.
மண்ணுலகு வாழ்வே நிரந்தரமென நிலையாய்நம்பும்…
……….மாந்தர்களும் இவ்வுலகில் இல்லாமல் இல்லையேஏன்.?.
பண்டுநாம் உணர்ந்தபல அனுபவங்களே நம்வாழ்வில்…
……….பயன்கொடுக்கும்!எண்ணிநாம் செயல்படும் தருணமிது.!.
மண்ணிலே மணல்வீடு கட்டியழிக்கும் செய்கைபோல…
……….மனக்கோட்டை கட்டிநிறைவிலா வாழ்ந்திடல் தகுமோ.?

*****

மணல்வீடு கட்டும் மழலையரைக் கண்ட கவிகள், அருவியாய் அருந்தமிழ்க் கவிதைகளைக் கொட்டிச் சென்றிருக்கின்றனர். பாராட்டுக்கள் அவர்களுக்கு!

இவ்வாரத்தின் சிறந்த கவிதை இனி…

விளையாட்டுப் பருவம் 

இறைவன் வழங்கிய பிள்ளைப் பருவம்!
கவலைகள் தெரியாத இனிய பருவம்!
துள்ளித் திரிந்த இனிய தருணம்!
விளையாடி மகிழ்ந்த வசந்த காலம்!
மணலில் வீடு கட்டி மகிழ்ந்திருந்தோம்!
கண்ணாமூச்சி விளையாடிக் களித்திருந்தோம்!
இன்னும் எத்தனை எத்தனை விளையாட்டு!
ஓடிப் பிடிக்கும் விளையாட்டு!
கபடி விளையாட்டு!
பச்சைக் குதிரை தாண்டும் விளையாட்டு!
கிளித்தட்டு விளையாட்டு!
கல்லா, மண்ணா விளையாட்டு!
பாடம் படித்த நேரம் குறைவு!
விளையாடி மகிழ்ந்தது மனத்திற்கு நிறைவு!
இன்றோ அசையாத பதுமைகளாய்ப் பிள்ளைகள்!
பாதி நேரம் தொலைக்காட்சி!
மீதி நேரம் கையில் அலைபேசி!
நான் சொல்வதைக் கொஞ்சம் யோசி!
ஆடாத மயிலைக் கண்டதுண்டா!
பாடாத குயிலைப் பார்த்ததுண்டா!
விளையாடாத பிள்ளைப் பருவமுண்டா!
நீ ஒன்று சேர்ந்து விளையாடு!
மனம் மகிழ்ந்து கொண்டாடு!

”பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல்
பசியாத நல்வயிறு பார்த்ததுண்டோ?” என்பார் பாவேந்தர். அவ்வரிசையில்,

”ஆடாத மயிலைக் கண்டதுண்டா?
பாடாத குயிலைப் பார்த்ததுண்டா?
விளையாடாப் பிள்ளைப் பருவமுண்டா?” என்று கேள்விக்கணை தொடுக்கின்றது இக்கவிதை. ”மனமினிக்கும் மழலைப் பருவம் மகிழ்ந்து விளையாடவே! தொலைக்காட்சியில் தொலையவோ, அலைபேசியோடு அலையவோ அன்று!” என்பதை நச்சென்று சொல்லியிருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. பழ. செல்வமாணிக்கத்தை மெச்சுகின்றேன். அவரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 143-இன் முடிவுகள்

  1. இதை விட ஒரு சிறந்த பொங்கல் பரிசு இருக்க முடியாது. நான் எழுதிய கவிதையை இந்த வாரத்திற்கான சிறந்த கவிதையாய் தேர்வு செய்த
    திரு.மிகு மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும், வல்லமை ஆசிரியர் குழுவிற்கும், மற்றும் என் சக கவிஞர்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *