-மேகலா இராமமூர்த்தி

இந்நிலவுலகில் எத்தனையோ பெருஞ்சான்றோர்கள் தோன்றி மக்களுக்கு அறவுரை பகர்ந்திருக்கின்றார்கள்! எத்தனை எத்தனையோ நன்னெறிகள் அவர்களால் பரப்பப்பட்டிருக்கின்றன! வாழ்வியலை வகுத்துரைக்கும் எத்தனையோ அறநூல்கள் அவர்களால் இயற்றப்பட்டிருக்கின்றன. அவற்றால் ஆய பயன் என்ன?

நன்மையை வளர்க்க அம்மாமனிதர்கள் எவ்வளவோ பாடுபட்டபோதினும், இங்கே வளர்ந்த தீமைகளும் கெடுதல்களுமே அதிகம். இதில் வேதனை என்னவென்றால்…பேரறஞ் சொன்ன அப்பெரியோர்கள் பலரும் வரலாற்றில் தீயவர்களால் இரக்கமின்றிக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான்!

ஆம், சாக்ரடீஸ் எனும் சிந்தனையாளனுக்கு விஷத்தையும், ஏசுநாதருக்குச் சிலுவையையும், நபிகள் நாயகத்துக்குக் கல்லடியையும், அகிம்சையே தன்வழி என்று வாழ்ந்த நம் தேசத் தந்தை காந்தியடிகளுக்குத் துப்பாக்கிக் குண்டையும் பரிசளித்து, அவர்களைச் சிறப்பித்த அற்புத உலகமல்லவா இது!

காந்தியாரின் கொடூர மரணத்தை அறிந்த மேனாட்டறிஞர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா,

”It shows how dangerous it is to be too good!” (”அளவுக்கு மீறி நல்லவராக இருப்பது எவ்வளவு ஆபத்தானது!!”) என்றார் வெறுத்துப்போய்!

கால எந்திரத்தைக் கொஞ்சம் பின்னோக்கித் திருப்பிச் சங்ககாலத்தை நோக்கி நம் பார்வையைப் பதித்தால், முல்லைக்கொடி ஒன்று பற்றிப்படரக் கொழுகொம்பில்லாமல் காற்றில் தவிக்கிறதே என்று வருந்தித் தன் தேரையே அதற்குப் பற்றுக்கோடாக விட்டுச்சென்ற பறம்புமலைத் தலைவன் பாரி நம் கண்ணில்படுகிறான்.

பெருவள்ளலான பாரி தன்னை நாடிவந்த இரவலர்க்கெல்லாம் வாரி வாரி வழங்கியே கரங்கள் சிவந்தவன். அதுமட்டுமா? தன்னிடமிருந்த முந்நூறு ஊர்களையும் இரவலர்க்குப் பரிசிலாகத் தந்துவிட்ட அவனுடைய ஈடு இணையற்ற வள்ளன்மையை வாயூறிப் பாடுகின்றார் அவனுடைய ஆருயிர் நண்பரான சங்கப் பெரும்புலவர் கபிலர்.

…முந்நூ றூர்த்தே தண்பறம்பு நன்னாடு
முந்நூ றூரும் பரிசிலர் பெற்றனர்…(புறம்: 110 – கபிலர்)

தன் வள்ளன்மையாலும் இணையற்ற வீரத்தாலும் பாரி பெரும்புகழ் பெற்றதுகண்டு பொறாமை கொண்ட மூவேந்தரும், அந்த மாவீரனை நேர்நின்று வெல்லும் துணிவோ திறனோ இன்றி, கூத்தர்போல் வேடமிட்டுச் சென்று வஞ்சனையால் அவனைக் கொன்றுவிட்டு வெட்கமில்லாமல் வெற்றிமுரசு கொட்டினர்.

அன்புத் தந்தையை இழந்து அவலம் எய்திய அவனுடைய அருமைப் புதல்வியர் இருவரும் (பாரிமகளிர்) தாங்கொணாத் துயர்கொண்டனர். தம் அளவிறந்த வேதனையை, தந்தையை இழந்து சூனியமாகிவிட்ட தம் வள வாழ்வினை, கல்லும் கசிந்துருகும் சொல்லெடுத்துக் கண்ணீர்க் கவிதை வடித்தனர்.

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண்ணி லவில்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே” (புறம்: 112) 

”அன்று வெண்ணிலா விண்ணில் உலாவந்த வேளையில், எமதருமைத் தந்தையும் எம்மோடு இருந்தார்; எம்குன்றும் எம் வசம் இருந்தது. நிலவெரிக்கும் இன்றைய இரவிலோ…வெற்றி முரசுகொட்டும் வேந்தர்கள், எம் குன்றையும் கொண்டார்; யாம் எந்தையையும் இழந்தோம்!” என்று அவர்கள் கதறியழுத காட்சி நம் மனக்கண்ணில் தோன்றி நெஞ்சைப் பிழிகின்றது.

இந்த நல்லவர்களெல்லாம் அநியாயமாய்க் கொல்லப்பட்டது ஏன்? இவர்கள் செய்த தவறென்ன?

பொறாமையும் தீயகுணமும் கொண்டோர் ஆக்கத்தோடு வாழ்வதும், நற்சிந்தனையும் செயல்களும் கொண்டோர் கேடடைவதும் எதனால் என்ற வினா நம்முள் எழுந்து நம்மைத் திகைக்க வைக்கின்றது.

நமக்கு மட்டுமல்ல…இதே வினா குறளாசான் வள்ளுவரின் உள்ளத்தும் அன்றே எழுந்திருக்கின்றது. வாழ்வைச் செம்மையாக நடத்துவது எப்படி என்று நமக்கு வழிகாட்டிய அந்தப் பேரறிஞரே இதுகுறித்துச் சிந்தித்துப் பார்த்து, விடை ஒன்றும் புலப்படாமல், ”இதனை ஆராயவேண்டும்” என்று கூறிவிட்டார்! 

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும். (குறள்: 169 – அழுக்காறாமை)
 

பிறர்க்குத் தீமைசெய்வோர் சிலர் நன்றாக வாழ்வதை நாம் கண்ணாற் கண்டாலும், அதுகண்டு குழப்பமடைந்தாலும் அதற்காக…”மாந்தர்காள்! நீங்கள் அனைவருக்கும் தீமையே செய்யுங்கள்; அப்போதுதான் நன்மை அடைவீர்கள்” என்றா அறிவுரை கூறமுடியும்? அப்படிக் கூறுவதுதான் முறையாகுமா?

எங்கும் பரந்திருக்கும் காரிருள் சூரியனின் ஒளிக்கதிர் பட்டதும் நில்லாமல் விலகி ஓடுவதுபோல், மனித மனத்தை ஆக்கிரமித்திருக்கும் தீய எண்ணங்கள் என்னும் அக இருளை நல்லறிவென்னும் ஒளியால் விரட்டி, மனத்தை நற்சிந்தனைகளாலும், நல்லெண்ணங்களாலும் நிரப்பவேண்டும்; அவ்வாறு செய்வோரே உயர்ந்த மனிதராவர்.

மனத்தை நல்ல எண்ணங்களால் நிரப்பினால் மட்டும் போதாது! அதனையும் தாண்டி, நமக்குத் தீமை செய்வோரையும் வெறுக்காது – ஒறுக்காது, பொறுத்து வாழும் மனப்பக்குவத்தையும் நாம் பெறவேண்டும். அதுவே அறிவிற் சிறந்த அறிவாகும் என்பதுவே வான்புகழ் வள்ளுவர் நமக்குக் கற்றுத்தரும் வாழ்வியல் நெறி. 

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.  (குறள்: 203 – தீவினையச்சம்)

பகைவனுக்கும் அருளும் நன்னெஞ்சு கொண்டோராய் வாழ்வோம்! இயலுமானால் பகையே இல்லாமல் வாழ்வோம்! மானுடப் பிறவியை மாண்புறச் செய்வோம்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *