இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 9

அவ்வை மகள்

வேட்கை இருந்தால் மட்டுமே உலகை மாற்ற முடியும்

இறையியல்-சிந்தனைகள்

‘People with Passion can change the world for the better’ என்பது ஸ்டீவ் ஜாப்ஸின் பொன்மொழி. உலகை இன்னும் சிறப்புறடைத்ததாய் மாற்ற வேண்டும் என்கிற வேட்கை ஸ்டீவ் ஜாப்ஸிற்கும் வள்ளலாருக்கு ஒன்று போல் இருந்தது. இவ்வகையில் இவர்களிருவரையும் ஒப்பிட்டு நோக்கவேண்டுமெனில், உலகை மாற்றவேண்டும் என இருவரும் ஏன் வேட்கை கொண்டனர் என்பதிலிருந்து துவங்குவது நல்லது.

19-ம் நூற்றாண்டில் தமிழகத்தில் தோன்றிய சமூக-சமய சீர்திருத்த இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர் வள்ளலார். ஆன்மிகம் ஒரு தலையாய இக்கட்டில் இருந்த காலகட்டத்தில், ஆன்மீக விழிப்புணர்வு வாயிலாக மட்டுமே அங்கு, சமூகத்தில் நிலவும் தாழ்வுகளைக் களையமுடியும் என்பதான வேட்கை கொண்டவர் வள்ளலார். எனவே தனது ஆன்மீகப்பாண்டித்தியத்தை மிகச் சரியாகப் பதப்படுத்தி – அதனைப் பயன்படுத்தி – சமுதாய சீர்திருத்தங்களை சமய உணர்வு வாயிலாக விளைத்தவர் அவர்.

21-ம் நூற்றாண்டில் உலகில் தோன்றிய தொழில்நுட்பச் சீர்திருத்த இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். தொழில் நுட்பம் ஒரு தலையாய இக்கட்டில் இருந்த காலகட்டத்தில், தொழில் நுட்ப விழிப்புணர்வு வாயிலாக மட்டுமே அங்கு, சமூகத்தில் நிலவும் தாழ்வுகளைக் களையமுடியும் என்பதான வேட்கை கொண்டவர் ஸ்டீவ் ஜாப்ஸ். எனவே தனது தொழில்நுட்பப் பாண்டித்தியத்தை மிகச் சரியாகப் பதப்படுத்தி – அதனைப் பயன்படுத்தி – சமுதாய சீர்திருத்தங்களை தொழில்நுட்ப உணர்வு வாயிலாக விளைத்தவர் அவர்.

ஆக, சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் இவர்கள் பார்வையில் பட்டதன் காரணம் – இவர்களது இயக்கம் எழுந்தது என்றே கொள்ளலாம். ஆனால், சமுதாய ஏற்றத்தாழ்வுகள் என்பவை பூமியின் நிலப்பரப்பிலே எங்கோ ஓரிடத்திலே ஏற்படும் சிறு பள்ளமோ சிறு மேடோ அல்ல. சமுதாய ஏற்றத்தாழ்வுகளின் பரிமாணம் வெகுபெரியது. நீள -அகல-ஆழ அளவீடுகள் கொண்டு பார்த்தால், பூகோளத்தைத் தீண்டி, புலம் பல கடந்து, புலன்களைத் தழுவி நிற்கும் மனப்பிரதேசங்களினூடே மனிதர்கள் பற்றி நிற்கும் நம்பிக்கைகளுக்குள், அவர்களது பழக்கவழக்கங்களுக்குள், அவர்தம் தலைமுறைக் கடப்பாடுகளுக்குள், பூடகமாகவும் உறுதியாகவும் விளைந்தெழுந்து பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்பவையே ஏற்றத் தாழ்வுகள். இவை ஒரு நாளில் உருவாவதில்லை ஆனால் ஒவ்வொரு நாளும் முளைப்பவை – வளர்பவை-வேர்விடுபவை. எனவே, நேற்றைய விருட்சத்தின் ரூபம் இன்று – மெருகேறுகிறது – பலப்படுகிறது, வலிதாய்ப் பொலிகிறது; நாளை இன்னமும் பெரிதாய் திடமாய் அது வேரூன்றும் எனும் கதையாய், பரிணாம வளர்ச்சி காண்பவை ஏற்றத் தாழ்வுகள்.

மேலும், சமுதாய ஏற்றத்தாழ்வுகளை சும்மாவேனும் எவரும் ஓரிரவில் ஏற்பட்டுவிடமுடியாது. சமுதாய ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்த வலிதான விசை வேண்டும்; நீண்ட கால அவகாசம் வேண்டும்; பலபேர் வேண்டும். எனவே மிகப்பெரிதாக பிரயத்தனம் செய்ய வேண்டும். இவ்வாறான தன்மையுடன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு நிற்கிற நிலையில், அவை பலதருணங்களில், பலகாரணங்களாலும் விரும்பப்படுபவையாக – ஏற்றுக்கொள்ளப்படுபவையாக, வசதிகளை, சலுகைகளை அளிப்பவையாக உள்ளன என்பதால் அவை அவ்வப்போது பிரியமாகவே ஏற்படுத்தப்படுபவை – ஏற்படுத்திக் கொள்ளப்படுபவை என்பதும் இங்கே உணரப்படவேண்டும்.

ஆக, சமுதாய ஏற்றத்தாழ்வுகளில் உள்ள சவால்கள் கொஞ்சம் நஞ்சமில்லை.

இந்நிலையில், சமுதாய ஏற்றத்தாழ்வுகளை நிரவிச் சமன்படுத்த எவரேனும் முனைகிறார் என்றால் – முதலில் அவர் சமுதாய ஏற்றத்தாழ்வுகளின் தன்மையை உள்ளது உள்ளவாறு முற்றும் உணர்ந்த, அசாத்தியமான அனுபவம் கொண்டவராக இருக்கவேண்டும். மேலும், அவர், ஒரு தீர்க்கதரிசியாக இருக்கவேண்டும்: தான் மேற்கொள்ளப்போகும் அணுகுமுறைகளின் ஏற்றத்தாழ்வுகளையும், அவை சந்திக்கப்போகும் சவால்களையும், பல்வேறு நிலைகளில் நின்று, பல்வேறு கோணங்களில் பார்த்துப் பழகும் திறமையும் பொறுமையும் கொண்டவராக இருக்கவேண்டும். அடுத்து, அவர், தமது அணுகுமுறைகளைத் தகவமைப்பு செய்து, காலப் பகிர்வீடு செய்து, தளம் தளமாய் தரநிர்ணயம் செய்யவேண்டும். இதற்கு வேகம் வேண்டும்; விவேகமும் வேண்டும் – இவை இரண்டினையும் எவ்வாறு எவ்வளவீட்டில், எப்போது கலப்பது என்பதும் அந்தக் கலவையை எப்போது, எவ்வாறு, எத்தனை வேகத்தில், எங்கு உபயோகிப்பது என்பதும் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு அவர் அளவெடுத்து இயங்கும்போதும் அவருக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களை, அவதூறுகளை அவர் தாங்கியவாறு, எத்தனைக்காலம் தாமதம் ஏற்பட்டாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் அளப்பரிய மனோதிடமும், காலம் கனியக் காக்கும் பொறுமையும் கொண்டவராகவும் அவர் இருக்க வேண்டும். இது மிகப்பெரிய கலை – மிகப்பெரிய திறன் – மிகப்பெரிய ஆளுமை. இக்கலையும், திறனும், ஆளுமையும் மிகச்சரியான விகிதாரச்சத்திலே வாய்க்கப்பெற்றவர்கள் மட்டுமே சமுதாய ஏற்றத் தாழ்வுகளை நிரவு செய்யும் மாபெரும் சவாலை எதிர்கொள்ளும் முயற்சியில் இறங்கும் இலாயக்கு பெறுகிறார்கள். மற்றவர்கள் எண்ண நிலையிலயோ, முனைப்பிலேயோ, அல்லது வழியிலோ மாய்ந்துபோகிறார்கள்.

இருபதாம் நூற்றாண்டில் உதித்த மிகப்பெரும் உலகதத்தலைவர்களுள் மகாத்மா காந்தி எவரும் அடையமுடியாத மிகமிக உயர்நிலையில் இருத்திவைத்துப் போற்றப்படுகிறார் என்றால், அதற்கு அவர் சாதித்துக் காட்டிய இந்திய விடுதலை தான் காரணமா என்றால், அது இல்லை. அவர் உண்மையில் சாதித்தது ஆன்ம வெற்றி மட்டுமே. ஆன்ம வெற்றி என்பது என்ன என்றால், எவரொருவது அணுகுமுறை, பிறரின், பார்வையை, உள்ளத்தை, அறிவைத் தாண்டி, அவரது ஆன்மாவைத் தீண்டுகிறதோ அது மட்டுமே ஆன்ம வெற்றி. காந்தி, தமது அணுகுமுறையினால் உலகில் ஒவ்வொரு ஆன்மாவையும் தீண்டினார்.

அன்று, சிகாகோ நகரத்து பன்னாட்டு மத மாநாட்டில், விவேகானந்தர் கண்டது ஆன்ம வெற்றி, வள்ளுவன் கண்டது ஆன்ம வெற்றி, கட்டபொம்மன் கண்டது ஆன்ம வெற்றி, கண்ணகி கண்டது ஆன்ம வெற்றி. சமகாலத்தவரும், பிற்காலத்தவரும், முற்காலத்தவரும் என எவருமே காட்டியிராத அணுகுமுறையை இவர்கள், எவ்வித இலாப நோக்குமின்றி, விளம்பரத் தேடலுமின்றி, சுயம்புவாய், மிகக் கடப்பாட்டுடன் காட்டிய அந்த நொடியில் தான் மற்றவர்க்கு ஆன்ம வெற்றி தந்தார்கள். மற்றவர்க்கு இவர்கள் ஏற்படுத்தித் தந்த ஆன்ம வெற்றியினால் இவர்களை, உலகம், பெற்றியாளர்களாகக் கொண்டாடுகின்றது.

வள்ளலார், ஸ்டீவ் ஜாப்ஸ் இருவருமே ஆன்மவெற்றி கண்ட பெற்றியாளர்களே. நான் ஏற்கனவே கூறியது போல, பிற்காலத்தவரும், முற்காலத்தவரும், தற்காலத்தவரும் என எவருமே காட்டியிராத அணுகுமுறையை இவர்கள் காட்டிப் போயிருக்கிறார்கள். வள்ளலாரின் சமரச சன்மார்க்கம் என்பது மிக மிக மிக கவனத்துடன் எடுத்தாளப்பட்ட வாசகம், மொழியளவிலாகட்டும் பொருளளவிலாகட்டும் சமரச சன்மார்க்கம் என்பது சட்டென்று, விரைவாய், புலன்களைக் கடந்து, உள்ளத்தையும், அறிவையும் கடந்து கடைக்கோடி மனிதனது ஆன்மாவை ஆலிங்கனம் செய்யும் அற்புதமான ஆனால் எளிதான சித்தாந்தம்.

சமரசம் (Harmony) என்பது வசீகர வார்த்தை – இதனை பரம ஆமோதிப்பு எனலாம்; மார்க்கம் என்பது “வழி” (pathways) என்பதாகிறது. சமரச சன்மார்க்கம் என்பது – “உனக்குள்ள வழிகளுக்கெல்லாம் – உனக்கு வேண்டும் வழிகளுக்கெல்லாம் இங்கே வழி உண்டு” என்பதான அழைப்பை அளிக்கும் அற்புத வாசகம். அப்படியென்றால், “நீ இதுகாறும் எவ்வழியில் சென்றிருப்பினும், நீ இந்த சமரச சன்மார்க்கம் வந்தாயென்றால், நீ உன்வழியிலேயே செல்லலாம் – அதுமட்டுமல்ல நீ உன்வழியே சென்று, உனது விருப்பம்போல் நன்மை சேர்க்கும் இன்னபிற புதுவழிகளையும் இங்கே காணலாம்!” என உற்சாகத்துடன் வற்புறுத்தலின்றி, சமாதானமாக, அனைவரையும் அழைக்கும் சீரிய குரலது. உரக்க வேண்டுபவர்க்கு உரத்ததாயும், சன்னமாய் வேண்டுவோர்க்கு சன்னமாயும் ஒலிக்கும் ஒலித்தகவமைப்பை சமரச சன்மார்க்கம் எனும் வாசகத்தில் காண்கிறோம். இந்த வாசகத்தைத் தேர்ந்தெடுக்க வள்ளலார் பெரிதும் பெரிதும் எண்ணியிருக்கவேண்டும். அன்றைய காலகட்டத்தில் நிரவிப்பரவியிருந்தவை உள்நாட்டுச் சமயங்கள் மட்டுமல்ல; இறக்குமதியாகியிருந்த பிறநாட்டு சமயங்களும் தாம். பிறர் ஆளுகைக்கு உட்பட்டதால் நமக்குள் அன்று பிளவு சக்திகள் ஏராளமாகவே விளைக்கப்பட்டிருந்தன. இவையாவும் ஒன்றுக்கொன்று எதிரணிக்கொள்ளும் அபாயம் அன்று நிரம்பியிருந்ததும், மக்களின் ஏற்றத்தாழ்வுகளைப் பயன்படுத்திப் பிறநாட்டுச் சமயங்கள் மண்ணின் மூலச்சமயங்களிலிருந்து மக்களை இடமாற்றம் செய்துகொள்வதுமாயும் இருந்த நிலைமையையும் வள்ளலார் உற்று நோக்கியிருக்கிறார்.

சாதிகள் எனும் மனிதகுல வகைப்பாடு ஏற்புடையது அல்ல என்றாலும் வெவ்வேறு சாதியினர் அன்று பரஸ்பரம் நல்லிணக்கத்துடன் ஒருங்கிணைந்தே வாழ்ந்தனர் என்ற நிலையில், மாபெரும் சதி நடந்தது. சாதியை அயலாரும் அயலார் தூண்டுதலில் நம்மாருமே ருசுப்படுத்தி – பூதாகரமாக்கி அமைதியைக் குலைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் கிளம்பலாயின. அதனை வள்ளலார் கவனித்தவரானார். இவற்றில், ஊரிரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதாக, அந்நியர் மதத்தாலும் ஆட்சியாலும் காலூறும் சாதுரியத்தையும் அவர் காணாதவரில்லை. அன்றைய காலகட்டத்தில், ஜான் ஸ்டூவர்ட் எழுதிய பிரித்தானிய இந்தியாவின் வரலாறு (History of British India) என்னும் நூல் 1817-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்தது. இப்புத்தகத்தில் இந்தியர்களின் பண்பாட்டையும், நாகரீகத்தையும் எத்தனை இழிவாகப் பேசமுடியுமா அத்தனை இழிவாகப் பேசப்பட்டிருக்கிறது. நமது பண்பாடு காட்டுமிராண்டித்தனமானது, எதிர்மறையானது, நாமனைவரும் மோசமானவர்கள் என்று இந்நூல் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியது. இந்நூல் ஏன் எழுதப்பட்டது என்றால் ஆங்கில அதிகாரிகள் இந்தியா வருவதற்கு முன் அவர்களுக்குப் பயிற்சி தருவதற்காகத்தான். இது ஒரு உளவியல் யுக்தி – ஆங்கிலேய அதிகாரிகளின் உளப்பாங்கை முன்கூட்டியே இந்தியருக்கு எதிராய் மாற்ற இப்புத்தகத்தை அவர்கள் பயன்படுத்தினார்கள். இந்திய மக்களுக்கு சதிசெய்யும் – வன்முறை செய்யும் – அதிகாரம் ஓச்சும் படியாக அதிகாரிகளின் உளப்பாங்கை முன்கூட்டியே தயார்நிலைக்குக்குக் கொண்டுவரும் Psychological Conditioning இது. ஆக, இந்தியா வந்திறங்கும் முன், ஆங்கிலேய அதிகாரிகள் மேற்கொள்ளும் முன்பயிற்சியில் History of British India என்பது ஒரு பாடப்புத்தகமாக வைக்கப்பட்டது – அதனை அவர்கள் கற்றுத்தேறவேண்டும் – இப்புத்தகத்தின் சார்பாக இந்தியனை எப்படி ஆளுவது – கையாளுவது – என்பதான யுக்திகள் – அதிகாரிகளின் முற்பயிற்சியிலே வடிவமைக்கப்பட்டு சேர்க்கப்பட்டிருக்கும் – அந்த யுக்திகளில் அவர்கள் ஜெயிக்கவேண்டும் என்பதான ஏற்பாடு இது.

“Divide and Rule” எனும் விரிவான மகாயுக்தி ஆங்கிலேய அதிகாரிகளின் முற்பயிற்சியின் முக்கிய அங்கம். Divide and Rule என்பதன் பொருள் என்னவென்றால், ” the policy of maintaining control over one’s subordinates or subjects by encouraging dissent between them.” அதாவது, தாம் ஆளத்துடிக்கும் – அடிமைப்படுத்தத் துடிக்கும் ஒரு மக்கள் கூட்டத்திற்குள் பிரிவினை பேதங்கள் வளர்த்து அவர்களிடையே ஒற்றுமை உருவாகாதவாறு வேற்றுமையையும் வெறுப்பையும் உருவாக்குவது” என்பது. இவ்வாறான தந்திரம், ஆங்கிலேயனது கால்பதிப்பிற்கும், வேரூன்றலுக்கும் பெரிதும் உறுதுணைபுரியும் என்பதுதான் ”Divide and Rule” ன் பிரதான உள்நோக்கம். மக்களுக்கிடையே பிரிவினை செய்வது எப்போது சுலபமாகும் என்றால் மக்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக ஊதிவிடுவதால் மட்டுமே. அதற்கு அவர்கள் தோதாக எடுத்துக்கொண்டது நமக்குள்ளே இருந்துவந்திருந்த பன்முகத்தன்மை ( “diversity” ). நமது நம்பிக்கைகளிலும் – பழக்கவழக்கங்களிலும் – நமக்குள்ளே பல ஒற்றுமைகள் இருந்தபோதும் பல மாறுபாடுகளும் இருந்தன. இந்த மாறுபாடுகள் எல்லாம் வேறுபாடுகள் அல்ல. அவை ஒன்றின் பலபரிமாணங்கள். ஒன்றின் எல்லாப் பரிமாணங்களையும் “நம்ம அஞ்சு விரலும் என்ன ஒண்ணுபோலயா இருக்குது?” என்றவாறு வெறுப்பின்றி அனைவரும் சுலபமாய் ஏற்றுக்கொண்டு ஒத்து வாழ்ந்த அமைதி உலகத்தில் தான் நாம் இருந்துவந்தோம்.

ஆனால் அப்போதோ நம் மக்களை மிகமோசமாகப் பிரிவினை செய்ய நமது மதங்களை – சாதிவகைப்பாட்டை – ஊதிக்கிளப்பும் களவு நெஞ்சத்துடன் ஆங்கிலேயர்கள் உள்ளேவந்தனர். சாதுரியமும், கள்ள நெஞ்சும் கொண்டவாறு தயார் நிலையில் வந்த அவர்கள் நம் விஷயங்களை நன்கு அறிந்தவர் தந்திரமொழிகளில் நம்மைப் பற்றி நம்மிடமே பேசலாயினர். நம்மைப் பற்றிய விஷயங்கள் ஒருதலைப்பட்சமாக, கபடமாகவே நமக்கே அறிமுகப்படுத்தப்பட்டது. நம் மதங்களைப் பற்றி மோசமான எண்ணமும், நாம் பிற்போக்கு வாழ்க்கை வாழ்பவர்களே என நம்மை நாமே நம்பிக்கொள்ளும் வண்ணம் உளவியல் யுக்திகள் நம்முள் செலுத்தப்படலானது. நாம் யாரில்லையோ அதுவாக நம்மை நாமே ஏற்றுக்கொள்ளும் மனோநிலைக்கு நாம் தள்ளப்பட்ட ஒரு துர்பாக்கிய காலமது. ஆட்சிப்பிடிக்கவும் மதம் பரப்பவுமென ஆட்சியாளர்களும், மதபோதகர்களுமாக அன்று மக்களை சிந்திக்கவிடாமல் திக்குமுக்காட வைத்தனர். அவ்வாறானதொரு காலத்தின் கட்டாயத்தில், போக்கறியா மக்கள், தம்மைப் பற்றிப் பிறர் சொல்லக்கேட்டு அதனை நம்பினர். அதில், புரட்டும் பொய்யுரைகளும் வார்க்கப்படுவதை அவர் அறியார். அந்த நிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை பின்னாளில் வந்த பாரதி கொதித்தெழுந்து குமுறிய, “ஆயிரம் உண்டிங்கு ஜாதி – எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி? என்ற தொனியில் தெரிந்துகொள்ளலாம்.

அவ்வாறானதொரு நிலையில் தான், சொந்த மண்ணின் மதங்களையே முற்றும் அறிந்திராத மக்களின் அறியாமையை விலக்கியாகவேண்டிய கடப்பாடு தனக்கு இருப்பதை வள்ளலார் உணருகிறார். எனவே, சொந்த மண்ணில் உதித்தெழுந்த நம் உன்னத மதங்களின் சாராம்சங்களைப் பிழிந்துச் சாறெடுத்து, அச்சாற்றமுதுகளை இணைத்துச் சேர்த்து விழுமியதான ஒரு பொது மதம் நமக்குத் தேவை என்கிற தீட்சண்யம் அவருக்குள்ளே எழும்பியிருக்கிறது. அந்த தீட்சணியத்தினால்தான், நம் உயரிய மதங்களின் உன்னத சங்கமத்தை உருவாக்கும் பொறுப்பைத் தானே மேற்கொண்டிருக்கிறார் அவர். பன் மார்க்கங்களும் சன்மார்க்கத்தில் சமரசமாய் சங்கமிக்கும் நிலையே சமரச சன்மார்க்கம். “புற மதங்கள் அண்ணாந்து வியந்து பார்க்கும் அளவிற்கு இங்கே அளப்பரிய பொக்கிஷங்கள் உள்ளனவே. எம்மார் மதங்களில் உள்ள தேனமுதை, கற்கண்டை எம்மக்கள், எடுப்பாய்ப்பிடித்து, சுவைத்து உண்டுமகிழ, இதோ வாகானதொரு பொற்கலத்தில் நான் வார்த்தளிக்கிறேன்!” என வள்ளலார் செய்த புதுப்புரட்சியே சமரச சன்மார்க்கம். இந்த மதவிணைப்பு (Synthesis of Religions) முனைப்பிலே நமது சமயங்களின் பலத்தை வீணாக்குமாறு கிடக்கிற சாதி வேறுபாடுகள் முற்றிலும் நீக்கப்படவேண்டும் என்பதிலே வள்ளலார் கொண்ட உறுதி வார்த்தை வர்ணனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது. அவரது அம்முயற்சிகளை உணர்வால் மட்டுமே காணமுடியும்.

இவ்வகையில், கடவுள் எனப்படுபவர் யார் அவரது உண்மைத்தன்மை தான் யாது என்பதனை விளக்கமுற்படும்போது, “அருட்பெருஞ்சோதி – அருட்பெருஞ்சோதி – தனிப்பெருங்கருணை – அருட்பெருஞ்சோதி!” என்கிறார். வள்ளலாரின் இந்த வாசகம் பிரபலமானது. இவ்வாசகத்தை க்கேட்ட மாத்திரம், “வள்ளலார்” என்று கேட்டவர் வாய் தானே மொழியும். இறைவனை ஜோதியாகப் பார்ப்பதும், திருவருட்பாக்களுக்கு “திருமுறை’ என்றே பெயரிட்டிருப்பதும், சிவனே ஜோதி – என்பதுவும் சைவசித்தாந்தத்தை ஆணிவேராய்க்கொண்டுதான் சமரச சன்மார்க்கம் கட்டமைக்கப்படுவது என்பது வெள்ளிடைமலை. சமரச சன்மார்க்கக்கட்டமைப்பை வள்ளலாருக்கு முன்சென்ற தாயுமானவர் சிந்தனைகளிலும் காணமுடியும் என்றாலும் சமரச சன்மார்க்கத்திற்கென ஸ்திரமானதொரு வழிமுறை நிலைப்பாட்டை நிறுவிப்போந்த பெருமை வள்ளலாரையே சாரும். இக்கட்டமைப்பிலே வைணவ, சமண, புத்த மதங்களின் சிலபல வெளிப்படை அடையாளங்களையும் கூட நம்மால் காணமுடியும் என்றாலும் கடவுளைப் பற்றிய உருவகத்தை, சைவமுறைப்படி ஜோதியாகவே அன்று உறுதிப்படுத்திய பாங்கிலே வள்ளலாரது அறிவியல் அணுகுமுறைகளையும் நாம் சிந்தித்தாகவேண்டும்.

வள்ளலார் காலத்தில் நியூட்டன் மிகப்பிரபலமானவர். வள்ளலாருக்கு ( (5 October 1823 – 30 January 1874) முந்தையவர் நியூட்டன் ( 25 December 1642 – 20 March 1726). ஆங்கிலேயர் என்பதால், நியூட்டனை வெகு அதிகமாகவே நாம் புகழும் – புகழவேண்டிய கால நிலை அன்று நிலவிவந்தது. நியூட்டனின் ஒளி பற்றிய கண்டுபிடிப்புகள் கல்விப்பாடமாக இங்கு அன்று நிறைவேறப்பட்டன. நியூட்டனின் ஒளிப் பரிசோதனைகளை அந்நாளில் தோற்றுவிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் (1818: செரம்பூர் கல்லூர, ஹவுரா ; 1847: இந்தியத் தொழில்நுட்பக்க கழகம், ரூர்கி; 1857: பம்பாய் பல்கலைக் கழகம்; 1857: சென்னைப் பல்கலைக்கழகம்; 1857: கல்கத்தா பல்கலைக்கழகம்), அங்கு மாணாக்கர்கள் செய்துபார்க்கும் வகையில் பரிசோதனைக்கருவிகள் மற்றும் பயிற்சிமுறைகளாக நம்மவரிடையே பிரபலமாகின. அவ்வேளையில், நம் மதத்தின் அறிவியல் கூறுகளை எடுத்தியம்ப வள்ளலார் துடித்திருக்கக்கூடும். மூடநம்பிக்கைகள், பிற்போக்குச்சிந்தனை என்று மதத்தை இழித்தும் பழித்தும் காட்டும்போது நமது மதங்கள் அறிவியலுக்குப் புறம்பானவை என்று சாகசப் பேசசு பேசுவது அன்றைய நாசசக்திகளின் பாணியாகவே இருந்துவந்தது. எனவே, “நீ அறிவியல் என்று பேசுகிறாயே அந்த அறிவியல் வழி நீ காட்டும் ஒளிக்கோட்பாடுகள் உமக்குப் புதிது ஆனால் எமக்கு அவை முன்னமே தெரியும்! கேட்டுக்கொள் – ஒளி என்பது பிரபஞ்சத்தின் ஜீவாதாரம் என்பதை யாமென்றோ அறிவோம். ஒளி என்பது யாம் வணங்கும் தெய்வம்! ஒளி எங்கள் எங்கள் வாழ்முறை!” என்று நெஞ்சுநிமிர்த்திச் சொல்லும் அறிவியல் பரிஷையை பாமர மக்களின் தினசரி மொழியாக்கும் உத்வேகம் வள்ளலாருக்கு இருந்திருக்கவேண்டும் என்றே நாம் காணமுடிகிறது.

“அருட்பெருஞ்சோதி – அருட்பெருஞ்சோதி – தனிப்பெருங்கருணை – அருட்பெருஞ்சோதி!” என்ற வள்ளலாரின் குரல் ஒலிக்குரல் அல்ல அது ஒளிக்குரல் – அது மணிக்குரல் அல்ல மாணிக்கக்குரல். அது அன்றே அவர் விடுத்த நாட்டின் விடுதலைக்கான அழைப்பு – தனிமனிதனின் ஞான விடுதலைக்கான அழைப்பு.

கருணை என்பது இந்தியதேசத்து மதங்களில் இணையறக் கலந்திருக்கிறது எனினும், கருணை என்பதை சமரச சன்மார்க்கத்தில் முந்துறுத்தி இருப்பது – கிருத்துவப் பரப்புரைக்கு இணையான யுக்தி எனவே கொள்ளலாம்.

