-மேகலா இராமமூர்த்தி

வாழ்வில் எல்லா நலன்களும் ஒருவனுக்குக் குறைவற வாய்த்தாலும், அவற்றை ஒரு குறிப்பிட்ட காலம்வரைத் துய்த்துவிட்டுப் பின் அவற்றின்பால் உள்ள பற்றைச் சிறிது சிறிதாகப் படநாகம் சட்டையை உரிப்பதுபோல் துறத்தல் வாழ்க்கையைச் சிறக்கச் செய்யும்.

எவ்வெவற்றின்பால் கொண்ட பற்றை நாம் துறக்கின்றோமோ அவ்வவற்றால் ஏற்படும் தொல்லை நமக்கில்லை என்பதுதான் வள்ளுவப் பேராசான் சொல்லிய நன்னெறியுமாம்!

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
(341)

கற்றனைத்தூறும் அறிவு என்ற பொய்யாமொழிக்கிணங்கப் பல நூல்களைக் கற்பதால் அறிவு உண்டாகுமென்றாலும் அவற்றால் மெய்யுணர்வும் வாழ்வின் நிலையற்ற தன்மையை உணர்ந்துகொள்ளும் திறமும் எல்லார்க்கும் கிட்டும் என்று சொல்வதற்கில்லை. எனவே இலக்கண நூல்களிலும், எதிர்காலம் குறித்து அறிந்துகொள்ளும் சோதிட நூல்களிலும் காலத்தைப் போக்கும் பித்தரினும் பேதையார் இவ்வுலகில் இல்லை; வாழ்வின் உண்மைப் பயனை நல்கும் அறச்செயல்களில் சிந்தை செலுத்துவோரே தம் கருமமாகிய தவமுயற்சியைச் சரியாகச் செய்வோராவர் என்கிறது நாலடியார்.

நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமம் செய்வார் – தொலைவில்லாச்
சத்தமும் சோதிடமும் என்றாங் கிவைபிதற்றும்
பித்தரின் பேதையார் இல்.
(நாலடி – 52)

இவ்விடத்தில் தவம் என்றால் என்ன என்றோர் ஐயம் நமக்கு எழலாம். “தனக்கு வரும் துன்பத்தைப் பொறுத்துக்கொள்வதும், பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாதிருப்பதுமே தவம்” என்பது தவத்தின் வடிவு குறித்துக் குறளாசான் சொல்லும் விளக்கம். 

உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு. (261)

மனத்தை உலகப் பற்றுக்களிலிருந்து விடுவித்த சான்றோர், தம்மைப் பிறர் இகழ்வதைக் கண்டு வெகுளாமல் அவற்றைப் பொறுத்துக்கொள்வதோடன்றி, அவ்வாறு தம்மை இகழ்ந்தவர்கட்கு அத்தீவினையால் எரிவாய் நரகத்துக்குச் செல்லும் துன்பநிலை வாய்க்குமோ என்றெண்ணி வருந்தவும் செய்வர் என்று தவச் சான்றோரின் உயர்பண்பை அவனிக்கு அறியத் தருகின்றது நாலடியார்.

தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்
றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தால் – உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
பரிவதூஉம் சான்றோர் கடன்
. (நாலடி – 58)

மன்னுயிரைத் தன்னுயிர்போல் எண்ணுவதும், அவை தவறு செய்யும்போது அதற்காக வருந்துவதும் குணங்களிலேயே மிக உயர்ந்த கல்யாண குணங்கள் ஆகும். அன்பும் அருளும் தம் இயல்புகளாய்க் கொண்ட அருந்தவத்தோர்க்கே அஃது இயலும்.

வாழ்வில் துன்பங்களே மேன்மேலும், பனையளவாய், மிகுந்துவருதல் கண்டும், நெஞ்சு தெளியாது, தினையளவினதாய் அவ்வப்போது தோன்றி மறையும் சிற்றின்பத்தின் பாலிருக்கும் பற்றொழித்திலர் மனவலியற்றோர். என்னே அவர்தம் அறியாமை! ஆனால் இன்பங்கள் வரும்போதுங்கூட அதனைத் தொடர்ந்துவரும் துன்பங்களை உள்ளும் மேலோர், இன்பத்தின்பால் விருப்பங்கொள்ளார்; அவற்றிற்காக ஏங்கிநில்லார்.

துன்பமே மீதூரக் கண்டும் துறவுள்ளார்
இன்பமே காமுறுவர் ஏழையார் – இன்பம்
இசைதொறும் மற்றதன் இன்னாமை நோக்கிப்
பசைதல் பரியாதாம் மேல்.   
(நாலடி – 60)

நம் வள்ளுவப்பேராசானோ,

இன்பங்களை விரும்பாதவனாய், துன்பமே வாழ்வின் இயல்பென்பதை உணர்ந்த உத்தமனை அத்துன்பங்கள் ஏதும் செய்யாதென்று உறுதியுரைக்கின்றார்.

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன். (628)

அத்துணை மனப்பக்குவம் சாமானியர்க்கு வாய்ப்பது அரிதெனினும், மின்னலெனத் தோன்றிமறையும் இன்பங்கள்மாட்டுக் கொள்ளும் அளவிறந்த பற்றையும், அவை நிரந்தரமானவை என எண்ணும் பேதைமையையும் அவர்கள் சற்றுக் குறைத்துக்கொள்ளலாம்.

வாராதுபோல் வந்த மாமணியாய், வாழ்வில், அவ்வப்போது அரும்புகின்ற இன்பத் தருணங்கள்கூட மக்களிடம் தோன்றுகின்ற சினமென்னும் தீக்குணத்தால் பொசுங்கிப் போகின்றன.

ஒருவன் சினத்தைக் காவாது வெகுளியின் மிகுதியால் சொல்லிய சுடுசொல் என்றைக்கும் தன்னெஞ்சில் ஆறா வடுவாய்த் தங்கி வருத்துதலால், ஆன்றவிந்து அடங்கிய சான்றோர் பிறர் மனம் புண்படும்படியான சுடுமொழிகளைச் சினந்துசொல்ல மாட்டார்கள். 

காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்
ஓவாத தன்னைச் சுடுதலால் – ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து.   
(நாலடி – 63)

எனவே ஒருவன் வாழ்வில் வெல்ல விரும்பினால் தன்னையே கொல்லும் சினம் தன்னிடம் எழாமல் காத்துக்கொள்ளவேண்டியது மிக அவசியம்.

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே சொல்லும் சினம். (305) 

நாய் தன்னைக் கடித்துவிட்டது என்பதற்காக யாரேனும் நாயைத் திருப்பிக் கடிப்பதுண்டா? அஃதொப்பவே, கீழ்மக்கள் அறிவற்றவகையில் தம்மை ஏதேனும் தகாதசொல் சொல்லிவிட்டாலும் அதற்காக மேன்மக்கள் சினந்து வன்மொழிகளால் அவர்களைத் திருப்பித் திட்டுவதில்லை என்பது  நாலடியார் நவிலும் நன்னெறி. 

கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டும் தம்வாயாற்
பேர்த்துநாய் கௌவினார் ஈங்கில்லை – நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு.
 (நாலடி – 70)

இதே கருத்தை, உவமை மாறாது பழமொழி நானூறு எனும் நூலும் கழறுவதைக் காண்க.

நீர்த்தகவு இல்லார் நிரம்பாமைத் தந்நலியின்
கூர்த்தவரைத் தாம்நலிதல் கோளன்றால் – சான்றவர்க்குப்
பார்த்(து) ஓடிச் சென்று கதம்பட்டு நாய்கவ்வின்
பேர்த்துநாய் கவ்வினார் இல்.
(பழ. நானூறு – 375)
 

வள்ளுவமோ, நமக்கு இன்னாசெய்தார்க்கு இன்னல்செய்யாமல் இருப்பது மட்டும் போதா; அவர்களுக்கு இனியவற்றையும் செய்துவிட்டுப் போவதே சால்பு என்றுகூறி நம்மைப் பெருவியப்பிலாழ்த்துகின்றது. வள்ளுவரை விஞ்சிய உயர்ந்த சிந்தனையாளர் யாங்கணுமே பிறக்கவில்லையோ என்றெண்ணி நாம் மலைக்கும் இடங்கள் வள்ளுவத்தில் பல.  அவற்றில் இதுவும் ஒன்று!

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு. (987)

[தொடரும்]

*****

துணைநூல்கள்:

நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம் பிள்ளை
திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்
பழமொழி நானூறு – ம. இராசமாணிக்கம் பிள்ளை

 

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க