வாழ்ந்து பார்க்கலாமே -14
க. பாலசுப்பிரமணியன்
உழைப்பும் முயற்சியும் இருந்தும் வெற்றிப்படிகளில் ஏற முடியாதவர்களைப் பார்த்தால் சில நேரகங்களில் நமக்கு வருத்தமாகத்தான் இருக்கின்றது. எவ்வளவு தீவிரமாகவும் கவனமாகவும் இலக்கை நோக்கிப் பயணித்த்தாலும் வெற்றி நம் கைகளிலிருந்து நழுவிச் செல்கின்றது. உண்மைதான்… சில நேரங்களில் நம்மை விடக் குறைவான தகுதி உள்ளவர்கள் நம்மை ஒதுக்கிவிட்டு வெற்றிப்படிகளில் ஏறிச்செல்லும் பொழுது நமது மனம் அல்லல் படுகின்றது. இந்த நேரங்களில்தான் நாம் வாழ்வின் உண்மைப் பொருளை அறிந்து அமைதியுடனும் நிதானத்துடனும் செயல்படத் தெரிந்து கொள்ள வேண்டும்.
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சி.
சென்னையில் ஒரு பெரிய பொறியியல் கல்லூரியில் கடைசி ஆண்டு படித்துக்கொண்டிருந்த ஒரு இளைஞன். அறிவிலும் ஆற்றலிலும் நல்ல முதிர்ச்சி பெற்றவன். இருந்தாலும் தன்னுடைய வெற்றிக்கு ஒரு இலக்கை நிர்ணயித்துக்கொண்டிருந்தான். கடைசி ஆண்டுக்கு கல்லூரிப் படிப்பில் தன்னுடைய முதலாவது வகுப்பிற்கான மதிப்பெண்கள் பெறத் தவறியதால் மனமொடிந்து கல்லூரிக்கு அருகிலேயே ஒரு இடத்தில் தற்கொலை செய்து கொண்டான். இது போன்று தன்னுடைய இலக்குகள் தவறியதால் தன்னுடைய வாழ்க்கையை அழித்துக்கொண்டவர்கள் எத்தனையோ பேர்கள். தனக்கு விரும்பிய வேலை கிடைக்கவில்லை, தனக்கு விரும்பிய பெண் அல்லது கணவர் கிடைக்கவில்லை, தன்னுடைய வியாபாரத்தில் வெற்றி கிடைக்கவில்லை என்று தன்னுடைய வாழ்க்கையையே முடித்துக்கொண்டவர்களைப் பார்க்கும்பொழுது நமது மனம் நொந்து போகின்றது. அப்பொழுது நமது மனதில் எழும் கேள்வி ” ஒரு இலக்கு நமக்கு கிடைக்காவிட்டால் வாழ்க்கையே தோற்று விட்டதா? ” என்பதுதான். இந்த மாதிரி முடிவுகளை எடுப்பவர்கள் மிகவும் உணர்ச்சி பூர்வமாக வாழ்வையும் அதன் பொருளையும் மனதில் கொண்டு முடிவுகளை எடுப்பவர்கள். அவர்கள், இந்த வாழ்க்கை என்பது சில இலக்குகளையையும் வெற்றிகளையும் கடந்தது என்பதைப் புரிந்து கொள்ளாதவர்கள்.
தற்பொழுதைய சூழ்நிலையில் சில இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் சில சிறிய சிறிய ஆசைகள் நிறைவேறாவிட்டால் கூட தவறான முடிவுகளை எடுத்து விடுகின்றார்கள். இது வாழ்க்கையைச் சரியாகப் புரிந்து கொள்ளாததால் ஏற்படுகின்ற ஒரு நிலை. வாழ்க்கை ஒரு சில நிகழ்ச்சிகளால் மட்டும் நிர்ணயிக்கப் படுவது அல்ல. நிகழ்வுகளுக்கு அப்பால் நாம் வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
முயற்சிகள் நமது ஆர்வங்களாலும் விருப்பங்களாலும் உந்தப்படுபவை. ஆர்வங்கள் இல்லாத ஒரு பாதையில் மற்றவர்களோடு போட்டிபோட்டுக்கொண்டோ அல்லது மற்றவர்களுடைய விருப்பங்களை முன்னுதாரணமாகக் கொண்டோ நாம் முயற்சிகள் செய்யும் பொழுது அதற்கான முழுப் பலன்கள் நிச்சயமாகக் கிடைப்பதில்லை. நம்முடைய விருப்பங்கள் உள்ள பாதைகளில் முயற்சிகள் செய்யும் பொழுது அதற்கான சரியான வளங்களும் தொலைநோக்கும் இல்லாத பொழுதோ அல்லது நம்முடைய விருப்பங்களுக்கும் உண்மையான நிலைகளுக்கும் உள்ள இடைவெளி அதிகமாக இருக்கும் பொழுதோ நமது முயற்சிகள் வெற்றி பெறுவதிலில்லை. ஆகவே நடைமுறைக்கேற்ற சிந்தனை (Pragmatic thinking) அவசியம் தேவை. அவசரங்களும் தெளிவில்லாத முயற்சிகளும் விருப்பங்களும் மட்டும் நமது வாழ்வை நிர்ணயிப்பதில்லை. என்பதைப் புரிந்து கொண்டு தெளிவான சிந்தனையோடு வாழக்கற்றுக்கொள்ள வேண்டும்.
சில தினங்களுக்கு முன்பு நான் சந்தித்த ஒரு இளைஞன் ஒரு நிறுவனத்தில் தூதுவருக்கான (Messenger) வேலையில் ஈடுபட்டிருந்தார். அவருடன் பேச சந்தர்பம் கிடைத்த்தபொழுது அவர் ஒரு பொறியியல் துறையில் பட்டப்படிப்பு படித்தவர் என்று தெரிய வந்தது. “எனக்கு உண்மையில் அதில் எல்லாம் விருப்பம் இல்லை. எங்கள் வீட்டில் என்னை நிர்பந்தமாக அதில் சேர்த்து விட்டார்கள். என்ன செய்வது?” என்று கூறியவர் “நான் இந்த வேலையை மிகவும் விரும்புகிறேன். எனக்கு பயணம் செய்வது என்றால் மிகவும் விருப்பம். இதில் காலையிலும் மாலையிலும் பல இடங்களுக்குச் செல்ல வாய்ய்பு கிடைக்கும் பொழுது நான் வாழ்க்கையை ரசிக்கின்றேன்.” ஒரு விதத்தில் பார்க்கும் பொழுது அவருடைய மனப்பக்குவம் எனக்குப் பிடித்த்திருந்தது.
“வெற்றி வேண்டுமா , போட்டுப் பாரடா எதிர்நீச்சல்” என்று பாடிய அந்த மாபெரும் கவிஞர் தான் “கல்தரை மீது கைபோட்டு நீந்தும் மனிதா, காலமிட்ட கட்டளையை மாற்றுவது எளிதா?” என்றும் பாடினார்.
வாழ்க்கைக்கு இலக்குகள் தேவை. ஆனால் இலக்குகளால் வாழ்க்கையை கட்டுப்படுத்த முடியாது. வாழ்க்கையில் விருப்பங்கள் தேவை. ஆனால் நிறைவேறாத விருப்பங்களால் வாழ்க்கை முடிவது அல்லது தோற்பது இல்லை. வாழ்க்கை ஒரு இனிய பயணம். இதில் பல பருவங்கள் உண்டு. வசந்தத்தில் மகிழவேண்டும். வேனில் பருவத்தில் துவளக்கூடாது. இலையுதிர் பருவத்தை இரசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். மொத்தத்தில் வாழ்க்கையை புரிந்துகொள்ளவேண்டும். வெற்றி தோல்விகளுக்கப்பால் நாம் வாழக்கற்றுக்கொள்ள வேண்டும்.
வாழ்ந்து பார்க்கலாமே !