வடலூரில் அவர் நிறுவிய சத்ய ஞான சபை எண்ணுந்தோறும் – எண்ணுந்தோறும் – புதுப்புதுப் புரிதலை நம்முள்ளே வார்க்கும் அற்புதக் கோட்டம். எண்கோண வடிவம் – மூன்று சபைகள் (சிற்சபை, பொற்சபை, ஞான சபை) என உருவாக்கப்பட்ட இக்கோயிலின் கருவறைக்கு ஏழு திரைகள். வடலூர் ஆலயத்தின் வடிவமைப்பை பல்வேறு சித்தாத்தங்களிலிருந்த விளக்க முடியும். வள்ளலாரது அறிவியல் வழிப்படி சென்று ஒளிவழி பார்த்தால் ஒளியின் உருவாக்கமே இக்கோயில்.

ஒளிக்கு எட்டு குணங்கள் உண்டு – பிரதிபலிப்பு, விலகல், உள்ளீட்டுப் பிரதிபலிப்பு, பரவல், சிதறல், விளிம்பு விலகல், படிதல், முனைவாக்கம் (Reflection, Refraction, Total Internal Reflection, Dispersion, Scattering, Diffraction, Interference, Polarization).

ஒளிக்கு மூன்று நிலைகள் உண்டு – துகள் நிலை, அலைநிலை, துகளலை நிலை (particle nature, wave nature, wave-particle dualism).

வெள்ளொளிக்கு – ஏழு பாகங்கள் உண்டு – ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு, சிவப்பு (VIBGYOR).

தைப்பூசத்தன்று வடலூரில் ஏழுதிரைகளும் திறக்கப்படுவது – ஒளியின் ஏழுபாகங்களும் இணைந்து ஒன்றென வெள்ளொளியாய்த் திகழ்வதைக் குறிக்கிறது. அன்று பவுர்ணமி என்பதும் காண்க.

அறிவியல் அடித்தளம் இடுவது மட்டுமே வள்ளலாரின் நோக்கமில்லை. நாட்டின் பல அடையாளங்களுள் மதம் என்னும் அடையாளமும் முக்கியமானது – அதுவும் உலகோருக்கெல்லாம் வாரிவாரி வழங்கக்கூடிய கருவூலமாய் நல்லதொரு மதப்பின்னணி உள்ள ஒரு நாட்டில் – பொன்னும், வைரமும், பொக்கிஷமுமாய் – மதக் கோட்பாடுகள் காணப்பெறுகிற ஒரு நாட்டில் – வேற்று மதம் தேடிபோகும் தேவையில்லையே – இங்குள்ள பொன்னையும், வைரத்தையும், பொக்கிஷங்களையும் திரட்டி, இருத்திப் பாதுகாத்து உலகுக்கு அளிப்பதே இன்றைய தலையாய பணி என்பதை அவர் அன்று உணர்ந்த வாக்கில் சத்யஞான சபை உருவானது என்பதை வள்ளலாரது வாக்கே காட்டுகிறது.

“எச்சபை பொதுவென இயம்பினர் அறிஞர்கள்
அச்சபை யிடங்கொள்ளும் அருட்பெருஞ் ஜோதி”

ஒட்டுமொத்தத்தில், நம் மண்ணின் மூலமதங்கள் யாவும் எத்தனைச் சிறப்பானவை – இவற்றின் விழுமிய சாரம் எத்தனை ஆனந்தம் அளிக்கிறது – பற்ற இது எத்தனை இலகுவாய் இருக்கிறது – இதனைப் பாட எத்தனைப் பரவசம் பிறக்கிறது என மக்களுக்கு வெறியின்றி, நிதானமாய் எடுத்துரைக்க எழுந்த வள்ளலாரின் அமைதிப்புரட்சி ஒரு அனாயாசப்பபுரட்சி. இந்த சமயத்திரட்சியை ருசிக்கும் எவரும் புறமதங்களில் சொல்லப்படுகிற யாவும் அதற்கு மேலேயும் கூட நம் சமயங்களில் ஏற்கனவே உள்ளன என்பதை அறிவார்ந்த அறிவால் உணரமுடியும். வள்ளலாரது தர்மசாலையும், இயற்கை வாழ்வும் மானுட சேவையின் மற்ற பரிமாணங்கள். இவை பற்றி பேசுவோம்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 9

  1. அவ்வைமகள்..கட்டுரை ஜோதிரூபமான வள்ளலாரின் வழிகளை மிகச்சிறப்பாக எடுத்தியம்பியுள்ளார்.பாராட்டுகிறேன்.(ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *