இலக்கியம்கவிதைகள்பத்திகள்

“ஸ்ரீராம தர்ம சரிதம்” (22)

 

 

மீ.விசுவநாதன்

 

பகுதி: 22

பாலகாண்டம்

ஸ்ரீராம-தர்ம-சரிதம்-1

“ஜனகருடன் சந்திப்பு”

சனகருடை நாட்டிற்குள் சடைமுனியும் சோதரரும்

தவச்சாலை காணச் சென்றார்

அனைவருமே கௌசிகரை அன்போடு உபசரித்து

அவர்களுக்கு இடமும் தந்தார்

மனமகிழ்ந்து புரோகிதராம் சதானந்தர் சனகரிடம்

வந்தவர்கள் புகழைச் சொல்ல

கனகமென ஒளிமுகத்துக் காளையர்கள் பாத்தவர்கள்

கல்யாண குலத்தைக் கேட்டார் !

மாமுனியோ இவ்விருவர் மாமன்னன் தசரதரின்

வரம்பெற்ற பிள்ளை என்றார் !

காமுகியாம் தாடகையைக் காட்டினிலே வென்றுவந்த

காலவரம் இவர்கள் என்றார் !

சேமமுற அகலிகைக்குச் சிறப்பான வாழ்வளித்த

செங்கதிரோன் இந்த ராமன் !

நாமுமது வேள்வியுடன் நாள்பட்ட “வில்லையும்”

நன்றாகக் காண வந்தோம் !

“விசுவாமித்திரர் வரலாறு”

அகலிகையின் மகனான “சதானந்தர்” முனிவரது

அடிபணிந்து அவரின் வாழ்வை

சுகமாக ராமனுக்குச் சொல்லிடவே ஆரம்பித்தார் !

“கௌசிகனாம் மன்னன் காட்டில்

அகத்துள்ளே ஆழ்ந்திருந்த “வசிட்டரது”

ஆஸ்ரமத்தை வியந்து பார்த்து

முகத்தினிலே முன்னூறு சூரியனின் ஒளிபெற்ற

முனிவரடி தொழுது நின்றார் !

வசிட்டரின் “காமதேனு”

வசிட்டருமே மன்னரினை வரவேற்று பசரித்தார்

வயிறார உணவும் தந்தார் !

பசித்தவர்க்கு உணவளித்த காமதேனு திறம்வியந்து

பக்குவமாய் அதனைக் கேட்க

விசித்திரமாய் இருக்குதென வசிட்டரிஷி சொன்னதற்கு

விசுவாமித் திரரோ கோபச்

சிசுவாக மாறிவிட்டார்; ரிஷியுடனே

சினத்தோடு போரும் செய்த்தார் !

“கெளசிக மன்னன் தோற்றார்”

போரினிலே வசிட்டர்தான் புகழ்மிக்க வெற்றிகண்டார்!

புழுங்கினரே விசுவா மித்ரர் !

நேரிடையாய் மகனுக்கு அரியணையைத் தந்திட்டு

நிம்மதியாய் தவத்தைச் செய்தார்!

ஆயிரமாம் ஆண்டுகளாய் ஆழ்ந்திருந்த உள்ளத்தில்

அரன்தோன்றி அவரை மெச்சி,

தூயவராம் ராஜரிஷி வேண்டுகையில் ஆயுதங்கள்

தோன்றுகிற வரத்தைத் தந்தார் !

மீண்டும்போர் முழக்கமிட்டு வசிட்டரது ஆஸ்ரமத்தை

விசுவாமித் ரர்தான் தாக்க

கூண்டோடு அங்கிருந்தோர் ஓடித்தான் ஒளிந்துகொள

குற்றமிலா பிரும்ம ரிஷியைத்

தீண்டவந்த அஸ்திரங்கள் தெய்வதண்டம் முன்னாலே

தீய்ந்துடனே ஓய்ந்து போக

மூண்டுவிட்ட சண்டையங்கு முடிவுக்கு வந்தாலும்

முடியாத பகையே மிச்சம்.

 

(தர்ம சரிதம் வளரும்)

 

(ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 50,51,52,53,54,55,56ம் பகுதி நிறைந்தது)

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க