நாட்டுப்புறப் பாடல்…

ஆ. செந்தில் குமார்

 

சிங்கப்பூரு சீமபோயி… மச்சான்

சட்டுபுட்டுன்னு சம்பாரிச்சி…

செட்டிகுளம் கூட்டுரோட்டுல…

பெட்டிக்கட ஒன்னு போடலாமுங்க..

 

சிங்கப்பூரு சீமபோயி… புள்ள

சிக்கித் தவிக்க வேணுமாடி…

சிக்கனமாக வாழ்ந்தோமுன்னா…

சொர்கம்தானே நம்ம ஊருமே…

 

மேலத்தெருவு மணிகண்டனும்… மச்சான்

மச்சி வீடு கட்டுறாருங்க…

மஸ்கட்டு போயி சம்பாரிச்சி…

மணிமணியா வாழுறாருங்க…

 

மச்சிவீடெல்லாம் வேணாம் புள்ள… நம்ம

மண்குடிசைக்கு கொறவு ஏதுடி…

மாடுகன்னு வாங்கிக்கலான்டி… புள்ள

மணிமணியா வாழலான்டி…

 

புள்ளகுட்டி பொறந்ததுன்னா… மச்சான்

பத்தாதுங்க இந்த வீடு…

இத்துப்போன கூரையிலே… மச்சான்

பொத்துக்கிட்டு மழ கொட்டுதுங்க…

 

புதுசா கூரை வேஞ்சுக்கலான்டி… புள்ள

இதுக்குப்போயி வருத்தம் ஏனடி…

கருத்தா நாம வாழ்க்கை நடத்துனா…

கண்டகனவெல்லாம் பலிக்கும் பாரடி…

 

கெணத்த கொஞ்சம் ஆழப்படுத்துவோம்… புள்ள

நெலத்த நல்லா உழுதுப்போடுவோம்…

ஆடி மாசம் மழ பெய்யுமே..

தேடி வெதச்சி பயிர்பண்ணலாம்…

 

ஊரு எல்லாம் பசுமையாகுமே… நம்ம

உறவு எல்லாம் கூட இருக்குமே…

தன்னா தனனானா தன்னனானா…

தன்னா தனனானா தன்னனானா…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *