ஒளிரும் ஒற்றை நட்சத்திரம்!

-மேகலா இராமமூர்த்தி

சில நட்சத்திரங்கள் புகழ்வானில் அதிக ஒளியோடு பிரகாசிக்கின்றன. ஆனால் அவற்றிற்கு ஈடான ஏன்…அவற்றினும் மேம்பட்ட திறனுடைய பிற நட்சத்திரங்கள் ஒளிமங்கிப் போய்விடுகின்றன. 16ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஆங்கில நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியரை shakeஇதற்குச் சான்றாகக் கூறலாம். அவர் திறமையானவர் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை; அவர் திறமையைக் குறைத்து மதிப்பிடுவதும் நம் நோக்கமில்லை. எனினும் அவர் ஒருவரே அக்காலகட்டத்தின் தலைசிறந்த நாடக ஆசிரியர் (Playwright), படைப்பாக்கமெனும் பால்வெளியில் (Galaxy) மின்னும் தகுதிபெற்ற ஒற்றை நட்சத்திரம் என்று சொல்லுவதற்கில்லை. எழுத்துவன்மையும் படைப்பாற்றலும் மிக்க அவரின் சமகாலப் படைப்பாளிகள் பலர் அவரளவுக்கு ஒளிராமல் போய்விட்டார்கள் எனும் தன்னுடைய வருத்தத்தை 1989-ஆம் ஆண்டில் தான் வெளியிட்ட ’Shakespeare Reinvented’ என்ற நூலில் துணிச்சலாகப் பதிவுசெய்திருக்கின்றார் அதன் ஆசிரியரும், புளோரிடா மாகாணப் பல்கலைக் கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியருமான கேரி டெய்லர் (Gary Taylor, Florida State University.)

ஷேக்ஸ்பியரின் சமகாலத்தவரும் அவரைப் போன்றே நாடகங்கள் எழுதுவதில் பெயர்பெற்றவருமான மார்லோ (Christopher Marlowe), ஷேக்ஸ்பியரின் நாடகமான ஹென்றி VI-இன் முதல் மூன்று பாகங்களில் ஷேக்ஸ்பியரோடு இணைந்து பணியாற்றியிருக்கின்றார். மார்லோவைப் போலவே, தாமஸ் நாஷ் (Thomas Nashe), ஜார்ஜ் பீல் (George Peele), தாமஸ் ஹேவுட் (Thomas Heywood), பென் ஜான்சன் (Ben Jonson), ஜார்ஜ் வில்கின்ஸ் (George Wilkins), தாமஸ் மிடில்டன் (Thomas Middleton), மற்றும் ஜான் ஃப்ளெட்சர் (John Fletcher) போன்ற பல படைப்பாளிகள் ஷேக்ஸ்பியரின் இதர 14 நாடகங்களில் அவரோடு இணைந்து பணியாற்றி அந்நாடகங்களைச் செம்மைப்படுத்தியிருக்கின்றனர் எனும் உண்மையைச் சில ஆண்டுகளுக்குமுன் வெளியிட்டார், கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஷேக்ஸ்பியரின் நாடகங்களை ஆய்வுசெய்து வரும், பேராசிரியர் டெய்லர்.

இச்செய்தி கேட்டுத் திகைக்கவோ திடுக்கிடவோ வேண்டியதில்லை. காரணம் அன்று எழுதப்பட்ட நாடகங்கள் ஒவ்வொன்றுமே பலரின் பங்களிப்போடு உருவானவையே. ஆம், அன்றைய மேடை நாடகங்களை இன்றைய திரைக்கதைகளோடு நாம் ஒப்பிடலாம். நாடகத்தின் கரு ஒருவருடையதாக இருக்கும். ஆனால் மேடையேற்றுவதற்குமுன் அதனை அழகாய் உருவேற்றுவதிலும், திருத்தங்கள் செய்து மெருகேற்றுவதிலும் பல எழுத்தாளர்களின் பங்களிப்பு இருந்திருக்கின்றது என்பதை அறிந்துகொண்டால் நாம் திகைக்க மாட்டோம்.

1590-இல் மார்லோ எழுதிய ’மால்டா நகர யூதன்’ (The Jew of Malta) எனும் நாடகத்தைப் பெரிதும் ஒத்திருக்கின்றது,marlowe 1596வாக்கில் ஷேக்ஸ்பியரால் படைக்கப்பட்ட ’வெனிஸ் நகர வணிகன்’ (“The Merchant of Venice)  எனும் புகழ்பெற்ற நாடகம் என்பது திறனாய்வாளர்களின் கருத்து. கிறித்தவர்களை வெறுக்கும் மால்டா நகரத்தைச் சேர்ந்த யூதனான பராபஸ் (Barabas) பாத்திரப் படைப்பின் பிரதிபலிப்பை வெனிஸ் நகர யூத வணிகனான ஷைலக்கிடம் (Shylock) நாம் காணமுடிகின்றது. அதுபோலவே ஷேக்ஸ்பியரின் வரலாற்று நாடகங்களை முன்மாதிரியாகக் கொண்டே மார்லோ ’Edward II’ நாடகத்தை எழுதினார் என்ற கருத்தும் உண்டு.

இணைந்து சில நாடகங்களில் பணியாற்றிய ஷேக்ஸ்பியரும் மார்லோவும் பின்னர் பகைவர்களாகிப் போனார்கள் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் இதனை நிரூபிப்பதற்குச் சான்றுகள் இல்லை.

ஷேக்ஸ்பியருக்கு இணையான திறனும் படைப்பூக்கமும் பெற்றவரான  மார்லோ, தன்னுடைய 29ஆவது வயதிலேயே மர்மமான முறையில் குத்திக்கொல்லப்பட்டார் எனும் செய்தி அதிர்ச்சியளிப்பதாய் இருக்கின்றது. அரசாங்கத்துக்கு எதிரான அவருடைய சுதந்தரச் சிந்தனைகள் அதற்குக் காரணமாயிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. (அரசாங்கத்துக்கு எதிரான சிந்தனைகளும் செயற்பாடுகளும் கொண்ட படைப்பாளிகள் கொடூரமாய்க் கொல்லப்படுவது எல்லாக் காலத்திலும் நிகழும் கொடுமைதான் போலிருக்கின்றது!)

சமகாலத்தைச் சேர்ந்த இரு சிறந்த படைப்பாளிகள் மார்லோவும் ஷேக்ஸ்பியரும். இதில் ஒருவர் புகழின் உச்சத்தைத் தொட, மற்றொருவர் புகழ்வெளிச்சம் படாமலே காணாமற்போனதற்கு அவருடைய இளவயது அகால மரணமும் முக்கியக் காரணம் எனலாம். மார்லோ மட்டும் இன்னுமோர் இருபதாண்டு காலம் கூடுதலாக வாழ்ந்திருந்தால் அவருடைய படைப்புக்களும் வரலாற்றில் அழிக்கவியலாத் தடம்பதித்து, மக்கள் மனத்தில் அகற்றவொண்ணா இடத்தைப் பெற்றிருக்கக்கூடும் என்றே எண்ணத் தோன்றுகின்றது.  

ஒன்று மட்டும் நிச்சயம்! புகழ்பெறுவதற்குத் திறமை மட்டும் போதாது; கூடவே ஆகூழும் நீண்ட ஆயுளும் இருக்கவேண்டும்.

*****

References:

https://www.newyorker.com/books/page-turner/the-radical-argument-of-the-new-oxford-shakespeare

https://www.theguardian.com/culture/2016/oct/23/christopher-marlowe-credited-as-one-of-shakespeares-co-writers

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.